Aug 26, 2014

எப்போ படம் எடுப்பீங்க?

அவனை எனக்கு பதினைந்து வருடங்களுக்கும் மேலாகத் தெரியும். எனது நண்பர்களுக்கு இன்னும் ஐந்து வருடங்களுக்கு முன்பாகவிருந்தே அறிமுகம். எங்கள் பள்ளிக்கு பக்கத்திலேயே ஒரு கூரியர் சென்டர் இருந்தது-ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸின் படிக்கட்டுக்கு கீழான அறையில். அந்த இரண்டேமுக்கால் அடி அகலமுடைய அறைக்கு ஒரு கதவு பொருத்தி வாடகைக்கு விட்டிருந்தார்கள். அவன் அங்குதான் தங்கியிருப்பான். 7x24. பகலில் கூரியர் அறையாகச் செயல்படும். இரவில் அவனுக்கான தங்கும் அறை அது. அவன் இவன் என்று சொல்லக் கூடாது. என்னைவிட குறைந்தது பத்து வருடங்களாவது மூத்தவனாக இருப்பான். ஆனாலும் பெயர் சொல்லி அழைத்துக் கொள்வோம். அப்பொழுதெல்லாம் பன்னிரெண்டாம் வகுப்பில் நைட் ஸ்டடி உண்டு. வீட்டில் இரவு உணவை முடித்துக் கொண்டு எட்டரை மணிக்கு பள்ளிக்குச் சென்றுவிட வேண்டும். பிறகு படிக்க வேண்டும். இரண்டு ஆசிரியர்கள் கண்காணிப்புக்கு இருப்பார்கள். அவர்கள் பன்னிரெண்டு மணி வரைக்கும் விழித்திருப்பார்கள். பிறகு தூங்கிவிடுவார்கள். நாங்கள் எப்படியும் இரண்டு மணி வரைக்காவது அலைந்து கொண்டிருப்போம். பிறகு தூங்கி எழுந்து காலையில் ஐந்து மணிக்கு திரும்பவும் படிக்க ஆரம்பிக்க வேண்டும். ஏழரை மணி வரையில் படித்துவிட்டு பிறகு வீட்டுக்குச் சென்று குளித்துவிட்டு மீண்டும் பள்ளிக்கு வந்துவிடுவோம். அரசு உதவி பெறும் பள்ளிதான். ஆனால் தலைமையாசிரியர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். 

கண்காணிப்பு ஆசிரியர்கள் தூங்கச் சென்ற பிறகும் சிலர் படிப்பார்கள். சிலர் வெளியே செல்வதற்கான முஸ்தீபுகளைச் செய்வார்கள். வெளியே செல்வது ஒன்றும் அவ்வளவு சுலபமில்லை. பெரிய கேட் அது. பூட்டி வைத்திருப்பார்கள். அதன் மேற்புறம் ஈட்டி வடிவிலான கம்பிகள் நீட்டிக் கொண்டிருக்கும். கொஞ்சம் ஏமாந்தாலும் தொடையைக் கிழித்துவிடும். பள்ளியின் பின்புறமாகச் சென்று அங்கு இருக்கும் தோட்டத்தின் வழியாக வெளியேற வேண்டும். அப்படியே தோட்டத்திற்குச் செல்லும் போது தூங்கிக் கொண்டிருக்கும் வாட்ச்மேன் கண்களில் பட்டுவிட்டால் அவ்வளவுதான். சிக்க வைத்துவிடுவார். அதுவுமில்லாமல் இரவில் அந்தப்பகுதிகளில் பாம்புகள் உலாத்திக் கொண்டிருப்பதாகச் சொல்வார்கள். என்றாலும் இளங்கன்றுகள் அல்லவா? பயமறியவில்லை.

வெகுகாலம் நான் சொம்பாகத்தான் இருந்தேன். சொம்பு என்றால் வீட்டுக்கும் ஆசிரியர்களுக்கும் பயந்த, அடக்க ஒடுக்கமானவன். ஆனால் கதிர்வேலும், கெளரிசங்கரும் உசுப்பேற்றுவார்கள். இரவுகள்தான் உண்மையிலேயே சுவாரசியமானது என்பார்கள். யாருமே இல்லாத மயான அமைதியில் ஒரு முறை பேருந்து நிலையத்தை பார்ப்பது பற்றியும், கச்சேரிமேட்டின் சாலையில் நடுவில் சம்மணம் போட்டு அமர்வது பற்றியுமெல்லாம் பேசிக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு நாளும் இரவில் ஊரைச் சுற்றிவிட்டு வந்து அவர்கள் பேசும் கதைகள் அலாதியானவை. பகல் முழுவதும் இன்ச் இன்ச்சாக எட்டு வைத்து நடந்து கொண்டிருக்கும் பைத்தியம் இரவில் ஏதோ நோட்டுப்புத்தகத்தை எடுத்து வைத்து எழுதிக் கொண்டிருப்பதாகச் சொல்வார்கள். அந்தப் பைத்தியத்தின் கதையை ஒரு நாவலின் கதாபாத்திரமாக வைக்கலாம். அவ்வளவு த்ரில் அது. இப்படியாக அவர்கள் தூண்டிக் கொண்டிருக்கவே ஒரு நாள் நானும் தோட்டத்தைத் தாண்டினேன். இரவுகள் அதிசுவாரசியமானவைதான். யாருமே தீர்க்க முடியாத புதிர்களை தங்களுக்குள் புதைத்து வைத்திருக்கும் மந்திரவாதிகள் அவை. பள்ளியை விட்டு வெளியேறிய பிறகு அவர்கள் அழைத்துச் சென்ற இடம் கூரியர் சென்டர். பரஸ்பர அறிமுகத்திற்கு பிறகு தனது பெட்டியைத் திறந்து பொக்கிஷங்களை வெளியில் எடுத்தான். மூச்சடைத்துப் போனது. அந்தப் பருவத்தில் அவை உண்மையிலேயே பொக்கிஷங்கள்தான். வழுவழு காகிதங்களில் அத்தனையும் நடிகைகளின் படங்கள். அவ்வளவு துல்லியமான வண்ணப் படங்களை அதுவரை பார்த்ததில்லை. குமுதத்தின் நடுப்பக்க படம்தான் அதிகபட்சம். 

எனக்கு உதடுகள் உலர்ந்து போயின. அவற்றை மற்றவர்களிடமிருந்து மறைப்பதற்கு நிறைய சிரமப்பட வேண்டியிருந்தது. வண்ணத்திரை போன்ற சினிமா இதழ்களால் அந்தப் பெட்டி நிரம்பியிருந்தது. வெகுநேரம் படங்களைப் புரட்டி புரட்டி பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த இரவில் தூக்கமே வரவில்லை என்பதுதான் உண்மை. ருசி காட்டிவிட்டான் அல்லவா? பிறகு அடிக்கடி அவனைப் பார்க்கச் செல்லத் தொடங்கியிருந்தேன். அவனை என்று சொன்னால் அது பொய். அந்த நடிகைகளைப் பார்க்கச் சென்றிருந்தேன் என்பதுதான் உண்மை. அவை சலிக்கவே சலிக்காத படங்களாக இருந்தன. அதே சமயம் நிறைய பேசிக் கொள்வோம். அவனது கையெழுத்து அற்புதமாக இருக்கும். ஓவியனின் சித்திரங்களைப் போல இருக்கும் அந்த எழுத்துக்களில் ஏகப்பட்ட கதைகளாக எழுதி வைத்திருந்தான். ஆனால் எந்தப் பத்திரிக்கைகளுக்கும் அனுப்பாத கதைகள். அவனுடைய நோக்கமெல்லாம் சினிமாவாக இருந்தது. அந்தக் கதைகள் யாவும் சினிமாவுக்கான கதைகள். ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்கிய பிறகு சென்னை சென்று வருவான். கே.எஸ்.ரவிக்குமாரை பார்த்ததாகவும், சுரேஷ் கிருஷ்ணா அடுத்த மாதம் வரச் சொன்னதாகவும் சொல்லிக் கொண்டிருப்பான். எங்களுக்கு வாயெல்லாம் பற்களாக இருக்கும்.

அவன் இயக்குநரான பிறகு எங்களுக்கும் வாய்ப்புத் தர வேண்டும் என்று சொல்லி வைத்திருந்தோம். உறுதியளித்திருந்தான். பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்த பிறகு அவனுடனான தொடர்பு அறுந்துவிட்டது. அந்த கூரியர் கடையிலும் வேறு ஏதோ கடை வந்துவிட்டது. பிறகு வருடத்திற்கு ஒரு முறையாவது அவனை ஊர்ப்பக்கம் பார்த்துவிடுவேன். நாங்கள் பள்ளியில் படிக்கும் போது எப்படி இருந்தானோ அப்படியே இருக்கிறான். அதே ஒல்லி. அதே சிரிப்பு. அதே தலைமுடி. ஏதாவது ஒரு இயக்குநரின் பெயரைச் சொல்லி அவரோடு இருப்பதாகச் சொல்வான். முதலில் எப்படியும் அவன் இயக்குநராகிவிடுவான் என்ற நம்பிக்கை இருந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்தது. ஆனால் இன்னமும் சினிமாவை வெறித்தனமாக நேசித்துக் கொண்டிருக்கிறான் என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடியும். எங்களுக்கெல்லாம் திருமணமாகிவிட்டது. அவன் அப்படியேதான் இருக்கிறான்.

கடந்த முறை ஊருக்குச் சென்றிருந்த போது ஹைதர் காலம் கேசட் கடைக்குச் சென்றிருந்தேன். அது ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த கடை. விரிவாக இன்னொரு நாளைக்குச் செல்கிறேன். இப்போதைக்கு ‘ஹைதர் காலம் கோபி’ என்று கூகிளில் தேடிப்பார்க்கலாம். அண்ணா மற்றும் பெரியாரின் பேச்சுக்களை வாங்கச் சென்றிருந்தேன். எனக்குத் தெரிந்து ஹைதர் காலத்தில் இருப்பது போன்ற ஆடியோக்களின் டேட்டா பேஸ் தமிழகத்தில் வேறு எந்தக் கடையிலும் இருக்குமா என்று தெரியவில்லை. அவனும் அங்கு வந்திருந்தான். சிரித்துக் கொண்டே கை நீட்டினான். பேசிக் கொண்டிருந்தோம். எந்த உற்சாகக் குறைவும் இல்லாமல் இருந்தான். வயது நாற்பதைத் தொட்டிருக்கும். ‘என்ன செஞ்சுட்டு இருக்கே?’ என்றேன். ஒரு டைரக்டரின் பெயரைச் சொல்லி அவரிடம் அசிஸ்டெண்டாக அடுத்த வாரம் சேர்வதாகவும் சென்னை செல்வதற்கு நூறு ரூபாய் பணம் கிடைக்குமா என்றும் கேட்டான். வேறு ஏதாவது கேட்டாலும் சிரித்துக் கொண்டேதான் பதில் சொல்வான். அவனது அத்தனை ஆசைகளையும் வேதனைகளையும் அந்தச் சிரிப்பு மறைத்துக் கொண்டிருக்கும். ஆனால் அவனை விட்டு விலகி வந்த பிறகு அந்தச் சிரிப்பு வடிந்து போய்விடும் என்று எனக்குத் தெரியாதா என்ன?

2 எதிர் சப்தங்கள்:

KarSho said...

kanavugalum valiyum dhan vazhkai...

அரவிந்த் வடசேரி said...

தெய்வத்தால் ஆகாது எனினும்