Aug 25, 2014

ஏன் தினமும் எழுதுகிறாய்?

இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினையில் புரிதலே இல்லாமல் ஒரு பதிவு எழுதியிருப்பதாகச் சொன்னார்கள். இருந்துவிட்டு போகட்டும். எனக்கு அந்த விவகாரத்தில் தெரிந்த கண்ணுக்குத் தெரிந்த ஒரே விவகாரம் ‘இஸ்ரேல் ராணுவத்தினர் பாலஸ்தீனிய குழந்தைகளை ஏன் கொல்கிறார்கள்’ என்பது மட்டும்தான். உடனே  ‘ஏன்? இஸ்ரேல் குழந்தைகளை மட்டும் பாலஸ்தீனிய ஹமாஸ் பிரிவினர் கொல்லவில்லையா’ என்றார்கள். யார் இல்லை என்று சொன்னது? கொல்கிறார்கள்தான். அவர்கள் தீவிரவாதிகள். உயிர்களைப் பற்றிய எந்த யோசனையும் அற்றவர்கள். இஸ்ரேலும் இன்னபிற ராணுவத்தினரும் Civilised சமூகத்தின் அங்கம்தானே? அவன் இஸ்ரேலிய குழந்தைகளைக் கொல்கிறார்கள் என்றால் இவர்களும் பாலஸ்தீனிய மக்களை ஏன் கொல்கிறார்கள்? அந்தத் தீவிரவாதிகளைத்தானே கொல்ல வேண்டும்? ‘அவர்கள் மக்களை கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள், அவர்கள் மக்களுக்குள் மக்களாக ஒளிந்து கொள்கிறார்கள்’ என்று நூறு காரணங்கள் இருக்கட்டும். ‘அவர்கள் குழந்தைகளைக் கொல்கிறார்கள். பல்லுக்குப் பல் ரத்தத்துக்கு ரத்தம் என்ற கணக்கில் இவர்களும் குழந்தைகளைக் கொல்கிறார்கள்’ ஆசியாவின் மேற்குப் பகுதியில் பிறந்ததைத் தவிர எந்தத் தவறையும் செய்யாத பிஞ்சுக் குழந்தைகள். அவர்கள் எந்த தேசத்தைச் சார்ந்தவர்களாக இருந்தால் என்ன? பூக்களையல்லவா வெடி வைத்துத் தகர்க்கிறார்கள்?

இதுதான் அந்தக் கட்டுரையின் சாராம்சம். இதைத்தான் சொல்ல விரும்பியிருந்தேன். ஒருவேளை நான் சொல்ல விரும்பியதை துல்லியமாகச் சொல்ல முடியாமல் போயிருக்கலாம்.

இருக்கட்டும். 

கட்டுரையில் பிரச்சினை இருக்கிறது என்று சொன்னால் எனக்கு ஏற்றுக் கொள்வதில் எந்தச் சிரமமும் இல்லை. நான் என்ன ஆல்-இன்-ஆல் அழகுராஜாவா? இல்லை எழுதுகிற அத்தனை விஷயத்திலேயும் பாண்டித்யம் பெற்றிருக்கிறேனா? அது இல்லை. அறிவுஜீவி என்று சொல்லிக் கொள்வதிலோ, வானத்திற்குக் கீழாக இருக்கும் அத்தனை விவகாரங்களுக்கும் என்னிடம் பதில் இருக்கிறது என்றோ எந்தக் காலத்திலும் நம்பியதில்லை. தினசரி மனதை பாதிக்கும் அல்லது எதிர்கொள்ளும் விஷயங்களை பிடித்த மொழிநடையில் எழுதிப் பார்க்கிறேன். அதை பின் தொடர்பவர்களும் இருக்கிறார்கள் அல்லது ஒதுங்கிப் போகிறவர்களும் இருக்கிறார்கள். அதுவரையில் சரிதான். ஆனால் தினமும் எழுதுகிறேன் அல்லவா? அதுதான் பிரச்சினை. அதுவும் எனக்கு இல்லை- மற்றவர்களுக்கு. 

‘நீ நிர்பந்தத்துக்காக தினமும் எழுதுகிறாய்’ என்று யாராவது சொல்லும் போதுதான் அலர்ஜியாகிவிடுகிறது. நிர்பந்தம் இருக்கிறது என்றே வைத்துக் கொள்வோம். அதில் என்ன தவறு? ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டியிருக்கிறது. ஐந்து மணி நேரமாவது தூங்க வேண்டியிருக்கிறது.  நான்கு முறையாவது சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கிறது. இன்னும் என்னென்னவோ. வேலைக்குச் செல்வது நிர்பந்தம் இல்லையா? மேலாளருக்கு அடிபணிவது இல்லையா? இப்படி நிர்பந்தங்களால் ஆனதுதான் நம் வாழ்க்கை. இதில் எழுதுவதையும் வாசிப்பதையும் நிர்பந்தமாக்கிக் கொள்வதில் என்ன தவறு? இது பலருக்கும் optional ஆக இருக்கிறது. முடிந்தால் செய்வோம் இல்லையென்றால் விட்டுவிடலாம் என்கிற ஒரு சுதந்திரம் இருக்கிறது. எனக்கு அந்தச் சுதந்திரம் வேண்டியதில்லை என நினைக்கிறேன். எழுதுவது என்பதனை விருப்பமான நிர்பந்தமாக்கி வைத்திருக்கிறேன். இது என்னுடைய பிரச்சினை மட்டும்தானே? இதில் மற்றவர்கள் ஏன் டிஸ்டர்ப் ஆக வேண்டும் என்றுதான் புரியவில்லை.

நிசப்தத்தில் எழுதுவது ஒருவிதத்தில் வடிகால். அது ஒரு உரையாடல். ஒருவிதமான திருப்தி. சந்தோஷம். வேறு ஏதாவதும் சேர்த்துக் கொள்ளலாம். அதனால் எழுதிக் கொண்டிருக்கிறேன். வாசகர்கள் எண்ணிக்கை பற்றி எந்தக் கவலையும் இல்லை. நிஜமாகவேதான் சொல்கிறேன். மதுரை சென்றிருந்தேன் அல்லவா? நான்கு பேர்கள் சந்திக்க வந்திருந்தார்கள். நான்கு பேருமே ஓய்வு பெற்றிருந்தவர்கள். இந்தப் பொடியன் எழுதுவதை நம்புகிறார்கள். உரையாடுகிறார்கள். விமர்சிக்கிறாரக்ள். வாழ்த்துகிறார்கள். இவற்றைத்தான் எதிர்பார்க்கிறேன்.

மதுரை கருத்தரங்கில் பேசும் போது என்னையும் அறியாமல் சில உண்மைகளைச் சொல்லிவிட்டேன். தினமும் எழுதுவது என்பது எழுத்தை மெருகேற்றுகிறதுதான். அது நல்லவிதமான மெருகேற்றலா என்று தெரியவில்லை. எப்படிச் சொல்கிறேன் என்றால்- இன்று எழுதுவதைவிடவும் நாளை எழுதுவது சுவாரஸியமாக இருக்க வேண்டும் என மனம் விரும்புகிறது. ஆனால் அந்த விருப்பத்தில் ஆழம் குறைந்துவிடுகிறது. உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால் ஒரே கட்டுரையை சுந்தர ராமசாமி எழுதுவதற்கும் சுஜாதா எழுதுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா? சு.ரா ஆழமாக எழுதியிருப்பார். ஆனால் சுவாரசியம் இருக்கும் என்று சொல்ல முடியாது. அதுவே சுஜாதா சுவாரசியமாக்கியிருப்பார். புரிந்து கொள்வது எளிது. ஆனால் ஆழம் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இணையத்தில் தினமும் எழுதுவது என்பது சுவாரசியத்தை நோக்கிச் செல்கிறது. ஆனால் ஆழத்தை நோக்கிச் செல்கிறதா என்று கருத்தரங்கில் பேசிவிட்டு வந்ததிலிருந்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

கவிஞர்கள் சுகுமாரனும், யுவன் சந்திரசேகரும் தனியாக அழைத்துப் பேசினார்கள். நெய்தல் கிருஷ்ணனும் அழைத்துப் பேசினார். அவர்களுக்கு என் மீது மிகுந்த பிரியம் உண்டு. அவர்களின் ஆதங்கமெல்லாம் ‘contemporary writing ஐ தான் உன்னிடமிருந்து எதிர்பார்க்கிறோம்’என்பதுதான். சுவாரசியமாக எழுதுவதும் அதே சமயம் contemporary ஆக இருப்பதும் அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. இன்னமும் காலம் இருக்கிறது. என்னிடம் அனுபவமும் இல்லை பயிற்சியும் இல்லை.

சீனி.விசுவநாதன் என்றொரு ஆராய்ச்சியாளர். கிட்டத்தட்ட தனது வாழ்நாள் முழுமையையும் பாரதியாருக்கு மட்டுமே செலவு செய்து இறுதியில் பாரதியின் அனைத்து எழுத்துக்களையும் கிட்டத்தட்ட ஒன்பதாயிரம் பக்கங்களில் தொகுத்திருக்கிறார். இப்படி ஒரேயொரு துறையை மட்டும் எடுத்துக் கொண்டு வாழ்நாளை செலவழித்தால் வேண்டுமானால் அந்தப் பிரச்சினையை முழுமையாக அணுகலாம். என்னைப் போன்ற சாமானிய நடுத்தரனுக்கு அத்தகைய ஆராய்ச்சிகள் பற்றி யோசிப்பது கூட சாத்தியமா என்று தெரியவில்லை. 

தினமும் எத்தனையோ செய்திகளையும் பிரச்சினைகளையும் எதிர்கொள்கிறோம். ஒவ்வொரு செய்தியிலும் நமக்கு ஒரு பார்வை உருவாகிறது. ஒரு புரிதல் ஏற்படுகிறது. அதைப் பற்றி எழுதுவதற்கு மற்றவர்களைவிடவும் ஐந்து சதவீதம் கூடுதலாக தகவல்களைத் தேட வேண்டியிருக்கிறது. தேடியதை முடிந்தவரை சுவாரசியத்தைக் கூட்டி, போரடிக்காமலும் ஜல்லியடிக்காமலும் எழுதிவிட எத்தனிக்கிறேன். அவ்வளவுதான். ஒவ்வொரு தடவையும் வெற்றியடைய முடியும் என்று நம்பவில்லை. ஆனால் எப்பவாவது வெற்றியடைந்துவிடலாம் அல்லவா?

என்னளவில் நேர்மையாக இருக்கிறேன். எந்தப் பீடமும் இல்லாமல், சுய பெருமைத் தம்பட்டமும் இல்லாமல், சாதாரணனாக, பிரச்சினைகளின் பரிமாணங்களை என் பார்வையிலிருந்து எந்தத் திணிப்பும் இல்லாமல் எழுதிக் கொண்டிருக்க விரும்புகிறேன். இதுதான் என் நிலைப்பாடு. இப்போதைக்கு இதுதான் பாதையும் கூட. இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? 

தினமும் கோடிக்கணக்கான எழுத்துக்களால் இணையம் நிரம்புகிறது. இதில் நிசப்தம் தளத்தின் ஐயாயிரம் எழுத்துக்கள்தான் இவர்களுக்கு பிரச்சினை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. தாண்டிச் செல்ல முடியவில்லையா என்ன? அப்படித் தாண்டிச்செல்ல முடியாமல் பொருட்படுத்தத்தக்கவன் ஆகியிருந்தால் கூட சந்தோஷம்தான்.

‘இவன் எழுதுவது அபத்தம்’ என்றும் ‘இவன் பைத்தியகாரன்’ என்றும் சொன்னால் அதை தலை வணங்கி ஏற்றுக் கொள்வேன். முந்தாநாள் மழை பெய்திருந்தது. அதனால் மூன்று இலைகளை வெளியில் தள்ளியிருக்கிறேன். அபத்தங்களைச் செய்வது சாத்தியம்தானே? சுட்டிக் காட்டும் போது அந்தக் குறைகளை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். ஆனால் ‘இவன் தினமும் எழுதுவதால்தான் அபத்தமாக இருக்கிறது’ என்று சொன்னால் அதன் நோக்கத்தை வேறு மாதிரியாகத்தான் புரிந்து கொள்வேன். இன்னொரு முறை இப்படிச் சொன்னால் என்னிடமிருந்து இந்த பதிலும் கூட இருக்காது. எந்தச் சண்டையும் எனக்கு அவசியமில்லை. பிறரின் கவனத்தை ஈர்க்க எந்த controversy ம் தேவைப்படுவதில்லை.

பிடித்தால் படியுங்கள் இல்லையென்றால் விட்டுவிடுங்கள் என்று சொல்லுமளவுக்கு எனக்குத் தகுதிகள் வளர்ந்துவிட்டதாக நம்பவில்லை. எல்லோரும் படிக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். தொடர்ந்து வாசியுங்கள். கருத்துக்களில் தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். தவறுகளை ஒத்துக் கொள்வதிலும் அவற்றை மேம்படுத்திக் கொள்வதிலும் எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால் அந்தத் தவறுகளுக்குகு என்ன காரணம் என்று கண்டுபிடிக்கும் வேலையை தயவு செய்து நீங்கள் செய்ய வேண்டியதில்லை. அது என் பொறுப்பு. 

28 எதிர் சப்தங்கள்:

Karsho said...

Cool Mani... B)

Siva said...

we are here to read

Muthuram Srinivasan said...

அவரு பயந்திட்டாருன்னு நெனைக்கேன். ஷட்டரை மூடிட்டு ஓடுறாரா இல்லை தொரத்தி அடிக்க வாராறான்னு பாப்போம்.

Ganesh kumar said...

தினமும் எழுதுகிறேன் அல்லவா? அதுதான் பிரச்சினை. அதுவும் எனக்கு இல்லை- மற்றவர்களுக்கு. //// தினமும் எழுதுறதுதான் பிரச்னையா? இல்ல எழுதுறதுக்கு சுவாரசியமான நாட் பிடிகிறீங்களே அதுவா? எப்படி மணி ஜி பேஸ்புக்ல கமெண்ட் போடவே சலிப்பா இருக்குறப்போ, டெய்லி ஒரு நியூஸ் அதுவும் டிபரெண்ட்டா...உங்க உழைப்புக்கு ஒரு சல்யூட்....நீங்க கலக்குங்க சித்தப்பு...
கணேஷ்.

”தளிர் சுரேஷ்” said...

அருமையாகச் சொன்னீர்கள்! தொடர்ந்து எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!

Anonymous said...

Latest kaddi ungalukku!, வாழ்த்துக்கள்!. Such a brilliant person spending time on nitpicking budding bloggers. Just ignore him and try to improve yourself. There is a place for every kind of writing.

raman said...

எழுதுவது எழுதுபவர் சுதந்திரம் படிப்பது வாசகர் இஷ்டம். ஏன் எழுதுகிறாய் என்று கேட்பவரிடம் ஏன் எழுதினால் என்ன, ஏன் எழுதக்கூடாது என்று கேட்டுவிட்டு நீங்கள் தொடருங்கள். ரசனையாக இருந்தால் வரவேற்பவர்ககுக் குறைவில்லை.

Anonymous said...

mani, just ignore that people,you rocks

சகா.. said...

மணி சார்..குறை சொல்றவங்களுக்கு பிரச்சனை உங்களுடைய கருத்து சார்ந்தது இல்லை..அவங்க பிரச்சனை வேற..நம்மளால முடியலையே..இவன் மட்டும் எப்படி தினம் ஒரு பதிவு எழுதுரான்ற ஆற்றாமை..இன்னும் பச்சையா சொல்லனும்னா **ச்செரிச்சல்,அவ்ளோதான்!ஆயிரம் பேர் குறை சொல்லட்டுமே..அதை விட்ருங்க,இன்னைக்கு புதுசா எதாச்சும் எழுதியிருப்பீங்கன்னு ஆவலா தினம் ஒருத்தராச்சும் உங்க பிளாக்கை படிக்க வருவாங்கள்ல,அந்த ஒருத்தருக்காகவாச்சும் நீங்க தொடர்ந்து எழுதணும் சார்..........ப்ளீஸ்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தினமும் குடிக்கிறான், கூச்சல் சண்டை போடுகிறான் அடுத்தவருக்குப் பிரச்சனையே!
தினமும் எழுதுவதால் என்ன? பிரச்சனையாம்? புரியவில்லை.

Kamala said...

நீங்கள் மிக நன்றாக எழுதுகிறீர்கள். நான் ஒன்று விடாமல் படிக்கிறேன். நீங்கள் பாட்டுக்கு எழுதுங்கள்.ஒரு சிலர் அப்படிதான், அவர்களை மாற்றமுடியாது.

nimmathiillathavan said...

Clear cut expression.தொடர்ந்து போராடுங்கள்

Anonymous said...

//அவர்கள் தீவிரவாதிகள்
தாடி இருந்தாலே தீவிரவாதி , துப்பாக்கி தூக்குனா சொல்லவா வேணும் .

அடக்குமுறைக்கு எதிரா குரல் கொடுத்தா பிரிவினைவாதி , வன்முறைக்கு எதிரா ஆயுதம் ஏந்துனா தீவிரவாதி .

உங்க so called civilised இஸ்ரேயலியன்ஸோட துப்பாக்கி மட்டும் தான் சுடணுமா

சுபாஷும்,பகத் சிங்கும் தீவிரவாதி
சேகுவேராவும் , பிடெல் காஸ்ட்ரோவும் தீவிரவாதி
இவிங்கெல்லாம் தீவிரவாதியா இருக்கும்போது அவங்களும் தீவிரவாதியா இருக்கிறது தப்பில்ல



//இஸ்ரேலும் இன்னபிற ராணுவத்தினரும் Civilised சமூகத்தின் அங்கம்தானே?
ஆமா ஆமா ராஜபக்சே போன்ற அஹிம்ஸா வாதியையும் அந்த சமூகத்தில சேத்துக்கலாமே ...... civilized savages

“Palestine belongs to the Arabs in the same sense that England belongs to the English or France to the French. It is wrong and inhuman to impose the Jews on the Arabs... Surely it would be a crime against humanity to reduce the proud Arabs so that Palestine can be restored to the Jews partly or wholly as their national home”
― Mahatma Gandhi

"We know too well that our freedom is incomplete without the freedom of the palestinians"
― Nelson Mandela

அமர பாரதி said...

நல்ல கட்டிரை மணி கண்டன். தினமும் எழுதினால் ஒரு தவறுமில்லை. சொல்லும் கருவின் சுவாரசியம் தானே முக்கியம்?

சீனி மோகன் said...

உங்க உழைப்புக்கு ஒரு சல்யூட். தொடர்ந்து எழுதுங்கள் மணிகண்டன்.

Anonymous said...

முதிர்ச்சியில்லாத இப்படி ஒரு எதிர்வினையே நீங்கள் இன்னும் பக்குவப்பட பலகாலம் ஆகும் என்று எடுத்துக்காட்டுகிறது .

ராமசாமி, மாமல்லன் போன்ற பெரியவர்கள் உங்களுக்கு அறிவுரை சொல்கிறார்கள் என்றால் அவர்களுக்கு நீங்கள் எதிர்காலத்தில் நல்ல எழுத்தாளராக வரக் கூடிய திறமை வாய்ந்தவர், ஆனால் சரியான வழிகாட்டல் இல்லாமல் சுவாரசியத்துக்காக பத்தி எழுதும் சராசரி ஆசாமியாய் ஆகக் கூடாதே என்கிற ஆதங்கத்தால் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இப்படிப் பொத்தாம் பொதுவாய் 5000 பேர் படிக்கிறார்கள் என்னோட ரீச் என்ன தெரியுமா என்றல்லாம் உதார் விட்டுக் கொண்டு திரிந்தால் கடைசியில் பத்தி எழுத்தாளராகவே வாழ வேண்டியதுதான்.
ராமசாமி சொன்னவற்றை ஒருமுறை ஆழ்ந்து படியுங்கள். அதற்கு பதில் எழுதாதீர்கள் மனதில் வாங்கிக் கொள்ளுங்கள்.. நீங்கள் போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது

Anbuselvan

Anonymous said...

Touching... keep going

ரெங்கன் said...

Mr, Manikandan Sir,
எனக்கு தெரிந்து தினமும் எழுதுவது யாருக்கும் பிரச்சனையில்லை.ஒத்திசைவு சொல்ல வருவது செய்திகளின் துல்லியம் பற்றியே. இவ்வளவு வாசகர்கள் வந்து போகும் இந்த தளத்தில் செய்திகளின் துல்லியமின்மை வாசகர்களின் பார்வையில் தவறாக புரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. இதை தான் அவர் சுட்டி காட்டியுள்ளார். அவர் சொல்லியது தவறில்லை. சொல்லிய விதம் உடன்பாடில்லை. எனக்கு தெரிந்து உங்களுக்கு அனுபவங்களை கோர்வையாய் சொல்லும் கலை உள்ளது. அவ்வகை எழுத்துகளிலேயெ நீங்கள் கவனம் செலுத்தலாம். அதை யாரும் விமர்சித்ததாய் தெரியவில்லை

Muthalib said...

கல்லடி படுதுன்னா காய்க்கத்துவங்கிட்டீங்கன்னு அர்த்தம். கல்லைப் புறம்தள்ளி மரம் தேடி வரும் தவிட்டுக்குருவிகளுக்கு தினம் தீனி வைங்க.

harish sangameshwaran said...

மணி,
கடந்த சில நாட்களாகத் தான் நான் உங்கள் ப்ளாக்கை பின் தொடர்ந்து வருகிறேன்.
நல்ல எழுத்து. உங்கள் புத்தகங்கள் இன்னும் படிக்கவில்லை.
ஆபாசாமானவை தவிர எந்தப் பின்னூட்டத்தையும் தடுப்பதில்லை என்று நீங்கள் சொல்லி இருப்பதால் மாற்றுக் கருத்தான என் கமெண்டை நிச்சயம் பார்ப்பீர்கள், படிப்பீர்கள், பதிவிடுவீர்கள் என்றெண்ணியே இந்தக் கமெண்ட்

என்னுடைய பழக்கம் என்னவென்றால் பேஸ்புக்காக இருந்தாலும் சரி, ப்ளாக்காக இருந்தாலும் சரி. ரொம்பப் பிடித்திருந்தால் நிச்சயம் கமென்ட்டில் தெரிவிப்பேன். எனக்குப் பிடிக்கவில்லையென்றாலோ, சொல்லப்படும் கருத்தில் தவறிருந்தாலோ அனாவசியமாக வரிந்து கட்டிக் கொண்டிருக்காமல் சைலண்ட்டாகக் கடந்து விடுவேன் நீங்கள் சொன்ன மாதிரி.

அனேகமாக நான் பதிவிட்ட வெகு சில மாற்றுக் கருத்துகளில் இதுவும் ஒன்று. வெகு நாட்கள் கழித்து.

மேலே நீங்கள் சொன்னது போல் எல்லாம் தெரிந்து தான் எழுத வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. மனதை பாதித்த விஷயத்தை பிடித்தமான நடையில் எழுதுவது சரி தான்.

ஆனால் இங்கே ஒரு சின்ன விஷயம். இது போன்ற மிக முக்கியமான பிரச்னைகளில், கேள்விப்பட்ட விஷயங்களை எழுதும் போது அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது, அல்லது அது அந்த மாதிரி இருப்பதற்குக் காரணம் என்ன போன்றவற்றை கொஞ்சமே கொஞ்சம் அறிந்தாய்ந்து விட்டு எழுதினால் ஒரு authenticity இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

இன்னொரு விஷயத்தில் நீங்கள் சொன்னதோடு நான் உடன்படுகிறேன். நீங்கள் அந்தக் கட்டுரையில் சொல்ல விரும்பியது , அப்பாவிக் குழந்தைகள் கொத்துக் கொத்தாய்ச் சாவதைப் பற்றித் தான். புரிகிறது. ஆனால் அது கட்டுரையில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே சரியாக வெளிப்பட்டிருந்தது என்பது என் கருத்து.

செவி வழி கேட்ட செய்திகள், இணையத்தில் பார்க்கக் கிடைத்த சங்கதிகள் என்று நிறையச் சேர்ந்து நீங்கள் சொல்ல வந்த விஷயத்தை நீர்க்கச் செய்து விட்டன அந்தக் கட்டுரையில்.

எதுடா சாக்கு என்று காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இது மாதிரி சமாசாரங்கள் தானே முதலில் கண்ணில் படும்? பொங்கி விட்டார்கள்.

அப்புறம் இன்னொன்றும் சொல்ல வேண்டும் என்று எண்ணினேன். இங்கே வரும் பல கமெண்ட்டுகளை ( கவனிக்க - எல்லாம் இல்லை. பல ) பார்க்கும் போது உண்மையிலேயே அவர்கள் எல்லாம் கட்டுரையை முழுசாகப் படித்து விட்டுத் தான் கமெண்டிடுகிறார்களா என்று சந்தேகமாக இருக்கிறது. புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

iRFAN said...

//என்னளவில் நேர்மையாக இருக்கிறேன்.// அருமை மணிகண்டன் சார். நீங்கள் யாரைக்குறிப்பிட்டு எழுதினீர்களோ தெரியவில்லை. எழுதுவது இங்கு நிறையப் பேருக்கு தாங்க முடியாத பிரச்சினை.. ஒரு வகை எரிச்சல். "உனக்கேன் இந்த வேலை" அல்லது "நீ என்ன பெரிய பருப்பா" என்று எழுதுபவனை தட்டிவைக்கும் ஒருவகை குரூர மனப்பாங்கு. இவர்களுக்கு என்ன பிரச்சினை. எனக்கு உங்களையோ உங்களுக்கு என்னையோ தெரியாது... இருப்பினும் உங்கள் எழுத்துக்களில் என் மன உணர்வுளைப் பார்க்கிறேன். நான் பேச நினைப்பதை, பேச முடியாததை நீங்கள் சொல்லிவிடுவதாக ஒரு சந்தோஷம். உங்கள் ஒருவரால் மட்டுமல்ல.. நிறைய வாசிக்கும் நிறைய எழுதும் நல்ல உள்ளங்களால்.உங்கள் எழுத்துக்களில் உள்ள நேர்மை எனக்கு மிகவும் பிடிக்கும் அது சிறுவயதில் மீன்பிடித்தகதையாயினும் சரியே. நிறைய எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்.

krish said...

தமிழ்மணத்தை திறந்தால், உங்கள் வலைப்பக்கம் எங்கே என்றுதான் முதலில் தேடுவேன்.

சேக்காளி said...

மணி கல்லு யாவாரம் ஆரம்பிப்போமா?

சேக்காளி said...

அந்த பதிவுக்கும் போயி பாத்தேன். அங்கேயும் புதுசா விசயம் கெடச்சது.நல்லதுனா எடுத்துக்க வேண்டியதுதான். . வச்சது மணி தானே. வேறு யாரும் . வச்சிருந்தாலும் நம் பார்வைக்கு வரவில்லையே.

சேக்காளி said...

//உள்ள நேர்மை எனக்கு மிகவும் பிடிக்கும்//
நான் சொன்னத சுட்டுட்டுட்டாரு ன்னு சசி குமாரு ஒரு பதிவு போட்டுருக்காராம்.

சேக்காளி said...

//‘contemporary writing //
அப்டின்னா சமகால எழுத்துதானே. ஆனால் அவர்கள் வேறு ஏதோ அர்த்தத்தில் கேட்டதாக தோன்றுகிறது.சுந்தரராமசாமி மாதிரி இல்ல சுஜாதா மாதிரி இல்ல ரெண்டு பேர மாதிரி தெரியபடுத்துங்க.ஏற்கனவே போட வேண்டிய பதிவையும் எழுதுங்க. ஒரு நாளைக்கு ஒரு பதிவு எழுதுனா தானே தப்புங்கறாங்க. ரெண்டா எழுதுங்க.என்ன ஆவுதுன்னு பாப்போம்.

ரெங்கன் said...

என்ன சார். என் கருத்தில் எந்த தவறும் இல்லையே. அப்புறம் ஏன்?.அதை போடனும்னு இல்லை. உங்களுக்கு புரிந்தால் போதும்.நானும் நிசப்தம் தினமும் வாசிப்பவன் தான்.மாற்று கருத்தை அவர் சொல்லிய விதம் தவறு. ஆனால் அவரின் கருத்தில் எந்தவித தவறும் இல்லையே

ஆர். அபிலாஷ் said...

அருமை. நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். எனக்கு நீங்கள் எழுதுவது பிடிக்கும்