Aug 27, 2014

வரமா? சாபமா?

இன்றைக்கு தமிழில் தினமும் பல்லாயிரக்கணக்கான கட்டுரைகள் எழுதப்படுகின்றன. அதைவிட பன்மடங்கு கவிதைகள் எழுதப்படுகின்றன. இவை தவிர சிறுகதைகள், மனப்பதிவுகள் என இந்தக் காலத்தில் பேசுவதைவிடவும் எழுதுவதுதான் அதிகமாகியிருக்கிறது. எழுதப்படுவது மட்டுமில்லை- உடனடியாக மற்றவர்களின் பார்வைக்கும் வந்துவிடுகிறது- Publishing. இருபது வருடங்களுக்கு முன்பு வந்த கட்டுரைகளை வாசிக்கும் போது பத்தில் ஒரு கட்டுரையாவது எழுத்தாளன் தனது புத்தக பதிப்புக்காக அலைந்ததையும் பதிப்பித்த புத்தகத்தை வைத்துக் கொண்டு விற்க முடியாமல் அல்லாடியதைப் பற்றியும் புலம்புவதாக இருக்கும். ஆனால் இப்பொழுது அதற்கான அவசியம் குறைந்து போய்விட்டது. காரணம் டெக்னாலஜி. பெரும்பாலானவர்களின் பிரசுர ஆர்வத்துக்கு மிகப்பெரிய வடிகால் தொழில்நுட்பம்தான்.

எழுதுகிறோம். அதைத் திருத்துகிறோமோ இல்லையோ உடனடியாக ஃபேஸ்புக், ப்லாக் என்று ஏதாவதொரு வடிவத்தில் வெளி கொண்டு வந்துவிடுகிறோம். நல்ல விஷயம்தானே? பத்திரிக்கைக்காக எழுதினால் அது வெளிவரவே இரண்டு மூன்று மாதங்கள் வரை ஆகிவிடும். அப்படியே தாமதம் ஆனாலும் வெளிவந்துவிடும் என்று சொல்ல முடியாது. ஒருவேளை பிரசுரமானாலும் கூட எதிர்வினைகளையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. வந்தால் உண்டு வராவிட்டாலும் இல்லை. ஆனால் இணையத்தில் அப்படியில்லை அல்லவா? உடனடி அடிதான்.

இவையெல்லாம் எல்லோருக்குமே தெரிந்த செய்திகள்தான். ஆனால் அடுத்த ஐந்து அல்லது பத்து வருடங்களில் தமிழில் தொழில்நுட்பத்திற்கான இடம் என்ன என்பது முக்கியமான கேள்வி?

நாம் இன்னமும் தொழில்நுட்பத்தின் சாத்தியங்களில் பத்து சதவீதத்தைக் கூட பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. இன்னமும் தமிழில் E-Book பரவலாகவில்லை. இணைய வழி விற்பனை என்பது மிகக் குறைவானதாக இருக்கிறது. கிண்டில் போன்ற கையடக்கக் கருவிகள் அதிகக் கவனம் பெறவில்லை. இப்படி இருக்கிற சாத்தியங்களைக் கூட நாம் இன்னமும் முழுமையாக பயன்படுத்துவதில்லை. 

ஒரு சிறிய புள்ளிவிவரம்- தமிழின் மிகப்பரவலாக கவனம் பெற்றிருக்கும் செய்தி இணையதளம்- செய்தித்தாளின் இணையதளம் இல்லை- செய்தி இணையதளம் கூட அதிகபட்சமாக ஒரு நாளைக்கு அறுபதாயிரம் பேர்களைத்தான் ஈர்க்கிறது. பக்கப் பார்வை (Page views) மூன்று அல்லது ஐந்து லட்சங்களைத் தொடக் கூடும். ஆனால் பயனாளர்களின்(Users) எண்ணிக்கை அறுபதாயிரம் பேர்தான். இதுவே தினமலர் போன்ற பிரபலமான தினசரிகளின் இணையதளத்திற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை சில லட்சங்களைத் தொடக் கூடும். ஆனால் கோடிகளில் இருக்க வாய்ப்பே இல்லை. எதற்காக இந்தப் புள்ளிவிவரத்தைச் சொல்கிறேன் என்றால் கிட்டத்தட்ட எட்டு கோடி தமிழர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அவர்களில் தமிழில் வாசிக்கக் கூடியவர்கள் எண்ணிக்கை குறைந்தபட்சம் ஐந்து கோடியாவது இருக்கும். ஐந்து கோடியில் அறுபதாயிரம் அல்லது ஒரு லட்சம் என்பது மிகச் சொற்பம். இன்னமும் இணையம், செல்ஃபோன் ஆகியன பரவலாகும்பட்சத்தில்- பெரும்பாலானவர்கள் கையடக்க கருவிகளில் வாசிக்கத் தொடங்கும் போது இணையத்தின் வழியாக வாசிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை பன்மடங்காக பெருகிவிடும்.

தமிழ் பதிப்புத் துறையில் தொழில்நுட்பத்தின் தாக்கம் என்பதனை வெறும் ப்லாக், ஃபேஸ்புக், ட்விட்டர் என்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டியதில்லை. காகித அச்சுப்பதிப்பிலும் தொழில்நுட்பத்தின் உதவி மிக அதிகம். அட்டை வடிவைப்பிலிருந்து அச்சுக் கோர்ப்பு வரையிலும் மிக வேகமாக செய்து முடிக்கிறார்கள். புத்தக வடிவமைப்பு என்பது இரண்டாம்பட்சம். எழுதுவதே கூட எவ்வளவு விரைவாக நடைபெறுகிறது? மனதில் தோன்றுவதை தொடர்ந்து தட்டச்சு செய்து கொண்டே போக முடிகிறது. பிழை திருத்தமும் அப்படித்தான். எத்தனை முறை வேண்டுமானாலும் திருத்தி எழுதலாம். எந்தவித பாதிப்பும் இல்லாம நாள்கணக்கில் சேமித்து வைக்க முடிகிறது. ஒரு புத்தகத்தில் பத்து பக்கங்களை முன்னால் கொண்டு வருவதும் நான்கு பக்கங்களை நடுவில் மாற்றுவதும் எவ்வளவு எளிதாகிவிட்டது

தொழில்நுட்பம் எழுத்துலகில் இன்னொரு முக்கியமான தாக்கத்தையும் நிகழ்த்துகிறது. எழுத்து என்பது புனிதம், எழுத்தாளன் என்பவன் புனிதன் என்ற பிம்பம் எல்லாம் அடித்து நொறுக்கப்படுவது இணையத்தில்தான். எழுத்து என்பது கருத்து பரிமாற்றத்தின் இன்னொரு வடிவம். அதற்கு மேல் எதுவும் இல்லை. ஆனால் இங்கு அப்படியா சொல்கிறார்கள்? எழுத்தாளன் என்பவனை பேனாவைப் பிடித்துக் கொண்டு வானத்திலிருந்து நேரடியாக குதித்தவன் போல நினைத்துக் கொள்கிறார்கள். அப்படியெல்லாம் எதுவுமே இல்லை. சிலர் பேசுகிறார்கள். அதைப் போல சிலர் எழுதுகிறார்கள். அதைத் தாண்டி ஒன்றுமில்லை. ஆனால் காலங்காலமாக எழுத்தாளன் என்பவன் ரட்சிக்க வந்தவன் என்கிற ரீதியில் பிம்பத்தை கட்டமைத்து வைத்திருக்கிறார்கள். அபத்தம். பெரும்பாலான எழுத்தாளர்களின் எழுத்துக்கும் அவர்களது வாழ்க்கைக்கும் துளி கூட சம்பந்தமே இருக்காது. எழுதுவது ஒன்றாக இருக்கும் வாழ்க்கை முறை வேறொன்றாக இருக்கும். எழுத்தில் சொக்கத்தங்கமாக தங்களைப் பற்றிய இமேஜை உருவாக்கி வைத்திருப்பார்கள். ஆனால் படு சில்லரையாக இருப்பார்கள். பழகிப் பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும். இந்த ஜிகினா வேலையை அச்சு ஊடகத்தில் காட்டலாம். எங்கேயோ அமர்ந்து வாசித்துக் கொண்டிருக்கும் எளிய வாசகன் நம்பிக் கொண்டிருப்பான். ஆனால் இணையத்தில் வெகுகாலம் ஏமாற்ற முடியாது. பல்லிளித்துவிடும். நாறடித்துவிடுவார்கள். 

எழுத்தாளன், வாசகன் என்ற எல்லைகள் அழிவதெல்லாம் சரிதான். ஆனால் அதே சமயத்தில் இன்னொரு அம்சத்தையும் குறிப்பிட வேண்டும். எழுத்தின் நம்பகத்தன்மை பற்றிய மிகப்பெரிய கேள்விக்குறி நம் முன்னால் இருக்கிறது. இருபது வருடங்களுக்கு முன்பாக ‘ஸ்பானிஷ் படம் ஒன்றை பார்த்தேன்’ என்று பத்திரிக்கையில் எழுதுவதாக இருந்தால் அந்தப் படத்தை பார்த்திருக்க வேண்டும். இல்லையென்றால் எழுதுவதற்கு சாத்தியம் இல்லை. இப்பொழுது அப்படியில்லை. அதைப் பார்த்திருக்கவே அவசியமில்லை. இணையத்தில் இருந்து தகவல்களைத் உருவி அச்சு அசலாக படம் பார்த்ததைப் போலவே ஏமாற்றலாம். மற்றவர்களை ஏன் சுட்டிக் காட்ட வேண்டும்? நானும்தான் அந்தத் தில்லாலங்கடி வேலைகளைச் செய்திருக்கிறேன். ஹெரால்ட் பிண்டர் என்றொருவர். ஏழெட்டு வருடங்களுக்கு முன்பாக இலக்கியத்திற்கான நோபல் பரிசு வாங்கினார். அதுவரையிலும் எனக்கு அவரை யாரென்றே தெரியாது.ஆனால் இரவோடு இரவாக அவரைப் பற்றி ஒரு கட்டுரையை எழுதி அனுப்பினேன். கூகிள் இருக்கிறதே? அந்தக் கட்டுரை ஒரு பத்திரிக்கையில் பிரசுரமானது. ஆர்வக் கோளாறு.

மொழியை ஓரளவுக்கு புரிந்து கொண்டவர்களால் தங்களது எழுத்தை பிரசுரிக்க முடிகிறது, பதிப்பாளர்களுக்கு காத்திருக்க வேண்டியதில்லை, எழுத்தாளனாக இருப்பதற்கு எந்தக் கோஷ்டியிலும் சேர்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, வாசிப்பவர்கள் தங்களுக்குத் தேவையான எழுத்துக்களை மிகச் சுலபமாக தேடிக் கொள்ள முடிகிறது, பதிப்பாளர்கள் விற்பனையை உயர்த்திக் கொள்வதற்கான சாத்தியங்கள் அதிகம் என பாஸிட்டிவான விஷயங்களை பட்டியலிட்டுக் கொண்டே சென்றாலும் தொழில்நுட்பத்தின் தாக்கத்தை பாஸிட்டிவான தாக்கம் என்று மட்டும் சொல்ல முடியாது. 

எல்லோராலும் எழுத முடிவதும் எப்பொழுது வேண்டுமானாலும் பதிப்பிப்பதும் நல்ல விஷயம்தான். ஆனால் நிறைய எதிர்மறையான தாக்கங்களும் இருக்கின்றன. உதாரணமாக வளரும் எழுத்தாளன் அல்லது எழுத ஆரம்பிக்கும் எழுத்தாளன் தனது எழுத்தை மெருகேற்றிக் கொள்வதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. முன்பு பத்திரிக்கைகளுக்கு அனுப்புவார்கள் அவை நிராகரிக்கப்படும் போது நிராகரிப்பிற்கான காரணங்கள் குறித்து நண்பர்களோடு விவாதிப்பார்கள். எழுத்து உருமாறிக் கொண்டேயிருக்கும். இப்பொழுது அப்படியில்லை. நேற்று தோன்றியதை இன்று எழுதுகிறார்கள். காலையில் எழுதியதை மதியத்திற்குள்ளாக பதிப்பித்துவிடுகிறார்கள். பெரும்பாலான விமர்சனங்களை ஆக்கப்பூர்வமானவை என்று சொல்ல முடியாது. அவை வெறுமனே விமர்சனங்கள். அவ்வளவுதான். அதன் பின்னணியில் எழுத்து சாராத அரசியலும் உண்டு. அரசியல், சமூகம் போன்ற விஷயங்களில் வேண்டுமானால் இணையத்தில் விவாதங்கள் நடைபெறுகின்றன. ஆனால் கலை, இலக்கியம் சார்ந்த விவாதங்கள் எதுவுமே கண்ணில்படுவதில்லை. அரசியல், சமூகம் சார்ந்த விவாதங்களும் கூட வெறுமனே உள்ளடக்கம் சார்ந்த விவாதங்களேயொழிய எழுத்து நடை, படைப்பாளனின் திறன் சார்ந்த விவாதங்கள் இல்லை. இவை எழுத்தின் மெருகேற்றலுக்கு எவ்விதத்திலும் உதவாத விவாதங்களாகவே முடிந்து போகின்றன. இது ஒருவிதத்தில் படைப்புக்கும் படைப்பாளனுக்கும் எதிரான நிகழ்வுகள்தான். தமிழில் மட்டும் இல்லை- இது எல்லா மொழிகளுக்குமே பொருந்தும் என்பதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

* மதுரையில் காலச்சுவடு- கடவு நடத்திய  ‘தமிழில் புத்தகப்பண்பாடு’ என்ற கருத்தரங்குக்காக தயார் செய்து வைத்திருந்த கட்டுரையின் முதல் பகுதி. கருத்தரங்கில் கட்டுரையெல்லாம் வாசிக்கவில்லை. பேச்சுத் தமிழில் உரையாடலாகத்தான் இருந்தது.

3 எதிர் சப்தங்கள்:

harish sangameshwaran said...

மணி,
இங்கே இருக்கும் பல்லாயிரக் கணக்கான பேரைப் போல் எனக்கும் எழுத வேண்டும் என்று ஆசை உண்டு. ஏழெட்டு வருடங்களுக்கு முன் ஏதோ ஒரு பத்திரிகையில் என் கதை வெளி வந்து அச்சில் என் பேரைப் பார்த்த போது உண்டான சந்தோஷத்துக்கு அளவே இல்லை. அப்புறம் எங்கே எப்படி என்று தெரியாமல் அந்தக் கண்ணி அப்படியே அறுந்து போய் எழுதுவது நின்று விட்டது.

திரும்ப எழுத ஆரம்பிக்கக் காரணாமாக இருந்தது பேஸ்புக். கொஞ்சம் கொஞ்சமாக பழகி அதில் எழுதுவதைப் படிக்க கொஞ்சம் பேர் சேர்ந்ததும் தன்னம்பிக்கை வந்தது. இருந்தாலும் அடி மனசில் இருந்த ஆசை, அச்சில் பேரைப் பார்ப்பது தான். உடனடி விமர்சனம், பாராட்டு, எதிர்வினை எல்லாம் சமூகத் தளங்களின் அட்வாண்டேஜாய் இருந்தாலும், அச்சில் பேரைப் பார்க்கும் ஆசை மட்டும் போகவில்லை.

விடாமல் முயற்சி செய்ததில் , அடுத்த மாதம் ஒரு பத்திரிகையில் நான் எழுதிய கதையைப் பிரசுரிப்பதாக சொல்லி இருக்கிறார்கள். சின்ன விஷயம் தான். ஆனால் அது கொடுக்கும் சந்தோஷம் அதிகம். பரீட்சை எழுதி விட்டு முடிவுக்குக் காத்திருக்கும் மாணவனின் குறுகுறுப்புடன் காத்திருக்கிறேன். இந்த உணர்வு அலாதியானது.

தொடர்ந்து இது வேண்டுமென்றால் தொடர்ந்து எழுத வேண்டும். எழுதுவேன்.

அருமையான கட்டுரை .

ezhil said...

கடைசி பத்தியுடன் மிகுந்த உடன்பாடுடையவளாகிறேன்... உடனடிப் பதிவுகளால் நேர்த்தியான எழுத்துப் பயிற்சி இல்லாமல் போகிறது. நேர்மையான விமர்சனங்கள் இல்லாமல் போனதாலும் நம்மை சீர்தூக்கிப் பார்க்க இயலவில்லை.. எழுதுபவர்கள் குறைந்ததாலும், எழுத்தை வெளியிடுவோரெல்லோரையும் நல்ல எழுத்தாளர் என ஏற்றுக்கொள்ள முடிவதில்லை..

வவ்வால் said...


//இப்பொழுது அப்படியில்லை. நேற்று தோன்றியதை இன்று எழுதுகிறார்கள். காலையில் எழுதியதை மதியத்திற்குள்ளாக பதிப்பித்துவிடுகிறார்கள்.//

இது நீங்க செய்யிற வேலை அதையே எல்லாரும் செய்றாங்கனு நினைத்துக்கொள்வது மனித இயல்பு அவ்வ்!

# //ஆனால் கலை, இலக்கியம் சார்ந்த விவாதங்கள் எதுவுமே கண்ணில்படுவதில்லை. //

அதை அடுத்தவங்களைப்பாத்து சொல்லும் முன் நீங்க எத்தனை முறை அவ்வாறான இணைய விவாதங்களில் பங்கெடுத்துக்கொண்டீர்கள்?

குறைந்த பட்சம் அடுத்தவர்கள் பதிவையாவது படிச்சு இருப்பீங்களா ? இல்லை பின்னூட்டமாவது போட்டு இருப்பீங்களா? ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை, ஆனால் மற்றவர்கள் மலையை புரட்டவில்லைனு 'விமர்சனம்" மட்டும் :-))

# //அரசியல், சமூகம் சார்ந்த விவாதங்களும் கூட வெறுமனே உள்ளடக்கம் சார்ந்த விவாதங்களேயொழிய எழுத்து நடை, படைப்பாளனின் திறன் சார்ந்த விவாதங்கள் இல்லை.//

அப்படியான விவாதங்கள் இல்லாமல் இல்லை ,அதனை படிக்காத பூனைகள் கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டது என நினைத்துக்கொள்கின்றன :-))

மேலும் பல பூனைகள் 'விவாதங்களை" இருட்டடிப்பு செய்து விட்டு எதுவுமே நிகழாதது போல உலாவுகின்றன , எனவே ஆக்கப்பூர்வமான விவாதங்களின் எண்ணிக்கை குறைவாகவே நிகழ்கின்றன!

#//ஒரு சிறிய புள்ளிவிவரம்- தமிழின் மிகப்பரவலாக கவனம் பெற்றிருக்கும் செய்தி இணையதளம்- செய்தித்தாளின் இணையதளம் இல்லை- செய்தி இணையதளம் கூட அதிகபட்சமாக ஒரு நாளைக்கு அறுபதாயிரம் பேர்களைத்தான் ஈர்க்கிறது. பக்கப் பார்வை (Page views) மூன்று அல்லது ஐந்து லட்சங்களைத் தொடக் கூடும். ஆனால் பயனாளர்களின்(Users) எண்ணிக்கை அறுபதாயிரம் பேர்தான். இதுவே தினமலர் போன்ற பிரபலமான தினசரிகளின் இணையதளத்திற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை சில லட்சங்களைத் தொடக் கூடும். ஆனால் கோடிகளில் இருக்க வாய்ப்பே இல்லை. எதற்காக இந்தப் புள்ளிவிவரத்தைச் சொல்கிறேன் என்றால் கிட்டத்தட்ட எட்டு கோடி தமிழர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அவர்களில் தமிழில் வாசிக்கக் கூடியவர்கள் எண்ணிக்கை குறைந்தபட்சம் ஐந்து கோடியாவது இருக்கும். ஐந்து கோடியில் அறுபதாயிரம் அல்லது ஒரு லட்சம் என்பது மிகச் சொற்பம்.//

புள்ளிவிவரம் என்றால் " உண்மையான தரவுகளை கொண்டு கொடுக்கப்படுவது , இத்தனை பேரு இருக்கலாம் , இப்படி இருக்கலாம் என்பது " கணிப்பு" ஆகும்,புள்ளி விவரமல்ல :-))

தமிழ் நாட்டின் மக்கள் தொகை , தமிழ் பேசும் மக்கள் தொகைக்கும் , இணையத்தில் படிப்பவர்களின் எண்ணிக்கைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை, எத்தனை தமிழ் பேசும் மக்களுக்கு "இணைய இணைப்பு" இருக்கு அதில் எத்தனை பேர் இணையத்தில் தமிழ் வாசிக்கிறாங்க என்பது தான் சரியான கணக்கீடாக அமையும்.

தேசிய அளவில் மக்கள் தொகை விகிதாச்சாரத்தில் 12.6%
மக்களெ இணையத்தினை பாவிக்கிறார்கள் , அதனடிப்படையில் பார்த்தால் எட்டுக்கோடி தமிழர்களில் சுமார் ஒருகோடியே 80000 பேருக்கு தான் இணையம் கிடைக்குது, அதில் சில லட்சம் பேர் ஒரு தளத்தினை பார்க்கிறாங்கன்னா ரொம்ப பெரிய விடயம் ,எனவே " தமிழில் கோடிக்கணக்கான பார்வையாளர்கள் எல்லாம் சாத்தியமே இல்லை.