Jul 2, 2014

எது வெற்றி?

தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அதனால் உலகில் எந்த மூலையில் எது நிகழ்ந்தாலும் அடுத்த வினாடியே நமது பார்வைக்கு வந்துவிடுகிறது என்பதெல்லாம் ஒரு கட்டம் வரைக்கும்தான் நல்லது. இப்பொழுதெல்லாம் நல்லதெல்லாம் கண்களில் படுகிறதோ இல்லையோ- கெட்டது- அது எவ்வளவு குரூரமான நிகழ்வாக இருந்தாலும் பார்வைக்கு வந்துவிடுகிறது. யாரையோ கழுத்தை வெட்டுவதைப் பார்த்தால் ‘இனிமேல் இப்படியான கொடுமைகளை பார்க்கவே கூடாது’ என்று நினைத்துக் கொள்கிறேன். அடுத்த நாளே எவரோ ஒருவரை தூக்கிலிடும் வீடியோ வந்து சேர்கிறது. ‘இதை மட்டும் கடைசியாக பார்த்துவிடலாம்’ என்று நினைத்தாலும் அதோடு நிறுத்திக் கொள்ள முடிவதில்லை. அடுத்த நாளே யாரையாவது பின்னந்தலையில் சுட்டுக் கொல்கிறார்கள்.

சிரியா, ஈராக் போன்ற தேசங்களில் நிகழும் வன்முறைகளின் வீடியோக்களை சில இரவுகளாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்- கூகிளில் தேடிப்பாருங்கள்- கிடைக்கின்றன. சர்வசாதாரணமாக கொன்று தள்ளுகிறார்கள். கோழிக்கடைகளில் ப்ராய்லர் கோழிகளை அப்படித்தான் கொல்வார்கள். கழுத்தை அறுத்து அறுத்து ஒருவன் வீசிக் கொண்டேயிருப்பான். இன்னொருவன் அதை எடுத்து வெந்நீரில் மூழ்க வைத்துக் கொண்டிருப்பான். இந்த கொலைக்கு எந்தவிதத்திலும் சளைக்காத வன்முறையை சக மனிதர்கள் மீதாக நிகழ்த்துகிறார்கள்- மதத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும்.

ஒரு வீட்டில் நுழைந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லோரையும் மண்டியிடச் செய்கிறார்கள். பெண்கள், சிறுவர்கள் உட்பட யாருடைய கண்களும் கட்டப்படவில்லை. ஒவ்வொருவரின் பின்னந்தலையிலும் வரிசையாக சுடுகிறார்கள். பக்கத்தில் இருப்பவன் சுடப்படும் போது ஒருவன் திரும்பிப் பார்க்கிறான். துப்பாக்கியால் அவனைத் தாக்கி குனியச் செய்து அவனையும் சுடுகிறார்கள். கீழே விழுந்தவர்களில் யாருமே துள்ளுவதில்லை. இருந்தாலும் இன்னுமொரு முறை சில தலைகளைக் குறி வைத்துச் சுடுகிறார்கள். தப்பித்துவிடுவதற்கு எந்தச் சந்தர்ப்பமும் கொடுத்துவிடக் கூடாது என்பதற்கான இரண்டாம் சுற்று சுடுதல் அது. ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது. இறைவனின் பெயரால் வீடியோவை முடிக்கிறார்கள்.

அரசாங்கங்களால் எதுவும் செய்ய இயலவில்லை. ராணுவங்கள் பின் வாங்குகின்றன. மக்கள்தான் தப்பிக்க இயலாமல் உயிரை விடுகிறார்கள்.

இந்த வன்முறைகளின் பின்னால் என்ன வேண்டுமானாலும் அரசியல் பின்னணியாக இருக்கட்டும். யார் மீது வேண்டுமானாலும் தவறு இருக்கட்டும். ஆனால் குழந்தைகளும், பெண்களும் என்ன பாவம் செய்தார்கள்? மூன்று வயதுக் குழந்தையின் நெற்றியில் துப்பாக்கியை வைக்கும் உரிமையை எந்தக் கடவுள் அருளினார்? பதினான்கு வயதுச் சிறுவனை மண்டியிடச் செய்து மூளையைச் சிதறடிக்கும் வன்மத்தை எந்த வேதத்தில் எழுதியிருக்கிறார்கள்? இதயத்திற்கு பூட்டிட்டுக் கொண்டு இறைவனின் பெயரால் வன்முறையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். மனிதாபிமானத்தைக் புதைத்துவிட்டு மதத்தின் பெயரால் அப்பாவிகளை கொன்று குவிக்கிறார்கள்.

வல்லரசுகளுக்கு பெட்ரோலும், டீசலும் குறி. மதவாதிகளுக்கு நிலமும், கடவுளும் குறி. அரசியல்வாதிகளுக்கு பதவியும் அதிகாரமும் குறி. தீவிரவாதிகளுக்கு எதிர்படும் ஒவ்வொரு உயிரும் குறி. இப்படி ஒவ்வொருவரும் தாக்குகிறார்கள். மக்கள்தான் சிதறிச் சின்னாபின்னமாகிறார்கள். இதையெல்லாம் கூட விட்டுவிடலாம். எங்கேயோ நடக்கும் இந்த வன்முறைகளையும் கொலைகளையும் இங்கே அமர்ந்து கொண்டு ஆதரிக்கிறார்கள். அதுதான் அயற்சியாக இருக்கிறது. ‘அங்கேயே பிரச்சினைன்னு தெரியும்ல..அங்க எதுக்கு போனான்?’ என்று பேசுபவர்களைக் கூட மன்னித்துவிடலாம். அவர்கள் புரிந்து கொள்ளாமல் பேசுகிறார்கள். ஆனால் ‘கறுப்புக் கொடியேந்தியவன் இந்த உலகையே பிடிக்கப் போகிறான்’ என்று வெற்றி முழக்கமிடுகிறார்கள். அவர்களைத்தான் என்ன செய்வது என்று புரியவில்லை. இந்த வன்முறைகளை வெளிப்படையாக ஆதரிக்கும் தமிழர்கள் இருக்கிறார்கள். ஃபேஸ்புக்கில் அவர்களின் பக்கங்களைத் தேடித் தேடி பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த ஸ்டேட்டஸ்களில் எத்தனை வன்மம்? எத்தனை வெற்றிக் கொக்கரிப்புகள்?

எதை வெற்றி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு எதிர்படுபவர்களையெல்லாம் சுட்டு வீழ்த்துவதுதா? அடுத்தவன் கழுத்து அறுபடுவதை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிடுவதா? குழந்தைகள், பெண்கள் என அத்தனை பேரின் பிணங்களையும் நாய்க்கும் நரிக்கும் எறிவது போல அலட்சியமாக அப்புறப்படுத்துவதா? இவர்கள் மதத்தின் பெயரால் செய்து கொண்டிருப்பது பச்சையான வன்முறை. இறைவனின் பெயரால் செய்து கொண்டிருப்பது கடுமையான மனித உரிமை மீறல்.

இந்த உலகம் மிகக் குரூரமானதாக மாறிக் கொண்டிருக்கிறது. சில ஆயிரங்களைத் திருடுவதற்காகக் கொலை செய்கிறார்கள். காதில் இருக்கும் கடுக்கனை அறுப்பதற்காக மூதாட்டிகளைக் கொல்கிறார்கள். அப்பனைப் பழி வாங்குவதற்காக பச்சிளம் குழந்தையின் கழுத்தை நசுக்கிறார்கள். அடுத்த உயிரை எடுப்பதுதான் இங்கே பெரும்பாலான பிரச்சினைகளுக்குத் தீர்வாக மாறிக் கொண்டிருக்கிறது. கள்ளக்காதலுக்காகவும், கந்து வட்டிக்காகவும், நிலப்பிரச்சினைக்காகவும், ஒரு தலைக்காதலுக்காகவும் என எல்லாவற்றிலும் கொலைதான் பிரதான பாத்திரம் ஏற்றுக் கொள்கிறது. மதம் மட்டும் விதிவிலக்கா? மதத்துக்காகவும், அதிகாரத்திற்காகவும் கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கிறார்கள். 

ஆயுதமில்லாத நிராயுதபாணிகளைக் கொன்று அதன் மீது நட்டப்படும் எந்த வெற்றிக் கொடியும் நிரந்தரமானதில்லை. நிகழ்த்தப்படுவது வன்முறையாக இருந்தால் கண்களை மூடிக் கொண்டு எதிர்க்கத் துவங்குவோம். அவர்களின் சித்தாந்தம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். மதத்திற்காகவோ, சாதிக்காகவோ, இனத்துக்காகவோ என எதற்காக வேண்டுமானாலும் போராடட்டும்- அப்பாவிகளைக் கொன்றுதான் அந்தச் சித்தாந்தம் வெற்றியடைய வேண்டுமானால் அந்தச் சித்தாந்தம் வெற்றியடையவே தேவையில்லை என்ற மனநிலை நமக்கு வர வேண்டும். 

இந்தியனாகவும், இந்துவாகவும் இதை எழுதவில்லை. அடிப்படையான மனிதாபிமானம் மட்டும்தான். அங்கே வேட்டையாடுபவர்கள் எப்படியோ போகட்டும். அவர்களை திருத்துவது நமக்கு ஏலாது. ஆனால் அவர்களை எதிர்க்காவிட்டாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் அவர்களை ஆதரிப்பதை நிறுத்துவோம். ஏதோ ஒரு குழந்தையின் கழுத்தில் வைக்கப்படும் துப்பாக்கியின் நுனி நம் வீட்டு குழந்தையின் கழுத்தைத் தொடுவதற்கு வெகுநாட்கள் ஆகிவிடாது. எங்கேயோ தலை சிதறிச் சாவும் பெண்ணின் நிலைமை நம் வீட்டுப் பெண்களுக்கு நிகழும் காலம் வெகுதூரத்தில் இல்லை. எங்கேயோ ஒருவன் துப்பாக்கிக்கு முன்னால் மண்டியிடுவதைப் போலவே நாமும் மண்டியிடும் துக்கமான தருணத்தை மிக வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறோம். 

அவ்வளவுதான்.

13 எதிர் சப்தங்கள்:

Kamala said...

மனித நேயம் இறந்து கொண்டிருக்கிற காலகட்டம் இது. நீங்கள் எழுதியுள்ளவற்றை முழுமையாக ஒத்துக்கொள்கிறேன். இவையெல்லாம் நம் நாட்டிலும் நிகழும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்பதை சதக் என்று பேனாவினால் குத்திக் காண்பித்துவிட்டீர்கள். ''நிகழ்த்தப்படுவது வன்முறையாக இருந்தால் கண்களைமூடிக் கொண்டு எதிர்க்கத் துவங்குவோம்.'' ஆரம்பிக்க வேண்டும்.

”தளிர் சுரேஷ்” said...

அவர்கள் மிருகங்களிலும் கேவலமானவர்கள்!

சமீர் said...

அறை நண்பன் சொல்கிறான் போர் என்றால் சண்டை என்றால் இது எல்லாம் சகஜம் என்று. நாளை உனக்கு நடக்கும் பொழுது இதையே சொல்வாயா? நடக்கும் பொழுது பார்த்துக்கொள்ளலாம் என்றான். கேட்பதற்கு நானோ இல்லை பதில் சொல்வதற்கு அவனோ இருக்கமாட்டோம் என்று நினைத்திருக்கக்கூடும். எத்தனை குரூரமான மன நிலை. மதம் பிடித்து அலையும் அனைத்துக்கூட்டங்களுக்கும் இந்தக்கட்டுரை பொருந்தும். இந்த மாதிரியான சூழ்நிலைகளின் போது உலகம் வாய் மூடி மவுனியாகவே இருக்கின்றது. வல்லரசுகள் தங்கள் லாபத்துக்காக வேடிக்கையே பார்க்கின்றன. இதுகளை எந்த உயிரினத்திலும் சேர்க்க முடியாது.

Jaikumar said...

"கலி முத்திவிட்டது. உலகம் அழியபோகுது." என்று பெரியவர்கள் சொன்னது இதை தான். உலகம் இருக்கும், மனிதன் இருக்கமாட்டான். யாரையோ கழுத்தை வெட்டுவதைப் பார்த்தால் ‘இனிமேல் இப்படியான கொடுமைகளை பார்க்கவே கூடாது’ என்று நினைத்துக் கொள்கிறேன். அடுத்த நாளே எவரோ ஒருவரை தூக்கிலிடும் வீடியோ வந்து சேர்கிறது. ‘இதை மட்டும் கடைசியாக பார்த்துவிடலாம்’ என்று நினைத்தாலும் அதோடு நிறுத்திக் கொள்ள முடிவதில்லை.

Sahaya Antony said...

ஒருபுறம் இயற்கை மனிதனை கொன்றுகொண்டிருக்கிறது மறுபுறம் மனிதன் மனிதத்தை (மனிதனை ) கொன்றுகொண்டிருக்கிறான்

Yarlpavanan said...


சிறந்த ஆய்வுப் பகிர்வு

Ram said...

மதத்தின் பெயராலும்,
இனத்தின் பெயராலும்,
கடவுளின் பெயராலும் கழுத்தறுத்தால்
கூக்குரலிடுங்கள் அது ஜிகாத் என்று
கொதித்தெழுங்கள் அது அநியாயமென்று
கூப்பாடு போடுங்கள் எம்மறையும் அதை போதிக்கவில்லையென்று

நாவின் பெயராலும்
உணவின் பெயராலும்
ருசியின் பெயராலும் கழுத்தறுத்தால்
மேற்கூறியவையாவும் மறந்துவிட்டு
கேட்டு வாங்குங்கள் லெக் பீஸை

உங்கள் ஒருவேளை உணவைவிட
ஒரு உயிரின் மதிப்பு உயர்வானதென்று
உங்களுக்கு எப்போது புரியுமோ அதுவரை
ஊருக்கு நியாயம் சொல்வதையேனும் நிறுத்துங்கள்

அவ்வளவுதான்.

- சுப.இராமநாதன்

kannan jagannathan said...

மிக அவசியமான உண்மையான பதிவு. மனம் கனக்கிறது . தீவிரவாதம் எதற்கும் தீர்வாகாது .மதம் என்னும் மதம் பிடிக்காமல் , ஜாதி என்ற வியாதி பிடிக்காமாலும், நாம் இருக்கும் நாட்களில் அன்பாய் இருப்போம் . நெப்போலியன் தன கடைசி ஆசையாக " அவர் இறந்தபின் அவரின் இரண்டு கைகளையும் வெளியே தெரியுமாறு புதைக்க சொன்னாராம் ". உலகத்தையே வென்றவன் போகும் போது எதையும் கொண்டு செல்லவில்லை . மனிதம் வளர்ப்போம்.

Jaikumar said...

"மனிதன் இயற்கையை கொன்றுகொண்டிருக்கிறான்" என்பதே சரி.

Aba said...

@Jaikumar, agree 100+

Aba said...

'100 % உண்மை' என்று கருத்திட வந்தேன்.. ஆனால்,

//உங்கள் ஒருவேளை உணவைவிட
ஒரு உயிரின் மதிப்பு உயர்வானதென்று
உங்களுக்கு எப்போது புரியுமோ அதுவரை
ஊருக்கு நியாயம் சொல்வதையேனும் நிறுத்துங்கள்
அவ்வளவுதான்.//

நானும் மாமிசம் உண்பவன்தான். இதற்குப் பதில் சொல்லமுடியவில்லை.... (ஒருவேளை எங்களது வீட்டுப் பெண்கள் யாரும் கோழிகளாக இல்லாததால் கோழியை வறுப்பது தவறில்லை போலிருக்கிறது)

Aba said...

என்னைப் பொறுத்தவரையில் எல்லாரும் சுயநலவாதிகள்தான். எல்லா மக்களும், எல்லா உயிரினங்களும் சுயநலவாதிகள்தான். ஒவ்வொருவருடைய சுயநலத்தின் எல்லை மட்டும்தான் வேறுபடுகிறது. அக்மார்க் சுயநலவாதிக்கு தான் மட்டுமே எல்லை. ஒரு மிடில் கிளாஸ் மாதவனுக்கு தன்னுடைய குடும்பம் ஒரு எல்லை. ஹிட்லருக்கு தனது தூய இரத்தம் ஓடும் சகோதரர்கள் மட்டும் எல்லை, சே குவேரா போன்றவர்களுக்கு ஒட்டுமொத்த மனிதகுலமும் எல்லை. புத்தருக்கு பெரும்பாலான உயிர்கள் எல்லை. இந்த எல்லைக்குள் இருப்பவற்றை அவர்கள் சமமாக மதித்து அவற்றின் உய்வுக்காக குரல் கொடுத்தார்கள்.

இதையே வேறு மாதிரி, கொஞ்சம் பச்சையாக சொல்லலாம். நமக்கு வீட்டில் வாழும் பூச்சிகள் எப்படியோ அப்படியே ஹிட்லருக்கு யூதர்கள். அவர் யூதர்களை சக மனிதனாக நினைக்கவில்லை, அற்பமான கொல்லப்படக்கூடிய விலங்குகளாகவே மதித்தார். சே குவேராவுக்கு பிற உயிர்களை புசிப்பது குற்றமாகப்படவில்லை. மிடில் கிளாஸ் ஆளுக்கு எங்கோ கொல்லப்படும் ஈரானியன் சக மனிதனாக தோன்றுவதில்லை. அதேபோல் இந்த தீவிரவாதிகளுக்கும் அப்பாவி மக்களுக்கும் அப்பாவி சிக்கனுக்கும் இடையே வித்தியாசம் தெரிவதில்லை. ஒரு கோழி கொல்லப்படும்போது அருகிலிருக்கும் கோழி எப்படி உணர்கிறது என்பதை எங்களால் எப்படி புரிந்துகொள்ள முடியாதோ அப்படியே இவர்களுக்கும் தங்கள் குழுவை, மார்க்கத்தை சாராதவர்களின் உணர்ச்சிகள் புரிவதில்லை.

இவை ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வரைமுறைகள். இப்படி ஒரு கொடூரம் எங்கள் வீட்டில் நிகழ்ந்தால்.. எனும் (ஒருவித சுயநல) பார்வையிலேயே எங்களுக்கு இதெல்லாம் மிருகத்தனமாகத் தெரிகின்றன. ஒருவேளை இந்தச் சுயநலத்தைத்தான் மனிதாபிமானம் என்கிறோமோ?

டிஸ்கி: நான் தீவிரவாதத்தையும் இராணுவ அமைப்பையும் வன்மையாக எதிர்க்கிறேன். இவற்றை எதிர்க்கும் அதேநேரம் ஏன் சிலபல கொலைகளை 'ஜஸ்ட் லைக் தட்' செய்துவிட்டுப் போகிறோம் எனும் முரண்பாட்டுக்கு விடைதேடி என் சிற்றறிவுக்கு உட்பட்டு நான் யோசித்தவைதான் இதெல்லாம். அவசரப்பட்டு என்னை ஜிகாத்தில் சேர்த்துவிடாதீர்கள்.

Muthuram Srinivasan said...

எங்கோ நடக்கும் தவறுகளை சகித்துக்கொள்வதர்க்கும், அதனை நாமே செய்வதற்கும் வேறு வேறு மன நிலை தேவை. ஒருவன் நம் கண் முன்னே கொலை செய்யப்படுவதை நாம் தடுக்க முயல்வது இன்றைய சூழ்நிலையில் கொஞ்சம் கடினம் தான். ஆனால் நாம் ஒரு கொலையை செய்யாமல் இருக்க முடியும்.இந்த வேறுபாடை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
உலகில் எந்த உயிரினமும் தன கண் முன்னே தன சக இனம் கொல்லப்படுவதை சகித்துக்கொள்வது இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் ஏதோ ஒரு புலிகள் காப்பகத்தில் ஒரு புலிக்குட்டி, மற்றொரு புலிக்குட்டியின் கண்முன்னே கொல்லப்பட்டு தோல் உரிக்கப்பட்டது.அதனைப்பார்த்ததில் இருந்து அந்த மற்றொரு குட்டியின் மன நிலை பாதிக்கப்பட்டு உணவே உண்ணாமல் இறந்ததாக பத்திரிகையில் படித்த நினைவு.
மணிகண்டன் சொல்ல முனைவது இதைப்பற்றிதான். இந்த கொடூரமான வீடியோக்களை பார்க்கவே சாதாரனப்பட்டவர்களின் மனம் அஞ்சும். ஆனால் பார்த்ததோடு அல்லாமல் வெறித்தனமாக காமென்ட் அடித்து உற்சாகப்படும் நிலை மிக ஆபத்தானது. ஒருவர் மற்றொருவரால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டு அதற்க்கு பழி தீர்க்க முயல்வது ஒருவகையில் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. ஆனால் இங்கிருந்து கொண்டு இராக்கில் நடக்கும் கொலைகளை ஆதரித்து வெறித்தனமாக பின்னூட்டம் இடுபவர்களுக்கும், சுடப்பட்டு இறந்த அந்த அப்பாவிகளுக்கும் என்ன பகை இருந்திருக்க முடியும்? இந்த மனோ நிலை தான் மனித குலம் பூண்டோடு அழிய முக்கிய காரணமாக இருக்க போகிறது.
உண்மையை சொன்னால் இவர்களுக்கு இஸ்லாம் மீதோ, அல்லாஹ் மீதோ எந்த ஒரு மரியாதையோ, பற்றுதலோ கிடையாது. மனநிலை தப்பிய ஒரு வெறிக்கூட்டம் அவ்வளவே. இதனை நம் நாட்டில் வளர விடக்கூடாது. இங்கு மத ரீதியாக யாரும் யாரையும் பொருட்படுத்துவது இல்லை. ஆனால், அரசியல்வாதிகளின் திட்டமிட்ட சதிகளால் மட்டுமே சில கலவரங்கள் ஆரம்பித்து வைக்கப்படுகின்றன. துரதிர்ஷ்டவசமாக அதன் எதிர் வினைகள் பழிக்கு பழி என்ற தொடர் வினையால் மிகுந்த சேதாரத்தை உருவாக்குகின்றன.
ஒரு கற்பழிப்பு வழக்கில் ஒரு முஸ்லிம் சம்பந்தப்பட்டு இருந்தால், ஊடகங்கள் முஸ்லிம் என்பதை அடிக்கோடிட்டு எழுதி உண்மையான பிரச்னையை திசை மாற்றி விடுவதும், உடனே முஸ்லிம் அமைப்புகள் குற்றம் சாட்டப்பட்டவர் அப்பாவி, ஒரு பாவமும் அறியாதவர் என்று வக்காலத்து வாங்குவதும் தான் நடக்கிறது. இதில் பாதிக்கப்பட்ட பெண்ணோ, குடும்பத்தாருக்கான நீதி பற்றியோ யாரும் பேசுவது இல்லை. இதை எல்லாம் யாரோ ஒரு தலைவன் பிறந்து வந்து மாற்றுவது எளிதான காரியம் அல்ல. ஒவ்வொரு தனி மனிதனும் தனக்குள் அமைதி, சமாதானத்தின் தேவையை உணர வேண்டும். நம் சந்ததிகளுக்கு எந்த மாதிரியான உலகத்தை விட்டு செல்லப்போகிறோம் என்று கவலைப்பட வேண்டும். தன்னை ஒரு individual ஆக கருத வேண்டும். மதத்தின் பெயரால் எவனோ ஒருவன் சொல்லுக்கு கண்மூடித்தனமாக நாம் ஏன் கட்டுப்பட வேண்டும்? என்ற வினாவை நமக்குள் எழுப்பி பார்க்க வேண்டும். இத்தனை வேண்டும்? கள் இன்றைய நிலையில் சாத்தியமா?