Aug 27, 2014

அடுத்த வாரம் வர முடியுமா?

வெகுநாட்களாக எதிர்பார்த்து வந்ததுதான். கப்பன் பார்க்கில் கொசு கடிக்கிறது, லால்பாக்கில் ஆட்களின் தொந்தரவு அதிகம், வீட்டு மொட்டை மாடியில் மழை சீஸன் என்று ஏதாவதொரு காரணத்தினால் தள்ளிக் கொண்டே போய்விட்டது. இப்பொழுது ஒரு வடிவத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது. இனி பெங்களூரில் தொடர்ச்சியாக உரையாடல்களை ஒழுங்கு செய்துவிடலாம். 

செம்ப்டம்பர் ஏழாம் தேதியிலிருந்து தொடங்கிவிடலாம். அன்றுதான் முதல் உரையாடல். புத்தகங்கள் மட்டும் என்றில்லாமல் குறும்படங்கள் திரையிடல், சினிமா,  சமூகம் என பலவாறான தளங்களில் இந்த உரையாடல் இருக்கும். மேடையில் இரண்டு பேர் அமர்ந்து கொண்டு முன்னால் இருப்பவர்களை பார்த்து பேசும் படியான பந்தா தோரணை இல்லாமல் பெரும்பாலான கூட்டங்கள் வட்ட வடிவத்தில் அமர்ந்து அனைவரும் பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியாகத்தான் இருக்கும். அவ்வப்போது பெங்களூருக்கு வருகை தரும் ஆளுமைகளை அழைத்து வரும் போது மட்டும் அவர்களுக்கு மரியாதை தரும் விதமாக மேடை-பார்வையாளர் என்ற வகையில் நடத்தலாம்.

பொதுவாக இரண்டு மணி நேரம் நடக்கும். மதிய நேரத்தில்- மூன்று மணிவாக்கில் வைத்துக் கொள்ளலாம். முதல் நாற்பத்தைந்து நிமிடங்கள் பேசிவிட்டு பதினைந்து நிமிட இடைவெளி. டீ, காபி குடித்துவிட்டு வந்து பிறகு மீண்டும் நாற்பத்தைந்து நிமிடங்கள் பேசலாம். கடைசி கால் மணி நேரம் ஏதாவது வெட்டிப்பேச்சு. அவ்வளவுதான். ஐந்து மணிக்கு வண்டியை கிளப்பிவிடலாம்.

ஜனநாயகப்பூர்வமான கூட்டங்களாக இருக்க வேண்டும் என்பதில் மட்டும் எந்த மாற்றுக் கருத்துமில்லை. யார் வேண்டுமானாலும் பேசலாம். எத்தகைய விமர்சனங்களையும் முன் வைக்கலாம். புத்தகங்களை அறிமுக செய்து பேசலாம். கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றை வாசித்து விவாதிக்கலாம். அடுத்தவர்களின் மூக்கு நுனி வரைக்கும் நமக்கு சுதந்திரம் உண்டு. இப்போதைக்கு மாதத்தில் ஒரு முறை அல்லது இரண்டு முறை சந்திக்கலாம். ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிறுகளில் சந்திக்கலாம். ஒருவேளை அது மூன்று அல்லது நான்கு நாட்கள் விடுமுறையுடனான நீண்ட வாரக்கடைசியாக இருந்தால் வேறொரு நாளை முடிவு செய்து கொள்ளலாம்.

அடுத்த கூட்டத்தில் எதைப் பற்றி பேசலாம் என்பது மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டுவிடும் அல்லது முந்தைய கூட்டத்திலேயே முடிவு செய்துவிடலாம். இடையில் ஒரு முறை நினைவூட்டல் செய்தியையும் அனுப்பிவிடலாம். உதாரணமாக ‘மிளிர்கல்’ நாவல் பற்றி பேசலாம் என்றால் ஆளாளுக்கு கட்டுரைகள் அல்லது குறிப்புகளோடு வந்துவிட வேண்டும். நாவலை வாசிக்காதவர்களுக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. கவனிக்கலாம். ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. யாருமே நாவலை வாசிக்கவில்லை என்று வந்து அமர்ந்துவிட்டால் இரண்டு மணி நேரம் என்ன செய்வது? மொக்கையாகிவிடும். அதனால் ஆரம்பத்தில் பொதுவாக  ‘நாவல்கள்’ ‘சிறுகதைகள்’ என்ற தலைப்புகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். போகப் போக குறிப்பிட்ட எழுத்தாளரின் படைப்புகள் என்று சுருக்கிக் கொள்ளலாம். ஆனால் அதற்கு ஆறு மாதங்களாவது தேவை. கலந்து கொள்பவர்களின் வாசிப்பு ஆர்வம், கூட்டம் நகர்கிற போக்கு ஆகியவற்றின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டியிருக்கும்.

இந்தக் நிகழ்வை ஒழுங்கு செய்வதற்கு ஒரே காரணம்தான் - புத்தகங்கள், வாசிப்பு போன்றவற்றில் ஆர்வம் உடையவர்கள் பங்கேற்பதற்கும் உரையாடுவதற்கும் பெங்களூரில் ஒரு களம் உருவாகிறது. புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். புதியதாக எழுதத் தொடங்குபவர்களின் கட்டுரைகள் வாசிக்கப்பட்டு விமர்சிக்கப்படும் போது எழுதுபவர்களுக்கு தங்களின் எழுத்து குறித்தான சுய விமர்சனம் உருவாகும். இப்படி ஏதாவது ஒரு விதத்தில் உருப்படியாக அமைத்துக் கொள்ளலாம்.

ஏற்கனவே சொன்னதுதான். எந்த ஃபார்மாலிட்டியும் கிடையாது. ஃபார்மாலிட்டி வந்து சேர்ந்தால் ஒரு வறட்சி வந்துவிடும். ஜிகினா வேலையெல்லாம் இருக்கக் கூடாது. யாருக்கும் பட்டர் பூசும் அவசியமும் இல்லை. கூட்டம் நடக்கும் இரண்டு மணி நேரமும் சலிப்பே வரக் கூடாது. திறந்த மனதுடனான உரையாடலால் மட்டுமே இது சாத்தியம். ஆரம்பத்தில் கொஞ்சம் தடைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் இரண்டு மூன்று கூட்டங்களுக்குப் பிறகு கலந்து கொள்பவர்களைப் பற்றிய பரிச்சயம் கிடைத்தவுடன் அந்தத் தடைகள் நீங்கிவிடும்.

இப்போதைக்கு இந்த வடிவம்தான் மனதில் இருக்கிறது. போகப் போக இன்னும் tune செய்து கொள்ளலாம். கூட்டம் நடத்துவதற்கான அரங்கு ஒன்றை புத்தகம் பதிப்பகத்தினர் ஏற்பாடு செய்து தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். அப்படியே அவர்களை மயக்கி அமுக்கி டீ, காபி, பிஸ்கட்டுக்கும் ஏற்பாடு செய்யச் சொல்லிவிட வேண்டும். அடுத்த வாரத்தில் இடத்தை தெரிவித்துவிடுகிறேன். கலந்து கொள்ளத் தயாராகிக் கொள்ளுங்கள். ஒன்று அல்லது இரண்டு பக்கங்களில் கட்டுரை ஒன்றைத் தயாரித்துக் கொள்ளுங்கள். கட்டுரை இல்லையென்றாலும் சங்கடம் இல்லை. நீங்கள் வாசித்த எந்த நாவல் பற்றி வேண்டுமானாலும் பேசலாம்.

வேறு ஏதேனும் தகவல் வேண்டுமானால் மின்னஞ்சல் அல்லது செல்பேசியில் தொடர்பு கொள்ளுங்கள்.

vaamanikandan@gmail.com / +91 9663303156

நிகழ்வில் சந்திக்கிறோம். பட்டையைக் கிளப்புகிறோம். ஆங்!

0 எதிர் சப்தங்கள்: