Jul 14, 2014

புத்தகங்கள் இடம் சேர்ந்து கொண்டிருக்கின்றன


தோழர் வா.மணிகண்டன் அவர்களுக்கு,

அன்பு வணக்கங்கள். 

தாங்கள் நம் பள்ளிகளுக்கு உரூபாய் பத்தாயிரம் மதிப்பிலான நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை வழங்கி மகிழ்வித்துள்ளீர்கள், நன்றிகள். 

ஒரு எழுத்தாளராய் தங்கள் படைப்பின் ஆக்கத்தை எங்கள் பள்ளிகளுக்கு ஆக்கவழி செலவிட்டது சிறப்பிற்குரியது. எழுத்தின் வலிமையை உணர்ந்ததால்தான் பள்ளிகளுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்ற நூல்களை வழங்கும் சிந்தனை உங்களுக்கு ஏற்பட்டிருக்க முடியும். வணிக எழுத்தாளர்களுக்கு வாய்க்காத ஒரு சிறப்பு இது.

தாங்கள் வழங்கிய நூல்களை நேற்றைய முன்நாள் (காரிக்கிழமை) டிஸ்கவரி புக் பேலசில் சென்று நேரில் பெற்றுக் கொண்டோம். இன்று காலை பள்ளி கூடுகை முடிந்தவுடன் எம் குழந்தைகள் அவற்றைப் பெற்று உள்ளம் பூரித்தனர்.

இந்நூல்களெல்லாம் எங்களுக்கும் எங்கள் குழந்தைகளுக்கும் மிகுந்த பயன் தருவன.

எங்கள் குழந்தைகள், ஆசிரியர்கள் சார்பிலும் எங்கள் உள்ள அன்பையும், நன்றியையும் தெரிவித்து மகிழ்கிறோம்.

தங்கள் வருகை எங்களுக்கு இன்னும் மகிழ்ச்சியூட்டும். வாருங்கள் எங்கள் குழந்தைகளை நேரில் காண, கண்டு பேச..

நன்றி

தோழமையுடன்,
வெற்றிச்செழியன்
பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளி, குன்றத்தூர்.

                                                                ***

அன்புள்ள வெற்றிச்செழியன் அவர்களுக்கு,

வணக்கம்.

இதைத்தான் எதிர்பார்த்தேன். தேர்ந்தெடுக்கும் புத்தகங்கள் பயனுள்ளவையாக இருக்குமா என்ற சந்தேகம் இருந்து கொண்டேயிருந்தது. உங்களின் கடிதம் மகிழ்ச்சியளிக்கிறது. குழந்தைகளை வாசிக்கச் சொல்லி அவர்களின் கருத்து என்னவாக இருக்கிறது என்பதையும் தெரியப்படுத்துங்கள். குறைகள் இருப்பின் அடுத்த முறை சரி செய்து கொள்ள உதவும். 

காளான்களைவிடவும் அதிகமாக பெருகிக் கிடக்கும் ஆங்கிலப் பள்ளிகளுக்கிடையில் தமிழ்வழிப்பள்ளியை அதுவும் சென்னையில் நடத்துவது எவ்வளவு சிரமம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. உங்களைப் போன்றவர்களுக்கு எவ்வளவு உதவிகளைச் செய்தாலும் தகும். 

உங்களைவிடவும் கூட தமிழ்வழிக்கல்வியில் நம்பிக்கை வைத்து தங்கள் பிள்ளைகளைச் சேர்த்திருக்கும் பெற்றோர்களின் திசை நோக்கி ஒரு வணக்கம் சொல்லத் தோன்றுகிறது. 

ஆங்கில வழிக்கல்வி நிலையங்களில் அரும்பு, மொட்டு வகுப்புகளில் சேர்பதற்கும் கூட அறுபத்தைந்தாயிரத்திற்கும் குறைவில்லாமல் பணம் கறக்கிறார்கள். Playgroup இல் சேர்க்கவும் கூட இதே தொகைதான். பணம் கொடுக்கத் தயாராக இருந்தாலும் கூட பல பள்ளிகளில் நவம்பர் மாதத்திலேயே இடம் இல்லை என்று அறிவித்துவிடுகிறார்கள். இலட்சங்களில் நன்கொடையும், அமைச்சர்கள், எம்.பிக்களின் பரிந்துரைகள் என்று அலைக்கழிக்கிறார்கள். 

எங்கள் பள்ளியில் படித்தவர்கள்தான் ஐ.ஐ.டியில் சேர்கிறார்கள் என்கிறார்கள். எங்கள் பள்ளியில் படித்தவர்கள்தான் சிவில் சர்வீஸில் தேர்ச்சியடைகிறார்கள் என்கிறார்கள். இதையெல்லாம் பார்ப்பதற்கு உண்மையிலேயே பயமாக இருக்கிறது.  

உங்களைப் போன்றவர்களின் முயற்சியினால்தான் சிறிதளவாவது மாற்றம் வரும் என நம்புகிறேன். தமிழ் வழிக்கல்வி மாணவன் அல்லது மாணவியை மருத்துவர், பொறியாளர் ஆக்குவது மட்டுமில்லாமல் சாமானியர்கள் எதையெல்லாம் அடைய முடியாத உயரங்கள் என்று நினைக்கிறார்களோ அவற்றையெல்லாம் அடைவதற்கான பயிற்சிகளை தமிழ் வழிக்கல்வி நிறுவனங்கள் அளிக்க வேண்டும்.

அத்தி பூத்தாற்போல எப்பவாவது ஒரு தமிழ் வழி மாணவன் சிவில் சர்வீஸில் தேர்வு பெறுவதெல்லாம் சாதனையே இல்லை. ஒவ்வொரு வருடமும் பத்து அல்லது இருபது பேராவது தேர்ச்சியடைய வேண்டும். ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களின் தேர்வுகளை உடைப்பதற்கான பயிற்சி எட்டாம் வகுப்பிலேயே  மேற்கொள்ளப் பட வேண்டும். 

இதையெல்லாம் சாதிப்பதன் மூலம் தமிழ் வழிக்கல்வி என்றாலே ‘குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுபவர்கள்’ என்கிற சாமானிய மனநிலையை உங்களைப் போன்றவர்களால்தான் மாற்ற முடியும்  என நம்புகிறேன். உங்களுக்குத் தோள் கொடுப்பதற்காக சிறு துரும்பைக் கிள்ளிப் போட்டிருக்கிறோம்.

இந்த உதவியில் என்னுடைய பங்களிப்பு மிகச் சிறியது. நிதி வழங்கிய பிற நண்பர்களுக்குத்தான் அத்தனை நன்றியும் சேரும். இந்தப் பணியை ஒழுங்குபடுத்திய டிஸ்கவரி புக் பேலஸ் சஞ்சய் அவர்களுக்கும் நன்றி.

புத்தகங்களை வழங்கிய பள்ளிகளில் குழந்தைகளுக்கான வொர்க்‌ஷாப் மாதிரியாகவோ அல்லது குழந்தைகளுக்கான கதை சொல்லும் நிகழ்ச்சி போன்றோ ஏதேனும் ஏற்பாடு செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறேன். இந்தத் துறைகளில் செயல்பட்டு வருபவர்களான தம்பிச்சோழன், விழியன் போன்றோரிடம் பேசியிருக்கிறேன். அனைத்தும் ஒத்துவரும் சமயத்தில் நிச்சயமாக உங்கள் பள்ளியில் சந்திப்போம்.

உங்களுக்கும் பள்ளிக்கும் மனப்பூர்வமான வாழ்த்துகள்.

மிக்க அன்புடன்,
மணிகண்டன்

3 எதிர் சப்தங்கள்:

மு. கோபி சரபோஜி said...

உங்களின் இந்த பெரிய முயற்சியில் நானும் அணில் போல் பங்கு கொள்ள வாய்ப்பளித்தமைக்கு நன்றி அண்ணா.....

ராஜி said...

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் சகோ!

Unknown said...

வணக்கம். காலங்கடந்து உங்களுக்கு எழுதுவதற்காக மிகவும் வருந்துகிறேன். சொந்த வேலை காரணமாகச் சொந்த ஊருக்குச் சென்று விட்டதால் இந்தக் காலத்தாழ்வு தவிர்க்க முடியாமல் நேர்ந்து விட்டது.உங்களது உயர்ந்த அறிவுக் கொடைக்கு நான் தலை வணங்குகிறேன்; பள்ளிக் குழந்தைகள்,ஆசிரியர்கள் சார்பாகவும் தனிப்பட்ட முறையிலும் நெஞ்சுநிறை நன்றியை உரித்தாக்குகிறேன்.
தாளாளர் எழில் அவர்களும், பொருளாளர் திருப்பதி அவர்களும் உங்கள் பொத்தகக் கொடை பற்றி என்னுடன் கைபேசியில் தெரிவித்திருந்தார்கள். ஆனால் இன்றுதான் பொத்தகங்களைப் பார்த்தேன்.அனைத்தும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயன்படக் கூடிய அறிவுச் சுரங்கங்கள். எங்கள் பள்ளி நூலகத்தின் உள்ளடக்கத்தை அவை உயர்த்தும். நாங்கள் உங்களுக்கு மிகவும் நன்றிக் கடன் பட்டுள்ளோம்
நன்றியுடன் தங்கள் நலம் நாடும்,