Jul 3, 2014

பிச்சை எடுப்பது அவ்வளவு சுலபமா?

அந்த மனிதர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். 

பெங்களூர் எம்.ஜி.ரோட்டில். நேற்று எம்.ஜி.ரோட்டில் ஒரு வேலை இருந்தது. மகாத்மாகாந்தி சாலையைத்தான் எம்.ஜி.ரோடு என்கிறார்கள். எலெக்ட்ரானிக் சிட்டி, இந்திரா நகரையெல்லாம் பார்த்துவிட்டு ‘அவ்வளவுதாம்ப்பா பெங்களூர்’ என்று யாராவது சொன்னால் பாவம் பிடித்துக் கொள்ளும். ஐ.டி நிறுவனங்கள் கிழடு தட்டிப் போய்விட்டன. இப்பொழுது இந்தத் துறையில் வேலை செய்பவர்களின் சராசரி வயதைக் கணக்கெடுத்தால் முப்பதைத் தாண்டிவிடும். ஆண்ட்டி அண்ட் அங்கிள்களால் நிரம்பிக் கொண்டிருக்கிறது. திரும்பிய பக்கமெல்லாம் நம்மைப் போன்றே கிழடுகள் திரிந்தால் சலித்துவிடாதா? சலிக்கிறதுதான். 

போகட்டும்.

உண்மையில் எம்.ஜி.ரோடுதான் பெங்களூர். சுஜாதா பாணியில் சொன்னால் பெண்களூர். எங்கிருந்து வருகிறார்கள் என்றே தெரியாது. எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறார்கள் என்றும் புரிவதில்லை. பையன்களும் அப்படித்தான்; பெண்களும் அப்படித்தான். நேரம் கிடைத்தால் வண்டியை நிறுத்திவிட்டு ஒரு நடை போய் வர வேண்டும். நரம்பையெல்லாம் முறுக்கிவிட்ட மாதிரி ஆகிவிடும். கை கால்களில் இருக்கும் நரம்புகளைத்தான் சொல்கிறேன்.

அங்குதான் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். 

எம்.ஜி ரோட்டில் சைட் அடித்தேன் என்று சொல்லக் கூடாது. ஆட்களை வேடிக்கை பார்க்கத்தான் அமர்ந்திருந்தேன்.  Human observation என்று பந்தாவாக சொல்லிக் கொள்ள வேண்டும். அப்படி அப்சர்வித்து கொண்டிருந்த போதுதான் அவர் நின்றிருந்தார். பத்து அடிகள் தள்ளியிருந்தார். பெரிய சம்பாத்தியம் என்றெல்லாம் சொல்ல முடியாது. கொஞ்சம் சில்லரைகளை வைத்திருந்தார். இந்தப் பெண்களும் பையன்களும் பிச்சைக்காரர்களையெல்லாம் கண்டுகொள்வது போலவே தெரியவில்லை. எதிரில் வரும் அரைக்கால் ட்ரவுசர்களும், மடமடக்கும் சட்டைகளும் வெயிலில் பளபளக்கும் தோல்களும் என அவர்கள் கவனிப்பதற்கு எத்தனையோ இருக்கிறது.

வெயிட்டீஸ்.

நேற்று புதன்கிழமை. வேலையைவிட்டுவிட்டு பிச்சைக்காரனை பார்த்துக் கொண்டிருந்தேன் என்றால் நம்ப முடியாமல்தான் இருக்கும். நமக்கு credibility முக்கியம் இல்லையா? காரணத்தை சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். பழைய நிறுவனத்தில் வருங்கால வைப்புநிதியை வாங்காமல் விட்டிருந்தேன். நான்கு வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. வீட்டில் அப்பாவும் தம்பியும் நச்சரித்ததில் விசாரித்தேன். அங்கு இந்த பிரிவை கவனித்துக் கொள்பவர் பிறக்கும் போதிலிருந்தே நிலத்தைத் தொடாதவர் போலிருக்கிறது. கால்கள் நிலத்தில் படாமலேயே பேசினார். அவரது சட்டைப்பையில் இருந்து எடுத்துக் கொடுப்பது போல அல்டாப்பு. ஆனால் நமக்குத்தானே காரியம் ஆக வேண்டியிருக்கிறது? அவரிடம் பம்முவதற்குத்தான் சென்றிருந்தேன்.  அந்த நிறுவனம் கருடா மாலுக்கு பக்கத்தில் இருக்கிறது.

இரண்டு ரெவின்யூ ஸ்டாம்புகளை வாங்கி வரச் சொல்லியிருந்தார்கள். இதுவா பெரிய காரியம் என்ற தெனாவெட்டில் சென்று தொலைத்துவிட்டேன். ஆனால் அதுதான் பெரிய காரியமாக இருந்தது. ஒரு இடத்திலும் கிடைக்கவில்லை. தபால் நிலையங்களில் கீரை வடை விற்கும் அளவிற்கு கீழே இறங்கிவிட்டார்கள் ஆனால் அவர்களிடம் கூட இந்த ஸ்டாம்பு இல்லை. விற்க வேண்டியதை விட்டுவிட்டு கண்டதையெல்லாம் விற்றுக் கொண்டிருந்தால் பிறகு எப்படி லாபத்தில் இயங்கும்? கடைசியாக ஒரு கோர்ட்டில்தான் கிடைத்தது. ப்ளாக் மார்க்கெட்டில் விற்கிறார்கள். வண்டியை நீதிமன்ற வளாகத்திற்குள் ஓட்டும் போதே ஒரு வக்கீல் பிடித்துக் கொண்டார். அவர் அப்படித்தான் இருந்தார். கருப்பு கோர்ட், வெள்ளைச் சட்டை. ஒரு படத்தில் சந்தானம் விக்ரமை வளைப்பார் அல்லவா? அப்படித்தான். ரெவின்யூ ஸ்டாம்ப்புக்கெல்லாம் வளைக்கிறார்கள்.

‘சார் ரெண்டே ரெண்டு ரெவின்யூ ஸ்டாம்ப் போதும்’ என்று சொல்லச் சங்கடமாக இருந்தது. ஆனால் அவர் அதையெல்லாம் காட்டிக் கொள்ளவில்லை. ‘ரேட் அதிகமாகும் சார்’ என்றார்.

ஸ்டாம்ப் கேட்டேனா அல்லது சரக்கு கேட்டேனா என்று எனக்கே ஒரு வினாடி சந்தேகம் வந்துவிட்டது. ஸ்டாம்ப்பைத்தான் சொல்லியிருக்கிறார். ‘ஒரு ரூபாய் ஸ்டாம்ப் இருபத்தைந்து ரூபாய். தமிழ்நாட்டிலிருந்து வாங்கி வருகிறோம்’ என்று கள்ளக்கடத்தல் பாஸ் ரேஞ்சில் பேசினார். நான் ஒரு கஞ்சப்பயல் இல்லையா? பேரம் பேசி கடையில் தலா பதினைந்து ரூபாய்க்கு வாங்கி வந்தேன்.

விண்ணப்பங்களை நிரப்பிக் கொடுத்து வேலை முடிந்த போது மதியம் பன்னிரெண்டரை ஆகியிருந்தது. இனி இரண்டு மணிக்கு மேலாக அலுவலகத்திற்குச் சென்றால் போதும். அதனால் எம்.ஜி.ரோட்டில் அமர்ந்திருந்தேன். 

பிச்சைக்காரர் காசை எல்லாம் எண்ணி முடித்துவிட்டு பாக்கெட்டிலிருந்து செல்போனை எடுத்தார். பிச்சைக்காரரிடம் செல்போன். ஒரு கதை சிக்கிக் கொண்டது. விடுவேனா? பக்கத்தில் சென்ற போது சற்று பதறினார். ஆனால் உடனடியாக சகஜமாகிவிட்டார். அவர் உண்மையில் பிச்சை எடுக்கவில்லை. நடித்துக் கொண்டிருந்தாராம். பெங்களூரில் ஒரு நிறுவனத்தில் நடிப்புப் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். பயிற்சியின் ஒரு அங்கமாக பிச்சைக்காரனாக மாறச் சொல்லியிருக்கிறார்கள். அதனால் காலையிலிருந்து நின்று இருபத்தியோரு ரூபாய் சம்பாதித்திருக்கிறார்.

‘போதுமா?’ என்றேன்.

உண்மையான பிச்சைக்காரன் பெங்களூரில் நூறு ரூபாய் வரைக்கும் சம்பாதித்துவிடுவான். இருபத்தியோரு ரூபாய் எந்த மூலைக்கு? மதியத்துக்கு மேலும் முயற்சிக்க வேண்டும் என்றார். அவரால் நூறு ரூபாயைத் தொட முடியும் என்று தெரியவில்லை. ஆனால் இது ஒரு அட்டகாசமான மேனேஜ்மெண்ட் கான்செப்ட். அவர் இந்த ஒரு நாளைக்காவது பிச்சைக்காரனாகவே மாற வேண்டும். தன்னை மறந்து, ஈகோவை கைவிட்டு உண்மையிலேயே ஒரு நாள் பிச்சைக்காரனாக மாறிவிட வேண்டும். எல்லோருக்கும் இது சாத்தியம் இல்லை. ஒருவேளை கமலுக்கும், விக்ரமுக்கும், விஜய் சேதுபதிக்கும் சாத்தியமாகலாம். 

Character ethic, Personality ethic என்று இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. 

Character ethic என்பது தனி மனிதனுடைய நேர்மை, தைரியம், எளிமை, பணிவு போன்றவற்றையெல்லாம் பேசுவது. அந்தக்காலத்தில் இதையெல்லாம்தான் போற்றிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இப்பொழுது இதையெல்லாம் யார் மதிக்கிறார்கள்? Personality ethic கோலோச்சத் தொடங்கிவிட்டது.

அப்படியென்றால்? Branding. நரேந்திர மோடியும், ஒபாமாவும் தேர்தல் பிரச்சாரங்களில் செய்தது இதைத்தான். பொதுவெளியில் தனக்கான பிம்பத்தை உருவாக்குதல். நவீன உலகத்தில் இதுதான் வெற்றி பெறுகிறது. நீங்கள் எவ்வளவுதான் நேர்மையானவராகவும், தைரியமானவராகவும், எளிமையானவராகவும் இருந்தாலும் வெற்றி பெற முடிவதில்லை. சாணத்தை வீசி காலி செய்துவிடுவார்கள். ஆனால் தம்மை ஒரு திறமைமிக்க ஆளுமையாக பிம்பமாக்கிக் கொண்டவர்கள் பெரும்பாலும் வென்றுவிடுகிறார்கள். அவர்களது தனிப்பட்ட character எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் ‘உருவாக்கப்பட்ட பிம்பம்’ அதை மறைத்துவிடும்.

ஆனால் ஒன்று- வெளியுலகில் வெல்வதற்கு வேண்டுமானால் பிம்பம் உருவாக்கல் உதவலாம். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் நாம் வெல்ல வேண்டுமானால் character தான் முக்கியம். மனைவியிடமும், மகனிடமும், பெற்றவர்களிடமும், பக்கத்து வீட்டுக்காரர்களிடமும் வெல்ல வேண்டுமானால் கேரக்டர் அவசியம். வெளியில் என்னதான் வெற்றியாளனாக இருந்தாலும் சில்லரையாக இருந்தால் குடும்பத்தினர் காறித்துப்பிவிடுவார்கள். 

தனிமனிதனின் Character என்பது திடீரென்று உருவாகிவிடுவதில்லை. அது நம்முடைய பழக்கத்தில் இருந்து வருகிறது. யாருக்குமே காசு தராமல் இருப்பது நம் பழக்க வழக்கம் என்றால் கஞ்சப்பயல் என்பது நம் கேரக்டர் ஆகிவிடுகிறது. மது அருந்துவது நம் பழக்கவழக்கம் என்றால் குடிகாரன் என்பது நம் கேரக்டராகிவிடுகிறது. பொய் சொல்வது நம் பழக்கமாக இருக்கக் கூடும். புறம் பேசுவது நம் பழக்கவழக்கங்களில் ஒன்றாக இருக்கக் கூடும். இவையெல்லாம் சேர்ந்துதான் நம் character ஐ உருவாக்குகிறது.

கேரக்டரை மாற்ற வேண்டுமானால் நம் பழக்கவழக்கத்தை மாற்ற வேண்டும். நினைத்த மாத்திரத்தில் மாற்றிவிட முடியாது.

‘நீங்கள் பிச்சைக்காரனாக மாற வேண்டுமானால் உங்களது பழக்கவழக்கங்களை மாற்ற வேண்டும். ஆனால் நீங்கள் இப்பொழுது பிச்சைக்காரனாகப் போவதில்லை. பிச்சைக்காரனாக நடிப்பதற்குத்தான் வந்திருக்கிறீர்கள். ஒரு நாளைக்காவது உங்களது பழக்கவழக்கங்களை மறக்க வேண்டும். அப்படி மறந்தால்தான் நூறு ரூபாயாவது கிடைக்கும். இங்கே வந்து நின்று கொண்டு வீட்டைப் பற்றியும், போகிற வருகிற பெண்களைப் பற்றியும் நினைத்துக் கொண்டிருந்தால் இன்னுமொரு இருபது ரூபாய் கிடைத்தாலே பெரிய விஷயம்’ என்கிற ரீதியில் அரை மணி நேரம் அறுத்தேன். கடுப்பானாரா என்று தெரியவில்லை. சிரித்துக் கொண்டே ‘நிறைய புரிந்து கொண்டேன்’ என்றார். 

நானா சொன்னேன்? இதெல்லாம் Stephen Covey சொன்னது. ஒரு புத்தகத்தில் எழுதியிருப்பார். ஆனால் பிச்சைக்கார நடிகரிடம் இதை மறைத்துவிட்டு என்னை பெரிய மனோவியல் மேதையாகக் காட்டிக் கொண்டு வந்துவிட்டேன். ஃபோன் நெம்பரை வாங்கிக் கொண்டார். அவர் திரும்ப அழைத்து பேசுவதற்குள் இன்னொரு புத்தகத்தை வாசித்து தயார் செய்து கொள்ள வேண்டும்.

பந்தா காட்டுவது என் பழக்கவழக்கம்.

7 எதிர் சப்தங்கள்:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நரம்பையெல்லாம் முறுக்கிவிட்ட மாதிரி ஆகிவிடும். கை கால்களில் இருக்கும் நரம்புகளைத்தான் சொல்கிறேன்.
நானும் அதைத்தானுங்க நினைத்தேன்.உங்களுக்கு வேறு ஏதாவது நினைவு வருகிறதா?

”தளிர் சுரேஷ்” said...

கேரக்டர் ரொம்ப முக்கியம்! பிச்சை எடுப்பது சுலபமானது அல்ல என்பதை புரியவைத்துவிட்டீர்கள்! ஒரு ரூபாய் ரெவின்யூ ஸ்டாம்ப் 25 ரூபாயா? நல்ல பிசினஸ் போல இருக்கு! இங்கேயும் ரெவின்யூ ஸ்டாம்ப் தபால் ஆபிஸை விட மளிகை கடை, பெட்டிக்கடைகளில்தான் கிடைக்கிறது! கூடுதலாக ஒரு ரூபாய் வைத்து விற்பார்கள்! அங்கே கொள்ளை அடிக்கிறார்களே!

nimmathiillathavan said...

தினம் ஒரு பதிவு அருமை

Aba said...

சூப்பர். இப்படி ஒவ்வொருவரும் தங்களுடைய கேரக்டரை நேர்மையாக புரிந்துகொண்டாலே எவ்வளவோ பிரச்சனைகள் தீர்ந்துவிடும்...

சேக்காளி said...

//அப்சர்வித்து கொண்டிருந்த போது//
சேக்காளிக்கு ரெண்டு அப்சர் பார்சல்ல்ல்ல்ல்ல்ல்.

GB Law Firm said...

"வெல்ல வேண்டுமானால் கேரக்டர் அவசியம்."

T.Sureshkumar said...

The way u are explaining is very very good. Keep it UP.

By

T.Sureshkumar --qatar