Aug 7, 2014

குழந்தைகளுக்கான சஞ்சிகை இருக்கிறதா?

சிறுவர்களுக்கான சஞ்சிகைகள் இப்பொழுது தமிழில் மிகக் குறைந்துவிட்டன. இரண்டு மாதங்களுக்கு முன்பாக பள்ளி மாணவர்களுக்கு தோதான சஞ்சிகைகளைத் தேடும் போது திணற வேண்டியதாகிவிட்டது. யாராவது ஒருவர் ஒரு சஞ்சிகையின் பெயரைப் பரிந்துரைத்தால் ‘இப்போ அது சரியில்லைங்க’ என்று இன்னொருவர் கண்டிப்பாகச் சொன்னார். சலித்துப் போனதுதான் மிச்சம். கடைசியில் சுட்டி விகடன் மட்டும்தான் மிஞ்சியது. 

பொதுவாக புத்தகங்கள் வாசிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அருகிவிட்டது. அதுவும் தமிழில் வாசிக்கும் குழந்தைகள் யாராவது இருக்கிறார்களா என்று சொந்தக்காரக் குழந்தைகளையும் நண்பர்களின் குழந்தைகளையும் நினைவு படுத்திப் பார்த்தால் ஒரு முகம் கூட ஞாபகத்துக்கு வருவதில்லை. எப்படி வரும்? ஒருவருமே இல்லை என்பதுதான் நிதர்சனம். மொபைல் கேம்ஸ் விளையாடுகிறார்கள். போகோ சேனல் பார்க்கிறார்கள். சன் மியூஸிக் பார்க்கிறார்கள். கொஞ்சம் வளர்ந்து ஃஎப்.டிவி பார்க்கிறார்கள். கம்யூட்டர் கிடைத்தால் எக்ஸ்வீடியோஸ் பார்க்கிறார்கள்.

தொலைக்காட்சியும் கணினியும் மொபைலும் குழந்தைகளின் மொத்த கவனத்தையும் திரையில் தெரியும் சித்திரங்களின் மீதாக மட்டுமே இழுத்துப் பிடிக்கின்றன. அதைத் தாண்டி துளி கூட யோசிக்க வைப்பதில்லை. வெளிப்படையாகச் சொன்னால் மந்தையாக மாற்றுகின்றன. ஆனால் வாசிப்பதும் கதை கேட்பதும் அப்படியில்லை. ‘அண்டார்ட்டிக்காவில் ஒரு கடல் சிங்கம் இருந்துச்சாம்’என்று ஒரு கதையைச் சொல்லத் தொடங்கினால் குழந்தைகள் எதையெல்லாமோ யோசிக்கத் துவங்கிவிடுவார்கள். அண்டார்டிக்கா என்றால் என்ன?  சிங்கம் தெரியும்- அது என்ன கடல் சிங்கம்? அது எப்படி இருக்கும்? எதைச் சாப்பிடும்? அது நல்ல விலங்கா கெட்ட விலங்கா? இப்படி ஒற்றை வரியில் ஏகப்பட்ட கேள்விகளை குழந்தைகளுக்குள் உருவாக்கிவிட முடியும். இதைத்தான் புத்தகங்களும் குழந்தைகளுக்கான சஞ்சிகைகளும் செய்கின்றன. 

குழந்தைகளிடமிருந்து ஆக்கப்பூர்வமான கேள்விகள் உருவாக வேண்டும். குழந்தைகளின் கேள்விகளை ஊக்குவிக்கத் தொடங்கினால் அவர்களது பல கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியாமல் விழி பிதுங்குவோம். ஆனால் அறிந்தோ அறியாமலோ குழந்தைகளின் கேள்விகளை அடக்கிவிடுகிறோம். நான்கைந்து முறை அவர்களது கேள்விகள் மடக்கப்பட்டாலோ அல்லது அவர்களுக்குத் திருப்தியில்லாத பதில்கள் தரப்பட்டாலோ அடுத்த முறை நம்மிடம் கேட்கவே மாட்டார்கள். அதுதான் பெரும்பாலான குழந்தைகளின் சைக்காலஜி. அதற்குத்தான் புத்தகம் வேண்டும். தங்களது கேள்விகளுக்கான பதில்களை புத்தகங்களில் தேடத் துவங்குவார்கள்.

இரண்டு அல்லது மூன்றாம் வகுப்பிலிருந்து குழந்தைகளுக்கு சித்திரக் கதைகளும், உரைநடைக்கதைகளும் மிக முக்கியமானவை. நமக்கு என்னவோ அவை மிகச் சாதாரணமான கதைகளாகத் தெரியக் கூடும் ஆனால் அவை குழந்தைகளுக்குள் கிளறிவிடும் சிந்தனைகள்தான் அவர்களது ஆளுமை உருவாக்கத்தில் மிக முக்கியமான காரணியாக இருக்கும். குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தை மட்டும் உருவாக்கிவிட்டால் போதும். பிறகு அவர்களாகவே பார்த்துக் கொள்வார்கள். ஆனால் இங்கு குழந்தைகளின் வாசிப்புக்கேற்ற சஞ்சிகைகளும் பத்திரிக்கைகளும் இல்லை. 

இவையெல்லாம் நம் எல்லோருக்குமே தெரிந்த செய்திகள்தான். சஞ்சிகைகள் இல்லையென்பதால் யாரும் மண்டை காய்வதில்லை. இருப்பதை வைத்து ஓட்டலாம் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டோம் என நினைக்கிறேன். தமிழில் சிறுவர்களுக்கான சஞ்சிகைகள் ஏன் அருகிவிட்டன என்று யோசித்தால் நூறு காரணங்களையாவது சொல்லிவிட முடியும். அது போகட்டும்.  ‘இதுதான் பிரச்சினை’ என்று யார் வேண்டுமானாலும் சொல்லிவிடலாம். ‘இதுதான் தீர்வு’ என்று சொல்வதற்குத்தானே இங்கு ஆட்கள் இல்லை.

‘பூவுலகின் நண்பர்கள்’ இருக்கிறார்கள். மின்மினி என்றொரு சிறுவர்களுக்கான சஞ்சிகையை தொடங்கியிருக்கிறார்கள். மருத்துவர் கு.சிவராமன் தான் ஆசிரியர். இரண்டு இதழ்கள் வந்துவிட்டன. ஈரோடு புத்தகக் கண்காட்சியில் பார்த்தவுடன் சந்தோஷமாக இருந்தது. ஒரு வருடச் சந்தா கட்டிவிட்டேன். முதல் இதழ் 32 பக்கங்கள்தான். சித்திரக் கதை ஒன்று இருக்கிறது. மொழிபெயர்ப்புக் கதையும் இருக்கிறது. புவி வெப்பமயமாதலைப் பற்றிய கட்டுரை ஒன்றும், பறவையியல் அறிஞர் சாலிம் அலி பற்றிய கட்டுரை ஒன்றும், இரவாடிகளான வெளவால், ஆந்தை பற்றிய குறிப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன. இவை போக நிறைய சிறுகதைகள், விடுகதைகள், குழந்தைகளின் ஓவியங்கள், வண்ண நிழற்சித்திரங்கள், குழந்தைப்பாடல் ஒன்று என மிகத் திருப்தியாக வந்திருக்கிறது.


ஒரு வருடச் சந்தா இருநூறு ரூபாய். வாசித்து முடித்தவுடனயே இதைப்பற்றி எழுதிவிட வேண்டும் என்று தோன்றியது. செய்தாகிவிட்டது. ஒரு சந்தா கட்டி வைத்துவிடலாம். நிச்சயம் மோசம் போகாது.

முகவரி:
பூவுலகு மின்மினி
106/1, முதல் தெரு, கனக துர்கா வணிகவளாகம்,
கங்கையம்மன் கோவில் தெரு,
வடபழனி,
சென்னை- 26
அலைபேசி: 98416 24006

3 எதிர் சப்தங்கள்:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சிறார்களுக்கான புதிய இதழ் என்பது இனிப்பான செய்தி.
அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!
பூவுலகு மின்மினி வாழ்க!

Yarlpavanan said...

சிறந்த ஆய்வும் கருத்தும்
தொடருங்கள்

பாபுனையும் ஆற்றல் இருப்பின் போட்டிக்கு வாரும்!
http://paapunaya.blogspot.com/2014/08/blog-post.html

”தளிர் சுரேஷ்” said...

பல சிறுவர் இதழ்கள் ஆதரிப்பார் இல்லாது முடங்கிவிட்டன! அதில் பூந்தளிர் என்ற வாண்டுமாமாவின் இதழும் ஒன்று! கோகுலம் முன்பு சிறப்பாக இருந்தது. இப்போது எப்படியோ தெரியவில்லை! மின்மினிக்கு நானும் சந்தா கட்டி விடுகிறேன்! நன்றி!