அன்புள்ள மணி,
2006ல் தொடக்கி 2012 வரை ஆறு வருடங்கள் நான் பெங்களூரில் தான் பணியாற்றிக்கொண்டிருந்தேன், நீங்கள் குறிப்பிடும் தமிழ் சங்கம் சாலையில் வாரம் ஒருமுறை கட்டாயம் செல்வேன், ஏரியின் ஓரத்தில் இருக்கும் ஒடுகத்தூராரின் முருகன் கோவிலுக்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் தவறாமல் செல்வது வழக்கம் ஆனால் அப்பொழுது எல்லாம் நம் தமிழ்ச்சங்கத்திற்கு வந்தால் தங்களைப்போன்றோர்களை சந்திக்கமுடியும் என்று என் சிற்றறிவிற்கு சிறிதும் எட்டியதில்லை
வேலை மாற்றம் காரணமாக 2013ல் சென்னைக்கு குடியேறியவுடன் தான் தங்களின் வலைப்பதிவுகளை வாசிக்க ஆரம்பித்தேன், ஆரம்பத்தில் பெங்களூரில் இருந்த கால கட்டங்களில் உங்களை சந்திக்காமல் விட்டு விட்டோமே என்ற வருத்தம் மட்டும் தான் இருந்தது, ஆனால் நாட்கள் செல்ல செல்ல உங்கள் நண்பர்கள் மீதும் உங்கள் மீதும் ஒரு பொறாமை தீ கொழுந்துவிட்டு எரியதொடங்கிவிட்டது. அது எப்படி உங்களால் மட்டும் 5 ரூபாயிலிருந்து 5 இலட்சம் வரை அவ்வளவு சாதாரணமாக புரட்ட முடிகிறது என்று.
உங்களின் இந்த அடையாளத்தை முற்றிலுமாக அழித்துவிட்டு யாராவது ஒருவரிடம் ஒரு 50 ஆயிரம் கடன் கேட்டு பாருங்கள் நான் ஏன் பொறாமை படுகிறேன் என்று புரியும். நம்மை நம்பும் ஒரு நம்பிக்கையான கூட்டத்தை கூட்டுவது என்பது அவ்வளவு ஒன்றும் சாதாரண காரியம் அல்ல. உங்கள் மேல் இருக்கும் இந்த நம்பிக்கைக்காகவே நீங்கள் ஒவ்வொரு முறை நிதி உதவி கேட்கும் போதும் நானும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பேன் ஆனால் என் பொருளாதார சூழ்நிலை காரணமாக முடியாமல் போய்விடும்.
இப்பொழுதும் என் பொருளாதார சூழ்நிலை உங்களுக்கு உதவும் அளவுக்கு உயர்ந்து விடவில்லை, ஆனால் ராமர் பாலம் கட்டியபோது அணில் உதவியது போல் என்னால் நிதி அல்லாது வேறு சில உதவிகளை செய்ய இயலும் உதாரணத்திற்கு நீங்கள் சென்னை வரும்பொழுது எனது இருசக்கர வாகனத்தை தங்களுக்கு தந்து உதவ முடியும், தாங்கள் இரண்டு மூன்று நாட்கள் தங்க நேர்ந்தால் எனது வீட்டில் தங்களுக்கு ஒரு அறை ஒதுக்கி தரமுடியும், அலுவலக விடுமுறை நாட்களாய் இருந்தால் உங்களின் வெளி வேலைகளில் நானும் பங்கெடுத்துக்கொள்ள முடியும் இன்னும் இப்படி எத்தனையோ முடியும்.
எனவே அடுத்த முறை நீங்கள் சென்னை வரும் பொது கட்டாயம் தெரியப்படுத்தவும், நீங்கள் என் வீட்டு கதவையெல்லாம் தட்ட தேவயில்லை, உங்களுக்காக என் வீட்டு கதவு எப்பொழுதும் திறந்தே இருக்கும்
அன்புடன்,
இளா.
அன்புள்ள இளவழகன்,
வணக்கம்.
மகிழ்ச்சியடையச் செய்யும் கடிதம் இது.
நம்பிக்கை பற்றி நீங்கள் எழுதியிருப்பது வாஸ்தவம்தான். எனக்கும் இது ஆச்சரியத்தையும் அவ்வப்போது பயத்தையும் உண்டாக்கிவிடுகிறது. ஆனால் இந்த பயம் கடைசி வரைக்கும் இருந்து கொண்டேயிருந்தால் நல்லது என்று நினைக்கிறேன்.
நம்மைச் சுற்றிலும் உதவ விரும்பும் மனநிலையில் நிறையப்பேர் இருக்கிறார்கள். அவர்களின் சந்தேகமெல்லாம் நமது உதவி சரியான இடத்தை அடையுமா என்பதுதான். அந்தச் சரியான இடத்தை காட்டும் வேலையை நாம் செய்தால் போதும். ஆனால் இந்தச் சரியான இடத்தைக் காட்டுவதும் கூட சிக்கலான வேலைதான் என்று சமீபமாக புரிந்து கொண்டிருக்கிறேன். இப்பொழுதெல்லாம் நிறைய கோரிக்கைகள் வருகின்றன. பாதிக்கும் மேலானவற்றை ஒற்றை விசாரணையில் போலியானவை என்று உறுதி செய்துவிடலாம். மீதி இருப்பனவற்றை இன்னும் ஒன்றிரண்டு விசாரணைகளில் தவறானவை என்று கண்டறிந்துவிட முடிகிறது. இருப்பினும் இந்த இடத்தில்தான் நாம் தடுமாறிவிடக் கூடும். சில சமயங்களில் உண்மையான கோரிக்கையை நிராகரித்துவிடவும் பல சமயங்களில் பொய்யான கோரிக்கைகளை நம்பிவிடவும் வாய்ப்பிருக்கிறது. இது போன்ற நேரங்களில்தான் ‘எதுக்கு இந்த வம்பு?’ என்று குழம்பிவிடுகிறேன். இந்த விசாரணைகளுக்காக மேற்கொள்ளும் அலைபேசி அழைப்புகளும் அந்தந்த ஊர்களில் யாரையாவது பிடிப்பதும்தான் நேரம் தின்னும் வேலைகளாக இருக்கின்றன. ஆனாலும் இவையெல்லாமே சுவாரசியமான செயல்கள்தான் என்பதால் இதுவரையிலும் சலிப்படையவில்லை.
இந்த வாரத்தில் ஒரு நல்ல காரியத்தைச் செய்திருக்கிறேன். Nisaptham Trust பதிவு செய்தாகிவிட்டது. பெங்களூர் சார்பதிவாளர் அலுவலகத்திலேயே பதிவு செய்திருக்கிறேன். பதிவு செய்த கையோடு வங்கிக்கணக்கு தொடங்குவதற்கு தேவையான விண்ணப்பங்களையும் கொடுத்தாகிவிட்டது. அநேகமாக இந்த வாரத்தில் கணக்கு எண் வந்துவிடும் என நினைக்கிறேன். கணக்கு விவரங்களை எப்படி வெளிப்படையாக பராமரிப்பது உள்ளிட்ட வழிமுறைகளை யோசனை செய்ய வேண்டியிருக்கிறது. அனைத்தும் உறுதியான பிறகு தெரிவிக்கிறேன். பிறகு உங்களால் உதவ முடியுமானால் இணைந்து கொள்ளுங்கள்.
அம்மாதான் பயப்படுகிறார். ‘யாருக்குச் செய்கிறோம் என்று பார்த்துச் செய்’ ‘கெட்ட பேர் வாங்கிக்காதே’ என்று ஏகப்பட்ட ஏவுகணைகள் வரிசையாக வந்து விழுந்து கொண்டிருக்கின்றன. மனைவிக்கும் தயக்கம்தான் ‘இதெல்லாம் எதுக்காக செய்யணும்’ என்கிறார். ‘எதுக்காக செய்யணும்’ என்ற கேள்விக்கெல்லாம் எதை பதிலாகச் சொல்ல முடியும்? ‘செய்கிறோம்’ அவ்வளவுதான். போகப்போக புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன். எனக்கும்தான் தயக்கம் இருந்தது. ஆனால் எல்லாவற்றிலும் யோசித்துக் கொண்டே இருந்தால் அப்படியே இருக்க வேண்டியதுதான்.
இத்தகைய காரியங்களில் வெளிப்படையாக இருந்துவிட்டால் தொண்ணூற்றொன்பது சதவீத பிரச்சினைகளைச் சமாளித்துவிடலாம். மீதி ஒரு சதவீதம்? அந்தளவு கூட பிரச்சினை இல்லையென்றால் இந்த வாழ்க்கையில் என்ன சுவாரசியம் இருக்கிறது?
இன்னொரு விஷயம்- உங்கள் கடிதத்தின் முதல் பத்தி குறித்து- எழுத்து வழியாக அறிமுகமாகும் பெரும்பாலானவர்களை சந்திக்காமல் இருந்துவிடுவது உத்தமம். எழுத்துக்கும் வாழ்வுக்கும் சம்பந்தமேயில்லாத மனிதர்கள்தான் நம்மைச் சுற்றிலும் நிறைய இருக்கிறார்கள். என்னென்னவோ யோசித்து வைத்திருப்போம். நேரில் பார்க்கும் போதும் அவர்களின் உண்மையான ரூபத்தைத் தெரிந்து கொள்ளும் போதும் அந்த பிம்பம் சுக்குநூறாக நொறுங்கிக் கொண்டிருக்கும் - பிம்பம் உடைதல். எதற்கு வம்பு? விட்டுவிடலாம்.
அதே போல நீங்கள் பொறாமைப்படவும் வேண்டியதில்லை. உதவி என்பதெல்லாம் materialistic ஆகவே இருக்க வேண்டியதில்லை. ஒரு மனப்பூர்வமான வாழ்த்து கூட பேருதவிதான். அதை வெளிப்படையாகச் சொல்லக் கூட அவசியமில்லை. மனதளவில் நினைத்தாலே போதும்.
போலித்தனமும் பகட்டும் இல்லாமல் முடிந்தவரை தகுதியானவர்களுக்கு உதவலாம். அவர்கள் வேறு சில தகுதியானவர்களுக்கு உதவுவார்கள். இது ஒரு chain reaction.
உங்கள் இருசக்கர வாகனம் அல்லது உங்கள் இல்லத்தில் ஒரு அறை தேவைப்படும்போதும் நிச்சயம் கேட்டு வாங்கிக் கொள்கிறேன்.
மிக்க அன்புடன்,
மணிகண்டன்.
6 எதிர் சப்தங்கள்:
""போலித்தனமும் பகட்டும் இல்லாமல் முடிந்தவரை தகுதியானவர்களுக்கு உதவலாம். அவர்கள் வேறு சில தகுதியானவர்களுக்கு உதவுவார்கள். இது ஒரு chain reaction."" - சத்தியமான வார்த்தைகள்
உதவி என்பதெல்லாம் materialistic ஆகவே இருக்க வேண்டியதில்லை. ஒரு மனப்பூர்வமான வாழ்த்து கூட பேருதவிதான். அதை வெளிப்படையாகச் சொல்லக் கூட அவசியமில்லை. மனதளவில் நினைத்தாலே போதும். உண்மை தான்
நம்மைச் சுற்றிலும் உதவ விரும்பும் மனநிலையில் நிறையப்பேர் இருக்கிறார்கள். அவர்களின் சந்தேகமெல்லாம் நமது உதவி சரியான இடத்தை அடையுமா என்பதுதான்.
Its True.
யாவற்றுக்கும் நல்ல மனசு வேண்டும். அவன் அருள் தன்னால் வரும்
(y)
//நம்மைச் சுற்றிலும் உதவ விரும்பும் மனநிலையில் நிறையப்பேர் இருக்கிறார்கள். அவர்களின் சந்தேகமெல்லாம் நமது உதவி சரியான இடத்தை அடையுமா என்பதுதான்//
நிச்சயமாக அவர்கள் சந்தேகப்பட மாட்டார்கள் மணி.ஆனால் உங்களின் பிரபல்யத்தை விரும்பாதவர்களும் நிறைய பேர் இருப்பார்கள். அவர்களிடம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அது நம் கையில் இல்லை. அப்ப யார் கையில்?. அது அந்த "THIRD PERSON SINGULAR" கையில் இருக்கிறது. அவனை நம்பினால் அவன் மீது பாரத்தை போட்டு விட்டு நடந்து கொண்டே இருங்கள். அப்புறமென்ன "ஆள்" த பெஸ்ட்.
Post a Comment