Jul 16, 2014

கதை சொல்லணுமா?

குழந்தைகளுக்கு நிறைய கதை சொல்லச் சொல்கிறார்கள். கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். ஒன்றரை வயது குழந்தைக்கு இருக்கும் ஆர்வம் இரண்டு வயதில் இருப்பதில்லை. வயது கூடக் கூட ஆர்வமும் மாறிக் கொண்டேயிருக்கிறது. கண்ணா முழியை உருட்டியோ, சப்தத்தை அதிகரித்தோ ஐந்து வயது குழந்தையை கவனிக்க வைக்க முடிவதில்லை. கதையின் உள்ளே இருக்கும் சரக்கை குழந்தை வளர வளர மாற்ற வேண்டியிருக்கிறது. 

மகிக்கு ஒன்றரை வயதாக இருக்கும் போது கதை சொல்வதை ஆரம்பித்தேன். அந்தச் சமயத்தில் யாரோ ஒருவருடைய நேர்காணல் கண்ணில்பட்டது. பெயர் ஞாபகம் இல்லை- இயற்கை ஆர்வலர். சிறுவயதில் அவருடைய தந்தை ஒரு கல்லைக் காட்டும் போது கூட ‘இந்தக் கல் ஒரு குருவி மாதிரி இருக்குல்ல’ ‘இந்தக் கல்லின் கலர் அழகா இருக்கு பாரு’ என்கிற ரீதியில் பேசுவாராம். கல், மண், மலை, பறவைகள் என்று எதுவாக இருந்தாலும் இப்படித்தான். அவை வெறுமனே கல், மண், மலர் என்று சொல்லாமல் ஒரு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங். துளி கூடுதலான விவரம். அநேகமாக இதனால்தான் தனக்கு இயற்கை மீதான் ஆர்வம் வந்தது என்று சொல்லியிருந்தார். நேர்காணலில் இது ஒரு சாதாரண வரிதான். ஆனால் அது மிக முக்கியமான வரி. வெறும் இன்பர்மேஷன் மட்டுமே குழந்தைகளுக்கு போதாது. அதை பள்ளிகள் பார்த்துக் கொள்வார்கள். தகவலைத் தாண்டிய ரசனை குழந்தைகளிடம் உருவாக வேண்டும். அதைப் பெற்றோர்களால்தான் எளிதில் செய்ய முடியும். 

மகனுக்கு கதை சொல்லும் போது ஆரம்பத்தில் டைனோசர், குதிரை, நாய் என்பதெல்லாம் போதுமானதாக இருந்தது. பிறகு நாளாக நாளாக வேறு எதையாவது சேர்த்துச் சொல்ல வேண்டியிருந்தது. இதைத்தான் சேர்க்க வேண்டும் என்றில்லை- எதையாவது. ‘ஒரு செடிக்கு செம பசி வந்துடுச்சாம்....கொஞ்சம் கார்பன் -டை- ஆக்சைடை உறிஞ்சி சாப்பிட்டுட்டு ஆக்ஸிஜனை வெளியே அனுப்பின போதுதான் பசி அடங்குச்சாமா’ என்றோ ‘ஜொடாளின்னு ஒரு பையன் ரோபோ செஞ்சு அதன் மண்டைக்குள் நியூரல் நெட்வொர்க் டிசைன் செஞ்சானாம்’ என்கிற ரீதியிலோ ஏதாவது அடித்துவிடுவேன். அப்போதைக்கு அவனுக்கு அந்தச் சொற்கள் எல்லாம் பரிச்சயமானால் போதும் என்பதுதான் நோக்கமாக இருந்தது. ஆனால் அது நன்றாகவே வேலைக்கு ஆகிறது.

உதாரணத்திற்கு ஒரு கதை. அந்தக் கதையில் நான்கு பேர் இருப்பார்கள். நண்பர்கள். ஒரு தங்கமீன், லாரல், ஹார்டி மற்றும் ஒரு குரங்கு. நான்கு பேரும் நண்பர்கள். ஒவ்வொரு மாநிலமாக சுற்றுவார்கள். திடீரென்று ஒரு நாள் நான்கு பேரும் தொலைந்து போய் ஆளாளுக்கு ஒரு மாநிலமாக அலைவார்கள். இப்படி அலைவதை அவனுக்குப் பிடித்தபடி மாற்றிக் கொள்ள வேண்டியதுதான். கெட்டவன் ஒருவனை குரங்கு கடித்துவிட்டு ஓடும். அந்தக் குரங்கை துரத்துவார்கள். பயங்கரமான சேஸிங்குக்குப் பிறகு அது வேறொரு மாநிலத்துக்கு தப்பித்து ஓடிவிடும்.  தங்கமீனுக்கு ஸ்டியரிங் வைத்த ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் கிடைத்தது. அந்த பாட்டிலுக்கு இரண்டு சக்கரங்களும் உண்டு. அதனால் மீனே ஒவ்வொரு ஊராக பாட்டிலை ஓட்டிச் செல்லும். வழியில் ஒரு லாரிக்காரன் பாட்டில் மீது வண்டியை ஏற்றுவதற்கு முயற்சிப்பான். ஆனால் மீன் படு திறமைசாலி. ஸ்டியரிங்கைத் திருப்பி தப்பித்துவிடும். லாரிக்காரன்தான் குழிக்குள் விழுவான். இப்படி ஃபேண்டஸிகளால் கதையை நிறைத்துவிட வேண்டியதுதான்.

நம் குழந்தைகளுக்கு எது பிடிக்குமென்று நமக்குத் தெரியுமல்லவா? சில குழந்தைகள் நகைச்சுவையை எதிர்பார்ப்பார்கள். சில குழந்தைகள் த்ரில் எதிர்பார்ப்பார்கள். சில குழந்தைகள் சண்டையை எதிர்பார்ப்பார்கள். இவை எல்லாமே கதையில் இருந்தாலும் குழந்தைக்கு எது பிடிக்குமோ அந்த மிக்ஸ் அதிகமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இந்தக் கதையில் நண்பர்கள் ஒவ்வொரு மாநிலமாகச் செல்கிறார்கள் இல்லையா? கதையின் போக்கிலேயே ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரையும் சொல்லிவிடுவேன். தங்கமீன் ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் வழி தவறிவிட்டது என்று முந்தின நாள் கதையை முடித்துவிட்டு அடுத்தநாள் மீண்டும் கதையைத் தொடங்கும் போது ‘ராஜஸ்தானின் தலைநகரம் எது?’ என்று ஆரம்பிப்பேன். பெரும்பாலும் அவனுக்கு ஞாபகம் இருக்கும். சொல்லிவிடுவான்.

இந்த சப்ஜெக்ட்தான் கதையின் உள்ளே இருக்க வேண்டும் என்பதில்லை. நமக்கு எதெல்லாம் தெரியுமோ அதையெல்லாம் வைத்துச் சொல்லிவிடலாம்.  ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரையும் மனனம் செய்யச் சொல்வதோ, ஜெர்மனி உலகக்கோப்பையை வென்றது என்பதை செய்தியாகச் சொல்வதோதான் குழந்தைகளுக்குச் சுமை. தேவையில்லாத அழுத்தம். 

விளையாட்டாகச் சொல்ல முடியுமானால் நிறைய சொல்லித் தர முடியும்- நடுகல் பற்றி, நாழிகைக்கணக்கர் பற்றி அவ்வப்போது நான் தெரிந்து கொள்ளும் விஷயங்களை அன்றைய தினத்தின் கதைகளில் செருகிவிடுவேன். எதிர்காலத்தில் இதையெல்லாம் எப்படி பயன்படுத்திக் கொள்கிறான் என்பது அவனது கையில்தான் இருக்கிறது. அவன் பயன்படுத்திக் கொள்கிறானோ இல்லையோ சொல்லித் தருவோம்.

நம்முடையை தலைமுறைதான் குழந்தைகளுக்காக ஓவராக excite ஆகும் தலைமுறை என்று முந்தாநாள் எழுதிவிட்டு இதை இன்று பெருமைக்காக எழுதியிருக்கிறான் என்று யாரும் நினைத்துக் கொள்ள வேண்டாம்.

ஓரிரண்டு நாட்களுக்கு முன்பாக தினமும் எழுதுவதற்கு எப்படி விஷயம் கிடைக்கிறது என்று நண்பர் கேட்டிருந்தார். இப்போதைக்கு இப்படியும் கிடைக்கிறது. எவ்வளவு மொக்கையான கதையைச் சொன்னாலும் அதிலிருந்து ஒரு கேள்வியைக் கேட்க குழந்தைகளால்தான் முடியும். ‘கார்பன் - டை- ஆக்ஸைடை செடி எப்படிச் சாப்பிடும்’ என்று அவன் கேட்டபோது சுவரில் கொண்டு போய் முட்டிக் கொண்டேன். பதில் தெரிந்தால்தானே? பிறகு இணையத்தில் தேடி அவனுக்குப் புரியும் படி பதில் சொல்ல வேண்டியிருந்தது. நான்கு நாட்கள் கழித்து அதிலேயே இன்னொரு கேள்வி கேட்பான். தேட வைத்துவிடுவார்கள். 

‘நமக்கு எல்லாம் தெரியும்’ என்றவொரு மட்டமான ஈகோ இருந்தால் அதை உடைத்தெறிய குழந்தைகள்தான் சரியானவர்கள். பெரும்பாலான விஷயங்களில் நமக்கு மேம்போக்காகத்தான் அறிவு உண்டு. அதை வைத்துக் கொண்டு குழந்தைகளிடம் ‘இஸ்ரேல்- பாலஸ்தீனத்தில் சண்டை நடக்கிறதாம்’ என்றால் எந்த யோசனையும் இல்லாமல் ‘ஏன்?’ என்று கேட்பார்கள். சண்டை நடப்பது வரைக்கும்தான் நமக்குத் தெரிந்திருக்கும். ஏன் என்ற கேள்விக்கு பற்களை வெருவிக் கொண்டு பதில் தேடத் தொடங்குவோம். இப்படியான தேடலில் ஒரு சுவாரசியம் இருக்கிறது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் என்றவுடன் தான் ஞாபகம் வருகிறது. இந்த விவகாரம் பற்றி நற்றமிழன் பழனிசாமி எழுதியிருக்கும் கட்டுரை விளக்குகிறது.

குழந்தைகளுக்கான கதை சொல்வது, அவர்களுக்கான படைப்பாற்றலை(க்ரியேட்டிவிட்டி) தூண்டிவிடுவது போன்ற வேலைகளை இயல்பாகச் செய்து கொண்டிருந்தால் போதும். திறமையுள்ள குழந்தைகள் பிடித்துக் கொள்வார்கள். அதை நம்மால் முடிந்த அளவில் சில பள்ளிக் குழந்தைகளுக்குச் செய்யலாம் என்ற யோசனை இருந்தது. முதலில் கோபிச்செட்டிபாளையம் தாய்த்தமிழ் பள்ளியிலிருந்து தொடங்குகிறோம். வரும் சனிக்கிழமையன்று குழந்தைகளுக்கான ஒரு பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மொத்தம் நூறு குழந்தைகள். சென்னையிலிருந்து நாடகக் கலைஞர் தம்பிச்சோழன் வருகிறார். வாய்ப்பிருந்தால் நீங்களும் கலந்து கொள்ளுங்கள். அடுத்ததாக ஓவியக்கலைஞர் சந்தோஷ் நாராயணனை வைத்துச் சென்னையில் ஒரு அரசுப் பள்ளியில் பட்டறை நடத்தலாம் என்று ஐடியா இருக்கிறது . சந்தோஷ் தற்போது Minimalism என்ற கான்செப்டில் கலக்கிக் கொண்டிருக்கிறார். 


8 எதிர் சப்தங்கள்:

Sankar K.Subramaniam said...

அருமையான பதிவு. தங்கள் அனுமதியுடன் இந்த பதிவை என் நண்பர்களுக்கு பகிரலாமென இருக்கிறேன் ? இன்னுமொரு விருப்பம் - அந்த பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சியை பதிவு செய்து இங்கே / எங்கோ (?) பகிர்ந்தால் (if there are no copy write issues, of course) இன்னும் பலர் பயனடைய வாய்ப்பிருக்கும். முக்கியமாக புலம்பெயர்ந்த பெற்றோர்களுக்கு. நன்றி, சங்கர்.

Shankari said...

All the best for your Gobi programme... Definitely school children will enjoy and get benefits..

Jaikumar said...

Geniekids in Indranagar, Bangalore offering programs for kids.

http://geniekids.com/programs

ராஜி said...

நல்ல போஸ்ட். இதை 40வருசத்துக்கு முந்தி போட்டிருந்தா என் அப்பா, அம்மாக்கு நல்ல குழந்தை கிடைச்சிருக்கும்:-(

Yarlpavanan said...

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
சிறந்த பதிவு

dani sdx said...

எனக்கு ஒரு யோசனை ,, சமூக வலைதளங்களில் நாம் நம்முடைய புகைப்படத்தை போட்டு like வாங்குவதர்க்கு பதிலாக என் வீட்டின் முன் வளர்க்கப்படும் செடி என்று பொட்டு நிறைய like வாங்கி விட்டால், பலர் அதனை பார்த்து பொறாமை பட்டு மற்றவர்களும் செய்ய ஆரம்பித்தால்ிது ஒரு trendஆக மாறிவிடும், புது புது trendகள் தான் இன்று இளைஞர்களின் தேடல்கள்....

Aba said...

சூப்பர்.. அப்பாவானதும் கவனிச்சுக்கறேன்... :)

சேக்காளி said...

//இதை 40வருசத்துக்கு முந்தி போட்டிருந்தா என் அப்பா, அம்மாக்கு நல்ல குழந்தை கிடைச்சிருக்கும்//
பின்னூட்டம் எழுதறதுக்கெல்லாம் பரோல் கெடைக்குமா?