Jul 9, 2014

யோவ் சண்டைக்குத் தயாரா?

ஜில்ஜில் ராஜா படு பிஸியாகிவிட்டார். ஜில்ஜில்லைத் தெரியாதா? மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார். இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் கூட. ‘வெளியிட்டிருக்கிறார்’ என்பதோடு சரி. யாராவது வாசித்திருக்கிறார்களா என்று கேட்கக் கூடாது. அது வாசிக்காதவன் பிரச்சினை. இவர் எழுதுவார். வருடம் முழுக்க இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்வார். கூட்டங்கள் நடப்பதற்கு முந்தின நாள் இரவில் சரக்கடிப்பார். ஏதாவது செய்திச் சேனலில் வாய்ப்பு கிடைக்காதா என்று வாயைப் பிளந்து கொண்டிருப்பார். ஜில்ஜில்லும் இலக்கியவாதிதான் என்பதற்கு இவ்வளவு தகுதிகள் போதாதா? 

ஆமாம் இலக்கியவாதிதான். 

உங்களுக்கென்ன? சர்வசாதாரணமாக இலக்கியவாதி என்று கலாய்த்துவிடுவீர்கள். இலக்கியவாதிக்கு இருக்கும் பிரச்சினை சக இலக்கியவாதிக்குத்தான் தெரியும் பாஸ். எழுதத் தெரிகிறதோ இல்லையோ முதலில் ஒரு நல்ல குழுவாக பார்த்து ஒட்டிக் கொள்ள வேண்டும். சமயம் வாய்க்கும் போதெல்லாம் பொதுவெளியில் நம் குழுவினரை சொறிந்து கொண்டேயிருக்க வேண்டும். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அடுத்தவனைப் பற்றிய அக்கப்போரைப் கிசுகிசுவாக பேச வேண்டும். அதுவும் நம் குழுவினரைப் பற்றிய கிசுகிசுவாக இருந்தால் இன்னமும் சுவாரசியமாக இருக்கும். வெளியில் மட்டும் ‘நான் அந்த க்ரூப்’ என்று காட்டிக் கொண்டு உள்ளடியாக காலை வாரிக் கொண்டிருக்க வேண்டும். பார்க்கிறவன் ‘இவன் எந்த க்ரூப்’ என்று குழம்பிச் செத்து சுண்ணாம்பாகட்டும்.

குரூப்பில் சேர்வது பெரிய விஷயம் இல்லை. சரக்கு வாங்கிக் கொடுத்தால் சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் தரிசனம், விழுமியம், அகவொளி என நூற்றுப்பத்து சொற்கள் இருக்கின்றன சார். அவற்றை மனனம் செய்து வைத்துக் கொண்டு அவ்வப்போது வாந்தியெடுப்பது இருக்கிறதே அதுதான் பெரும் பிரச்சினை. பார்க்கிறவனுக்கு நாம் கிறுக்கனாகவும் தெரிய வேண்டும் அறிவாளியாகவும் தெரிய வேண்டும். இந்த இடைநிலை ஸ்டேட்டஸை மெய்டெய்ண் செய்தால்தான் நம்மை இலக்கியவாதியாகவே ஜீப்பில் வைத்திருப்பார்கள். இல்லையென்றால் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு வண்டியை விட்டு இறங்கிக் கொள்ள வேண்டியதுதான்.

ஜில்ஜில் இதிலெல்லாம் பெரிய ஆள்தான். கலக்கிக் கொண்டிருக்கிறார். சுற்றிலும் நான்கு இளிச்சவாயர்கள் சிக்கிக் கொண்டால் பார்க்க வேண்டுமே- பின்னி படல் அடுக்குவார். இப்படியே ஒவ்வொரு வருடமும் பிப்ரவரியிலிருந்து ஜூன் வரைக்கும் சமாளித்துவிடுகிறார். இடையிடையே கண்டன அறிக்கைகளில் கையெழுத்துப் போடுகிறார். ஃபேஸ்புக்கில் ப்ரொபைல் படங்களை சேகுவாரா, கறுப்புக் கொடி என்று மாற்றி போராளியாகிறார். அவ்வப்போது சென்னை வந்து வருகைப் பதிவில் ஆஜர் சொல்கிறார். 

ஜூன் இறுதிவரை பிரச்சினை இல்லாமல் சுமூகமாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. ஜூலை, ஆகஸ்ட் வந்ததால்தான் ஜில்ஜில்லை சக இலக்கியவாதிகள் டென்ஷனாக்கிவிடுகிறார்கள். எழுதிக் கொண்டிருக்கும் நாவலிருந்து, யோசித்துக் கொண்டிருக்கும் சிறுகதையிலிருந்து, பிரசவித்துக் கொண்டிருக்கும் கவிதையிலிருந்து என்றெல்லாம் மற்றவர்கள் ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் போடும் போதே ஜில்லாருக்கு முடிகள் நட்டுக்கொள்ளும். தானும் ஒரு புத்தகம் கொண்டுவருவதற்கான முஸ்தீபுகளை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. எழுத்துப் பிழையோ, சொற்பிழையோ - நாற்பது பக்கங்களை ஒப்பேற்றிவிட வேண்டும். கவிஞன் என்று சொல்லிக் கொள்வதில் இதுதான் அட்வாண்டேஜ். நாற்பது பக்கங்கள் எழுதினால் போதும். ஒரு பக்கத்துக்கு எட்டு வரிகள். ஒரு வரிக்கு ஒற்றைச் சொல். கவிதைத் தொகுப்பு தயார். 

அதன் பிறகு மார்க்கெட்டிங் செய்ய வேண்டும். அதற்குத்தான் பெரிய போட்டி இருக்கிறது. சில பெரிய எழுத்தாளர்களுக்கு லம்ப் அமெளண்ட் கொடுத்தால் காரியம் சுளுவாகிவிடும். ஆனால் ஜில்ஜில்லுக்கு வசதி போதாது. பணம் கேட்டு அக்கவுண்ட் நம்பரைக் கொடுத்தாலும் ஒரு பயல் கண்டு கொள்வதில்லை. அதற்காக விட்டுவிட முடியுமா? களத்தில் இறங்குகிறார்.

சக இலக்கியவாதிகளெல்லாம் ஜூலையிலிருந்தே யாரையாவது சொறியத் தொடங்கிவிடுகிறார்கள். ‘அவனெல்லாம் ஒரு எழுத்தாளனா’ என்றோ அல்லது ‘அவள் எப்படி எழுத்தாளினி ஆனாள் என்று எனக்குத் தெரியாதா’ என்றோ சண்டையை ஆரம்பிக்கிறார்கள். இடையில் இருக்கும் நான்கைந்து அப்பிராணிகள் வாயைத் திறந்து சண்டைக்காரனைப் பார்க்கத் தொடங்குகிறார்கள். இப்படி யாரையாவது பார்க்க வைப்பதுதான் சிரமம். பார்த்துவிட்டால் போதும். லைனைப் பிடித்துக் கொண்டு கவளம் கவளமாக சாணி அடிக்க வேண்டியதுதான். 

இந்த சண்டைக்கு ஆள் தேர்ந்தெடுப்பதில் கூட ஒரு நேக்கு இருக்கிறது. நாம் யாரை அடிக்கிறோமோ அவனும் திருப்பியடிக்க வேண்டும். சில மங்குனிகள் ‘நீ அடிச்சா அடிச்சுக்க...நான் வரலை’ என்று தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டே போய்விடுவார்கள். அவர்களோடு சண்டைக்குப் போவதெல்லாம் வெட்டி வேலை. அடிக்கிற சாணம் திரும்பி நம் முகத்திலும் வந்து விழுந்தால்தானே கவன ஈர்ப்பு இருக்கும்? 

ஜில்ஜில்லுக்கு இந்த விவகாரத்திலெல்லாம்தான் நெளிவு சுளிவு போதாது. சென்ற வருடம் யாரோ ஆத்மாநாமாம்.  ‘நீ எல்லாம் கவிஞராய்யா?’ என்று கேட்டுத் தொலைத்துவிட்டார். யாருமே பேசவில்லை. அவ்வளவு ஏன்? ஆத்மாநாம் கூட சண்டைக்கு வரவில்லை. ஆத்மாநாம் இறந்து போனார் என்ற விவரம் ஜில்ஜில்லாருக்குத் தெரிவதற்குள் புத்தகக் கண்காட்சியே முடிந்துவிட்டது. புத்தம் புது பார்க்கர் பேனாவை வாங்கி வைத்துக் கொண்டு புத்தகக்கண்காட்சிக்குள் சுற்றியதுதான் மிச்சம்- யாராவது ஆட்டோகிராப் வாங்குவார்கள் என்று. நல்லவேளை முகத்தில் துப்பாமல் விட்டார்கள். வெளியிட்ட புத்தகம் ஒரு பிரதி கூட விற்கவில்லை. பிறகு யாருடைய முகவரி கிடைக்கிறதோ அவர்களுக்கெல்லாம் ஒவ்வொரு பிரதி அனுப்பி வைத்து விமர்சனம் எழுதச் சொல்லிக் கொண்டிருந்தார். எவன் எழுதுவான்? இவர் ஃபோன் செய்தாலே யாரும் எடுப்பதில்லை.

இதெல்லாம் சென்ற வருடம் வரைக்கும்தான். இந்த வருடம் அந்த அசிங்கங்கள் எல்லாம் இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்.  ஏற்கனவே விவகாரங்களை ஆரம்பித்துவிட்டார்களாம். ஜில்ஜில் காதுக்கு தகவல் வந்துவிட்டது. ஏதாவது ஜீப் கிடைத்தால் ஏறிக் கொள்வார். இல்லையென்றால் இந்தப் பக்கம் நின்று ஒரு வீசு ஓடிப் போய் அந்தப் பக்கம் நின்று ஒரு வீசு- சாணம்தான். எப்படியும் ஜில்ஜில்லின் டி.ஆர்.பி ரேட்டிங் எகிறப் போகிறது பாருங்கள். நமக்கெல்லாம் வழியே இல்லை- டிசம்பர், ஜனவரி வரைக்கும் பொறுத்துத்தான் ஆக வேண்டும்.

8 எதிர் சப்தங்கள்:

Unknown said...

சரியானவர்கள் வெல்வார்கள் ,ஜில் ஜில்கள் மினுக்கினாலும் ஜொலிக்க முடியாதே !
த ம 1

ராமுடு said...

சரியான கும்மாங்குத்து.. உள்குத்தா இருக்கே..

Yarlpavanan said...

நல்ல பொருளுக்கு விளம்பரம் தேவையில்லை.

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா

Anonymous said...

Enna aachi ungalukku?... Nalla thane ezhuthittu iruntheenga?... Intha pathivu kandippaa thevaiya?...

சேலம் தேவா said...

//லைனைப் பிடித்துக் கொண்டு கவளம் கவளமாக சாணி அடிக்க வேண்டியதுதான்.// #விவிசி

தருமி said...

கவிதை வாசிச்சது மாதிரி இருக்கு. ஒண்ணும் புரியலை!

Unknown said...

உங்களிடமிருந்து இப்படி ஒன்றை எதிர்பார்க்கவில்லை .தேவையில்லை என்பது என் தாழ்மையான கருத்து .இம்மாதிரியான எழுத்திற்கு அனேகர் உளர் .