பத்துக்கு பன்னிரெண்டு அளவுள்ள கடை. நூற்றியிருபது சதுர அடியில் கேக்கரி ஐட்டங்கள் வைத்திருக்கிறார். ஓரத்தில் ஒரு ஐஸ்க்ரீம் பெட்டி. அது போக சில ஃபேன்ஸி ஐட்டங்கள். இதையெலலம் வைத்துக் கொண்டு எப்படியோ காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார் இந்தப் பெரியவர் என்று நினைத்தேன். சற்று பரிதாபமாகக் கூட இருந்தது. நேற்றுத் தெரியாத்தனமாக வாயைக் கொடுத்துவிட்டேன். அவருடைய வருமானம் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? ஒரு நாளுக்கான விற்பனை மட்டும் முப்பதாயிரம் ரூபாய். தூக்கிவாரி போட்டது.
ஆரம்பத்தில் டகால்ட்டி அடிக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் கன்னடக்காரர்கள் அவ்வளவு அமுக்கம் இல்லை. அன்பாக பேசினால் வாயில் ஓட்டை போட்டுவிடலாம். வார்த்தைகள் கொட்டிவிடும். கோரமங்களாவில் ஒரு பேக்கரி வைத்திருக்கிறார். இருபது வருடங்களுக்கு முன்பாக இவர் ஆரம்பித்தது. இப்பொழுது அந்தக் கடையை மகன் பார்த்துக் கொள்கிறார். மகன் அந்தக் கடையைப் பார்த்துக் கொள்வதால் இவருக்கு போரடிக்கிறது. அதனால் இங்கு- ஹெச்.எஸ்.ஆர் லே-அவுட்டில் இந்தக் கடையை நடத்திக் கொண்டிருக்கிறார். அங்கு எப்படியும் ஒரு நாளைக்கு அறுபதாயிரம் வரைக்கும் வியாபாரம் ஆகிறதாம்.
ஆளைப்பார்த்தால் அரைக்காசுக்கு ஆக மாட்டார். பரிதாபப்பட்டேன் என்று சொன்னேன் அல்லவா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். நான்கைந்து நாட்களாக சிரைக்காத தாடியும் டை அடித்து கைவிட்ட செம்மி நிறமும் கசங்கிய சட்டையும்- ம்ஹூம். நேற்று வீட்டுக்கு கேக் வாங்குவதற்காகச் சென்றிருந்தேன். மழை பிடித்துக் கொண்டது. அப்பொழுது வாயைக் கொடுத்த போதுதான் புழுதியை நிரப்பிவிட்டுவிட்டார்.
‘இங்கெல்லாம் கடை என்ன வாடகைக்குங்க போகுது?’- இப்படித்தான் ஆரம்பித்தேன்.
‘இந்தக் கடை- நூற்றியிருபது சதுர அடி- இருபதாயிரம் கொடுக்கிறோம். ஓனர் இன்னும் ஐந்தாயிரம் சேர்த்துக் கேட்கிறார். நான் தான் முடியாது என்கிறேன்’ என்றார்.
அதோடு நிறுத்தினேனா? கடை வாடகையே இருபதாயிரம் என்றால் இடம் என்ன விலைக்கு போகும்? அவரிடமே கேட்டால் இன்னொரு வெடிகுண்டை பதிலில் வைத்திருக்கிறார்.
எதிரில் ஒரு இடம் விற்பனைக்கு வந்திருக்கிறது. இரண்டாயிரத்து நூறு சதுர அடி. சதுர அடி பதினான்காயிரம் ரூபாய். கணக்குப் போட்டுக் கொள்ளலாம். கிரயச் செலவோடு சேர்த்து மூன்றரைக் கோடி. யார் வாங்கியிருப்பார்கள் என்று யூகித்திருப்பீர்களே. யெஸ். பேக்கரிக்கடைக்காரர்தான். கிரயம் முடிந்து பதினைந்து நாட்கள் ஆகிறது.
ஐடியில் இருக்கிறேன், டாக்டராக இருக்கிறேன் என்று என்ன வேண்டுமானாலும் பீற்றிக் கொள்ளலாம். மாதம் எத்தனை லட்சம் வேண்டுமானாலும் சம்பளம் வாங்கட்டும். வெறும் நான்கே முக்கால் செண்ட் இடத்தை நான்கு கோடி ரூபாய் கொடுத்து வாங்க எத்தனை பேருக்கு முடிகிறது? ஆனால் பேக்கரிக்காரருக்கு முடிகிறது.
நகரம் இப்படி எத்தனையோ வெளியில் தெரியாத பணக்காரர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இதே ஹெச்.எஸ்.ஆர் லே-அவுட்டில் சாலையோர தோசைக்கடை ஒன்றிருக்கிறது. மாலை நேரத்தில் ஆட்டோவில் வந்து தோசை சுட்டு விற்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் வியாபாரம் நடக்கிறது என்கிறார்கள். இப்படி எந்தக் கடையில் வேண்டுமானாலும் விசாரிக்கலாம்- பஜ்ஜி கடையில் ஆரம்பித்து மீன் கடை வரைக்கும். கொழிக்கிறார்கள். ஊரில் பத்து ஏக்கர் வைத்திருக்கும் விவசாயி கூட பெங்களூரின் வடாபாவ் கடைக்காரன் அளவுக்கு சம்பாதிக்க முடியாது என்பதுதான் நிதர்சனம்.
இங்கு தொழில் செய்பவர்களுக்கு சிரமம் இல்லை என்றில்லை. எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. சாலையோரக் கடை நடத்துபவர்களுக்கு இருபது ரூபாய் மாமூல் கேட்கும் போலீஸ்காரனில் ஆரம்பித்து பெரிய மரக்கடை நடத்துபவருக்கு விற்பனவரித்துறையினர் வரைக்கும் ஓட்டைக்கேற்ற பணியாரங்கள்தான். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டம்தான். அம்மாவிடம் இந்த பேக்கரிக்கடைக்காரைப் பற்றிச் சொன்ன போது ‘அந்தத் தொழிலைக் கண்டுபிடிக்கிறதுக்குள்ள அவன் எவ்வளவு கஷ்டப்பட்டானோ..பாவம்’ என்றார். இதுதான் ரிஸ்க். இதற்குத்தான் பயந்துவிடுகிறோம். இருபத்தி மூன்று வயதில் படித்து முடித்தோம். இருபத்தியேழு வயதில் பெண் தேட ஆரம்பிக்க வேண்டும் என்ற மனோபாவம்தான் இந்த துணிச்சலை நசுக்கிவிடுகிறது.
பி.ஈ படித்திருந்தால் என்ன? பேக்கரி வைக்கக் கூடாதா? ஆனால் செய்ய மாட்டோம். ஒன்றாம் தேதியானால் சம்பளம். இருபதாம் தேதியானால் இண்டத்தனம் என்று இந்த வாழ்க்கை அமைதியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. இதைத்தான் விரும்புகிறார்கள். பெற்றோர்களும் சரி. பையன்களும் சரி. படிப்பு ஒருவிதத்தில் நம் சிறகுகளை முறித்துவிடுகிறதோ என்று தோன்றுகிறது. குறைவான படிப்புடையவர்கள் பிழைப்புக்காக ஏதாவது தொழில் தொடங்கி பிறகு கொடிகட்டுகிறார்கள். ஆனால் படித்தவர்கள் ஏதாவது வேலை கிடைத்தால் போதும் என்று ஒட்டிக் கொள்கிறார்கள். இந்தப் பேக்கரிக்காரரும் அப்படித்தான். தோசைக்கடைக்காரர்களும் அப்படித்தான்.
இதெல்லாம் பேசுவதற்கும் கேட்பதற்கும் வேண்டுமானால் விக்ரமனின் லாலாலாலா பாடல் போல இருக்கிறது. இதே கடைகளை ஊரில் நடத்தினால் சிரமம். பெரிய துணிக்கடைகள் கூட வியாபாரமே இல்லாமல் திணறிக் கொண்டிருக்கின்றன. ஆடித்தள்ளுபடியிலிருந்து பங்குனி தள்ளுபடி வரை என்ன கொடுத்தாலும் அவர்களால் சமாளிக்க முடிவதில்லை. முப்பது உணவு விடுதிகள் இருந்தால் ஐந்து கடைகள்தான் தப்பித்துக் கொண்டிருக்கின்றன. என்ன செய்வார்கள்? பிறகு ஏன் மக்கள் பெருநகரங்களை நோக்கி படையெடுக்கமாட்டார்கள்? கர்நாடகாவின் மொத்த மக்கட்தொகை ஆறு கோடி என்றால் அதில் பெங்களூரில் மட்டும் ஒரு கோடி பேர் இருக்கிறார்கள். இந்த ஊரில் எந்த பெயிண்டரை வேண்டுமானாலும் விசாரித்துப் பார்க்கலாம். தமிழ் நாட்டைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள். எந்த மேஸ்திரியை வேண்டுமானாலும் கேட்டுப்பார்க்கலாம். நம் ஊரிலிருந்து வருபவர்கள்தான். ஒவ்வொரு வருடமும் பன்மடங்கு நெரிசலாகிக் கொண்டிருக்கிறது. சென்னையிலும் இதே நிலைமையாகத்தான் இருக்கும்.
நாடு மழுவதும் நூறு நகரங்களை உருவாக்குகிறோம் என்று மோடி அறிவித்த போது அது ஒன்றும் அற்புதமான அறிவிப்பாகத் தெரியவில்லை. புதிய நகரங்களை உருவாக்குவது இருக்கட்டும். இருக்கிற நகரங்களை என்ன செய்யப் போகிறோம். சத்தியமங்கலத்திலும், ஒட்டன்சத்திரத்திலும், சங்ககிரியிலும் என்ன வாய்ப்புகள் இருக்கின்றன? வாய்ப்புகள் இருக்கின்றனதான். ஆனால் பெருநகரங்களின் வருமானங்களோடு ஒப்பிட்டால் அது சொற்பம். எந்த ஒரு சிறு நகரத்திலும் எந்தத் தொழிலைச் செய்தாலும் பிழைத்துக் கொள்ள முடியும் என்ற நிலை வர வேண்டும். ஆனால் இந்தியா போன்ற சமூக அமைப்பில் அதெல்லாம் சாத்தியமே இல்லை என்று நினைக்கிறேன். புதிய நகரங்களை உருவாக்குகிறோம் என்று விவசாயிகளின் விளைநிலங்களில் கை வைப்பார்கள். சாலைகளை அகலப்படுத்துகிறோம் என்று குடியிருப்புகளை கையகப்படுத்துவார்கள். கிருஷ்ணகிரியில் வளைத்துப் போட்டுவைத்திருக்கிறார்கள். எத்தனை ஏக்கர் நிலமோ தெரியவில்லை. சிப்காட்டுக்கான இடமாம். வெறும் பெயர்ப்பலகை மட்டும்தான் இருக்கிறது. ஒரு நிறுவனம் இல்லை. நகர உருவாக்கம் என்றால் இதுதான் நடக்கும்.
எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ வந்துவிட்டேன்.
கடையில் யாருமே இல்லை. ‘எதுக்கு கேட்டீங்க’ என்றார்.
‘ஏதாவது பிஸினஸ் செய்யலாமான்னு யோசனை’ என்றேன்.
‘இப்போ என்ன பண்ணுறீங்க?’
‘ஐடியில் இருக்கேன் சார்’
ஷாக் ஆகிவிட்டார்.
‘ஏன் தம்பி இருக்கிறத விட்டுட்டு பறக்கறதுக்கு ஆசைப்படுறீங்க...வாழ்க்கை அமைதியா இருக்குல்ல..அதுதான் முக்கியம்..பணம் கிடக்குது..எவ்வளவோ சம்பாதிச்சுட்டேன்...இன்னமும் ஒரு நாள் ஓய்வு இல்லை...பாருங்க’ சொல்லிக் கொண்டே கேக் கொடுக்கும் அட்டைப்பெட்டிகளை செய்து கொண்டிருந்தார். அவர் சொல்வதும் வாஸ்தவம்தான். ஆனால் ஒன்று- எந்த ஊரில்தான் ஆற்றங்கரைக்கு அந்தப்பக்கம் காய்ந்து கிடக்கிறது? எப்பவுமே பச்சைதான்.
13 எதிர் சப்தங்கள்:
தொழில் செய்வது சாதாரண விஷயம் அல்ல....அதற்கு ஒரு நாளைக்கு 34 (முப்பத்திநாலு) மணி நேரம் வேலை செய்ய வேண்டும்........நன்றாக செய்தால் பணம் இருக்கிறது, ஆனால் வாழ்க்கை போய்விடும். No pain, no gain; more pain, more gain; less pain, less gain......என்னமோ போடா மாதவா!!
நிதர்சனம். நானும் என் தம்பியும் 2,3 வருடங்களாக உணவகம் ஒன்றை ஆரம்பிப்பதற்க்கான முயர்ச்சிகளில் இருக்கிறோம். ஆனால் முட்டுக்கட்டைகள்தான் ஜாஸ்தியாக வருகிறது. யாருமே செய்யுங்கள் என்று சொல்வதில்லை. எடுத்துக்குடா ரிஸ்க் எடுக்குறிங்க, மாசா மாசம் சம்பளம் வருதுல்ல பேசாம இருங்கடான்னு சொல்கிறார்கள்.
நன்றாகச் சிந்திக்க வைக்கிறியள்
எந்த ஊரில்தான் ஆற்றங்கரைக்கு அந்தப்பக்கம் காய்ந்து கிடக்கிறது? எப்பவுமே பச்சைதான்.----
----அடுத்த தலைமுறைக்கு ஆற்றங்கரை என்ற வார்த்தையை விளக்குவதற்க்கு நாம் அரும்பாடு பட வேண்டி இருக்கும்....
திண்டுக்கல்லில் இரண்டு தலைமுறை ஹோட்டல் தொழிலை 90 கடைசியில் தொலைத்து விட்டு இப்போ சம்பளத்தில் நல்லாதான் இருக்கோம் ஆனாலும் அடுத்த தலைமுறையாவது அத்தொழிலுக்கு போகாதா என்ற ஏக்கம் ஒரு ஓரத்தில் இருக்கே. தெரிந்த தொழிலை செய்ய முடியாமல் இருப்பதற்கு காரணம் இப்போ இருக்கும் வாடகை தொகைதான்.
இது போன்ற புலம்பல்கள் அன்றாட வாழ்க்கையாகி நிறைய நாட்கள் ஆகிறது.....கடையை நிர்வகிப்பது சாதாரண காரியமல்ல அதை ஒரு "தவம்" போல் இயற்றினால் மட்டுமே "வெற்றி" சாத்தியமாகும்!!! தவிர அவர்களால் ஒரு பயணத்தையோ அல்லது வேறு ஒரு ரசனை சார்ந்த ஒரு வாழ்க்கயையோ வாழ முடியாது...சுருங்க சொன்னால் " ஒன்றை இழந்தால் மட்டுமே இன்னொன்றை பெற முடியும்". சென்ற வாரம் ஒரு நண்பரின் வருகையால் உயர் நீதிமன்ற வளாகத்திற்குச் செல்ல நேரிட்டது அங்கே ஒரு மூதாட்டி கடலை விற்றுக் கொண்டிருந்தார்...நண்பர் ஒரு கவிஞரும் கூட கொஞ்சம் வாயைக் கொடுத்தார்...ஏம்மா இதை வித்து எப்படி வாடகையெல்லாம் கொடுத்து வாழ முடியுது என்று கேட்டார். அதற்கு எனக்கு சொந்த வீடு இருக்கு சார் என்றார்...நண்பராவது பரவாயில்லை உடன் இருந்த வழக்கறிஞர் மயக்கமே போட்டு விட்டார் எனென்றால் அந்த வீட்டின் மதிப்பு குறைந்த பட்சம் 2 கோடி.....!!! மாதச்சம்பளம் வாங்குபவனால் கற்பனைத்துக்கூட பார்க்க முடியாத மதிப்பு.....எங்க ஊரில் 25 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் பரம்பரை நிலக்கிலாருக்கும் இல்லாத மதிப்புத்தொகை!!! இன்னும் நிறைய ஆச்சரியங்களை கொடுக்கப் போகிறது "உலக மயமாக்கள்"!!!
எந்த ஊரில்தான் ஆற்றங்கரைக்கு அந்தப்பக்கம் காய்ந்து கிடக்கிறது? எப்பவுமே பச்சைதான்.
>>
நிஜம்தான்
உண்மைதான் மணி கண்டன். அதுவும் வேலைக்குப் போய் ஒரு 10 வருடம் ஆகி விட்டால் இன்னும் நிலைமை மோசம். எதற்கும் ரிஸ்க் எடுக்கும் எண்ணம் போய் விடும்.
not only bakkery... in market teal sales man from up to flower sales man gain profit get new property...
மிக மிக உண்மை ஐயா.
இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதும் படித்தவர்கள் வாழ்கையை சமாளிப்பதும்.
//அந்தத் தொழிலைக் கண்டுபிடிக்கிறதுக்குள்ள அவன் எவ்வளவு கஷ்டப்பட்டானோ//
அனுபவம்.
மனதினில் நெருப்பு இல்லாமல் இதைச் செய்ய முடியாது. ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே அது சாத்தியம். மற்றவர் அதைப் பற்றி சிந்திப்பதே இல்லை.
தேர்தெடுத்த தொழில் சாதகமாய் அமைந்து விட்டால் அதிர்ஷ்டகாரன் தான்.சறுக்கிருச்சுன்னா சங்குதான்.தொலைவது பணம் மட்டுமல்ல இளமையும் சேர்த்துதான்.நிமிருவதற்குள் பாதி வாழ்க்கை ஓடிவிடும்.எங்களுக்கெல்லாம் உங்கள பார்த்தால் தான் பொறாமையா இருக்கு.
Post a Comment