Aug 21, 2014

விளம்பரம் செய்யறீங்களா?

நண்பர் ஒரு தொழில் தொடங்கியிருக்கிறார். சொந்த ஊர் திண்டுக்கல். முதலில் ஐடியில்தான் இருந்தார். சில வருடங்களுப் பிறகு படிக்கச் செல்கிறேன் என்று ஆஸ்திரேலியா சென்றார். அப்பொழுதே திருமணம் ஆகி ஒரு குழந்தையும் இருந்தது. இரண்டு வருடங்கள் கழித்து வந்து மறுபடியும் அதே நிறுவனத்தில் சேர்ந்தார். இப்பவும் ஐடியில்தான் இருக்கிறார். அவரை பாஸிட்டிவான மனிதர் என்றும் சொல்ல முடியாது; நெகடிவ்வான மனிதர் என்றும் சொல்ல முடியாது. ஒழுங்காகத்தான் பேசிக் கொண்டிருப்பார். திடீரென்று ‘இந்த வேலை இல்லையென்றால் என்ன செய்வீங்க?’என்பார். ஜெர்க் அடித்தாலும் அந்த வினாடியில் சமாளித்துவிடுவேன். ஆனால் அடுத்த நான்கைந்து நாட்களுக்கு வயிறு கலங்கும். எனக்கு என்ன தெரியும் என்று யோசித்துப் பார்த்தால் எதுவுமே தெரியாது என்பதுதான் பதில். களை பறிக்கத் தெரியுமா? நாற்று நடத் தெரியுமா? ட்ராக்டர் எடுத்து உழவு ஓட்டத் தெரியுமா? துணி தைக்கத் தெரியுமா? மிக்ஸி, க்ரைண்டர் ரிப்பேர் செய்யத் தெரியுமா? ஷேர் மார்கெட் பற்றிய அடிப்படையாவது தெரியுமா? அல்லது மளிகைக் கடையில் பொட்டலம் கட்டவாவது தெரியுமா? சுத்தம். ஒரு மண்ணும் தெரியாது.

உள்ளுக்குள் புலம்பிக் கொண்டிருக்கும் போதே ‘உங்களுக்கு என்னங்க? எழுதுறீங்க’ என்பார். உசுப்பேற்றுகிறாராம். அப்பொழுது வரும் பாருங்கள் கோபம். ஒரு குண்டாந்தடியெடுத்து பொடனி அடியாக அடித்துவிடலாம் என்றிருக்கும். வருடம் முழுவதும் சேர்த்தாலும் கூட பத்தாயிரம் ரூபாயைத் தாண்டியதில்லை. அதுவே கூட சுஜாதா விருது வாங்கிய வருடத்தில் பத்தாயிரத்தை தாண்டியது. அவ்வளவுதான் எழுத்துச் சம்பாத்தியம். வருடம் பத்தாயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு என்ன செய்வது? 

கஷ்டம்தான். அது போகட்டும்.

இந்த மனிதர் ஒரு ஐஸ்க்ரீம் கடை ஆரம்பித்திருக்கிறார். பார்ட் டைம் வேலை. பகல் முழுவதும் மனைவி பார்த்துக் கொள்கிறார். மாலையிலிருந்து இரவு வரை இவர் பார்த்துக் கொள்கிறார். வியாபாரம் பரவாயில்லை என்கிறார். நல்ல வருமானம் வந்தவுடன் ஐடியை விட்டுவிட்டு அதற்கே போய்விடப் போகிறார். மனிதர் விவரமானவர்தான். வெறும் ஐஸ்கிரீம் கடை மட்டும் போதாது என்று மினி டெம்போ ஒன்றும் வாங்கி அதில் விளம்பர டிஸ்ப்ளே பலகை ஒன்றையும் பொருத்தியிருக்கிறார். அதில் பெரிய வேலை இல்லை. கடைக்காரர்கள், வியாபாரிகள் என்று மாதக்கணக்கில் அந்த வண்டியை புக் செய்து கொள்கிறார்கள். அவர்களது விளம்பர ப்ளக்ஸை வண்டியில் பொருத்தி ஒரு நாளைக்கு நாற்பது கிலோமீட்டர் தூரத்துக்கு வண்டி சுற்றி வரும். அந்த வியாபாரி மாதம் அறுபதாயிரம் ரூபாயை நண்பருக்குக் கொடுத்துவிட வேண்டும். டீசல் செலவு, டிரைவர் சம்பளம், பேட்டா அனைத்தும் நண்பரே பார்த்துக் கொள்வார். ஒரு நாளைக்கு அதிகபட்சம் மூன்று லிட்டர் டீசல் செலவாகும். ஒரு லிட்டர் டீசல் 62 ரூபாய். டிரைவர் சம்பளம் பத்தாயிரம் ரூபாய். அது போக தினப்படி நூற்றைம்பது ரூபாய் பேட்டா. ட்ராபிக் போலீஸ், கார்போரேஷன்காரர்கள் மாமூல் போக எப்படியும் ஒரு வண்டிக்கு முப்பதாயிரத்துக்கு குறைவில்லாமல் நிற்கும். படு உற்சாகமாகத் திரிகிறார். 

இவர்களையெல்லாம் பார்த்தால் நமக்கும் ஆசை வந்துவிடுகிறது. இந்த வேலையையே நம்பிக் கொண்டு என்ன செய்வது? நகரத்தில் எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம். செருப்புக்கடை வைத்திருப்பவர் தினமும் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். பேக்கரிக்காரர் ஒரு நாளைக்கு எண்பதாயிரம் ரூபாய்க்கு வியாபாரம் ஆகிறது என்கிறார். வெளியிலிருந்து பார்த்தால் வெறும் பீடாக்கடையாகத்தான் தெரியும்- நன்றாக அறிமுகமான பீடாக்கடைக்காரரிடம் ஒரு நாளைக்கு எவ்வளவு வருமானம் வரும் என்று கேட்டுப்பாருங்கள். ஆயிரம் ரூபாய்க்கு சில்லரை வேண்டுமானால் தயங்காமல் பீடாகடைக்கு போகலாம். அதுவும் பத்து ஆயிரம் ரூபாய் தாள்களுக்குக் கூட சில்லரை தருவார்கள்.

வீட்டில் பழைய பேப்பர் எடுக்க வரும் மனிதர் தர்மபுரிக்காரர். பெங்களூரில் குடும்பத்தோடுதான் வசிக்கிறார். ஒரு கிலோ பேப்பரை ஏழு ரூபாயிலிருந்து எட்டு ரூபாய்க்கு எடுக்கிறார். எப்படியும் கிலோவுக்கு ஒன்றரை ரூபாய் நிற்குமாம். ஒரு நாளைக்கு ஐந்நூறு கிலோவுக்கும் குறைவில்லாமல் சம்பாதிப்பதாகச் சொல்கிறார். இது வீடுகளில் வாங்கும் பேப்பர் மட்டும். இவை போக மாலை ஆறு மணிக்கு மேலாக மீன்பாடி வண்டியொன்றை எடுத்துச் சென்று இரவு பன்னிரெண்டு மணி வரைக்கும் குப்பை பொறுக்குகிறார். பிராந்தி பாட்டில்கள், பழைய இரும்பு, ப்ளாஸ்டிக் பாட்டில்கள் என எப்படியும் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய்க்கு குறைவில்லாமல் கிடைக்கிறது. கணக்குப் போட்டு பார்த்தால்- மழை இல்லாமல் இருந்தால்- ஐம்பதாயிரத்திற்கு குறைவில்லாமல் சம்பாதிக்கிறார்.

‘என்ன சார் செலவு? வீட்டு வாடகை இரண்டாயிரம். அது மட்டும்தான் செலவு. எப்படியும் மாசம் நாற்பதாச்சும் மிச்சம் ஆகிடும்...நாலு வருஷத்துல ஊர்ல தோட்டம் வாங்கிடுவேன்’ நம்பிக்கையாகப் பேசுகிறார். இந்த நகரம் எத்தனை ஆயிரம் பேர்களுக்கு வாழ்வளித்துக் கொண்டிருக்கிறது? இரவில் ஒவ்வொரு ஏரியாவிலும் நான்கைந்து பேர்களாவது குப்பை பொறுக்கிக் கொண்டிருக்கிறார்கள். மாலை நேரங்களில் ஒவ்வொரு வீதியிலும் நான்கைந்து தள்ளுவண்டிக்கடைகளாவது இருக்கின்றன. உழைப்பவர்களுக்கு எப்படியும் வாய்ப்பிருக்கிறது.

தள்ளுவண்டிக்கடை அல்லது குப்பை பொறுக்குவது பற்றிச் சொல்லவில்லை. இந்த உலகம் கைவிட்டுவிடாது என்பதற்காகச் சொல்கிறேன்.

இந்த அலுவலக நண்பர் செய்வது போல எதையாவது கண்டுபிடிக்க வேண்டும். இன்னொரு நண்பர்- ஈரோட்டுக்காரர் சொந்தமாக ட்ராவல் ஏஜென்ஸி ஆரம்பித்திருக்கிறார். இன்னொருவர் திருப்பூரிலிருந்து பனியன் ஆர்டர்கள் வாங்கி இங்கேயிருக்கும் சிறு கடைகளுக்கு கொடுக்கிறார். அவர் ஐடி வேலையை விட்டுவிட்டார். இப்படி நுணுக்கமான ஆட்கள் எதையாவது செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். 

ஐடியும் மென்பொருளும் எந்தக் காலத்திலும் அழியப்போவதில்லை. இருந்து கொண்டுதான் இருக்கும். ஆட்கள் தேவைப்பட்டுக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் நமக்கு வேலை இருக்குமா என்பதுதான் சந்தேகம். பதினைந்து வருட அனுபவமுள்ளவனை வேலைக்கு வைத்து ஒன்றரை லட்சம் சம்பளம் தருவதற்கு பதிலாக ஐந்து வருட அனுபவமுள்ளவனே போதும் என்று நிறுவனங்கள் யோசிக்கத் துவங்கும் போது ‘போடா எனக்கு இன்னொரு தொழில் இருக்கு’ என்று கெளரவமாக வந்து அமர்ந்து கொள்ளலாம். இது ஐடிக்கு மட்டுமில்லை பிற வேலைகளில் இருந்தாலும் நம் தலைமுறையினருக்கும் இதுதான் நல்லது என்று நினைக்கிறேன்.

இதையெல்லாம் யோசித்திருக்கவே மாட்டேன். நேற்று அந்த நண்பர் அழைத்து ‘நிசப்தம்.காம் தளத்துக்கு ஒரு மாதம் விளம்பரம் செய்யறீங்களா? டிஸ்கவுண்ட் தருகிறேன்’ என்றார். ஒரு மாதத்திற்கு நாற்பதாயிரம் ரூபாய் கொடுத்தால் போதுமாம். ‘என்னைப் பார்த்து ஏய்யா அந்தக் கேள்வியைக் கேட்ட?’ என்று நினைத்துக் கொண்டே இதை தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன். 

17 எதிர் சப்தங்கள்:

Mohideen said...

பதினைந்து வருட அனுபவமுள்ளவனை வேலைக்கு வைத்து ஒன்றரை லட்சம் சம்பளம் தருவதற்கு பதிலாக ஐந்து வருட அனுபவமுள்ளவனே போதும் என்று நிறுவனங்கள் யோசிக்கத் துவங்கும் போது ‘போடா எனக்கு இன்னொரு தொழில் இருக்கு’ என்று கெளரவமாக வந்து அமர்ந்து கொள்ளலாம். இது ஐடிக்கு மட்டுமில்லை பிற வேலைகளில் இருந்தாலும் நம் தலைமுறையினருக்கும் இதுதான் நல்லது...

Hats off to you Mani... :-)

aavee said...

//என்னைப் பார்த்து ஏய்யா அந்தக் கேள்வியைக் கேட்ட?’// ஹஹஹா.. கொஞ்சம் சீரியசாகவே படித்து வந்தேன். இந்த இடத்தில் விழுந்து விழுந்து சிரித்தேன்..! வழக்கம் போல் அருமையான நடையில் ஒரு முக்கியமான பதிவு! தொடர்ந்து எழுதுங்க மணி.. எழுத்து பணம் சம்பாதித்து கொடுக்க மட்டும் அல்ல..! பின்வரும் சமுதாயத்திற்கு நாம் விட்டுச் செல்லும் ஒரு சிறு பங்களிப்பும் கூட!

Anonymous said...

இவர்களையெல்லாம் பார்த்தால் நமக்கும் ஆசை வந்துவிடுகிறது. இந்த வேலையையே நம்பிக் கொண்டு என்ன செய்வது? நகரத்தில் எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம்.

Jaikumar said...

Avar kitta 100% discount tharuvara-nu kelunga....

I ask telemarketers for 0% interest loan. Some ask to me wait for 1000 years, some says their bank is not that much then inturn I ask to grow rich and comeback. Everytime I have some fun.

Anonymous said...

The last para is superb :-)
-Sam

bullsstreet said...

think...think..think...your own corporate business is kept idle and unnoticed in your head.so think...
http://bullsstreetdotcom.blogspot.in

”தளிர் சுரேஷ்” said...

சம்பாதிப்பதற்கு பலவழிகள் இருக்கின்றன! அதே சமயம் மனநிறைவை தருவது என்று பார்த்தால் ஏதோ ஒன்றுதானே! அருமையான பகிர்வு! நன்றி!

Anonymous said...

நிசப்தம்.காம் ல உங்களை பத்தி காசே வாங்கம விளம்பரம் பண்ணி இருக்கேன் 40000 வேண்டாம் ஒரு நானூறு ரூபா கொடுங்க ..
அப்புடின்னு கேளுங்க

Unknown said...

பிழைப்பு வேற,வாழ்க்கை வேற!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//‘என்னைப் பார்த்து ஏய்யா அந்தக் கேள்வியைக் கேட்ட?//
சுவாரசியமாகப் படித்து சிரித்து முடித்தேன்.
"வாழ நினைத்தால் வாழலாம்" அதற்குத் தடையாக இருப்பது "கௌரவம்"- படித்து விட்டு இதைச் செய்வதா?எனும் மனநிலை அத்துடன் உள்ளதும் கெடுமோ எனும் பயம்.

Raj said...

Nice article...I am also thinking in this line for a long time

பிரம்மா said...

நண்பரே , விளம்பரம் ரம்ப அவசியம்,
உடனே 6 மாதத்திற்கு பதியு செய்யுங்க

Unknown said...

சம்பாதிக்க இத்தனை வழி இருக்கிறதா???

ezhil said...

உண்மைதான் பலரைப் பார்க்கும் போது நமக்கும் சம்பாதிக்கும் ஆசைவருகிறது.... ஆனால் அதற்கு எல்லை வகுத்துக்கொண்டோமென்றால் வாழ்க்கை அது பாட்டுக்கு நம்மை நகர்த்திச் செல்லத்தான் போகிறது...

RG said...

Some times I think You are reading my Mind voice (or People at 30s in Corporate think alike).

நெல்லைத் தமிழன் said...

எழுத்தையே தொழிலாக வைத்துள்ளவர்கள், மாதம் 30 ஆயிரத்துக்குமேல் சம்பாதிக்கிறார்களா என்ன? (95 சதவிகிதம் பேர். உடனே Exceptionalஐ சொல்லவேண்டாம்). பெரும்பான்மையான பதிவுலக எழுத்தாளர்கள் ஆத்ம திருப்திக்கு எழுதுவது போல்தான் தெரிகிறது.

Anonymous said...

This would be a very serious problem. This not only because of the salary issues that an experienced person has to be paid more. The IT technology landscape is changing. Like in any industry, when automation takes over and more and more frameworks are created, the value adding work that most developers do may not fetch the same value and customers would prefer to go for ready made services. Call it commoditization or change in technology, it is bound to come. We will see many 40+ struggling on road without a job that pays them well. We followed western nations. In the west, age is not an advantage. Our senior people have to accept that they may not have 25% hike year after year and forever. We also have increased the cost structure beyond sustainable levels.