Jul 1, 2014

ராக்கெட்

ஊரில் வரிசையாக ஃப்ளக்ஸ் பேனர்களைக் கட்டி வைத்திருக்கிறார்கள்
எங்கள் பள்ளியில் படித்தவன்தான் முதலிடம் என்ற
பதாகைக்கு பக்கத்திலேயே
இன்னொரு பள்ளியில் படித்து
கலெக்டராகிவிட்டவனின் விவரங்கள் இருக்கின்றன
முச்சந்தியில் இருக்கும் இன்னொரு பள்ளியில் படித்தவள்
ராக்கெட் விஞ்ஞானி ஆகிவிட்டாளாம்
அவர்களும் ஒரு பதாகையை நட்டு வைத்திருந்தார்கள்
இப்பொழுதெல்லாம்
விதவிதமான அளவுகளில் உள்ளூரிலேயே அச்செடுத்து தந்துவிடுகிறார்கள்
ஒவ்வொரு பதாகையாகக் காட்டியபடியே
நடுமண்டையில் கொட்டிக் கொண்டிருந்தாள் அந்த அம்மாக்காரி
தனது மகனை கலெக்டராகச் சொன்னாள்- அவன் அழுதான்
முதல் மதிப்பெண் எடுக்கச் சொன்னாள்- கண்களைக் கசக்கினான்
ராக்கெட் விடச் சொன்னாள்- போடி என்றான்
ஒவ்வொரு பதாகைக்கும் ஒரு கொட்டு.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவன்
புடைத்த தலையைத் தேய்த்தபடியே ட்ரவுசரைக் கழட்டி
ராக்கெட் விட்டான்
கலெக்டரானவனும் முதலிடம் பெற்றவனும் நனைந்து கொண்டிருந்தார்கள்
எனக்கும் ஆசையாகத்தான் இருந்தது
பரிசுகளை வழங்கிக் கொண்டிருந்த தாளாளர்கள்
மிக உயரத்தில் இருந்தார்கள்
அத்தனை உயரத்தை அடைவது சுலபமானதாகத் தெரியவில்லையாதலால்
ஜிப்பை மேலே இழுத்துவிட்டு வந்தேன்
பையன் சிரித்துக் கொண்டிருந்தான். 

6 எதிர் சப்தங்கள்:

”தளிர் சுரேஷ்” said...

சூப்பர்!

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா

janselva said...

அத்தனை உயரத்தை அடைவது சுலபமானதாகத் தெரியவில்லையாதலால்
ஜிப்பை மேலே இழுத்துவிட்டு வந்தேன்

Unknown said...

kopam onnuthan

Uma said...

Arumai Mani.