Jul 17, 2014

பாவம்...அவளை விடுங்கய்யா

Pedal for the Planet என்றவொரு நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். பெங்களூரில்தான். பெயரே சொல்லிவிடுகிறதே- பூமியைக் காப்பதற்காக மிதி வண்டி ஓட்டுவோம் என்ற தாரக மந்திரத்தோடு ஒரு நாள் மிதிக்கப் போகிறார்கள்- மிதி வண்டியை. இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டுமானால் காசு கொடுக்க வேண்டும். அதுவும் பாட்டா செருப்பு போல ரூ. 799. ரூ. 1299 என்று வகைவாரியாக பிரித்து வைத்திருக்கிறார்கள். இது போன்ற நிகழ்வுகளால் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்களாம்.

பூமிக்காக சேவை செய்பவர்கள் எதற்காக பதிவுக்கட்டணம் வசூலிக்கிறார்கள்? நிகழ்ச்சி நடத்துவதற்கான செலவு இருக்கிறது அல்லவா? என்பார்கள். இல்லாதவனும் பஞ்சப்பயலுமா இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்கிறார்கள்? மிகப்பெரிய கார்பொரேட் நிறுவனங்கள்தான் நடத்துகிறார்கள். அதிகபட்சம் பத்து லட்சம் செலவாகுமா? இவர்களால் புரட்ட முடியாதா என்ன? ஆனால் பஞ்சத்தில் அடிபட்டவர்களைப் போல ஒவ்வொருவரிடமும் பதிவுக்கட்டணம் வசூலிக்கிறார்கள். அவை போக ஸ்பான்ஸர்களும் உண்டு. கோடிக்கணக்கில் சம்பாதித்துவிடுவார்கள். கூட்டம் சேர்ப்பதற்காக ஊர் முழுக்க பதாகைகளைக் கட்டி வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஐந்நூறு அடிக்கும் ஒரு பதாகை. பதாகைகளை துணியிலா செய்கிறார்கள்? மக்காத ப்ளாஸ்டிக்தானே. அந்த ப்ளாஸ்டிக் பதாகைகளை வீதிக்கு வீதி வைக்கும் இவர்கள்தான் இயற்கையைக் காப்பவர்கள். 

சில நாட்களுக்கு முன்பு ‘இவர் இயற்கை ஆர்வலர் சார்’ என்று ஒருவரை அறிமுகப்படுத்தினார்கள். ஜீன்ஸ் பேண்ட்டும், லெதர் ஷுவுமாக தூள் கிளப்பினார். அவர் ஜீன்ஸ் அணிவதைத் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் தன்னை இயற்கை ஆர்வலர் என்று சொல்லிக் கொண்டு ஜீன்ஸ் அணிவதுதான் சங்கடமாக இருக்கிறது. ஒரு லுங்கி தயாரிக்க நான்காயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகிறது என்று எழுதுகிறார்கள். ஒரு ஜீன்ஸ் துணி தயாரிக்க எத்தனை ஆயிரம் லிட்டர் தேவைப்படும் என்று நினைக்கிறீர்கள்? வாயடைத்துப் போகிறது.

சில மாதங்களுக்கு முன்பாக சமூக சேவை செய்யலாம் என்று ஒரு பள்ளிக்கு அழைத்துச் சென்றார்கள். காகிதப் பைகள் (Paper bag) செய்வது எப்படி என்பதை குழந்தைகளுக்குச் சொல்லித்தருவதுதான் நோக்கம். நல்ல நோக்கம்தான். ஆனால் பள்ளியில் இறங்கியவுடனே ஆளாளுக்கு ஒரு ப்ளாஸ்டிக் பாட்டிலில் குடிநீர் வழங்கினார்கள். மதிய உணவுக்கு அலுமியத் தாள்களில் கட்டப்பட்ட உணவுகள். பூமியைக் காப்பதற்காக காகிதப் பைகளைச் செய்வோம் என்று சொல்லிக் கொண்டே ப்ளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீரை உறிஞ்சிக் கொண்டிருந்தோம். மாலையில் கிளம்பும் போது ஆயிரக்கணக்கான பாட்டில்களும், அலுமினிய காகிதங்களும் கிடந்தன. இவ்வளவுதான் கார்பொரேட் ரெஸ்பான்ஸிபிளிட்டி. 

கார்போரேட் நிறுவனங்களால் நிகழ்த்தப்படும் இது போன்ற நிகழ்வுகள் மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்குகிறது என்றால் கூட செலவு செய்தால் பரவாயில்லை என்று யோசிக்கலாம். ஆனால் தொண்ணூற்றைந்து சதவீதம் வெட்டி பந்தாவுக்குத்தான் பயன்படுகிறது. இங்கே எத்தனை பேருக்கு இயற்கை குறித்த விழிப்புணர்வு இருக்கிறது?

ஒன்றரை நிமிடங்கள் நிற்கவேண்டிய ட்ராபிக் சிக்னல்களில் முப்பது வினாடி கூட வண்டியை நிறுத்தி வைக்காதவர்கள்தான் அதிகம். வண்டி உறுமிக் கொண்டேதான் இருக்கும். அந்த ஒன்றரை நிமிடங்களுக்கு ஏ.சியை அணைத்து வைக்க முடியாதல்லவா? வியர்க்கும். அதைவிடவும் கூட சில வித்தியாசமான காரணங்களைச் சொல்வார்கள். வண்டியின் ஜன்னலைத் திறந்து வைத்திருந்தால் வெளிப்புகை உள்ளே வந்து கார் அழுக்காகுமாம். பூமி எப்படி நாறினாலும் பரவாயில்லை- கார் அழுக்காகக் கூடாது. நகரச் சாலைகளில் பொறுமையில்லாமல் தாறுமாறாக ஒலியெழுப்பவர்கள் யாரென்று பார்த்தால் கார்போரேட் கலாச்சாரத்தோடு தொடர்புடையவர்கள்தான் கணிசமாக இருப்பார்கள். ஒற்றை ஆளுக்காக ஸ்கார்ப்பியோ, ஃபார்ச்சூனர் என்ற  பெரிய வண்டிகளில் அலுவலகத்திற்கு வருபவர்கள் யார்? இவர்கள்தான் சமூகப் பொறுப்புடையவர்கள்- இந்த பூமியைக் காப்பவர்கள்.

பெங்களூர் மாநகராட்சியில் வனத்துறை என்ற தனிப்பிரிவே இருக்கிறது. அங்கு சில நண்பர்கள் பேசி எங்கள் லே-அவுட்டில் ஐந்நூறு மரக்கன்றுகளை நட்டுவதற்கு அனுமதி வாங்கினார்கள். வனத்துறையே ஆள் அனுப்பி குழி தோண்டி, செடிகளை நட்டு, தடுப்பும் அமைத்துவிடுவார்கள். சென்ற வாரத்திலிருந்து இந்த வேலை நடந்து கொண்டிருக்கிறது. முந்நூறு மரக்கன்றுகள் நட்டப்பட்டுவிட்டன. நேற்று வந்த மாநகராட்சி அதிகாரிகள் நிறுத்தச் சொல்லிவிட்டார்கள். காரணம் கேட்டோம். அவரவர் வீட்டுக்கு முன்னால் நடப்பட்ட செடிகளுக்குக் கூட யாருமே தண்ணீர் ஊற்றவில்லை. ஏற்கனவே நட்டப்பட்ட முந்நூறும் பிழைப்பது கஷ்டம்; அப்படியிருக்கையில் எதற்காக இன்னும் இருநூறு செடிகளை நட்டு வீணடிக்க வேண்டும் என்று நிறுத்திவிட்டார்கள். அவர்கள் சொல்வதும் சரியான காரணம்தான். ஒரு வாளி தண்ணீர் எடுத்து வந்தால் மூன்று நான்கு செடிகளுக்கு ஊற்றிவிடலாம். ஆனால் யாரும் ஊற்றவில்லை. வாடிக் கொண்டிருக்கின்றன. அவ்வளவுதான் நம் சமூகப் பொறுப்புணர்வு. இதில் முரண்தொகை என்னவென்றால் எங்கள் லே-அவுட்டிலிருந்து இருபது பேராவது Pedal for the planet இல் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

இப்பொழுதெல்லாம் பூமியைக் காக்கிறோம் என்று மால்களில் ப்ளாஸ்டிக் பைகளுக்கு இரண்டு ரூபாயிலிருந்து ஐந்து ரூபாய் வரைக்கும் பில் போடுகிறார்கள். யாருக்கு இலாபம்? அவர்களுக்குத்தான். அந்தப் பையின் அடக்கவிலை ஐம்பது காசு அல்லது ஒரு ரூபாய்தான் ஆகும். ஆனால் நம்மிடமிருந்து ஐந்து ரூபாய் வாங்கிக் கொள்கிறார்கள். இயற்கையைக் காப்பவர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? ப்ளாஸ்டிக் பைகளையே தராமல் அதற்கு பதிலாக காகிதப் பைகளைத் தர வேண்டும். ஆனால் அதைச் செய்ய மாட்டார்கள். கலர் கலராக வழுவழுப்பான ப்ளாஸ்டிக்கில் கண்ணைப் பறிக்கும் படி முன்னாலேயே வைத்திருப்பார்கள். ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து பொருட்களை வாங்குபவன் ஐந்து ரூபாய்க்காகவா யோசிக்க போகிறான்? பில்லோடு சேர்த்து ஐந்து ரூபாயைக் கொடுத்து கவரை வாங்கி வருகிறார்கள்.

வீட்டுக்கு பக்கத்தில் ஒரு மலையாளி கடை நடத்துகிறார். அவர் ஆரம்பத்தில் ப்ளாஸ்டிக் கவர்களைத் தருவதை தவிர்த்துவந்தார். இப்பொழுது கொடுக்க ஆரம்பித்துவிட்டார். விசாரித்தால் ‘கறிவேப்பிலை வாங்கினால் கூட ப்ளாஸ்டிக் பையில் போட்டுத் தரச் சொல்லி எதிர்பார்க்கிறார்கள்’ என்கிறார். அவர் வியாபாரி. நொரண்டு பேச முடியாது. அடுத்த கடைக்கு போய்விடுவார்கள். எப்படியோ போகட்டும் என்று கொடுக்கிறார். இவ்வளவுதான் நம் விழிப்புணர்வு.

யாரையும் குறை சொல்லவில்லை. நான் மட்டும் யோக்கியனா? அது இல்லை. ஆனால் சற்றேனும் விழிப்பாக இருக்கலாம் அல்லவா? Greenathon, Run for the green earth என்று எதை எதையோ சொல்லி அதிலிருந்தும் கூட காசு பறிக்கும் கார்போரேட் களவாணிகள்தான் திரும்பிய பக்கமெல்லாம் இருக்கிறார்கள். நாமும் மெனக்கெட்டு ஆயிரக்கணக்கில் பணத்தைக் கொடுத்து பதிவு செய்துவிட்டு ஒரு நாள் பிழைப்பையும் கெடுத்துவிட்டு படம் எடுத்து ஃபேஸ்புக்கில் படம் போட்டுக் கொள்கிறோம். யாருக்கு பயன்படுகிறது இதெல்லாம்? ஆயிரம் ரூபாய் கூட வேண்டியதில்லை. ஐம்பது ரூபாய்க்கு ஒரு நல்ல நாற்று வாங்கிவிடலாம். நூறு ரூபாய் கொடுத்தால் மூங்கில் தடுப்பு கிடைக்கிறது. அரை அடி ஆழத்திற்கு தோண்டினால் போதும். நம்மால் தோண்ட முடியாது என்றால் நூறு ரூபாய் கொடுத்தால் கால் மணி நேரத்தில் தோண்டிக் கொடுத்துவிடுவார்கள். செடியை நட்டு இரண்டு மாதங்களுக்குத் தண்ணீர் ஊற்றினால் உயிர் பிடித்துக் கொள்ளும். வருடம் ஒரு செடி நட்டால் போதும். அதைவிடவா இந்த கார்போரேட் நிகழ்ச்சிகள் இந்த பூமிக்கு நன்மையைச் செய்துவிடுகின்றன?

ஏமாற்றுகிறார்கள்.

அக்குவாஃபினாவின் பாட்டிலில் எழுதியிருப்பான் பாருங்கள் ‘இங்கேயிருந்து எடுக்கும் தண்ணீரின் அளவை விட இந்த பூமிக்குத் திருப்பித் தருகிறோம்’ என்று. கேப்மாரிகள். நம்பிக் கொள்ள வேண்டியதுதான். ஏற்கனவே பூமாதேவி கதறிக் கொண்டிருக்கிறாள். காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் ஆளாளுக்கு அவளைத் தூக்கிக் கொண்டு புதருக்குள் போகிறார்கள். பாவம் அவள்.

19 எதிர் சப்தங்கள்:

Shankari said...

Very true...

Actually we pay 5 or 6 rupees to get the plastic bag - profit + free advertisement also for them.. Why cant they give blank cover?

Salahudeen said...

நன்றி மணி கார்பரேட் கயவர்களை தோல் உரித்து காட்டி உள்ளீர்கள் ஒவொரு தனி மனிதனும் இயற்கையை காக்க கடமை பட்டுள்ளான் உங்களால் முடிந்த அளவு மரம் வைத்து வளர்த்து வாருங்கள் இதை நான் கடந்த பத்து வருடங்களாக செய்து வருகிறேன்.மழை காலம் வருவதற்கு ஒரு மாதம் முன் மரத்தை வைத்து தண்ணீர் ஊற்ற தொடங்கினால் பின்பு இரண்டு மாதங்களுக்கு தண்ணீர் ஊற்ற தவை இல்லை பெய்யும் மழையில் செடி தானகவே வளர்ந்து விடும்.
நான் திருவாரூர் மாவட்டத்தை சேர்த்தவன் எனது சிறு வயதில் ஆறு,குளங்களில் தண்ணீர் மற்றும் தான் இருக்கும் ஆனால் இப்பொழுது சாக்கடை நீரும் பிளாஸ்டிக் குப்பைகலுமே இருந்கின்றன.வரும் கால நம் சந்ததிகளுக்கு நாம் என்ன தீங்கு செய்து கொண்டு இருக்கிறோம் என ஒவொருவரும் எண்ணி பார்க்க வேண்டு

Unknown said...

Amazing writeup. 100% true.

ராஜி said...

என் வீட்டுக்காரர் ஃபேண்ட் பாக்கட்டில் எப்பவும் துணிப்பை இல்லன்னா ஏற்கனவே வீட்டில் இருந்த பிளாஸ்டிக் பைகளை வைத்திருப்பார். முடிந்தளவு பிளாஸ்டிக் பைகள் வாங்குவதை தவிர்ப்பார். அதேப்போல, வீட்டு விசேசங்களுக்கு காகித பை, காகித தட்டு, காதித டம்ப்ளார்களையே பயன்படுத்துவார்.

அமர பாரதி said...

நல்ல பதிவு மணி கண்டன். நகரங்களில் இப்படியான ஒருவகை பொறுப்பற்ற தனம் என்றால் கிராமங்களில் வேறு வகை. சிறிதளவில் நிழல் விழுந்தாலோ அல்லது இலைகள் பக்கத்து தோட்டத்தில் விழுந்தாலோ உடனடியாக பஞ்சாயத்து தான். நிழல் விழுவது சில சதுர அடிகள் வெள்ளாமை பாதிக்கப் படுவதற்காக கிட்டத்தட்ட அனைத்து கிராமங்களிலும் மரங்களை வெட்டி விட்டார்கள். ஒரு உதாரணத்துக்கு அரச மரத்தை தேடிப் பாருங்கள்.

Aliar bILAL said...

சவுக்கு தளத்த்ில் Mineral Water, the untold story 1 கட்டுரை படித்த்து முடித்தேன்..... தற்போது நிசப்தத்தில் " அக்குவாஃபினாவின் பாட்டிலில் எழுதியிருப்பான் பாருங்கள் ‘இங்கேயிருந்து எடுக்கும் தண்ணீரின் அளவை விட இந்த பூமிக்குத் திருப்பித் தருகிறோம்’ என்று|.... what a co-inside...

Bala said...


#அக்குவாஃபினாவின் பாட்டிலில் எழுதியிருப்பான் பாருங்கள் ‘இங்கேயிருந்து எடுக்கும் தண்ணீரின் அளவை விட இந்த பூமிக்குத் திருப்பித் தருகிறோம்’ என்று. கேப்மாரிகள் # - real slap. Now a days I started carrying water from home & want to avoid buy bottles.

Ela said...

//காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் ஆளாளுக்கு அவளைத் தூக்கிக் கொண்டு புதருக்குள் போகிறார்கள். பாவம் அவள்.// Simply superb.

Kalai Amuthan said...

Please share the savukku url. I miss it .

”தளிர் சுரேஷ்” said...

அருமையான சவுக்கடி வார்த்தைகள்! முரண் தொகையான இந்த நிகழ்வுகளை புறக்கணித்து விடுவதே சரி!

BalHanuman said...

http://newsavukku.com/6912

Siva said...

I am working in a corporate office. The owner is a multi national company owner. You know he is a Tamilian. In office almost 80% of them speaks tamil. In office no single Indian type toilets. Every where is western type. Each toilet room 5 roll papers in week. In a floor there are 15 toilet rooms. Totally 15x5= 75 rolls. Totally 3 floors. We can say in a week, they are using around 250 roll papers. In a month they use 1250 paper rolls.

I feel sad when i used to see those paper rolls. How many trees would have been cut for 1250 roll papers? Every one is indian. Why can't the corporate build indian type toilet?

Prabhu said...

Indian type toilet is water intensive and prone to dirt and uncleanliness.It requires water usage before and after use.water for the floors etc. In public places like your office, it will require more maintenance personnel per floor to ensure it is neat and clean. In western type toilet, the water usage is only within the closet and outside closet it is totally dry..It has lesser water consumption since only flushing is done.The tissue paper is made from recycled paper.In Europe and America, the plumbing is very rugged so as to allow for flushing of paper and napkins in toilets.In Asia, flushing of napkins causes problems of blockage.In western toilets you compromise on your personal hygiene for public hygiene and in Indian system you compromise public hygiene for personal hygiene.

Yarlpavanan said...

பயன் தரும் பதிவு

pradeep said...

இறுதி வரி..அதிரடி!!!

Aba said...

கடைசி லைன்... இதைவிட பொட்டுல அடிச்ச மாதிரி சொல்ல முடியாது....

சேக்காளி said...

//கேப்மாரிகள்//
வெளக்கம் ப்ளீஸ்.

Malliga Pandian said...

Can i get Bangalore forest dept address and some persons contact number?

செந்தில்குமார் said...

தெரிந்தும் கண்டுகொள்ளாமல் ஓடிக்கொண்டிருக்கும் நாமும் கொஞ்சமாவது மாறவேண்டியது காலத்தின் கட்டாயம்.