Jul 14, 2014

மனைவி முக்கியமா? ஃபேஸ்புக் முக்கியமா?

சென்ற வாரத்தில் நண்பர் ஒருவர் அழைத்தார்.  எடுத்த உடனேயே ‘ஒரு நாளைக்கு எவ்வளவு பேர் நிசப்தம் படிக்கிறாங்க’என்றார். இது ஒன்றும் முக்கியமான கேள்வி இல்லை. ஆனால் எதற்கு கேட்கிறார் என்று தெரியவில்லை. ‘ஒரு நாளைக்கு நான்காயிரத்திலிருந்து ஐந்தாயிரம் பேர் படிக்கிறார்கள்’. இதுவே சற்று அதிகமான எண்ணிக்கைதான். துல்லியமாகச் சொன்னால் சராசரியாக மூவாயிரத்துச் சொச்சம்தான். ஒரு சில நாட்கள் நான்காயிரம் பேர் படிப்பார்கள். அதிசயமாக ஐந்தாயிரம் பேர் வருவார்கள். அவருக்கு ஏமாற்றம். ‘இன்னமும் அதிகமானோர் படிப்பார்கள் என்று நினைத்தேன்’ என்றார். அதிகம் என்றால் பத்தாயிரம் பேருக்கும் அதிகமாக. நான் என்ன வைத்துக் கொண்டா வஞ்சகம் செய்கிறேன். சட்டியில் அவ்வளவுதான் இருக்கிறது. அதுதான் அகப்பையில் வருகிறது. அவர் இணையத்தில் முதலீடு செய்யும் நிறுவனம் ஒன்றோடு தொடர்பில் இருக்கிறார். அதற்கான சர்வே ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறார். தினசரி பத்தாயிரம் பேர் வருவதாக இருந்திருந்தால் அடுத்த கட்டத்திற்கு பேச்சு நகர்ந்திருக்கும். இந்த எண்ணிக்கைக்கு அவ்வளவுதான் பேச்சு. நிறுத்திக் கொண்டார். ‘வேறு ஏதாவது முயற்சி செய்யுங்க’ என்று சொல்லிவிட்டு போய்விட்டார். 

இந்த ‘வேறு ஏதாவதில்’ நிறைய அர்த்தம் இருக்கிறது. யாரையாவது கீழே இழுத்து போட்டு கும்ம வேண்டும். அவ்வப்போது சட்டையைக் கிழித்துக் கொள்ள வேண்டும். கிழிந்து தொங்கும் கீழுதட்டு ரத்தத்தைத் துடைத்துக் கொண்டே சவால் விட வேண்டும். தொடையைத் தட்டி ‘உன் காலண்டரில் குறித்து வைத்துக் கொள்’ என்று சவால் விட வேண்டும். அப்படித்தான் சொல்லிவிட்டு போனார். தலையாட்டிக் கொண்டேன். 

நமக்கு எப்பொழுதுமே சண்டையில் சுவாரசியம் அதிகம். இன்று கூட ஒரு ஏடிஎம்மில் சண்டை நடந்தது. பெரிய பிரச்சினைதான். ஆனால் சிம்பிளாக முடித்துவிட்டார்கள். பணம் எடுக்க வரும் பெண்களை செக்யூரிட்டி தனது மொபைலில் படம் எடுக்கிறானாம். ஒரு பெண் போலீஸிடம் புகார் சொல்லிவிட்டாள். ரோந்து சென்ற இரண்டு காவலர்கள் வந்து அலைபேசியை வாங்கிப் பார்த்திருக்கிறார்கள். வெவ்வேறு கோணத்தில் எடுத்து வைத்திருந்தானாம். நான்கு சாத்து சாத்தி துரத்திவிட்டார்கள். வங்கியிலும் தகவல் சொல்லிவிட்டார்களாம். அவ்வளவுதான். இனி அவனுக்கு இந்த வங்கியில் வேலை இருக்காது. ஆனால் வேறொரு வங்கியில் சேர்வதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. வேறொரு ஏடிஎம்மில் அமர்ந்து படம் எடுப்பான். மொத்த நிகழ்வும் பத்து நிமிடங்கள்தான் நடந்தது. அதற்குள்ளாகவே அவனுக்கு வாய் வீங்கிப் போனது. அவனுக்கு வாய் வீங்கிய வேகத்தைக் காட்டிலும் ட்ராபிக் வீங்கிப் போனது. என்னை மாதிரியே இந்த ஊரில் ஏகப்பட்ட பேர் திரிகிறார்கள். பைக்கை ஓரங்கட்டிவிட்டு வாயைப் பிளந்து கொண்டு வேடிக்கை பார்த்தோம். அதற்குள் போலீஸார் சம்பவத்தை முடித்துவிட்டு வந்து எங்களையெல்லாம் துரத்திவிட்டார்கள். பத்து நிமிட இன்பம்.

இணையத்திலும் இதே கான்செப்ட் வேலைக்கு ஆகும். அவ்வப்போது ஏதாவது அக்கப்போரை செய்து கொண்டேயிருக்க வேண்டும். கூட்டம் சேர்த்துவிடலாம். ஆனால் என் அரை மண்டைக்கு அதெல்லாம் ஒத்து வராது. என்னை நல்லவன் என்று சொல்லிக் கொள்ளவில்லை. தம் கட்டுவதற்கு கையாலாகாது என்கிறேன். சென்ற வாரத்தில் ஈராக் பிரச்சினையைப் பற்றி எழுதப் போனால் வத வதவென்று வந்துவிட்டார்கள். ஹிட் ரேட் வேண்டுமானால் தம் கட்டியிருக்க வேண்டும். ஆனால் சம்பந்தமேயில்லாத வேறொரு பிரச்சினைக்கு நகர்ந்துவிடத்தான் தோன்றியது. அப்படியே அமைதியாகிவிடுவார்கள். இப்படி எதையாவது பேச ஆரம்பித்துவிட்டு அமைதியாகிவிடுவதில் ஒரு நெகடிவ்வான அம்சமும் இருக்கிறது. விவாதமே உருவாவது இல்லை அல்லவா? முன்பு இப்படித்தான் - ஹிந்தி படித்தால் தவறில்லை என்று எழுதிய போது ஆளாளுக்கு மவுஸை எடுத்துக் கொண்டு அடிக்கவே வந்துவிட்டார்கள். நான்கு நாட்கள் கழித்து பதில் எழுதிக் கொள்ளலாம் என்று அடங்கிக் கொண்டேன். நான்கு நாட்களில் அந்தப் பிரச்சினையே மறந்து போனது. இப்பொழுதுதான் ஞாபகம் வருகிறது. ஆனால் என்ன செய்வது? 

நான் மட்டுமே பேசுவேன் நீங்கள் கேட்டுக் கொண்டிருங்கள் என்கிற சர்வாதிகார மனநிலை என்று இதை அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. இதுதான் யதார்த்தம். முன்பெல்லாம் பத்திரிக்கைகளில் ஏதாவது controversy உருவானால் அதற்கு மெனக்கெட்டு பதில் எழுதுவார்கள். அந்த பதில் பிடித்திருந்தால் அடுத்த இதழில் பிரசுரம் செய்வார்கள். இல்லையென்றால் குப்பையில் போட்டுவிடுவார்கள். மீறிப்போனால் ஓரிரு இதழ்களுக்கு விவாதம் இழுக்கும். அதோடு முடிந்து போகும். இணையத்தில் நிலைமை அப்படியா இருக்கிறது? ஒரு கருத்தை படித்துவிட்டு அடுத்த ஒன்றரை நிமிடத்தில் பதில் எழுதிவிடுகிறோம். இந்த பதிலுக்கு அடுத்த முக்கால் நிமிடத்தில் இன்னொரு பதில் வந்துவிடுகிறது. விவாதங்களில் நம் தலைமுறை எமோஷனலைத்தான் முன் வைக்கிறது. அறிவு பின்னால் ஒதுங்கிக் கொள்கிறது. அறிவே இல்லாமல் விவாதம் செய்கிறோம் என்று சொல்லவில்லை- அறிவை பின் தங்கச் சொல்லிவிட்டு விவாதிக்கிறோம். இந்தச் சூழலில் விவாதம் செய்வதற்கு எல்லோராலும் இயலுவதில்லை. அப்படியே இறங்கினாலும் கொஞ்ச நேரத்திலேயே களைத்துப் போய்விடுவோம். 

இணையத்தில் அதிகப்படியாக சண்டைக்குத் தயாரானால் இங்கேயே அமர்ந்து கொள்ள வேண்டியதுதான். இப்பொழுதே கூட ஒரு நாளின் கணிசமான நேரத்தை இணையம் எடுத்துக் கொள்கிறது. இனியும் நேரத்தை அதிகமாக்கினால் நிலைமை மோசமாகிவிடும். அந்தக் காலத்தில்- சங்க காலத்தில்- நாழிகைக் கணக்கர் என்றொரு வேலை இருந்திருக்கிறது. அவரது வேலையே நேரத்தைக் கணக்கிடுவதுதான். இரவு பகல் பாராமல் நேரத்தைக் கணக்கிட்டபடியே இருப்பார்களாம். கணக்கிட்ட நேரத்தை அரசனுக்கு இசைப்பாடல்கள் வழியாக அறிவிப்பார்கள். குடைச்சல் பிடித்த வேலை இது. இந்த நாழிகைக் கணக்கரின் நவீன வடிவம்தான் இணையப் பயனாளிகள். அவர்கள் ராப்பகலாக நேரத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். நாம் ராப்பகலாக மானிட்டரையே பார்த்துக் கொண்டிருக்கிறோம். ரயில் நிலையம், விமான நிலையம் போன்ற இடங்களில் பார்க்க வேண்டுமே- அத்தனை பேரின் கைகளிலும் மொபல்தான். அத்தனை மொபைலிலும் ஃபேஸ்புக்தான். 

இது ஒரு Trap. மக்கள் எந்தவிதத்திலும் நகர்ந்துவிடாமல் இணைய நிறுவனங்கள் பார்த்துக் கொள்கிறார்கள். சமூக வலைத்தளங்கள் நிறைய சைக்யாட்ரிஸ்ட்களை வேலைக்கு வைத்திருப்பதாக நண்பன் ஒருவன் சொன்னான். இதில் எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை- அவர்களது நோக்கமெல்லாம் தங்களது பயனாளிகளை எப்படி எமோஷனலாக பிணைத்து வைத்திருப்பது என்பதுதான்- மனைவியை விடவும் ஃபேஸ்புக் முக்கியம். மகனைவிடவும் ட்விட்டர் முக்கியம், வாழ்க்கையில் மற்ற எல்லாவற்றையும் விட கூகிள் ப்ளஸ் முக்கியம். 

வெளிப்படையாக ‘உங்களுக்கு மனைவி முக்கியமா? ஃபேஸ்புக் முக்கியமா?’ என்றால் மனைவி என்றுதான் சொல்வோம். ஆனால் காலையில் கண் விழித்தவுடன் ஃபேஸ்புக்கைத் திறக்கத் தோன்றும். ‘மகன் தான் முக்கியம்’ என்று நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் இரவு நேரத்தில் அவன் நமது ட்விட்டர் செயல்பாட்டில் குறுக்கீடு செய்தால் சுள்ளென்று உச்சியில் கோபம் ஏறும். மனைவியோ கணவனோ- கம்யூட்டரையும் மொபைலையும் மூடி வைக்கச் சொன்னால் நம்மையுமறியாமல் பதற்றமடைவோம். இதுதான் சமூக வலைத்தளங்களைப் பொறுத்தவரையிலும் ‘எமோஷனல் பாண்டிங்’. இதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். Addiction என்று மேம்போக்காகச் சொல்லிவிடலாம். ஆனால் இதன் மனோவியல் கூறுகள் மிகச் சிக்கலானவை. 

இணையத்தில் நாம் உருவாக்கும் பிரச்சினைகள், சண்டைகள், அடுத்தவர்கள் நம்மை கவனிப்பதற்காகச் செய்யும் தகிடுதத்தங்கள் என எல்லாவற்றையும் இந்த மனோவியல் கூறுகளோடு இணைத்துப் பார்க்க முடியும். சமூக வலைத்தளங்கள் உருவாக்கும் இத்தகைய மனோவியல் சிக்கல்களைப் பற்றிய ஆராய்ச்சிகள் இன்னமும் நம் நாட்டில் தொடங்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். ஆனால் மேலை நாடுகளில் ஆரம்பித்துவிட்டார்கள். 

மக்களை எப்படி தங்களின் சமூக வலைத்தளங்களுடன் தொடர்ந்து பிணைத்து வைத்திருப்பது என்பதில்தான் அந்நிறுவனங்களின் வெற்றியும் இந்த சமூக வலைத்தளங்களுடனான எமோஷனல் பாண்டிங்கை எப்படி துண்டித்துக் கொள்வது என்பதில்தான் நம் வெற்றியும் இருக்கிறது. எப்படியும் நாம்தான் தோற்கப் போகிறோம். ஏனென்றால் இது கார்பொரேட் உலகம். இல்லையா?

11 எதிர் சப்தங்கள்:

வல்லிசிம்ஹன் said...

நாம்தான் தோற்கப் போகிறோம். இல்லை தோற்கக் கூடாது. அடுத்த தலைமுறை நிறைய மாறிவிட்டது.நாமும் விலகிப் போனால் நஷ்டம் நமக்குத்தான். இதுபோல ஒரு முகநூல் பழக்கம் நம் தனிமையை அதிகப் படுத்தும். நன்றாக அலசி இருக்கிறீர்கள் மணிகண்டன். விடுதலை ஆகும் வழியைப் பார்க்கணும்.

ராஜி said...

நீங்க சண்டையை வேடிக்கைப் பார்ர்க்கும் அளவுக்கு தைரியமான ஆளா!? நான் அங்கிருந்து நகர்ந்துடுவேன்.

”தளிர் சுரேஷ்” said...

சரியாக சொன்னீர்கள்! இணைய மோகம் அதிகரித்துவிட்டது!

கரந்தை ஜெயக்குமார் said...

இணையம் அலைபேசி போன்றவற்றால் குடும்பத்தில உள்ள உறுப்பினர்களே, தனித் தனி தீவாகத்தான் இருக்கிறார்கள்
தம 1

அமர பாரதி said...

இது இன்னும் அதிகமாகத்தான் ஆகும். ஆனாலும் டீ.வி சீரியல் பார்த்து மெண்டல் ஆவதற்கு இது பரவாயில்லை தான்.

Yarlpavanan said...

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்

Muthuram Srinivasan said...

எல்லாம் சரி! எப்பூடி டெய்லி ஒரு மேட்டர் புடிக்கிறீங்க. அந்த ரகசியத்தை சொல்லுங்க... வீட்ல ஏதாவது சப்போர்ட் பண்றாங்களா?

நெல்லைத் தமிழன் said...

முக'நூல், ட்விட்டர் இதிலெல்லாம் ஏன் இருக்க வேண்டும்? தேவையான மேட்டரை மட்டும் படித்துவிட்டு விலகிப்போகக் கூடாதா? More information invites more headache.

நீங்கள் குறிப்பிட்டதுபோல் நாம் எல்லாரும் எமோஷனலாக எதிர்வினை புரிகிறோம். அதனால் யாருக்கும் எந்தப் பிரயோசனமும் இல்லை.

sivakumarcoimbatore said...

நன்றாக அலசி இருக்கிறீர்கள் மணிகண்டன் sir...

Sathish said...

corporatukal makkalai mayakka ninaikinrana

சேக்காளி said...

//துல்லியமாகச் சொன்னால் சராசரியாக மூவாயிரத்துச் சொச்சம்தான்//
என்னது மூவாயிரமா?