Aug 5, 2014

அறிவுரை கைவசம் இருக்கா?

யாருக்காவது அறிவுரை சொல்வதற்கு வாய்ப்பு கிடைக்குமா என்று மனம் துள்ளிக் கொண்டேயிருக்கிறது. இளிச்சவாயன் கிடைத்தால் எதையெல்லாம் இறக்கி வைக்க முடியுமோ வைத்துவிட வேண்டும். அதுவும் எதிரில் இருப்பவன் ‘சரிங்க சார்...சூப்பர்’ என்றெல்லாம் தலையை ஆட்டிவிட்டால் நம் இரண்டு காலையும் அவனது கழுத்தைச் சுற்றி தொங்கவிட்டவாறு அமர்ந்து அரைத்துத் தள்ளிவிட வேண்டும். அப்படியொரு சகாவிடம் சிக்கிக் கொண்டேன். ஏற்கனவே ஒரு முறை அழைத்துப் பேசியிருக்கிறார். ‘நீங்கள் நிறைய புத்தகங்கள் வாசிக்க வேண்டும், வாழ்க்கையில் தினமும் நடக்கும் நிகழ்வுகளையெல்லாம் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று அடுக்கிக் கொண்டே போனார். அப்பொழுது ஊரில் இருந்தேன். ரோமிங். பிரியங்கா சோப்ராவின் எண் கிடைத்தாலும் கூட கூட மிஸ்டு கால் கொடுத்துத்தான் பேச முயற்சித்துப் பார்ப்பேன். இந்த மனிதர் அநியாயமாக இருபது நிமிடம் பேசி கழுத்தறுத்துவிட்டார். பதினைந்து ரூபாய் கரைந்து போனது.

பேசுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நேற்று கூட டொம்ளூரில் செருப்பு தைக்கும் பெண்மணியிடம் கேள்விகளாகக் கேட்டு தாளித்துவிட்டு வந்தேன். இருபத்தியேழு வருடங்களுக்கு முன்பாகவே இங்கே வந்துவிட்டவர். காதல் திருமணம். கணவனும் மனைவியும் வெவ்வேறு சாதிகள். அப்பொழுதெல்லாம் டொம்ளூர் சாலை கொடித்தடமாக இருந்ததாம். மண் சாலை கூட இல்லை- கொடித்தடம். இங்கு வந்த ஏழெட்டு வருடங்களுக்குப் பிறகு ஒரு இடம் விலைக்கு வந்திருக்கிறது. நாற்பதாயிரம் சொன்னார்களாம். வீட்டுக்காரர் சோபா தைத்து ஓரளவு பணம் சேர்த்து வைத்திருந்தார். இருந்தாலும் பெங்களூர்க்காரர்கள் ஏமாற்றிவிடுவார்கள் என்று பயந்து அந்தப் பணத்தில் சொந்த ஊரில் ஒரு இடம் வாங்கிப்போட்டார்களாம். இப்பொழுது அங்கு நான்கு லட்ச ரூபாய்க்கு கேட்கிறார்களாம். இவர்கள் கைவிட்ட இடத்தில் மிகப்பெரிய மருந்துக்கடை இயங்குகிறது. இப்பொழுது நான்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது. அதற்கு எதிரில் செருப்புக்கு பாலிஷ் போட்டுக் கொடுக்கிறார். சொல்லிவிட்டு வெற்றிலை எச்சிலை ஓங்கித் துப்பினார். அது வெகுதூரம் தள்ளிப் போய் விழுந்தது. தனது அத்தனை வருத்தங்களையும் சேர்த்துத் துப்பியிருப்பார் போலிருக்கிறது.

அவர் எனக்கு எந்த அறிவுரையும் கொடுக்கவில்லை. நானும் அறிவுரைக்கவில்லை. பேச்சு சுமூகமாக இருந்தது. 

அதுவே இந்த அறிவுரைக்காரர் இருக்கிறார் பாருங்கள். வியாழக்கிழமை காலையில் மீண்டும் அழைத்திருந்தார். அன்று பெங்களூரில் பந்த். பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை எதிர்த்து சில கன்னட அமைப்புகள் அழைப்புவிடுத்திருந்தார்கள். காலையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பேருந்துகள் கூட சொற்பமாகத்தான் ஓடின. பெரும்பாலான நிறுவனங்களுக்கு விடுமுறை. எங்களுக்கு அலுவலகம் இருந்தது. கிளம்பலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போதுதான் அழைத்துவிட்டார். தெரியாத எண். எடுத்தால் இந்த மனிதர். முதலில் நல்லபடியாகத்தான் பேசினார். அதன் பிறகுதான் அழிச்சாட்டியமே. இணையத்தில் இதுவரை மூன்றாயிரம் ஹைக்கூக்களை எழுதித் தள்ளிவிட்டாராம். இன்னமும் யாரும் கவனிக்கவில்லை. அதுதான் பிரச்சினை.  அதனால் நீயும் இணையத்தில் எழுதுவதை நிறுத்திவிட்டு அச்சு ஊடகங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றார். நல்லதுக்குத்தானே சொல்கிறார்? ‘சரிங்க’ என்று சொல்லிவிட்டேன். 

ஆரம்பித்துவிட்டார். ரமணி சந்திரனில் ஆரம்பித்து வைரமுத்து, அப்துல் ரகுமான் வரைக்கும் படிக்க வேண்டிய புத்தகங்களை அடுக்கினார். பற்களைக் கடித்து கேட்டுக் கொண்டேன். ரமணி சந்திரனையோ, வைரமுத்துவையோ அல்லது அப்துல் ரகுமானின் பங்களிப்பையோ குறைத்துச் சொல்லவில்லை. ஆனால் வாசிப்புப் பழக்கம் இருப்பவனிடம் ‘நீ இதையெல்லாம்தான் வாசிக்க வேண்டும்’ என்று வலியுறுத்துவது வன்புணர்வு செய்வது போல. யாராவது கேட்டால் ஒழிய நாமாக இவைதான் சிறந்த புத்தகங்கள், இவர்கள்தான் நம்பிக்கை தரும் எழுத்தாளர்கள் என்றெல்லாம் பட்டியல் வாசிப்பதைவிடவும் அசிங்கம் அல்லது அபத்தம் வேறொன்றும் இருக்க முடியாது. எத்தனை லட்சம் புத்தகங்கள் கொட்டிக் கிடக்கின்றன? இவை அத்தனையையும் குறைந்தபட்சம் புரட்டியாவது பார்த்திருந்தால் பட்டியல் எழுதலாம். வாங்கி வைத்திருக்கிற புத்தகங்களில் வெறும் இருபது சதவீதத்தை மட்டும் வாசித்துவிட்டு ‘இவைதான் டாப்’ என்பது எந்தவிதத்தில் நியாயம்?

இசையும், இளங்கோ கிருஷ்ணனும் சிறந்த கவிஞர்கள் என்றால் அது எனக்கு மட்டும்தான். என்னுடைய ரசனை சார்ந்து, வாசிப்பு அனுபவம் சார்ந்து அவர்களைச் சிறந்த கவிஞர்கள் என்கிறேன். அதுவே இன்னொருவருக்கு பழநிபாரதியும், தபூ சங்கரும்தான் சிறந்த கவிஞர்களாக இருக்கக் கூடும். இது அவரவர் வாசிப்பை பொறுத்த விஷயம். அவரிடம் ‘நீ இசையையும், இளங்கோவையும்தான் வாசிக்க வேண்டும்’என்று நான் சொல்வது வன்முறை. ஒவ்வொரு வாசகனும் தனது வாசிப்பின் வழியாக புதுப் புது எழுத்தாளர்களைத் தாண்டிக் கொண்டேயிருக்கிறான். அவனுக்குத் தெரியும் எந்த இடம் தனக்கான வாசிப்புத் தளம் என்று. அந்தத் தளத்தில் நின்றுதான் வாசிப்பான். மற்றவர்களிடம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துவதில் தவறில்லை. ஆனால் ‘இவர்தான் பெஸ்ட்’ என்று நாம் முடிவு எடுத்து அதை இன்னொருவன் தலையில் ஏற்றுவது அயோக்கியத்தனம்.

இதையெல்லாம் அவரிடம் நேரடியாகவே சொல்லியிருக்கலாம்தான். ஆனால் வயதுக்கு மரியாதைக் கொடுத்து எதுவும் சொல்லவில்லை. 

இது தனிமனிதர்களிடம் மட்டும் இல்லை. அமைப்புகளிடமும் இந்தச் சிக்கல் இருக்கிறது. மக்கள் சிந்தனைப் பேரவை என்ற அமைப்பு சார்பில் வருடாவருடம்  ஈரோட்டில் புத்தகக் கண்காட்சி நடத்துகிறார்கள். கடந்த நான்கைந்து வருடங்களாகச் சென்று கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு வருடமும் கூட்டம் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. இந்தப் பகுதியில் புத்தகம் வாங்குபவர்களின் எண்ணிக்கையை கணிசமாகக் உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள் என்று உறுதியாக நம்பலாம். புத்தகக்கண்காட்சியின் போது ஒவ்வொரு நாளும் மாலையில் யாராவது பிரபலங்களை அழைத்து பேசச் சொல்கிறார்கள். சுகி சிவம், கபிலன் வைரமுத்து, நெல்லை ஜெயந்தா போன்றவர்கள்தான் பேசுகிறார்கள். இவர்கள்தான் கூட்டத்தை இழுப்பார்கள் என்று மக்கள் சிந்தனைப் பேரவையினர் நம்புகிறார்கள். அது பிரச்சினையில்லை. படைப்பாளர் அரங்கம் என்று தனியாக ஒரு அரங்கம் வைத்திருக்கிறார்கள். அங்கேயாவது வேறு சில படைப்பாளிகளை அழைத்து பேச வைக்கலாம் அல்லவா? வா.மு.கோமு அதே ஊர்க்காரர்தான். கெளதம சித்தார்த்தன் அதே மாவட்டம்தான். ஈரோடு பேருந்து நிலையத்தில் நின்று சற்று உரக்கக் கத்தினால் பெருமாள் முருகனுக்கு காதில் விழும். அவ்வளவு பக்கத்தில் இருக்கிறார். நாஞ்சில் நாடன் பக்கத்து மாவட்டத்தில் குடியிருக்கிறார். கவிஞர் மகுடேஸ்வரன் திருப்பூரில் வசிக்கிறார். இன்னும் ஏகப்பட்ட எழுத்தாளர்கள் சுற்றிச் சுற்றி இருக்கிறார்கள். அழைத்து வந்து வாசகர்களோடு கலந்துரையாடச் சொல்லலாம். ஆனால் அந்த படைப்பாளர் அரங்கிலும் கூட மக்கள் சிந்தனைப் பேரவையினர் அப்துல் ரகுமானோடும், பாடலாசிரியர் கபிலனோடும் திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள். 

மக்கள் சிந்தனைப் பேரவையையும் தவறு என்று சொல்ல முடியாது. சென்ற வருடம் ஜெயமோகனை அழைத்திருந்தார்கள். என்ன பிரச்சினையோ- அவர் ஊருக்குச் சென்று ‘ஈரோட்டு காக்கைகள்’ என்று எழுதிவிட்டார். பிறகு எப்படி அழைப்பார்கள்? சங்காத்தமே வேண்டாம் என்று இந்த வருடம் அந்த வகையறா எழுத்தாளர்களையே மொத்தமாக நிராகரித்துவிட்டார்கள் போலிருக்கிறது. 

போகட்டும். 

அரங்கத்தில் அறிவிப்பு செய்பவர் நமக்கு வரம் கொடுப்பதற்காக எழுத்தாளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று அறிவித்துவிட்டு கபிலன் வைரமுத்துவை பேசச் சொல்கிறார். அதுதான் சற்று நெருடலாக இருக்கிறது.

7 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//மற்றவர்களிடம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துவதில் தவறில்லை. ஆனால் ‘இவர்தான் பெஸ்ட்’ என்று நாம் முடிவு எடுத்து அதை இன்னொருவன் தலையில் ஏற்றுவது அயோக்கியத்தனம்.//
இதையே ஆதங்கமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.அறிவுரையாகவும் எடுத்துக் கொல்லலாம். நீங்கள் ஆதங்கத்தை கொட்டியிருக்கிறீர்களா அல்லது அறிவுரையாய் சொல்லியிருக்கிறீர்களா?.

illamalli said...

அறிவுரை சொன்னவருக்கு நச்சென்று அறிவுரை சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் செய்திருப்பதும் அறிவுரைதான் - ஆனால், பத்தியில் பதிந்திருக்கிறீர்கள், அவ்வளவுதான்.
சரி, இசை & இளங்கோ என்பது உங்கள் கவிதை ரசனையை நீங்கள் உயர்வாக கருதுகிறீர்கள், நல்லது. அதேசமயம் பழநிபாரதி, தபூ சங்கர் இருவரையும் எப்படி சமமாக குறிப்பிடலாம். தபூ முழுக்க காதல் கவிதைகள் செய்பவர். பழநிபாரதியின் நவீன கவிதைகளை படித்திருக்கிறீர்கள்தானே . . . அவரை இதுவரை உங்களைப் போன்ற அனைவருமே திரைப்பட பாடலாசிரியராக மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்.
பழநிபாரதியின் கவிதை நூல்களை ஒருமுறை படித்துப்பாருங்கள்
1. நெருப்புப் பார்வைகள்
2. வெளிநடப்பு
3. காதலின் பின்கதவு
4. மழைப்பெண்
5. முத்தங்களின் பழக்கூடை
6. புறாக்கள் மறைந்த இரவு
7. தனிமையில் விளையாடும் பொம்மை
8. தண்ணீரில் விழுந்த வெயில்
9. கனவு வந்த பாதை
10. காற்றின் கையெழுத்து
11. உன் மீதமர்ந்த பறவை
அனைத்து நூல்களும் கிடைக்குமிடம்;
குமரன் பதிப்பகம், எண் - 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை - 17
தொ.பேசி; 044-24312559

தருமி said...

//வாங்கி வைத்திருக்கிற புத்தகங்களில் வெறும் இருபது சதவீதத்தை மட்டும் வாசித்துவிட்டு ‘இவைதான் டாப்’ என்பது எந்தவிதத்தில் நியாயம்?//

??????????? யாரு?

”தளிர் சுரேஷ்” said...

அறிவுரைக்கு நச் அறிவுரை!

Sabareesan said...

நல்ல அறிவுரை.
திரு. பழநிபாரதி, நீங்கள்தானா அது? :-)

illamalli said...

நான் அவர் அல்ல, wait . . .

Yarlpavanan said...

சிறந்த கருத்துப் பதிவு
தொடருங்கள்