பெங்களூரில் ஒரு புத்தகக் கடை ஆரம்பிக்கலாம் என்று ஆசை இருந்தது. இங்கு தமிழ் புத்தகங்கள் கிடைப்பதில்லை. முதலில் பத்தாயிரம் ரூபாய்க்கு புத்தகம் வாங்கி விற்க வேண்டும். அதில் வரும் லாபத்தில் புத்தகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இப்படியே லாபம் சம்பாதித்து சம்பாதித்து அண்ணாமலை படத்தில் வருவது போல டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன், அகநாழிகை புத்தகக் கடை வாசுதேவன், பனுவல் முகுந்த் ஆகியோரை எதிரில் நிறுத்தி தொடையைத் தட்டி- என் தொடையைத்தான் ‘இந்த நாளை உங்க காலண்டரில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்’ என்று சவால் விடலாம் என்று கற்பனையை வளர்த்து வைத்திருந்தேன். பத்து வருடங்களில் பெங்களூரின் ஸ்வப்னா புக் ஹவுஸ் மாதிரி ஒரு மாபெரும் புத்தகக் கடையின் உரிமையாளராக பென்ஸ் காரில் சொய்ங் சொய்ங் என்று போய் வர வேண்டும் என்று கூட கற்பனை தனது வண்ணச் சிறகை விரித்திருந்தது.
ஆனால் விதி வலியது.
இன்று ஹிந்து செய்தித்தாளின் முதல் பக்கத்தில் அதே ஸ்வப்னா உரிமையாளர் கதறியிருக்கிறார். இன்னும் ஐந்து வருடங்களில் எங்கள் பிழைப்பில் மண் அள்ளி போட்டுவிடுவார்கள் போலிருக்கிறது என்று அழுதிருந்தார். என்னுடைய கற்பனைக்கே இவ்வளவு பலமா என்று வடிவேல் கணக்காக ஆச்சரியப்பட்டு அடுத்த பத்தியைப் படித்தால்தான் உண்மை தெரிகிறது. அவர் புலம்பலுக்குக் காரணம் நான் இல்லை. அப்பாடா. ப்ளிப்கார்ட், அமேசான் போன்ற பெருமுதலைகள்தான். புத்தகக்கடைகள் ஐந்து அல்லது பத்து சதவீதம் தள்ளுபடி தந்தால் அமேசானில் நாற்பது சதவீதம் வரைக்கும் தள்ளுபடி தருகிறானாம். இன்று புத்தகம் வேண்டும் என்று கேட்டால் அன்று மாலையே கொண்டு வந்து கொடுக்கிறான். Shipping charge, delivery charge என்று எந்தக் கூடுதல் செலவும் இல்லை. வாங்குகிறவர்கள் லாபம் பார்த்துத்தானே வாங்குவார்கள்? அதுவும் சுழல் நாற்காலியை விட்டு மணிக்கணக்காக இடுப்பை நகர்த்தாத பெங்களூர்வாசிகள்? அமேசானிலும், ப்ளிப்கார்ட்டிலும் ஆர்டர் செய்கிறார்கள். அதனால் பெங்களூரின் புத்தகக் கடைகள் செம அடி வாங்கிக் கொண்டிருக்கின்றன.
சொந்தக் கடையாக இருந்தால் பரவாயில்லை. வாடகைக்கடை என்றால் அவ்வளவுதான். கைக்காசு போட்டுத்தான் வாடகை கொடுக்க வேண்டும். ஹெச்.எஸ்.ஆர் லேஅவுட் போன்ற இடங்களில் சதுர அடிக்கு ஐந்நூறு ரூபாய் கேட்கிறார்கள். பத்துக்கு பத்து கடை என்றால் ஐம்பதாயிரம் வாடகை தர வேண்டும். இதையெல்லாம் விசாரித்து வைத்திருந்தேன். வெறும் புத்தகக் கடையாக மட்டும் இல்லாமல் அந்த இடத்தை பண்பாட்டு மையமாக மாற்ற வேண்டும்- கலாப்ரியாவில் ஆரம்பித்து சாம்ராஜ் வரைக்கும் அவ்வப்பொழுது படைப்பாளிகள் பெங்களூர் வந்து போகிறார்கள். கூட்டம் நடத்துவதற்கு தோதான இடம் ஒன்று இருந்தால் அவ்வப்போது ஒரு மீட்டிங் போட்டுவிடலாம். குறும்படங்களைத் திரையிடலாம். புத்தக வாசிப்பு நிகழ்த்தலாம். இப்படி என்னென்னவோ.
இப்பொழுது அதையெல்லாம் ஓரங்கட்டிவிட்டேன்.
ஸ்வப்னா புத்தகக் கடையே பெரு முதலாளியுடையதுதான். அவர்களே அமேசானுடன் போட்டியிட முடியாமல் குதித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் மற்ற புத்தகக்கடைகளைப் பற்றி யோசிக்கவே வேண்டியதில்லை. பிரான்ஸில் இருக்கும் சட்டம் போலக் கொண்டுவரச் சொல்லிக் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். பிரான்ஸில் ஆன்லைன் புத்தக விற்பனையாளர்கள் ஐந்து சதவீதத்துக்கு மேலாக தள்ளுபடி கொடுக்க முடியாது. ஜீரோ shipping charge என்பதும் இருக்கக் கூடாது என்று சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். அமேசான்காரன் மட்டும் சளைத்தவனா என்ன? ஜீரோவாகத்தானே இருக்கக் கூடாது? சரி. 0.01 யூரோ மட்டும் வசூலித்துக் கொள்கிறேன் என்று அரசாங்கத்தின் முகத்தில் அறைந்திருக்கிறான்.
ஆரம்பத்தில் அமேசானும், ப்ளிப்கார்ட்டும் வந்தால் நமக்கு லாபம் என்பது போலத்தான் தெரியும். ஆனால் சிறு புத்தகக்கடைகளை ஒவ்வொன்றாக நசுக்கி மூடச் செய்துவிடுவார்கள். ஒரு கட்டத்திற்கு பிறகு தங்களுக்கு போட்டியே இல்லை என்ற நிலைமை வரும் போது அவர்கள் வைப்பதுதான் விலையாக இருக்கும். இந்த நிலைமை வெறும் புத்தகக் கடைகளில் மட்டும் இல்லை- கிட்டத்தட்ட எல்லாத் துறையிலும் இதுதானே நடக்கிறது? பெரு நகரங்களில் சூப்பர் மார்கெட் அளவிற்கு இருந்தால்தான் மளிகைக்கடை என்கிறோம். அவர்களால்தான் விலையைக் குறைத்துக் கொடுக்க முடிகிறது. மக்களும் அத்தகையை பெரும்கடைகளைத்தான் விரும்புகிறார்கள்.
பெரு முதலாளிகளின் நகைக்கடைகள் வரத் துவங்கியவுடன் மூடப்பட்ட சிறு நகைவியாபாரிகளின் கடைகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு பார்க்கலாம். ஃபோட்டோ ஸ்டுடியோவிலிருந்து மருந்துக் கடைகள் வரைக்கும் முதலாளிகளின் ஆதிக்கமாகத்தான் இருக்கிறது. மில்கள் வந்த பிறகு எத்தனை கைத்தறி நெசவாளர்கள் ஒழிந்து போனார்கள்? பெப்ஸியும், கோக்கும் வந்த பிறகு எத்தனை சோடா நிறுவனங்கள் மூடப்பட்டன? ப்ராண்டட் ஐஸ்கிரீம்கள் வந்த பிறகு தள்ளுவண்டியிலும் சைக்கிளிலும் ஐஸ் விற்ற எத்தனை ஆயிரம் பேர் காணாமல் போனார்கள்? கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
‘என்ன கம்யூனிஸம் பேசுறியா? விலை குறைவாகக் கிடைத்தால் நமக்கு லாபம்தானே?’ என்று கேட்கலாம். லாபம்தான். எத்தனை நாட்களுக்கு என்பதுதான் கேள்வி. அதிகபட்சமாக இன்னும் பத்து வருடங்கள். அதன் பிறகு அவர்கள் வைப்பதுதான் விலையாக இருக்கும். ‘வாங்கினால் வாங்கு...இல்லைன்னா போ’ என்பார்கள். நமக்கும் வேறு வழி இருக்காது. அப்படியே போட்டியிருந்தால் அமேசானுக்கும், ப்ளிப்கார்ட்டுக்கும்தான் போட்டி இருக்குமே தவிர அகநாழிகைக்கும் அமேசானுக்குமா போட்டி இருக்கும்? பனுவலுக்கும் ப்ளிப்கார்ட்டுக்குமா சண்டை நடக்கும்? நாட்கள் நகர நகர சிறு தொழில் முனைவோர்கள் நசுக்கப்பட்டிருப்பார்கள். சொந்தமாகத் தொழில் செய்வதெல்லாம் எல்லோருக்கும் சாத்தியமில்லாத சூழல் உருவாகிவிடும். பிறகு எல்லோருமே நுகர்வோர்கள்தான்.
அடுத்த தலைமுறையில் ஒரு தொழில் ஆரம்பிக்க வேண்டுமானால் பல கோடி ரூபாய் தேவைப்படும் நிலைமை உருவாகிவிடும். இப்பொழுது கூட கிட்டத்தட்ட அந்த நிலைமைதான். ஒரு டீக்கடை வைக்க பத்து லட்சம் ரூபாயாவது தேவைப்படுகிறது. புதிதாகத் துவங்கப்பட்ட ஏதாவதொரு டீக்கடையை கவனித்துப் பாருங்கள். வண்ண விளக்குகள், கண்ணாடிச்சுவர்கள், டைல்ஸ் தரை என்று ஜொலிக்கிறார்கள். நான்கைந்து மலையாளிகள் சேர்ந்து பத்து அல்லது பதினைந்து கடைகளைத் தொடங்குகிறார்கள். Chain of Tea shops. எங்கள் ஊரில் பார்த்த பக்கமெல்லாம் கீர்த்தி பேக்ஸ்தான். நம்மவர்கள் நடத்தும் டீக்கடைகளில் ஈயாடுகிறது. மூடாமல் என்ன செய்வார்கள்?
குழந்தை பிறப்பது கார்போரேட் மருத்துவமனைகளில். படிப்பது பெருமுதலாளிகளின் கல்வி நிறுவனங்களில். வேலை செய்வதும் பெருமுதலாளிகளின் நிறுவனங்களில். சம்பாதிப்பதையும் அவர்கள் நடத்தும் கடைகளில்தான் திருப்பிக் கொடுக்க வேண்டும். இப்பொழுது வேண்டுமானால் இதை ஊதிப்பெருக்குவதாகத் தெரியும். ஆனால் பெரு முதலாளிகளின் ஆக்டோபஸ் கரங்கள் நம்மை நோக்கி விரிந்து கொண்டு வருகிறதா இல்லையா?
முப்பது வருடங்களுக்கு முன்பாக அமத்தா ஊரில் கூட ஒரு சினிமா கொட்டகை இருந்ததாம். ஐந்நூறு பேர்கள் கூட வசிக்காத அந்த ஊரில் கொட்டகை இருந்திருக்கிறது. தியேட்டர்கள் வந்த போது கொட்டகைகளை மூடினார்கள். மால்கள் வந்த பிறகு தியேட்டர்களை மூடினார்கள். இனி எல்லாவற்றிலும் அப்படித்தான். சரி விடுங்கள். தியேட்டர் என்றவுடன் ஞாபகம் வருகிறது. குத்து ரம்யா எம்.பி தேர்தலில் தோற்ற பிறகு நடித்த படம் ஒன்று திரைக்கு வந்திருக்கிறது. வாழ்க்கையில் முதன் முதலாக கன்னடப்படம் ஒன்றை தியேட்டரில் பார்க்கவிருக்கிறேன். பார்த்துவிட்டு வந்து சொல்கிறேன். இதைவிடவா நமக்கு சிறு தொழில் முனைவோர்கள் முக்கியம்?
24 எதிர் சப்தங்கள்:
Will you talk in the same fashion about Capt. Gopinath? any new system which affects the present supply chain's interest is bound to cause disturbance.
really true. but what can we do?
புதிய வரவுகள், பழமையை ஒதுக்குவது வழைமை. உலகமயமாக்களில் இதெல்லாம் சகஜம். பற்பசை வந்ததும் பற்பொடியை தூக்கி வீசியது போல. பற்பொடி கம்பெனிகாரர்கள் என்ன தற்கொலையா செய்து கொண்டார்கள்!? எந்த இனம் அழிக்க பட்டுள்ளது இவ்வாறு இதுவரை
For your business you incur rent in prime area,electricity etc., and for my ( read amazon, flipkart etc.,) business i spend for marketing,freight etc., as part of delivery mechanism. What a Big deal if online stores are NOT playing by your rules ( i don't include predominantly Tamil Books online stores here ). There won't be a Bangalore if the logic goes :)
உண்மையை ரொம்ப சைலண்டாக எழுதியிருக்கிறீர்கள்.. அருமை.. இந்த அரக்கர்கள் அட்டகாசம் துவங்க பத்து வருடம் எல்லாம் தேவைப்படாது என்று எனக்கு தோன்றுகிறது..!
உங்க அனுமதியோடு இந்த பதிவை ஷேர் செய்து கொள்கிறேன்..!
"இந்த அரக்கர்கள் அட்டகாசம் துவங்க"
துவங்கியாச்சு Sir. பெரு நகரங்களில் 150 ரூபாய்க்கு குறைந்து சினிமா டிக்கெட் கிடைப்பதில்லை.
வேறு வழியில்லை குளிர்பாணத்தில் PEPSI COKE தவிற வேறு எதுவும் மார்க்கெட்டில் கிடைப்பதில்லை. இப்படி பல சொல்லிகொண்டே போகலாம்...
Currently Bangalore needs good Pure veg hotels. Look at A2B, in a very short time, they have open lot of branches in bangalore. As you like you, i always dream to open good veg rest here.
நிஜத்தை சொல்லும் கட்டுரை! அருமை!
"Energy can not be destroyed; it can only be converted into some other form of energy" என்ற உண்மை நமக்குத் தெரியாதா? காலம் மாறும்போது பொருளாதாரத்தின் அடிப்படையும் மாறிக்கொண்டுதான் இருக்கும். அன்று அரசு வேலை கிடைத்து மாதச் சம்பளம் 250 கிடைத்தால் பெரிய வசதி வந்தது போல் இருக்கும். இன்று பள்ளி இறுதியில் 40 மார்க் எடுத்தவனும், பொறியியலில் தொடர்ந்து அரியர்ஸ் வைத்தே பாஸ் பண்ணியவனும் கூட, எடுத்த எடுப்பில் முப்பதாயிரம் சம்பளம் கேட்க விரும்புகிறான. யு எஸ் அனுப்புவாயா என்கிறான். சலுகைகளை அனுபவிக்க விரும்புவோர், அதன் இன்னொரு பக்கத்தையும் அனுபவித்துத் தானே ஆகவேண்டும்? This has been the case these thousands of years, and it will be so for the next thousand years too. Mankind can always adapt to the change as it has been doing all these years. - இராய செல்லப்பா, சென்னை
HOW TO BUILD A GREAT BUSINESS IN TOUGH TIMES
To Buy Online: http://bit.ly/1obYNE2
Published by Hachette
By Will King
இது பயணுள்ளதாக இருக்கலாம் :)
Fiat currency system will destroy the world soon.
//எத்தனை நாட்களுக்கு என்பதுதான் கேள்வி. அதிகபட்சமாக இன்னும் பத்து வருடங்கள். அதன் பிறகு அவர்கள் வைப்பதுதான் விலையாக இருக்கும். ‘வாங்கினால் வாங்கு...இல்லைன்னா போ’ என்பார்கள்.//
அப்படி எல்லாம் ஆகி விடாது. தொண்ணூறுகளின் நடுவே ஆரம்பிக்கப்பட்ட அமேசான் நீங்கள் எழுதியது போல அமெரிக்காவில் இருந்த சிறு புத்தக கதைகளை இல்லாமல் ஆக்கியது. ஆனால் இன்றும் புத்தகங்களை தள்ளுபடி விலையில் தருகிறது. மற்றும் அமேசானுக்கும் போட்டியாக வேறு ஆன்லைன் விற்பனை தளங்கள் வந்து விட்டன.
என்ன நீங்கள் கூறியது போல சிறு இலக்கிய குழுக்களுக்கு ஒரு பொதுவான செயல்பாட்டு இடங்கள் இல்லாது போய் விடும். ஆனாலும் நிகர் மெய் உலகில்தான் குழும செயல் பாட்டிற்கு ஃப்ப், கூகிலே+ எட்ஸெடர. என்று எவ்வளவு இடங்கள் இருக்கின்றன.
Absolutely true sir....due to congress's poor new economy policy made all this..BJP also supporting same..Need more awareness from people to fight against all this big crocodiles now onwards...
முற்றிலும் உண்மை, சுஜாதா புத்தகங்கள் வாங்கி படிப்பேன், டைடெல் பார்க்கில் இருக்கும் ஹிஃகின்போதம்ஸ் கடைக்கு போய் பார்த்ததில் வெறும் சுஜாதாவின் 100 புத்தகலே இருத்தது, ஆனால் ப்ளிப்கார்ட் பார்த்ததில் 230 புத்தகங்கள் 30% தலுபபடியுடன் குடுக்கிறார்கள்
நிதர்சனம்.இது வெறும் புத்தகக்கடையோடு மட்டுமல்ல..நீங்கள் சொல்வதுபோல் எல்லாதளத்திலும் நிகழ்கிறது.கவனமேயில்லாமல் வழக்கம்போல் கடந்துகொண்டிருக்கிறோம்
http://www.revmuthal.com/2014/08/flipkart.html?m=1
நியாமான, சிறந்த அலசல்...
இதை கார்ல் மார்க்ஸ் முன்னரே சொல்லிச் சென்றிருக்கிறார்...
முதலீடுகள் ஒரே இடத்தில் குவியும்.
அப்போது...ஒரு துறைக்கு ஒரு முதலாளிதான் மிஞ்சுவான் என்று..
அதுதான் நடக்கிறது.
இது...புரட்சியை நோக்கிய அடுத்த காலகட்டம் - 50 ஆண்டுகளில் அதுவும் நிகழ்ந்துவிடும்...
Amazon and Flipcart were started by small entrepreneurs but grew by their business model. Walmart, which is a big shot is worried by growth of Amazon as it is bound to overtake Walmart in a few years.No need to be so negative.More books are read and sold, and more writers publish because of these new delivery mechanism. The number of book salesmen losing their jobs is miniscule compared to the jobs generated by these new delivery channels.
CAN YOU PLEASE TELL ME A GOOD TAMIL LIBRARY IN BANGALORE? I AM IN BASAVESHWARA NAGAR. IAM NOT GETTING ANY TAMIL BOOKS IN THIS AREA. .
//பத்து வருடங்களில் பெங்களூரின் ஸ்வப்னா புக் ஹவுஸ் மாதிரி ஒரு மாபெரும் புத்தகக் கடையின் உரிமையாளராக பென்ஸ் காரில் சொய்ங் சொய்ங் என்று போய் வர வேண்டும் என்று கூட கற்பனை தனது வண்ணச் சிறகை விரித்திருந்தது. // புத்தக கடை மட்டும் வைத்துள்ள எவனும் இதனை சாதிக்க முடியாது.
absolutely true. What is the solution to avoid this.. please suggest .. this is not a simple topic.. its the worry for our and next generation
**
பெரு நகரங்களில் 150 ரூபாய்க்கு குறைந்து சினிமா டிக்கெட் கிடைப்பதில்லை.
**
யார் சொன்னது? 60 ரூபாயக்கும், 80 ரூபாய்க்கும் ஏசியுடன் அருமையான ஒற்றைத்திரை அரங்குகள் உள்ளன. ஆனால் அங்கு செல்ல கவுரவம் தடுக்கும்.
**
குளிர்பாணத்தில் PEPSI COKE தவிற வேறு எதுவும் மார்க்கெட்டில் கிடைப்பதில்லை.
**
ஏன் இளநீர், பதநீர் குடிக்கலாமே!
மனம் இருந்தால் மார்க்கமுண்டு.
தர்ஷிணிகள் வேண்டாமா ;)
தமிழக ருசியுடன் இருக்க வேண்டுமோ?
கோரமங்களா - ஸ்ரீகிருஷ்ணா கபே
HSR - அறுசுவை அரசு என ஏரியாவுக்கு ஒன்றிரண்டு இருக்கும்.
வணக்கம்,
எனக்கு ஒரு சந்தேகம். தாங்கள் ஆன்லைனில் பொருட்கள் வாங்குகிறீர்களா?
Post a Comment