Jul 9, 2014

தெம்பு இருக்கா?

ஒருவனின் உண்மையான முகம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவன் அதிகாரம் மிக்கவன் என்றால் மற்றவர்கள் ஒன்றுமே தெரியாதது போல காட்டிக் கொள்கிறார்கள். பத்து பதினைந்து நாட்கள் ஆகிவிட்டது. கவாலா என்ற ரவுடி பெங்களூரிலிருந்து ஓசூர் போகும் போது அவனை நெடுஞ்சாலையிலேயே வைத்து வெட்டிக் கொன்றார்கள். சில நாட்களுக்கு முன்பாக இன்னொரு ரவுடியை முடித்துக் கட்ட கவாலா திட்டமிட்டிருக்கிறான். ஆனால் அந்த ரவுடி தப்பித்துவிட்டான். தப்பித்தவன் அமைதியாக இருப்பானா? பத்தே நாட்களுக்குள் கவாலாவுக்கு கயிற்றை வீசிவிட்டான். அவன் சென்று கொண்டிருந்த வண்டியை நிறுத்தி மிளக்குப்பொடியைத் தூவி பத்து பதினைந்து வெட்டுக்கள். அவ்வளவுதான்.

எவனோ ஒரு ரவுடியை எவனோ வெட்டிக் கொல்லட்டும். அது பிரச்சினையில்லை. ஆனால் கவாலா ரவுடி என்பது யாருக்குமே தெரியாதா? கடைசியாக அவன் கலந்து கொண்டது பெங்களூரில் நிகழ்ந்த ஒரு சினிமா நிகழ்ச்சி. நாயகன், நாயகி, தயாரிப்பாளர், இயக்குநர் என அத்தனை பேருடனும் அந்த மேடையில் அவன் நின்றிருக்கிறான். அது ஒரு சேனலில் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்க அதைப் பார்த்த எதிரிகள் கவாலாவின் D-Dayவை முடிவு செய்துவிட்டார்கள். கிளம்பி அரங்குக்குச் சென்றவர்கள் அவன் நிகழ்ச்சி முடிந்து வெளியே வரும் வரை காத்திருந்தார்களாம். பிறகு அவன் காரை பின் தொடர்ந்து சென்று நெடுஞ்சாலையில் நிறுத்தி முடித்துவிட்டார்கள். அடுத்த நாள் ஒவ்வொரு பத்திரிக்கையும் ரவுடி கொலை, ரவுடி பழி வாங்கப்பட்டான் என்று எழுதுகிறார்கள். ‘இது பழைய வஞ்சம்’ என்று போலீஸில் சொல்கிறார்கள். 

இதே பத்திரிக்கைகளும், இதே போலீஸாரும் அந்த நிகழ்ச்சியில் இருந்திருக்கிறார்கள். அவன் மேடையில் இருக்கும் போது ரவுடி என்பதே இவர்களுக்குத் தெரிந்திருக்காதா என்ன? பணம் வைத்திருக்கிறான். அதிகாரத்தின் தொடர்பில் இருந்திருக்கிறான். எவ்வளவு கீழே வேண்டுமானாலும் இறங்கி அடிப்பான். அதனால் அவன் உயிரோடு இருக்கும் வரை பம்மியவர்கள் அவன் முடிந்த பிறகு என்னமோ உலகமகா தெம்பு வந்துவிட்டதாக எழுதுகிறார்கள். பேசுகிறார்கள். செத்தவன் எழுந்தா வரப் போகிறான்? 

இங்கு எல்லாவற்றிலுமே அப்படித்தான். புரட்சி, வீரம், வீராப்பு என அத்தனையுமே சாஃப்ட் டார்கெட்டுக்கு எதிராகத்தான் இருக்கும். ஓங்கி அறைந்துவிடுவான் என்று தெரிந்தால் ‘நமக்கெதுக்கு வம்பு’ என்று ஒதுங்கிக் கொள்வோம். அறைய வேண்டியதில்லை கையைத் தூக்குகிறான் என்று தெரிந்தால் கூட போதும். அதுவே இளிச்சவாயன் என்று தெரியட்டும்- இரண்டு மிதி கூடுதலாக மிதித்துவிட்டு வருவோம்.

சிறுவயதில் நிகழ்ந்த ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. எங்கள் ஊரில் ஒரு வீட்டில் திருடன் புகுந்துவிட்டான். அப்பொழுதெல்லாம் வீடுகள் நெருக்கமாக இல்லை. வீடுகளுக்கு பக்கத்திலேயே காலி இடங்கள் இருக்கும். முள் செடிகள் முளைத்திருக்கும். திருடன் என்றால் ஆஜானுபாகுவான உடலமைப்பு இல்லை. ஒடிசலாக இருந்தான். அந்த வீட்டு அம்மிணி கதவைப் பூட்டிவிட்டு போயிருக்கிறாள். வீட்டுக்கு பக்கத்திலிருந்த காலி இடத்தில் இருந்தவன் அவள் சென்றதை உறுதிப்படுத்திக் கொண்டு வீட்டுக்குள் புகுந்துவிட்டான். அவனுக்கு கெட்ட நேரம். அந்தப் பெண் எதையோ மறந்துவிட்டாளாம். பேருந்து நிறுத்தம் வரைக்கும் சென்றவள் திரும்பி வந்திருக்கிறாள். உள்ளே ஏதோ சத்தம் கேட்டிருக்கிறது. சுதாரித்துக் கொண்டாள்.

பக்கத்து வீட்டில் இருந்தவர்களை எல்லாம் தயார் செய்து கொண்டு கதவைத் திறக்கவும் அவன் பேயறைந்த மாதிரி ஆகிவிட்டான். ஆட்கள் திமுதிமுவென்று உள்ளே நுழைந்து அவனைத் தாக்க முயலவும் அவன் மீண்டும் காலி இடத்திலிருந்த முள் செடிக்குள் எட்டிக் குதித்துவிட்டான். நம் ஆட்கள்தான் இதிலெல்லாம் வித்தகர்கள் ஆயிற்றே. சுற்றிலும் நின்று கருங்கற்களை சரமாரியாக வீசினார்கள். ஏற்கனவே உடல் முழுவதும் முள் கிழித்திருந்தது கற்களும் மண்டையை உடைக்க ரத்தம் சொட்டச் சொட்ட வெளியில் வந்தான். பிடித்து மின்கம்பத்தில் கட்டி உதைக்கத் துவங்கினார்கள். ஒன்றரை மணி நேரம். அடிக்க விரும்பியவர்களெல்லாம் அடித்தார்கள். பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். போலீஸ் வரும் போது அடி வாங்கியவனுக்கும் பேச்சும் இல்லை மூச்சும் இல்லை. இறந்துவிட்டான் என்று பேசிக் கொண்டார்கள்.  அக்கம்பக்கத்தில் விசாரிக்க போலீஸார் வருகிறார்கள் என்று தெரிந்தவுடன் என்னை அறைக்குள் போட்டு பூட்டி வைத்துவிட்ட்டார்கள். உளறிவிடுவேன் என்று பயந்துவிட்டார்கள்.

பத்து நாட்களுக்குப் பிறகு குழந்தையைத் தூக்கிக் கொண்டு அவன் மனைவி வந்திருந்தாள். ஒரே கதறல். அவனை அடிச்சுட்டு விட்டிருக்கலாமே என்பதுதான் அவளது ஒரே கேள்வியாக இருந்தது. யாருமே பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. போலீஸாரும் அடித்தவர்கள் யாரென்றே தெரியவில்லை என்று வழக்கை முடித்துவிட்டார்களாம். அந்தக் குழந்தையும் பெண்ணும் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. திருடனில் இனாவானா திருடன் அவன். 

அலுவலக மீட்டிங்களில் கவனித்துப் பாருங்கள். எடக்கானவன் என்றால் மேலாளர் அவன் பக்கமே திரும்ப மாட்டார். இனாவானாவாக இருந்தால் ஆயிரத்தெட்டு கேள்விகளைக் கேட்பார். இங்கு நல்லவனாக இருப்பதைவிடவும் வல்லவனாக இருக்க வேண்டியிருக்கிறது. மனதுக்குள் எவ்வளவுதான் பயம் இருந்தாலும் வெளியில் முறைக்கத் தெரிய வேண்டும். இவன் மீது கை வைத்தால் நம் சோலியை முடித்துவிடுவான் என்று பயத்தை உருவாக்கி வைத்துவிட்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் அதைத்தானே செய்கிறார்கள்? தனக்கான அத்தனை செட்டப்புகளையும் தயார் செய்துவிட்டு திருடுகிறார்கள்.

சாலையில் செல்லும் போது வண்டியின் பின்னால் மீன்பாடி வண்டிக்காரன் இடித்துவிட்டால் தாறுமாறாகத் திட்டுவார்கள். அதுவே ஆட்டோக்காரன் இடிக்கட்டும். சப்தம் குறைந்துவிடும். ஒரே தவறுதான். ஆனால் செய்கிற ஆட்களைப் பொறுத்து நம் ஓசையின் அளவு மாறுபடுகிறது. 

நேற்று ஒரு பொடியன் சிக்கிக் கொண்டான். மங்கமன்பாளையா சாலையில். அது நெரிசலான ஏரியா. சாலையோரக் கடைகள் நிறைய இருக்கும். இந்தப் பையன் ஒரு காய்கறிக்கடையில் கை வைத்துவிட்டான். அவனோடு இரண்டு மூன்று பேர் வந்திருந்தார்களாம். கல்லாப்பெட்டியில் கையை விட்டுவிட்டார்கள். மற்றவர்கள் தப்பித்துவிட இவனைப் பிடித்து அடி நொறுக்கிவிட்டார்கள். மாலை ஏழு மணி இருக்கும். போக்குவரத்து நெரிசல் ஆகிவிட்டது. கன்னடத்தில் விசாரிக்கிறார்கள். அவன் தமிழில் பதில் சொல்கிறான். அம்மா அப்பாவெல்லாம் தமிழ்நாட்டில் இருக்கிறார்களாம். இவனுக்கு கன்னடம் புரிகிறது. துண்டில் கைகளைக் கட்டி ஒரு பந்தக்காலில் நிறுத்தி வைத்திருந்தார்கள். களைத்திருந்தான். டிராபிக் போலீஸார் வந்து சட்டம் ஒழுங்கு காவல்துறைக்கு தகவல் கொடுத்துவிட்டார்கள். அவர்கள் வந்து முதல் வேலையாக கூட்டத்தைக் கலைத்தார்கள். பையனுக்கும் இரண்டு அடி கொடுத்தார்கள். பையன் முறிந்துவிடும் நிலையில் இருந்தான். விட்டுவிடுவார்கள் என்று நினைத்தேன். ஆனால் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள். முன்னதாக அங்கேயே வைத்து கடைக்காரர் புகார் எழுதிக் கொடுத்தார். எவ்வளவு திருடினான் என்று எழுதும் போது அவருக்கு சந்தேகம் வந்துவிட்டது. முப்பத்தைந்து ரூபாய் என்று உண்மையை எழுதினால் வலுவாக இருக்காது அல்லவா? போலீஸாரிடமே கேட்டார். ‘ஐந்தாயிரம்ன்னு எழுதிக்குங்க’ என்றார். முகத்தில் அறுபது வாட்ஸ் பல்புடன் எழுதிக் கொண்டிருந்தார். பையன் தலையக் குத்தி நின்று கொண்டிருந்தான். 

4 எதிர் சப்தங்கள்:

Muthuram Srinivasan said...

மூடர் கூடம் என்னும் படத்தில் வரும் ஒரு வசனம் ஞாபகத்திற்கு வருகிறது."எடுக்குறது தப்புன்னா எடுக்க விடாம தடுக்குறதும் தப்புதான்"...இது மாதிரியான சில்லறை திருட்டுக்களுக்கு நாம் எல்லோரும்தான் பொறுப்பாவோம்.இப்படி சொல்வது வக்காலத்து வாங்குவது என்று ஆகாது. சிறிய அளவில் தண்டித்து, மிரட்டி விட்டு விடலாம்.
பெரும்பாலும் இத்தகைய சில்லறை திருட்டுகளுக்கு காரணம் பசி, வேலை இல்லாமை,வாழ வழி இல்லாமை அல்லது குடிப்பழக்கம்தான்.
குடிபவர்களை நாம் ஒன்றும் செய்ய முடியாது..தாயுள்ளம் கொண்ட "அம்மா" அவர்கள் தான் ஏதாவது செய்ய வேண்டும்.
ஆனால் இளம் சிறார்கள் இப்படி பிடிபடும்போது, மிரட்டி விட்டுவிடலாம் அல்லது முடிந்தால் அவர்களின் தகுதிக்கேற்ப ஏதாவது எளிய வேலைகளில் சேர்த்து விடலாம். மேலோட்டமாக பார்த்தால் கொஞ்சம் சினிமாத்தனமாக தோன்றினாலும்..நிச்சயம் முடியக்கூடிய ஒன்றுதான்.

ஆனால் இவர்களைபோன்ற திருடர்களை தான் சகித்துக்கொள்வது தவறு...
http://muthuramseenivasan.blogspot.in/2014/07/vgn.html

காளீ said...

மனச கனமாக்கி விட்றதே உங்க வேலையா போச்சு..,

”தளிர் சுரேஷ்” said...

எளியோரும் வலியோரும் திருடன், ரவுடிகளிலும் உண்டு என்று உணர்த்துகிறது பதிவு! 35 ரூபாய் திருடியதை 5000 என்று மாற்றும் போலீஸார்! மனசாட்சி இல்லாதவர் ஆகிவிட்டார்!

GANESAN said...

"அலுவலக மீட்டிங்களில் கவனித்துப் பாருங்கள். எடக்கானவன் என்றால் மேலாளர் அவன் பக்கமே திரும்ப மாட்டார். இனாவானாவாக இருந்தால் ஆயிரத்தெட்டு கேள்விகளைக் கேட்பார். இங்கு நல்லவனாக இருப்பதைவிடவும் வல்லவனாக இருக்க வேண்டியிருக்கிறது. மனதுக்குள் எவ்வளவுதான் பயம் இருந்தாலும் வெளியில் முறைக்கத் தெரிய வேண்டும்"__உண்மை. உண்மை .நுற்றுக்கு நூறு அனுபவரீதியான உண்மை. சிறிய வயதிலேயிலேயே வாழ்க்கை பாடங்களை பெற்றதற்கு வாழ்த்துக்கள் மணிகண்டன்.