ஆனி மாதம் மழை பெய்திருக்கிறது. ஒரு உழவு மழை இருக்கும். எட்டு மாதங்களாக மழையே இல்லை. இந்த மழையும் இல்லாமல் போயிருந்தால் குடிக்கக் கூட தண்ணீரில்லாமல் கவ்வாத்து அடித்திருக்க வேண்டும். ஊர் தப்பித்துவிட்டது. காரைக் குட்டை பாதி நிரம்பியிருக்கிறது. புழுதியடங்கி ஊரே ஈரமாக இருந்தது. குருவிகள் கொஞ்சிக் கொண்டிருந்த மின்கம்பத்தின் கீழே முருகன் அமர்ந்திருக்கிறான். அவன் ஓடிக் கொண்டேயிருப்பவன்தான். இன்று அமர்ந்திருக்கிறான் என்றால் அத்தனை யோசனைகள் மனதுக்குள். முருகன் ராசுக்கவுண்டரின் இரண்டாவது மகன். தலை முடியெல்லாம் கிட்டத்தட்ட கொட்டிவிட்டது. முக்கால் சொட்டை. அதைக் கூட பெரிதாக எடுத்துக் கொள்ளாதவர்கள் அவனது மீசை முடி நரைப்பதைத்தான் கவலையாகப் பார்க்கிறார்கள். ஐப்பசி வந்தால் நாற்பது முடிகிறது. வெள்ளை எட்டிப்பார்க்காமல் இருக்குமா? வெளுத்துக் கொண்டிருக்கிறது. மற்றவர்கள்தான் கவலைப்படுகிறார்களே தவிர முருகன் இதையெல்லாம் முருகன் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை அல்லது வெளியில் காட்டிக் கொள்வதில்லை. விடிந்தும் விடியாமலும் சோற்றைக் குடித்துவிட்டு காட்டுக்குச் சென்றுவிடுகிறான். வாயில் துண்டைக் கவ்விக்கொண்டு காட்டில் இறங்கினால் வெறித்தனமாக வேலை செய்பவன். இரண்டு மூன்று ஆட்கள் வருவார்கள். அவர்கள் ஆளுக்கு நாற்பது கிலோ கத்தரிக்காய் பறித்தால் முருகன் மட்டும் அறுபது கிலோ பறிப்பான். ஒன்றரை மடங்கு பாட்டாளி.
அவன்தான் இன்று காரைக் குட்டைக்கு அருகில் தலையைக் குத்திக் கொண்டு அமர்ந்திருக்கிறான்.
பாடுபட்டுக் கொண்டே இருக்கும் இவனுக்கு ஒரு துணை அமையவில்லை என்பதுதான் ராசுக்கவுண்டருக்கும் கவலை. மூத்தவன் குமரனுக்கு கட்டி வைத்த மாதிரி இளையவனுக்கும் முடித்து வைத்துவிட்டால் தனது கடமை முடிந்துவிடும் என நினைக்கிறார். ஆனால் பெண் அமைவது அத்தனை சுலபமாக இல்லை. கவுண்டர் சாதியில் பெண்களுக்கு டிமாண்ட் ஜாஸ்தி. பெரும்பாலும் படித்துவிடுகிறார்கள். அப்படியே படிக்காவிட்டாலும் கூட கட்டிக் கொண்டு போவதற்கு படித்த மாப்பிள்ளைகள் வரிசையில் நிற்கிறார்கள். விவசாயம் பார்ப்பவனுக்கும் சொந்தத் தொழில் செய்பவனுக்கும் யாரும் பெண் கொடுப்பதாக இல்லை. முருகன் மாதிரி மொட்டை சைபருக்குத்தான் திருமணமே வாய்ப்பதில்லை. ஒற்றை மரமாக காய்ந்து நிற்கிறார்கள். முருகனை அப்படித்தான் அழைப்பார்கள்- மொட்டை சைபர் என்று.
சுப்பைய வாத்தியார் செய்த வேலை அது. மூன்றாம் வகுப்பில் எழுந்து நிற்கச் சொல்லி ‘நாலும் மூணும் எவ்வளவுடா?’என்று கேட்டார். முருகன் ஒன்பது என்றான். முருகனுக்கு அவ்வளவுதான் தெரியும். இது கூடத் தெரியாமல் உன்னை யாருடா மூன்றாம் வகுப்புக்கு அனுப்பியது என்று குனிய வைத்து நெட்டி முறித்துவிட்டார். அப்போது அவர் சொன்னதுதான் ‘நாலும் மூணும் தெரியாத மொட்டை சைபர்’. பையன்கள் பிடித்துக் கொண்டார்கள். பிறகு முருகனுக்கு அதுவே பெயராகிவிட்டது. அந்த வாத்திக்கும்தான் அன்று கெட்ட நேரம். பள்ளி முடிந்து வெளியில் போகும் போது கருங்கல்லை எடுத்து விட்டான். அது அவரின் கண்ணை பதம் பார்க்க கடைசிவரைக்கும் சுப்பைய வாத்தியார் ஒத்தக்கண்ணு வாத்தி ஆகிவிட்டார். அதோடு சரி. முருகன் பள்ளிக்கூடத்தை எட்டிக் கூட பார்த்ததில்லை. இன்னமும் கூட சத்தியமங்கலம் டவுனுக்குள் தனியாக விட்டால் முருகன் தொட்டம்பாளையம் வந்து சேரமாட்டான் என்று ஊருக்குள் பேசுகிறார்கள். பிறகு எப்படி பெண் தருவார்கள்?
விவரம்தான் தெரியாதே தவிர முருகன் வெள்ளந்தி. படுகிற பாட்டுக்கு பத்து பைசா எடுத்துக் கொள்வதில்லை. மார்க்கெட்டுக்கு கத்தரிக்காய் எடுத்துப் போவது, வியாபாரிகளிடம் கணக்கு முடிப்பது, செடிகளுக்கு மருந்து வாங்குவது என்று அத்தனை வெளி சோலிகளையும் அப்பனும் அண்ணனும் பார்த்துக் கொள்கிறார்கள். எந்நேரமும் காடும் கரையும்தான் முருகனுக்கு. வேலைக்கு வருகிற பொம்பளைகளும் ஆம்பளைகளும் பேசாமல் இருப்பதில்லை. ‘எப்போ கவுண்டரே விருந்து போடப் போறீங்க?’ என்று ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது கேட்டுவிடுகிறார்கள். முருகனுக்கு சுள்ளென்று ஏறும். ஆனால் அடங்கிக் கொள்வான். கோபத்தைக் கூட காட்டத் தெரியாத பயந்த சுபாவம் அவனுக்கு. அடங்கிப் போகிறவர்களை சொறிந்துவிடும் ஊர் அல்லவா? இன்னமும் அதிகமாக அதையே பேசுவார்கள். தனக்கும் ஒருத்தி வந்துவிடுவாள் என்றுதான் முருகன் நினைத்துக் கொண்டிருக்கிறான். இருபது வருடங்களாக இப்படியேதான் நினைத்துக் கொண்டிருக்கிறான். ம்ஹூம். பெண் கிடைக்காத பக்கத்து ஊர்ப்பையன்கள் கேரளா சென்று ஆள் பிடித்து வருகிறார்கள். செக்கச் செவையாக இருக்கிறார்களாம். தனக்கும் அப்படியொருத்தி கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்துக் கொள்வான். ஆனால் ராசுக்கவுண்டர் சாதி விட்டு சாதி மாறுவதாக இல்லை. ஆனால் அதற்காக ராசுக்கவுண்டரும் சும்மா இருக்கிறார் என்று அர்த்தம் இல்லை. கடந்த பதினைந்து வருடங்களாகவே ராசுக்கவுண்டருக்கு இதுதான் வேலை. குதிரைகளைக் கூட கைவிட்டுவிட்டு பெண்ணைத் தேடிக் கொண்டிருக்கிறார்.
ராசுக்கவுண்டரை குதிரைக்கார கவுண்டர் என்பார்கள். ட்ரவுசர் போட்டிருந்த காலத்திலிருந்தே குதிரைப் பைத்தியம். அந்தியூரில் குருநாதசாமி கோவிலில் நோம்பி சாட்டினால் போதும் கத்தை நோட்டை இடுப்பு பெல்ட்டில் மறைத்துக் கொண்டு கிளம்பிவிடுவார். ஒவ்வொரு குதிரையாகப் பிடித்து நிறம் பார்த்து சுழி பார்த்து இருப்பதிலேயே நல்ல குதிரையாக பிடித்துவிடுவார். எவ்வளவுதான் முரட்டுக்குதிரையாக இருந்தாலும் அதன் மீது அமர்ந்துதான் வீடு திரும்புவார். அத்தாணி வரும் வரைக்கும் முரண்டு பிடித்தபடியே வரும் குதிரை அதன் பிறகு ஒரு முடக்கும் செய்யாது. எப்படி அடக்குகிறார் என்று யாருக்குமே தெரியாது. அத்தனை நேக்குத் தெரிந்த மனுஷன். வருடாவருடம் திருவிழா சமயத்தில் பத்திரிக்கைகளின் உள்ளூர் பதிப்புகளில் ராசுக்கவுண்டருக்கும் அவரது குதிரைக்கும் கால் பக்கமாவது ஒதுக்கிவிடுவார்கள். அவர் வைத்திருந்த ஜப்ஷா குதிரை நடனமாடுவதாக சன் டிவி செய்தியில் கூட பதினைந்து வருடங்களுக்கு முன்பாகச் சொன்னார்கள். அந்தக் குதிரைதான் கடைசிக் குதிரை. ஐம்பது வருடங்களாக பிடித்திருந்த குதிரைப் பித்தை ஒதுக்கி வைத்துவிட்டு முருகனுக்காக ஒரு குதிரை பிடிப்பதில்தான் வெறியாக இருக்கிறார்.
வருகிற சம்பந்தமெல்லாம் ஏதாவது விதத்தில் தட்டிப் போய்க் கொண்டே இருக்கிறது. ஆரம்பத்தில் பவுனோடு மருமகள் வருவாள் என்று எதிர்பார்த்தார்கள். அப்பொழுது முருகனுக்கு இருபத்தைந்து வயது. முரட்டு ஆளாக இருந்தான். தலை நிறைய முடி இருந்தது. பிறகு பவுனே வேண்டாம் என்றார்கள். பவுன் வேண்டாம் என்று சொல்லத் தொடங்கிய போது முப்பதைத் தொட்டிருந்தான். முடி கொட்டத் துவங்கியிருந்தது. இருந்தாலும் வெவ்வேறு நிலைகளில் நிறைய சம்பந்தங்கள் நின்று போயின. முப்பத்தைந்தைத் தாண்டிய பிறகு நாங்களே பவுன் போட்டுக் கட்டிச் செல்கிறோம் என்கிறார்கள். அப்படியும் மகராசி வந்து சேர்ந்த கதையைக் காணவில்லை. காலம் போன காலத்தில் குமரன் மனைவி சோறு போடுவாள் என்று சொல்ல முடியாது. முருகனுக்கு மட்டும் இல்லை. ராசுக்கவுண்டருக்கும் இதுதான் நிலைமை. எப்பவோ சண்டை வந்த போது கவுண்டர் வசவு ஒன்றை உதிர்த்துவிட்டார். வார்த்தையென்றால் வார்த்தை மகா மட்டமான வார்த்தை. அதிலிருந்து காபி, டீ, சோறு என்று எதுவும் அவள் தன் கையால் கொடுப்பதில்லை. சோறாக்கினால் நந்தனுக்கு மட்டும் வட்டிலில் போடுவாள். மற்றவர்கள் அவரவராக போட்டு தின்று கொள்ள வேண்டியதுதான். கட்டிலில் விழும் வரைக்கும் கவுண்டருக்கும், முருகனுக்கும் பிரச்சினையில்லை. விழுந்துவிட்டால் அவ்வளவுதான். முடிந்தார்கள். பார்த்துக் கொள்ள ஒரு நாதியில்லை.
ஊர் முழுக்கத் தேடியாகிவிட்டது. உள்ளூரில் திருமணமாகாத பெண்களே இல்லை என்றான பிறகு வெளியூர்களிலும் துழாவினார்கள். இதுவரை நூறு பெண்களையாவது பார்த்திருப்பார்கள். இவர்கள்தான் பார்த்திருப்பார்கள். அந்தப் பெண்கள் யாரும் இவர்களைப் பார்த்ததில்லை. ஜாதகம் சரியில்லை. சகுனம் சரியில்லை என்று பெண் வீட்டார் தட்டிக் கழித்துவிடுகிறார்கள். யாருமே இல்லாத அநாதைப் பெண், கணவனால் கைவிடப்பட்ட பெண், விவகாரத்தானவள் என்று எல்லா வகையறாவிலும் பார்த்துவிட்டார்கள். கடைசி நேரத்தில் யாராவது உள்ளே புகுந்து குட்டையைக் குழப்பிவிடுகிறார்கள். ஏதாவதொரு பெண்ணைத் தூக்கிக் கொண்டு வந்து தாலியைக் கட்டிவிடலாமா என்று கூட யோசித்திருக்கிறார்கள். ராசுக்கவுண்டர் தனது மனைவியை அப்படித்தான் கொங்கர்பாளையத்திலிருந்து தூக்கி வந்து கட்டினாராம். முதல் இரண்டு நாட்கள் பிணக்குக் காட்டினாளாம். புறங்கையை ஓங்கிக் கன்னத்தில் இறக்கியதிலிருந்து பெட்டிப் பாம்பாகிவிட்டாள். அந்தக் கவுண்டச்சி அடங்கினாள் என்றால் இந்தக் காலத்துப் பெண்களும் அடங்குவார்களா? யாருக்கு விவரம் தெரியாமல் இருக்கிறது? உயிர்நாடியில் உதைக்காவிட்டாலும் கூட 100 க்கு ஃபோன் செய்தால் போதும் என்கிற அளவில் தெரிந்து வைத்திருக்கிறார்கள். தூக்கி வரும் திட்டத்தையும் கைவிட்டுவிட்டார்கள்.
ரங்கசாமி செட்டியார் எப்படியும் வாரம் இரண்டு ஜாதகங்களைக் கொண்டு வந்து கொடுத்துவிடுவார். அவர் கல்யாண புரோக்கர். ஒரு ஜாதகத்துக்கு ஐம்பது ரூபாய் கொடுக்க வேண்டும். இதுவரைக்கும் எழுபது அல்லது எண்பது ஜாதகங்களைக் கொண்டு வந்து கொடுத்திருப்பார். இவர்களுக்கே சலித்துப் போய்விட்டது. அவர்தான் போன வாரத்தில் சாந்தியின் ஜாதகத்தை கொண்டு வந்திருந்தார். சாந்தியின் வீடு பண்ணாரி போகும் வழியில் இருக்கிறது. சாந்தி ஏற்கனவே திருமணமானவள். பதினைந்து வயதிலேயே திருமணம் செய்துவிட்டார்களாம். என்ன காரணமோ தெரியவில்லை- முதல் வருடத்திலேயே புருஷன்காரன் வளைத்து முடுக்கிவிட்டான். பதினாறு வருடங்கள் ஓடிவிட்டன. அண்ணன் வீட்டில்தான் இருக்கிறாள். தோட்டங்க்காட்டை பார்த்துக் கொள்வதும் அண்ணன் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வதுமாக தனது வாழ்க்கை இப்படியே முடிந்துவிடும் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். செட்டியார்தான் தீக்குச்சியை உரசிக்காட்டிவிட்டு போயிருந்தார்.
ராசுக்கவுண்டருக்கும் சம்மதம்தான். அவர்களுக்கு சம்மதம் இல்லாமல் என்ன? கிடைத்ததே பெரிய விஷயம். இரண்டொரு நாட்களில் பெண் வீட்டுக்குச் சென்றுவிட்டார்கள். அப்படியொன்றும் தடபுடலான வரவேற்பு இல்லை. சாந்தியும் கூட முகத்தில் எந்த பாவனையையும் காட்டவில்லை. முருகன் அதைப் பற்றியெல்லாம் யோசிக்கவே இல்லை. அமைதியாக அமர்ந்திருந்தான். சாந்தியின் அமத்தாக் கிழவி படுக்கையில் கிடக்கிறாள். அவள் போய்ச் சேருவதற்குள் சட்டுப்புட்டென்று ஆனியிலேயே காரியத்தை முடித்துவிடலாம் என்று முடிவு செய்தார்கள்.
இதைக் கேட்டதிலிருந்து முருகனுக்குள் என்னவோ சிறகடிக்கத் தொடங்கியிருந்தது. வெகு மும்முரமாக துணியெடுப்பதும், நகையெடுப்பதுமாக இருந்தார்கள். சாந்தியும் கடைகளுக்கு வந்திருந்தாள். ஒல்லியாகவும் சிவப்பாகவும் இருந்தாள். முருகன் அவ்வப்போது ஓரக்கண்ணில் பார்த்தான். அவள் ஒரேயொரு முறை சிரித்ததாகத் தோன்றியது. அவள் சிரித்தாள் என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் சிரித்ததாக நினைத்துக் கொண்டான். அந்த நினைப்பு அவனை ஆசுவாசப்படுத்தியிருந்தது. வாங்க வேண்டியவற்றையெல்லாம் ஒரே நாளில் வாங்கிவிட்டு சத்தியமங்கலம் ராமவிலாஸில் மதிய உணவையும் முடித்துவிட்டு வந்திருந்தார்கள். கிட்டத்தட்ட எல்லாம் முடிவான மாதிரிதான். இனி சாந்தி முருகனுக்குத்தான். முருகன் என்னென்னவோ கற்பனைகளைச் செய்தான். விவரிக்க முடியாத கற்பனைகள். இன்னும் ஒரே வாரத்தில் திருமணம். ராசுக்கவுண்டரையும் கையிலேயே பிடிக்க முடியவில்லை. குதித்துக் கொண்டிருந்தார். மனைவி இல்லாவிட்டாலும் கூட தனது கடமைகளை முடித்துவிடப் போகிற மகிழ்ச்சி. விட்டால் ஜப்ஷா குதிரையைவிடவும் ஆடுவார் போலிருந்தது. அடுத்த வருடம் குருந்தாதசாமி கோவிலில் நல்ல குட்டியாக பிடித்துவிட வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தார்.
எல்லாம் ஒரே இரவுதான். அடுத்த நாள் காலையிலேயே தகவல் வந்துவிட்டது. பெண் வீட்டிலிருந்து திருமணத்தை நிறுத்தச் சொல்லிவிட்டார்கள். சாந்தியின் அண்ணன் தான் தடை போட்டிருக்கிறான். ‘ஒண்ணா அவ கல்யாணத்தை பாருங்க இல்லைன்னா என் கருமாதியை பாருங்க’ என்றானாம். இப்படிச் சொன்னால் பயம் வரத்தானே செய்யும்? பெண் வீட்டில் பதறிவிட்டார்கள். ராசுக்கவுண்டருக்குத் தகவல் சொல்லியிருக்கிறார்கள். சொந்தக்காரன் பந்தக்காரன் என அத்தனை பேரையும் அழைத்துக் கொண்டு போயிருக்கிறார். என்ன பிரச்சினை என்றெல்லாம் தெரியவில்லை. அண்ணன்காரனை சமாதானம் செய்வதற்காகத்தான் சென்றார்கள். ஆனால் செல்போனை அணைத்துவிட்டு சாந்தியின் அண்ணன் எங்கேயோ சென்றுவிட்டான். சாந்தியின் வீட்டில் பெரிய மனிதர்கள் இரண்டு மூன்று பேர்கள் இருந்தார்கள். என்ன பேசினாலும் அவர்கள் ஒத்து வருவதாக இல்லை. ‘வேற இடம் பார்த்துக்குங்க’ என்றுதான் திரும்பத் திரும்பச் சொன்னார்கள். சாந்தி உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தாள். தனது நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்றதான அழுகை அது. செட்டியார் உரசியிருந்த தீக்குச்சியின் வெளிச்சம் உள்வாங்கத் தொடங்கியிருந்தது.
இனி எதுவும் ஆகப்போவதில்லை என்ற போது கிளம்பினார்கள். வெளியே வரும் போது ராசுக்கவுண்டரை தனியாக அழைத்துச் சொன்னார்கள். அழைத்தவர் சாந்தியின் பெரியப்பாதான். ‘உங்க சொந்தக்காரங்க யாரோதான் சாந்தியோட அண்னன்கிட்ட பேசியிருக்காங்க...மாப்பிள்ளை பையனுக்கு விவரம் பத்தாதுன்னும்..அவன் ஆம்பளையே இல்லைன்னும் சொல்லியிருக்காங்க’ திருமணத்தை நிறுத்த இந்த ஒரு ஆயுதம் போதுமானதாக இருந்திருக்கிறது. அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ராசுக்கவுண்டர் உடைந்து போய்விட்டார். அவ்வளவு பெரிய மனிதன் குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்கினார். யார் சொல்லியிருப்பார்கள் என்று யூகம் செய்ய முடியவில்லை. அவரால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. அவர் எதையும் அமுக்கி வைக்கும் மனிதர் இல்லை. சத்தம் போட்டு அழுதுவிட்டார். ‘எம்பையன் என்ன பாவம்ய்யா செஞ்சான்’ என்று அவர் அழுததிலேயே எல்லோருக்கும் விவகாரம் தெரிந்துவிட்டது. ராசுக்கவுண்டரை சமாதானம் செய்வது பெரிய பாடாகிவிட்டது. அவர் அவ்வளவு அழுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.
சாந்தியின் வீட்டுக்கு எல்லோரும் சென்றிருந்த போதுதான் முருகன் தலையைக் குத்தி காரைக்குட்டையில் அமர்ந்திருந்தான்.
யாரோ ஃபோனில் அழைத்து அவனுக்கு தகவல் சொன்னார்கள். ‘உன்னை ஆம்பளை இல்லைன்னு உங்க அண்ணனே சாந்தி வீட்டில் சொல்லிட்டானாம்..அதான் கல்யாணத்தை நிறுத்திட்டாங்க’. முருகனுக்கு திருமணமாகிவிட்டால் சொத்தைப் பிரிக்க வேண்டும். காட்டில் வேலை செய்ய ஆள் இல்லாமல் போய்விடும். எத்தனையோ காரணங்கள். போட்டுக் கொடுத்துவிட்டான். இதை அவ்வளவு சீக்கிரமாக முருகனிடம் சொல்லியிருக்க வேண்டியதில்லை. ஆனால் சொல்லிவிட்டார்கள். அவனைப் போன்ற வெள்ளந்தியால் அவ்வளவு சீக்கிரம் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. தனிமையில் கதறிக் கொண்டிருந்தான். அதை அலட்சியம் செய்யாத கானாங்குருவிகள் காரைக்குட்டைக்கு வந்து கொண்டிருந்தன. அவை குளியல் போடக் கூடும். சாந்தியின் சிரித்த முகம் திரும்பத் திரும்ப ஞாபகத்துக்கு வந்து போனது. அழுது கொண்டிருந்தவன் எழுந்து வீட்டுக்குச் சென்றான். இனி தனக்கென்று எந்தப் பெண்ணுமே வரப்போவதில்லை என்பதற்கான அழுகை அது. விட்டத்தில் கயிறைப் பூட்டினான். நாற்காலி மீது நின்று கேவிக் கேவி அழுதபடியே கழுத்தை நுழைத்தான். கதவைத் தட்டுவதற்குக் கூட யாரும் இல்லை. அம்மாவின் படத்தை கடைசியாகப் பார்த்தான். என்றுமேயில்லாத சாந்தம் இன்று அந்தப் படத்தில் தெரிந்தது. என்னனென்னவோ நினைவுகள் வந்து போயின. வானத்தில் இடி ஓசை எழுந்து அடங்கியது. ஆனியின் இரண்டாவது மழை துளிர்க்கத் துவங்கியிருந்தது. கானாங்குருவிகள் குட்டையில் எக்காளமிடும் சப்தம் அதிகமாகிக் கொண்டிருந்தது.
14 எதிர் சப்தங்கள்:
super anna !
மணிகண்டன்,ரங்கசாமிக் கவுண்டர் என்பது செட்டியார் என இருக்க வேண்டும்.
.
"ரங்கசாமிக் கவுண்டர் உரசியிருந்த தீக்குச்சியின் வெளிச்சம் உள்வாங்கத் தொடங்கியிருந்தது."
நன்றி சக்திவேல். திருத்திவிட்டேன்
இது போன்று வயது கடந்து மணமாகாத சிலர் எங்கள் ஊரிலும் உண்டு! அவர்களின் உணர்வுகளை அப்படியே வடித்தது கதை! கடைசி வரிகள் படிக்கையில் கலங்கிப்போனேன்! சிறப்பான பகிர்வு! நன்றி!
மின்னல் கதை மிக அருமை மணிகண்டன்.
Mudivu eno manathai kanakka vaikirathu
வெள்ளந்தியாய் இருப்பதை தவிர வேறு ஒரு குற்றமும் இல்லாத முருகன் போன்ற மனிதர்கள், பிறரின் பேராசைக்கும், சில்லறை தனத்துக்கும் பலியாவது, வாழ்கையை பற்றிய பயத்தை அதிகபடுதவே செய்கிறது..... கனத்த மனதோடு தான் அடுத்த பக்கத்திற்கு செல்கிறேன்... நல்ல கதை....
//ஆனியிலேயே காரியத்தை முடித்துவிடலாம் என்று முடிவு செய்தார்கள்.//
//குருந்தாதசாமி கோவிலில் நல்ல குட்டியாக பிடித்துவிட வேண்டும்.//
Enna Boss Kuriyeeda??
Really Sensible ji... :) :)
After a long time it was nice reading minnal kathai...
மனம் கனக்கிறது நண்பரே
Nalla kadhai anna
அழ வைத்து விட்டீர்கள்.கிராமங்களில் இவை போன்று நடப்பதுண்டு.
நன்றி
//மற்றவர்கள்தான் கவலைப்படுகிறார்களே தவிர முருகன் இதையெல்லாம் முருகன் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை அல்லது வெளியில் காட்டிக் கொள்வதில்லை.//
"மற்றவர்கள்தான் கவலைப்படுகிறார்களே தவிர முருகன் இதையெல்லாம் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை" என்பதற்கு பதிலாக முருகன் பெயர் தவறாக இன்னொருமுறை வருகிறது
சிறப்பான நடை ... முடிவில் சில வர்ணனைகள் மட்டும் வெகு சாதாரணமாய் இருந்ததாக எனக்கு தோன்றியது. ஒரு நாடகத்தன்மை அதில். "அம்மாவின் படத்தை கடைசியாகப் பார்த்தான். " இங்கே முடித்திருந்திருக்கலாம் என்பது என் எண்ணம். மற்றபடி அருமை !
Post a Comment