Aug 22, 2014

புரிஞ்சுதான் பேசுறியா?

‘யோவ் புரிஞ்சுதான் பேசுறியா?’ இந்தக் கேள்வியைத்தான் காருக்குள் இருந்தவர் கேட்டிருக்கிறார். என்ன கடுப்பானான் என்று தெரியவில்லை பைக்கில் நின்றிருந்தவன் கையில் வைத்திருந்த எதையோ ஓங்கி அடித்திருக்கிறான். கண்ணாடி சுக்கு நூறாக போய்விட்டது. ஹோண்டா சிட்டி- புது கார். காரை விட்டு கீழே இறங்குவதற்குள் பைக்காரன் பறந்துவிட்டான். என்ன இருந்தாலும் கண்ணாடியைப் பறிகொடுத்தவருக்கு அங்கலாய்ப்பாகத்தான் இருக்கும். தனக்கு ஒரு நியாயம் கிடைக்காமல் வண்டியை நகர்த்த மாட்டேன் என்று சொல்லிவிட்டார். ட்ராபிக் ஃபோலீஸ் வந்துவிட்டார்கள். முந்தின சிக்னலில் இருந்தே லடாய் செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். இந்த ஆள் என்னவோ சொல்ல அவன் பதிலுக்கு என்னவோ சொல்ல, முதல் வரியில் இருக்கும் கேள்வியை இவர் கேட்க, டமார்.

பெங்களூர் கூட்லு கேட்டில் நேற்று மாலையில் வாகன நெரிசலில் சிக்கிக் கொண்டவர்களுக்கு இந்தச் சம்பவம் தெரிந்திருக்கலாம். இல்லையென்றாலும் அது ஒன்றும் அவ்வளவு முக்கியமான விஷயம் இல்லை. 

ஹைதராபாத்தில் இருந்த சமயத்தில் அடிக்கடி பிரசாத் ஸ்டுடியோவுக்குச் செல்வதுண்டு. அப்பொழுது தமிழ் படங்கள் பார்க்க வாய்ப்பு இல்லை. ஒரே ஒரு மாலில் திரையிடுவார்கள். டிக்கெட் விலை செமத்தியாக இருக்கும். பத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவாக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த போது ஐந்நூறு ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுக்க எப்படி மனம் வரும்? பிரசாத் ஸ்டுடியோவில் அவ்வப்போது தமிழ் படங்களைத் திரையிடுவார்கள். பெரும்பாலும் தமிழ் படங்களை தெலுங்கில் டப்பிங் செய்து அதை விநியோகஸ்தர்களுக்குக் காட்டுவார்கள். உள்ளே நாமும் அமர்ந்திருந்தால் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டார்கள். அப்படித்தான் ‘ஏய்’ படமும் பார்த்தேன். தெலுங்கில் ‘ரேய்’ என்ற பெயரில் டப்பிங் செய்திருந்தார்கள். யாராவது அந்தப்படத்தை தெலுங்கில் வாங்கித் திரையிட்டார்களா என்று தெரியவில்லை. ஆனால் அர்ஜூனா அர்ஜூனா பாடலைப் பார்த்துவிட்டு எனக்கு குளிர் ஜூரம் வந்துவிட்டது. அருவியில் அப்படி நனைந்தால் வராதா என்ன?

‘ஏய்’ என்று கத்துவது வில்லனை உருவாக்கிவிடுகிறது என்பதுதானே அந்தப்படத்தின் ஒன்லைன்? அதே கான்செப்ட்தான் நேற்றும். ‘புரிஞ்சுதான் பேசுறியா?’ என்ற கேள்வி சில ஆயிரங்களுக்கு வேட்டு வைத்துவிட்டது. கடைசி வரைக்கும் பினாத்திக் கொண்டிருந்தார். ‘கேமிராவில் பதிவாகியிருக்கும் பிடித்துக் கொள்ளலாம்’என்று போலீஸார் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவர் நகர்வதாகத் தெரியவில்லை. வண்டியின் வரிசை பெரிதாகிக் கொண்டேயிருந்தது. ஹார்ன் ஒலியெழுப்பத் துவங்கியிருந்தார்கள். அவருக்கும் வேறு வழியில்லை. வண்டியை ஓரமாக நகர்த்திவிட்டு போலீஸாரிடம் வந்து பேசிக் கொண்டிருந்தார். நான் கிளம்பிவிட்டேன்.

அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய்க்குள்தான் செலவு பிடிக்கும் என்றாலும் தேவையில்லாத பிரச்சினைதான். பேசாமல் இருந்திருந்தால் தப்பித்திருக்கும். அதற்குள் ஈகோ. வாய் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டார். சாலையில் நம்மை முந்திச் செல்வார்கள்- ‘பார்த்து போக முடியாதா’ என்று வாய் வந்துவிடுகிறது. அவன் பேசாமல் சென்றுவிட்டால் ஒன்றுமில்லை. பதிலுக்கு அவனும் திரும்பி முறைத்தால் பிரச்சினைதான். சாலைகளில் நடக்கும் பிரச்சினைகளில் எண்பது சதவீதமாவது ஈகோவினால்தான் வருகிறது என்ற சர்வே ஒன்று கண்ணில்பட்டது. அது சரிதான். பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவும் ஒன்று.

வீட்டில் இருப்பவர்களையே முழுமையாக புரிந்து கொள்ள முடிவதில்லை. நண்பர்களை முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறதா? அவன் தான் உயிர்நண்பன் என்று நினைத்திருந்தேன். பெங்களூர் குடி வந்து எட்டு மாதங்கள் ஆகிறதாம். ‘ஏண்டா ஒரு ஃபோன், ஒரு மெசேஜ் அனுப்பியிருக்கலாம்ல’ என்றால் ‘பிஸியில் மறந்துவிட்டேன்’ என்கிறான். அப்புறம் என்ன ______ நண்பன்? (கோடிட்ட இடத்தில் உயிர் என்ற சொல்லை மட்டும் பயன்படுத்தவும்) ‘உன் சங்காத்தமே வேண்டாம்’ என்று பேச்சுவார்த்தையே முறிந்துவிட்டது. 

நெருங்கிப் பழகியவர்களையே புரிந்து கொள்ள முடிவதில்லை இந்த லட்சணத்தில் சாலையில் போகிற வருகிறவர்களெல்லாம் புரிந்துதான் பேச வேண்டும் என்றால் அவ்வளவுதான். அவ்வளவு ஏன்? நம்மை நாமே முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறதா என்ன? முரண்பாடுகளின் மொத்த உருவம் நாம்தான் அல்லது நான்தான்.

பெரியாரைப் பிடிக்கும்  ஆனால் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போடுவான். இந்துத்துவம் பிடிக்காது ஆனால் மோடியை ஆதரிப்பான். கம்யூனிஸம் பேசுவான் ஆனால் பன்னாட்டு நிறுவனத்தில் வேலையில் இருப்பான். பைத்தியகாரன். எப்படி இதெல்லாம் சாத்தியம்? ஒரு விஷயத்தையும் முழுமையாக புரிந்து கொள்ள முடிவதில்லை. நாய்க்கு நான்கு தட்டுக்களில் சோறு போட்டு வைத்தால் நான்கிலுமே வாய் வைத்துப் பார்க்க முயற்சிக்குமாம். டெக்னாலஜி மனிதனை அப்படித்தான் மாற்றிவிடுகிறது. கம்யூனிஸமும் சரி என்கிறது முதலாளித்துவமும் சரி என்கிறது. நாத்திகமும் சரி என்கிறது ஆன்மிகமும் சரி என்கிறது. ஷீரடி பாபாவையும் நம்பலாம் என்கிறது. பெரியாரையும் நம்பலாம் என்கிறது. எதைச் செய்வது? 

ஐடியலிஸம், கொள்கைகள் என்பதையெல்லாம் காலம் எந்தக் கருணையுமில்லாமல் சர்வசாதாரணமாகச் சிதைத்துக் கொண்டிருக்கிறது. இடதுசாரிக் கொள்கை பேசினாலும் முதலாளியை நம்பி வாழ்பவர்கள்தான் அதிகம். திராவிடம், ஆரியம், மொழி, இனம், பண்பாடு என எல்லாவற்றிலுமே ஏதாவதொருவிதத்தில் சமரசம் செய்து கொள்கிறோம். இல்லையா? மற்றவர்கள் செய்து கொள்கிறார்களோ இல்லையோ நான் செய்து கொள்கிறேன். குடும்பம் முக்கியமாகத் தெரிகிறது, மகன் முக்கியமாகத் தெரிகிறான். எல்லாவற்றையும் விட என் அரை சாண் வயிறு முக்கியம். சமரசமே செய்து கொள்ளாத- தனக்கு பிடித்த கொள்கைகளுக்குத் துளியும் மாறுபாடு இல்லாத வாழ்க்கையை மேற்கொள்ளும் எந்தவிதத்திலும் முரண்பாடு இல்லாத ஒரு மனிதர் இருந்தால் தெரியப்படுத்துங்கள். அவரது காலடி மண்ணைத் தொட்டு நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும்.

காலடி மண் என்றவுடன் ஞாபகத்திற்கு வருகிறது. எங்கள் ஊர்ப்பக்கத்தில் சூரிபாளையத்து அய்யன் கோவில் என்றொரு கோவில் இருக்கிறது. நாடார்களின் தெய்வம். இன்னமும் கோவில் கட்டுப்பாடு நாடார்களின் கைவசத்தில்தான் இருக்கிறது. அந்த அய்யன் எதனால் கடவுள் ஆனார் என்று தெரியவில்லை. பலவானாக இருந்திருக்க வேண்டும். இப்பொழுது கையில் அரிவாளாடு நிற்கிறார். குழந்தைகளாக இருந்த காலத்தில் ஆயா அழைத்துச் செல்வார். அப்பொழுதெல்லாம் பெருங்கூட்டமாக இருக்கும். சூரிபாளையத்து அய்யன் கோவில் திருநீறைக் கை கால்களில் பூசிக் கொண்டால் எந்த நோவும் வராது என்று பூசிவிடுவார். 

அந்தக் கோவிலுக்கு கடைசியாகச் சென்று இருபத்தைந்து வருடங்கள் ஆகிவிட்டன. இந்த முறை ஊருக்குச் சென்றிருந்த போது கோவிலை எட்டிப்பார்த்தால் ஆயா காலத்து ஆட்கள்தான் வந்து கொண்டிருக்கிறார்கள். இளந்தலைமுறையினர் கொஞ்சம் கொஞ்சமாக கிருஷ்ண ஜெயந்தியோடும், விநாயகர் சதுர்த்தியோடும், தீபாவளியோடும் நின்றுவிடுகிறார்கள். சூரிபாளையத்து அய்யன் கோவில் மட்டுமில்லை- வாழைத் தோட்டத்து அய்யன், தம்பிக்கலை அய்யன் என்று நிறைய அய்யன் கோவில்களிலும் கூட இதே நிலைமைதான். ஒரு காலத்தில் வருடாவருடம் கிடாவெட்டி பூசை நடத்தும் காளியாத்தா கோவிலை அந்தக்காலத்து ஆட்கள் யாராவது சுத்தம் செய்தால்தான் உண்டு. இல்லையென்றால் புதர் மண்டிக் கிடக்கிறது. மாகாளியம்மன், வேடியப்பன், கன்னிமார் சாமிகள் என ஏகப்பட்ட கடவுள்களைக் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வருகிறோம். 

பெருந்தெய்வங்களை வணங்குவதைத் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் இந்தச் சிறு தெய்வங்களை கிட்டத்தட்ட கைவிட்டுவிட்டோம். இந்தச் சிறுதெய்வங்களில் முக்கால்வாசி தெய்வங்கள் முன்னொரு காலத்தில் வாழ்ந்தவர்கள்தான். மனிதர்கள். ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் அய்யன்கள் அந்த ஊரின் காவல்தெய்வங்களாகவோ, வீரர்களாகவோ வாழ்ந்து மறைந்தவர்கள். ஒவ்வொரு தெய்வத்தின் பின்னாலும் ஒரு வரலாறு இருக்கும். அவர்களை காலங்காலமாக வணங்கி கடவுளாக்கி வைத்திருக்கிறார்கள். காலம் மாற மாற கார்போரேட் சாமிகளை வணங்கத் தொடங்கி சிறுதெய்வங்களைக் கைவிட்டுவிட்டோம். வெங்கடாசலபதியும், தங்கக் கோபுரமும் ஈர்க்கும் அளவுக்கு இந்த ஏழைச் சாமிகள் ஈர்ப்பதில்லை.

இதையெல்லாம்தான் இந்துத்துவம் என்று புரிந்து கொள்வதா? எதற்கு வம்பு? கீபோர்டும் இண்டர்நெட் இணைப்பும் இருக்கிறது என்று இதையெல்லாம் தட்டினால் நம்மைத் தூக்கிப் போட்டு மிதிப்பார்கள்.

26 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

Excellent
by
karuppanan

Anonymous said...

வாழ்வின் நிதர்சனம் பல நேரங்களில் நானும் இவற்றை நினைத்ததுண்டு.

Mitra said...

Boss..engeyo aarambichu engeyo kondu poi mudichirukeengale...!!! public nuisance --> power of words--> ego--> difficulties of finding tamil movie theaters when you r in other state-- > 'Too Busy to talk' friends --> conflicts between your thoughts and real life--> village deities--> Age of 'corporates" ..... flow of your thoughts and writing is good..!!! keep it up..!!!

vijayan said...

எல்லாம் சரிதான்,ஆனால் நம்மால் என்ன செய்ய முடியும் என்ற பதில் நம்மை நாமே கேவலமாக பார்க்க வைக்கிறது.

Mohideen said...

ஒவ்வொரு விசயத்தையும் அது கடந்து போகிற மாதிரி, ஜஸ்ட் தொட்டுட்டுப் போறீங்க. இதுவும் நல்லாத்தான் இருக்கு...

அமர பாரதி said...

சிறு தெய்வம் பெருந்தெய்வம் சொல்லாடல் சமீபமாகத் தோன்றியதே. தெய்வத்திலும் சிறு தெய்வம் பெருந்தெய்வம் என்று சொல்லும் மனிதர்களுக்கா அந்தத் தெய்வம் அருள் செய்யும்? அளவற்ற ஆணவத்தில் வெளிப்பாடுதானே சிறு தெய்வம் பெருந்தெய்வம் என்ற சொல்லாடல்?

Vaa.Manikandan said...

கருப்பராயன், அய்யனார், மாகாளி போன்று கவனிக்கபடாமல் கைவிடப்படும் கடவுளுக்கு வேறு பொருத்தமான பெயரைச் சொல்லுங்கள்.

நேர்கோடு said...

//வெங்கடாசலபதியும், தங்கக் கோபுரமும் ஈர்க்கும் அளவுக்கு இந்த ஏழைச் சாமிகள் ஈர்ப்பதில்லை.இதையெல்லாம்தான் இந்துத்துவம் என்று புரிந்து கொள்வதா? எதற்கு வம்பு? கீபோர்டும் இண்டர்நெட் இணைப்பும் இருக்கிறது என்று இதையெல்லாம் தட்டினால் நம்மைத் தூக்கிப் போட்டு மிதிப்பார்கள்.

Exactly my thought for a long time. Even as I am a christian (for five generations), I used to take pride in சோலைசாமி (எங்கள் குலதெய்வம்). Not going there in the last 5 yrs or so since the separation between Hindu & Christian Nadars has become very wide.

அமர பாரதி said...

நாட்டார் தெய்வங்கள் என்ற ஒரு வழக்குச் சொல் இருக்கிறதே மணி கண்டன். அதுவும் எந்த அளவுக்கு சரி என்று தெரியவில்லை. இந்து மதம் பிரிவுகளின் படி பார்த்தால் சைவம், வைணவம் என்ற பிரிவின் அனைத்தும் அடங்குகிறது. இந்த இரண்டு பிரிவுகளில் ஆதி கால ஆறு பிரிவுகளும் இன்று அடங்கி விடுகிறது.

ஆனாலும் சிறு தெய்வம் பெருந்தெய்வம் என்று பிரிப்பது மிக தவறாகவே படுகிறது. தெய்வமே சிறு தெய்வம் என்றால் அதை வழிபடுபவனும் சிறுமைப் பட்டவனே என்ற பொருள் பட ஏற்பட்டதே சிறு பெரும் என்ற சொல்லாடல் என்று நினைக்கிறேன்.

அமர பாரதி said...

என் எண்ணவோட்டத்தில் தவறிருந்தால் சொல்லவும்.

Unknown said...

//அவன் தான் உயிர்நண்பன் என்று நினைத்திருந்தேன்//

இப்படித்தான் பலரை கேணத்தனமாக நம்பிக் கொண்டிருந்துவிடுகிறோம்.

இரா திலீபன் said...

கருப்பராயன் ஐய்யனார் மாகாளி போன்றவை எல்லாம் குல வழிபாட்டு தெய்வங்கள். குல வழிபாடும் "கூட்ட" வழிபாடுமே நமது மரபு. விநாயகன் பெருமாள் போன்றவை கார்பரேட் இந்துத்துவா சாமிகளே..... உருவாக்கப்பட்டவையே..... புனைவுகளே புராணங்கள்.

இரா திலீபன் said...

//பெரியாரைப் பிடிக்கும் ஆனால் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போடுவான். இந்துத்துவம் பிடிக்காது ஆனால் மோடியை ஆதரிப்பான்.//
இதற்கெல்லாம் எப்படி பதில் சொல்வதென்றே தெரியவில்லை கூறு கெட்ட குக்கருக தான் இப்பிடி இருக்கும்.

//கம்யூனிஸம் பேசுவான் ஆனால் பன்னாட்டு நிறுவனத்தில் வேலையில் இருப்பான். பைத்தியகாரன்.இடதுசாரிக் கொள்கை பேசினாலும் முதலாளியை நம்பி வாழ்பவர்கள்தான் அதிகம். //

"கம்யூனிச ஆதரவாளன் என்பதிலிருந்து.....!"

எதார்த்ததில் முதலாளித்துவத்தை எதிர்ப்பவர்கள் பிழைப்பதற்கென்றே தனி வழி ஏதேனும் இருந்தால் சொல்லுங்களேன். அதற்கு போய் விடலாம்.
மூல தனம் இல்லாத ஒருவன் ஒரு முதலாளியிடம் வேலைக்கு சென்று தான் ஆக வேண்டும். அதுவே எதார்த்த நிலைமை. அங்கு சென்று சங்கம் கட்டுகிறானா அல்லது கூழைக் கும்பிடு போட்டு கருங்காலி வேலை செய்கிறானா என்பது போன்ற இதர செயல் பாட்டின் மூலம் அவனை மதிப்பிட வேண்டும். அதை விடுத்து இப்படி வறட்டு வாதம் பேசுவது ஒரு "எழுத்தாளருக்கு" அழகல்ல.

//அவரது காலடி மண்ணைத் தொட்டு நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும்.//

தங்களது சூட்சுமம் இங்கு வெளிப்படுகிறது. காலைத் தொட்டு நெற்றியில் இட்டுக் கொண்டு நீங்கள் உங்கள் வேலையை பார்ப்பீர்கள் அவர் சமூகத்துக்காக போய் போராட வேண்டும். இல்லையா....! அந்தக் கொள்கை சரியென்றால் நானும் வருகிறேன் என்று ஒரு வார்த்தை வரவில்லையே.....?

Unknown said...

//// கீபோர்டும் இண்டர்நெட் இணைப்பும் இருக்கிறது என்று இதையெல்லாம் தட்டினால் நம்மைத் தூக்கிப் போட்டு மிதிப்பார்கள் ////

நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்ற சூழ்நிலையினை தெளிவாக வெளிப்படுத்திய மனதை தொட்ட வரிகள்.

Anonymous said...

Hope you will take this in right spirits.
http://othisaivu.wordpress.com/2014/08/22/post-401/

thiru said...

ஆக எட்டு மாதங்களுக்கு மேலாக நீங்களும் அவரைத் தொடர்பு கொள்ள (முயற்சிக்க) வில்லை. ஏனெனில் நீங்கள் பிஸி .. அதே பிஸி தானே அவரும் .. உங்களுக்கு வந்தால் ரத்தம் அவருக்கு என்றால் தக்காளி சட்னியா

Out of sight Out of mind ..

Anonymous said...

Mani see this...
http://othisaivu.wordpress.com/2014/08/23/post-402/
Why this guy is attacking you? Is there any vaikkal varappu thararu???

Anonymous said...

Hope you will take this in right spirits.
http://othisaivu.wordpress.com/2014/08/22/post-401/

i think he is mentally ill ..

நெல்லைத் தமிழன் said...

மனிதன் என்பவன் வளர்ந்துகொண்டே இருக்கிறான் (மனதில், எண்ணத்தில், சிந்தனையில்). நேற்று சரியாக இருந்தது இன்று தவறாக இருக்கிறது. அதனால் அவன் திருத்திக்கொள்ள விழைகிறான். அதனால் ஒருவன் சொன்னதை, எந்தக் காலத்தில் சொன்னான், எந்தச் சூழ்னிலையில் சொன்னான் என்பதை வைத்துப் புரிந்துகொள்ளவேண்டும். சிலர் சில கொள்கைகளில் மாற்றம் இல்லாமல் இருப்பார்கள். It may be due to their firm belief. அது சரியா தவறா என்பது மற்றவர்கள் எடைபோடும்போதுதான் தெரியும்.

அய்யனார் கோவில் வழிபாட்டையும், திருப்பதியையும், இந்துத்துவாவுடன் இணைந்து சிந்திப்பது தவறு. இந்துமதத்தில் பல (6) வழிபாடுகள் உண்டு. மனிதனில் சிலர், நான் கண்டுகொண்டது சரி, அதனை மற்றவர்களும் பின்பற்றினால் அவர்களுக்கு நல்லதே என்ற எண்ணத்தில் பரப்புரைசெய்பவர்கள் உண்டு. சிலர் கட்சிக்கு ஆள் சேர்ப்பதுபோன்று மூளைச் சலவை செய்ய நினைப்பர். அதனாலேயே, ஒவ்வொரு பிரிவும், அதனுடைய காலம் வந்தபோது, மற்ற பிரிவை அழிக்க நினைத்தது.

அய்யனார் மற்ற நாட்டார் தெய்வ வழிபாடு, அந்த அந்தப் பகுதிக்கானது. சில சமயம் குலதெய்வம், நாட்டார் தெய்வமாகவோ வேறு ஏதோ கோயிலாகவோ இருக்கலாம். (எங்களுக்கு திருப்பதி குலதெய்வம்). வைணவக் கோயில்களில் பெரும்பான்மையானவை, நிறைய மக்கள் வருகைதராத நிலைமையில் உள்ளது. இதற்குக் காரணம் மக்களின் இடப் பெயர்ச்சி. வருடா வருடமாவது குலதெய்வத்தின் கோவிலுக்கு வழிபாட்டுக்குச் செல்லவேண்டும் என்றொரு சம்பிரதாயம் உள்ளது.

தெய்வத்தைக் கைவிட்டுவிட்டோம் என்று சொல்வதோ நினைப்பதோ சரியல்ல. நான் திருனெல்வேலியில் இருந்தபோது எங்கள் கிராமக் கோவிலுக்குத் தினமும் செல்வேன். அங்கிருந்து சென்னை வந்தபின்பு, எனக்குத் திருனெல்வேலியில் ஒரு பிடிமானமும் (சொத்தோ, சொந்தமோ, வீடோ) கிடையாது. என்னைச் சேர்ந்தவர்களெல்லோரும் சென்னையிலோ மற்ற இடங்களிலோ இருக்கிறார்கள். பத்து வருடத்துக்கு ஒருமுறை, கோவிலுக்கென்றே, 'நெல்லை கிராமத்துக்குச் செல்வதே அதிசயம். ஆனால் அதே கடவுள்தானே சென்னைக் கோவிலிலும் இருக்கிறார் என்று நினைத்துக்கொள்வேன். வேறு என்ன செய்வது?

ஏழைச் சாமிகள் என்பதெல்லாம் சரியான சொல்லாடலாகத் தெரியவில்லை.

கொள்கைகள் ஐடியலிஸம் என்பதெல்லாம் கட்சிக்காரர்களுக்கே கடினமான இந்தக் காலத்தில், 99 சதமானமுள்ள சாதாரண மனிதர்கள் என்ன செய்துவிடமுடியும்? 'நீங்கள் சொல்வதைப் பார்த்தால், இந்தியர்கள் யாரும் அன்னியப் பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது (இது யாராலும் இயலாது, நாம் 100 வருடங்கள் பின்னோக்கிச் சென்று பழைய கிராம முறைக்குத் திரும்பினாலொழிய), தமிழன், தமிழ் கலாச்சாரத்தைத்தான் follow பண்ண வேண்டும் (டாஸ்மாக் இல்லையென்றால் 60 சதமானத் தமிழர்கள் காலி) என்றெல்லாம் எதிர்பார்க்க முடியுமா?

இந்தக் கட்டுரை சரியான flow வில் இல்லை.

சேக்காளி said...

மணி உங்கள் கருத்துப்படி யோசித்தால் தூக்கி போட்டு மிதிக்க நினைப்பார்கள். அதற்காக வரும் போது அதனை மறந்து விடுவார்கள்.

சேக்காளி said...

//அப்புறம் என்ன ______ நண்பன்? (கோடிட்ட இடத்தில் உயிர் என்ற சொல்லை மட்டும் பயன்படுத்தவும்) //
அந்த வார்த்தையை பயன்படுத்தக்கூடாதுங்கறது மூலம் உங்களுக்கு அந்த வார்த்தை மேலே உள்ள கோபம் புரியுது. உங்களுக்குத்தான் அப்பிடின்னா அவருக்கும் அப்பிடித்தானா. அப்போ நீங்களெல்லாம் அமேசான் காட்டுல மூலிகை தேடுற குருப்பா.

Anonymous said...

(Srimad Bhagavad-gita: 7.23)
“Those who devote themselves to the demigods have only meagre intelligence and obtain (only) fruits that are temporary (invariably subject to destruction). The worshippers of the demigods go the (abode of) the demigods, but My devotees come to Me (My supra-mundane abode).” - சிறு அல்லது குரு தெய்வ வழிபாடு பற்றி கீதை கூறுவது,

Muthuram Srinivasan said...

மாற்றங்களை கருத்தில் கொண்டு சில விஷயங்களை கைவிடுவதும் நல்லது அல்ல. கோவில் திருவிழா போன்ற நிகழ்வுகள் வெறுமனே சாமி கும்பிடுதல் என்பதற்காக அல்ல. அதில் subtle ஆக நிறைய நோக்கங்கள் உண்டு. உதாரணமாக உங்களைப்போல் நெல்லையை விட்டு வந்த பல குடும்பங்கள், தங்கள் ஆணிவேரை தெரிந்து கொள்ளவும், பிரிந்த சொந்தங்கள் மீண்டும் சந்திக்க ஒரு வாய்ப்பாகவும் இன்னும் எத்தனையோ விஷயங்கள் இதன் மூலம் நடக்க முடியும்.கோவில் திருவிழாக்கள் மூலம் நிச்சயமான திருமணங்கள் ஏராளம். இதனை நீங்கள் திருப்பதி, ராமேஸ்வரம், பழனியில் வைத்து செய்ய முடியாது, இதற்கு உள்ளூர் சிறு தெய்வங்களுக்கான கோயில் விழாக்கள் மட்டுமே வாய்ப்பு அளிக்கும். நீங்கள் சொல்லும் மாற்றங்கள் ஒருபுறம் தொடர்ந்தாலும் நாம் யார் என்பதை நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கும் விஷயங்களை மாற்ற நினைக்கக் கூடாது. இல்லையெனில் நமது சந்ததிக்கு அவர்கள் யார் என்பதே தெரியாமல் போய் விடும். Globalization எல்லாம் வியாபாரத்தோடு நிறுத்திக்கொள்வது நலம்.

Anonymous said...

கீதையே அனானியா? நிச்சயம் நீ அவனாத்தான் இருக்கணும்.

சேக்காளி said...

நல்லதொரு இணைப்பை கொடுத்ததற்கு நன்றி!.

raman said...

பிரம்மம், கடவுள், தேவதை என்று அங்கும் கிளாஸ் டிஸ்டிங்க்‌ஷன் இருக்கிறதே. செத்த பின்தான் உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும்.