வேலூரில் எம்.டெக் சேர்ந்த போது இரண்டு பேர் தங்கும் அறை ஒன்றை விடுதியில் ஒதுக்கினார்கள். எனக்கு வாய்த்தவன் சென்னைக்காரன். அங்கேயே பி.ஈ முடித்துவிட்டு முதுநிலை படிப்புக்காக இங்கு வந்திருக்கிறான். தென்னை ஓலையின் ஈர்க்குச்சி போல இருந்தான். உயரமும் ஜாஸ்தி. அவனை நல்லவன் என்று நினைப்பதா கெட்டவன் என்று ஒதுக்குவதா என்று தெரியாத மாதிரியான முகவாகு. அம்மா அப்பாவோடு நன்றாகத்தான் பேசினான். என்ன இருந்தாலும் நான்கு வருடம் பி.ஈ படித்திருக்கிறான் அல்லவா? எப்படியும் பக்குவம் இருக்கும் என்று நம்பிக்கையிருந்தது.
அம்மா அப்பாவை தொடரூர்தியில் ஏற்றிவிட்டு வந்த போது அறையில் தனக்கு தோதான இடத்தை ஆக்கிரமத்திருந்தான். அவன் பிடித்து வைத்திருந்த இடத்தில்தான் ஜன்னல் இருந்தது. திறந்து வைத்தால் வெகுதூரம் வரைக்கும் தெரியும். எனக்கு பக்கத்தில் சுவர்தான் இருந்தது. ஜன்னல் போனது கூட பிரச்சினை இல்லை. முதல் நாள் ராத்திரியில்- முதல் ராத்திரி இல்லை- முதல் நாள் ராத்திரியில் சாப்பாடு எல்லாம் முடித்துவிட்டு வந்த போது அறைக்கதவை பூட்டினான். முகம் தெரியாதவனோடு இரவில் தங்குவது சற்று பயமாகத்தான் இருந்தது. ஏதாவது செய்தால் எந்த இடத்தில் உதை விட வேண்டும் என்றெல்லாம் கற்பனையை ஓட்டி வைத்திருந்தேன். அவன் பூட்டுவதற்கான ஆயத்தங்களைச் செய்த போது இன்னமும் பயமாக இருந்தது. பூட்டுவது என்றால் எப்படி? விடுதியின் உட்பக்கமாக ஒரு கம்பி மாதிரியான தாழ்ப்பாள்தானே இருக்கும்? அது போதாதென்று இரும்புக்கம்பியை அதன் மீது முறுக்கி ஒரு அதில் ஒரு பூட்டை கோர்த்து பூட்டி சாவியை என்னிடம் கொடுத்தான். திகிலடைந்துவிட்டேன். அவசரமாக பாத்ரூம் போகலாம் என்றால் கூட திறக்க முடியாத முறுக்கு அது.
என்னவோ நடக்கப்போகிறது என்பது மட்டும் உறுதியாகிவிட்டது. எதற்கு இப்படியெல்லாம் பூட்டுகிறாய் என்று நாமாகவே கேட்கலாமா அல்லது கேட்கக் கூடாதா என்று குழப்பமாக இருந்தது. அவனது கட்டிலில் அமர்ந்து ஹி ஹி என்றான். அது வழிவதைப் போலவே இருந்தது. பக்கத்திலிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் மெதுவாக எட்டிப்பார்த்தேன். நல்லவேளையாக மீசை அடர்த்தியாக இருந்தது. அப்படியிருந்தும் ஹிஹி என்கிறான். இந்தச் சிரிப்புக்கு எப்படி பதில் சிரிப்பைக் கொடுப்பது என்று தெரியவில்லை. பற்கள் வெளியில் தெரியாமல் உதடுகளை மட்டும் இரண்டு பக்கமாக இழுத்தேன். அது அருகம்புல் கோடு மாதிரியாக ஒரு சிரிப்பைக் காட்டியது. இவனுக்கெல்லாம் இது போதும்.
இனி தப்பிப்பதற்கான முஸ்தீபுகளில் ஈடுபட வேண்டும். ஒரு முழு இரவையும் அந்த அறையில்தான் கழித்தாக வேண்டும். வேறு யாரையும் அங்கு தெரியாது. எப்படியும் தன்கையேதான் தனக்குதவி. அவன் முரட்டு ஆளாக இல்லை என்பதால் பெரிய பிரச்சினை இருக்காது என்ற நம்பிக்கை இருந்தது. மண்டைக்குள் குறுக்கும்நெடுக்குமாக யோசனைகள் ஓடிக் கொண்டிருந்தன.
இரண்டு தலையணைகள் இருந்தன. முதலில் அவற்றில் ஒன்று தலைக்கு இன்னொன்று கால்மேட்டுக்கு என்று யோசித்திருந்தேன். இப்பொழுது திட்டம் மாறிவிட்டது. கால்மேட்டுக்கு பதிலாக கால்களுக்கிடையில் இறுக்கமாக வைத்து மேலே போர்வையை போர்த்திக் கொள்ள வேண்டும். தலைமேட்டிலேயே ஒரு ப்ளேடு ஒன்றையும் எடுத்து வைத்துக் கொள்ளலாம் என்று பெட்டியைத் திறந்து தேடிக் கொண்டிருந்தேன். ஏதாவது பிரச்சினையென்றால் அவனது கையை அறுப்பது. என்னுடல் மீதாக அவனது கைகள் நகரத் தொடங்கும் போதே இந்த அறுப்பை நிகழ்த்திவிட வேண்டும். ஒருவேளை கட்டுப்படுத்தமுடியவில்லையென்றால் கையில் சிக்கும் வேறு எதையாவது அறுத்துவிடலாம்- அறுக்கிற அறுப்பில் துண்டாகிவிட வேண்டும். அவனுக்கு கண்ணில்படும்படியாகவே தலையணைக்குக் கீழாக ப்ளேடை வைத்தேன்.
அப்பொழுதுதான் அவனே பேச ஆரம்பித்தான். நான் சந்தேகப்படுகிறேன் என்று அவனுக்கும் தெரிந்திருக்கக் கூடும். ‘தூக்கத்திலேயே நடப்பேன். அதுவும் புது இடமாக இருந்தால் இன்னமும் பிரச்சினை. நம்ம ரூம் வேற ஐந்தாவது மாடியில் இருக்கிறது. அதனாலதான் பயமா இருக்கு’ என்றான். நம்புவதா வேண்டாமா என்று தெரியவில்லை. ‘இரவில் எதற்காவது எழுப்பினால் கூடவே வாங்க’ என்றான். பாத்ரூம் செல்வதாக இருந்தாலும் கூடவே வர வேண்டுமாம். விதி யாரை விட்டது? சரி என்று படுத்துக் கொண்டேன்.
புது இடம் என்பதனால் தூக்கமே வரவில்லை. போதாததுக்கு இவன் வேறு அழிச்சாட்டியம் செய்கிறான். அரை மணி நேரத்தில் தூங்கிவிட்டான். தூங்குகிறானோ? நடிக்கிறானோ? யார் கண்டது. ஏற்கனவே திட்டமிட்டபடி தலையணையை கால்களுக்கிடையில் இறுக்கமாக வைத்து- இந்த இறுக்கத்துக்கு ஒரேயொரு காரணம்தான் - போர்வையை தலை வரைக்கும் இழுத்து படுத்துக் கொண்டேன். தூக்கத்தில் நடப்பவர்கள் கண்களைத் திறந்து கொண்டு நடப்பார்களா? கண்களைத் திறந்து கொண்டே தூங்கினால் பார்ப்பதற்கு பேய் மாதிரி இருக்காதா? பேய்மாதிரியே எழுப்பினால் எப்படி சமாளிப்பது என்று ஏகப்பட்ட கேள்விகள். குழப்பத்திலேயே கிடந்தேன். எப்பொழுது தூங்கினேன் என்று தெரியவில்லை. ஏதேதோ கனவுகள் வந்து கொண்டிருந்தன.
திடீரென்று கண்களில் வெளிச்சம் அடிக்கிறது. விழித்துப் பார்த்தால் கதவு திறந்திருக்கிறது. அவனைக் காணவில்லை. கால்களுக்கிடையிலிருந்த தலையணை கீழே கிடந்தது. ஏதாவது செய்துவிட்டானா என்று பெருங்குழப்பம். எதுவும் நடக்கவில்லை போலிருந்தது. இருந்தாலும் இன்னமும் சந்தேகம்தான். சாவியை எப்படி எடுத்தான் என்றும் புரியவில்லை. இவையெல்லாவற்றையும் விட அவன் தூக்கத்திலேயே ஐந்தாவது தளத்திலிருந்து எட்டிக் குதித்திருந்தால் நம் கதை கந்தல். நாளை விசாரணை என்ற பெயரில் போலீஸ் ஸ்டேஷனில் ஜட்டியோடு அமர வைத்து முட்டியை பெயர்த்துவிடுவார்கள். பதறியபடியே எழுந்து போனால் பாத்ரூமிலிருந்து வந்து கொண்டிருந்தான். அவன் தூக்கத்தில் நடக்கிறான் என்றுதான் தோன்றியது. ஆனால் தெளிவாக பேசினான். ‘உங்களை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம் என்று நானே சாவியை எடுத்துக் கொண்டேன்’ என்றான். அதன் பிறகு எப்படித் தூக்கம் வரும்? தூங்கவேயில்லை.
நான்கைந்து நாட்களில் அவன் நான் நினைத்த மாதிரியானவன் இல்லை என்று தெரிந்துவிட்டது. ஆனாலும் பூட்டுகிற வைபவம் மட்டும் நிற்கவில்லை. விடுதியில் மற்றவர்களிடம் சொல்ல வேண்டாம் என்று சொல்லியிருந்தான். அதில் என்னவோ தாழ்வுணர்ச்சி அவனுக்கு. ஒவ்வொரு நாளும் பூட்டி சாவியை எடுத்து அவனால் எளிதில் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் வைத்துவிடுவேன். எதற்காக இருந்தாலும் என்னை எழுப்புவான். சில நாட்களில் எரிச்சலாக இருக்கும். ஆனால் பல சமயங்களில் பரிதாபமாகத்தான் இருக்கும். எழுந்து என்னை எழுப்புவதற்கு சங்கடப்பட்டு படுக்கையிலேயே அமர்ந்திருப்பான். சில சமயங்களில் நள்ளிரவில் அழுது கொண்டிருப்பான். எப்படி சமாதானம் சொல்வது என்றே தெரியாது. இப்படியே ஒரு மாதிரியாக நண்பர்களாகிவிட்டோம்.
நான்கைந்து நாட்களில் அவன் நான் நினைத்த மாதிரியானவன் இல்லை என்று தெரிந்துவிட்டது. ஆனாலும் பூட்டுகிற வைபவம் மட்டும் நிற்கவில்லை. விடுதியில் மற்றவர்களிடம் சொல்ல வேண்டாம் என்று சொல்லியிருந்தான். அதில் என்னவோ தாழ்வுணர்ச்சி அவனுக்கு. ஒவ்வொரு நாளும் பூட்டி சாவியை எடுத்து அவனால் எளிதில் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் வைத்துவிடுவேன். எதற்காக இருந்தாலும் என்னை எழுப்புவான். சில நாட்களில் எரிச்சலாக இருக்கும். ஆனால் பல சமயங்களில் பரிதாபமாகத்தான் இருக்கும். எழுந்து என்னை எழுப்புவதற்கு சங்கடப்பட்டு படுக்கையிலேயே அமர்ந்திருப்பான். சில சமயங்களில் நள்ளிரவில் அழுது கொண்டிருப்பான். எப்படி சமாதானம் சொல்வது என்றே தெரியாது. இப்படியே ஒரு மாதிரியாக நண்பர்களாகிவிட்டோம்.
தேர்வு சமயங்களில் வராண்டாவில் மற்ற மாணவர்கள் அமர்ந்து படிப்பார்கள். அப்படியே தூங்கியும் விடுவார்கள். இவனுக்காக நான் அறையைவிட்டு வெளியே போவதில்லை. அப்படியான ஒரு சுபயோக சுபதினத்தில் பையன்கள் வெளியில் படித்துக் கொண்டிருந்தார்கள். அது இரண்டாவது செமஸ்டர். இவன் அறைக்குள்ளேயே படித்துக் கொண்டிருந்தான். எனக்கு அசதி. தூங்கிவிட்டேன். தூங்கும் போது கதவை பூட்டிக் கொள்வதாகவும் என்னை எழுப்பி சாவியைத் தருவதாகவும் சொல்லியிருந்தான். ஆனால் பூட்டாமலேயே தூங்கிவிட்டான் போலிருக்கிறது. மூன்றரை மணி இருக்கும். வெளியில் ஒரே சத்தம். இவன் அறைக்குள் தூங்கிக் கொண்டிருக்கிறான். எழுந்து போனால் பையன்கள் பயங்கரமாக சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வேறொன்றுமில்லை.
ஹிந்திக்காரப் பையன் ஒருவன் வராண்டாவில் படுத்திருந்திருக்கிறான். தூங்கிக் கொண்டிருந்த அவன் வாயில் எவனோ சிறுநீர் கழித்துவிட்டான். வெகுநேரம் படித்துவிட்டு அப்பொழுதுதான் தூங்கியதாலோ என்னவோ அசந்து தூங்கியிருக்கிறான். மோட்டார் ஓட ஆரம்பித்து சில வினாடிகளுக்குப் பிறகு லபோதிபோ என்று கத்தியிருக்கிறான். ஆனால் விழித்துப் பார்க்கும் போது யாரையும் காணவில்லை. அவனது அலறல் கேட்டு கூட்டம் சேர்ந்துவிட்டது. ஆனால் யாரென்று கண்டுபிடிக்கமுடியவில்லை. நான் கூட்டத்தில் ஐக்கியமான போது ஹிந்திக்காரன் பாத்ரூமில் எக்கி எக்கி வாந்தியெடுத்துக் கொண்டிருந்தான். சிரித்துவிட்டு அறைக்குத் திரும்பிய போது ‘பிரச்சினை முடிஞ்சுடுச்சா?’ என்றான். இவன் தான் அந்த கொடூரன். அப்பவே துளி சந்தேகமாகத்தான் இருந்தது. ஆனால் தூங்கிக் கொண்டிருக்கிறான் என நினைத்தேன்.
‘வேணும்ன்னு பண்ணலை...தூக்கத்துலதான்...அடிச்சுட்டு இருக்கும் போது திடீரென்று விழிப்பு வந்துவிட்டது. பார்த்தால் அவன் வாயில் அடித்துக் கொண்டிருக்கிறேன். அவன் கத்தவும் நான் ஓடிவரவும் சரியாக இருந்தது’ என்றான். சிரிப்பதா வருந்துவதா என்று தெரியவில்லை. அடுத்தநாள் ஹிந்திக்காரன் வார்டனிடம் புகார் செய்தான். ஆனால் யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை. எப்படி கண்டுபிடிப்பார்கள்?
செமஸ்டர் தேர்வுகள் முடிந்தவுடன் அவனோடான தொடர்பு அறுந்துவிட்டது. அடுத்த வருடமே அவன் ஐரோப்பிய நாடு ஒன்றுக்குச் சென்றுவிட்டதாக மின்னஞ்சல் அனுப்பியிருந்தான். ஒன்றிரண்டு மின்னஞ்சல்களுக்குப் பிறது அந்தத் தொடர்பும் இல்லை. பத்து வருடங்களுக்குப் பிறகு, இரண்டு நாட்களுக்கு முன்பாக ஃபேஸ்புக் வழியாக கண்டுபிடித்திருந்தேன். இப்பொழுது ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறான். ஃபோனில் பேசினான். கடைசியாக ஒரு கேள்வி கேட்டேன். எதிர்பார்த்த பதில்தான் - இன்னமும் பூட்டிக் கொண்டுதான் படுக்கிறானாம்.
6 எதிர் சப்தங்கள்:
சார், உண்மையில் உங்க பதிவின் கடைசியில் நச்சுன்னு ஒரு பன்ச் வைக்கிறீங்களே.. உண்மையில் நீங்க பெரிய ஆள்தான் சாரே....
பாவம்தான்
சார், அவரை பேஸ்புக்குல பிடிச்சேன் என்கிறீர்களே, ஒருவேளை இந்தப்பதிவை அவர் படிச்சா என்ன ஆகும். அதுக்கும் சேர்த்து நீங்க நாளைக்கு பதிவுல விளக்கம் கொடுக்கனும்!!!
அதானே! பாவம் வருத்தப்பட போறார்..
சார், ஒரு சந்தேகம். இந்த மாதிரி விஷயங்களை அவரவரிடம் அனுமதி கேட்டுத்தான் எழுதுகிறீர்களா? சிலபல வருடங்கள் கடந்துவிட்டதாலும் பெயர் சொல்லாததாலும் அவர்களும் அனுமதி கொடுக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
எனக்கு உண்மையில் இப்படியான நண்பர்களின் (சுவாரஸ்யமான?) ரகசியங்களைக் காப்பதே பெரிய தலையிடியாக இருக்கிறது. சரியான இடத்தில் சுவாரஸ்யத்துக்காக ரெபரன்ஸ் கொடுக்க முடியாது. இதிலும் சிலபேர் இருக்கிறார்கள். அவர்களது சாதாரணமான ரகசியங்களை 'நகத்தில் ஊசி ஏற்றினாலும் சொல்லவே மாட்டேன்' என்று ஏதோ இராணுவ ரகசியம் ரேஞ்சுக்கு பாதுகாப்போம். ஆனால் அவர்களே அதை எல்லாரிடமும் சொல்லிப் பரப்பிவிடுவார்கள். ஆனால் சத்தியத்துக்கு கட்டுப்பட்டு நாங்கள் மட்டும் அதைப்பற்றி பேச முடியாது. மற்ற நண்பர்கள் இதைப்பற்றிப் பேசும்போது, மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் நாம் படும் பாடு இருக்கிறதே...!
√
Post a Comment