Jul 13, 2014

என்ன பயன்?

மாம்பலம் டைம்ஸ் என்ற ஒரு பத்திரிக்கை வருகிறது. சென்னைக்காரர்களுக்குத் தெரிந்திருக்கலாம். எழுத்தாளர் இரா.முருகன் இதைப்பற்றி அவ்வப்போது குறிப்பிடுவார். நேற்று தனது ஃபேஸ்புக்கில் மாம்பலம் டைம்ஸில் ரா.கி.ரங்ராஜன் எழுதிய கட்டுரை ஒன்றைக் குறிப்பிட்டிருந்தார். ரோஜா முத்தையா நூலகம் பற்றிய குறிப்பு அது. 

முத்தையா சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோட்டையூர்க்காரர். ரோஜா ஆர்ட்ஸ் என்ற பெயரில் விளம்பரப்பலகைகள் எழுதிக் கொண்டிருந்தாராம். அதனலாதான் ரோஜா முத்தையா. தனது தொழில் சம்பந்தமாக அவ்வப்போது சென்னை வந்தவர் ஆர்வத்தின் காரணமாக புதிய மற்றும் பழைய புத்தகங்களை வாங்கிச் சேகரிக்கத் தொடங்க லட்சக்கணக்கான புத்தகங்கள் சேர்ந்துவிட்டன. ஆரம்பத்தில் சென்னையில்தான் புத்தகங்களை வைத்திருக்கிறார். திருட்டுப் போகவும் - இந்த வரி சிரிப்பை வரவழைத்துவிட்டது- புத்தகங்களை வீடு புகுந்து திருடினார்கள் என்பதை இப்பொழுதுதான் முதன் முதலாக கேள்விப்படுகிறேன் - தனது சொந்த ஊரான கோட்டையூருக்கே எடுத்துச் சென்றுவிட்டார். வீட்டில் இடம் போதாமல் பக்கத்தில் ஒரு கொட்டகை அமைத்திருக்கிறார். அங்கு கரயான் அரிக்கத் துவங்கிய சமயத்தில் இந்த நூலகம் பற்றிக் கேள்விப்பட்ட எழுத்தாளர் அம்பை சில அமைப்புகளின் உதவியுடன் நான்கு லாரிகளில் புத்தகங்களை அள்ளியெடுத்து வந்து சென்னையில் அமைக்கப்பட்ட நூலகம்தான் சென்னையில் இருக்கும் ரோஜா முத்தையா நூலகம். இந்த நூலகம் பற்றித் தெரியும். ஆனால் இது அமைக்கப்பட்டவிதம் இப்பொழுதுதான் தெரிகிறது. சுவாரஸியமான செய்தி.

இப்படி வீடு நிறைய புத்தகங்களை வைத்திருப்பவர்களில் எழுத்தாளர் பாவண்ணனைத்தான் எனக்கு முதலில் தெரியும். பெங்களூரில் வசிக்கிறார். அல்சூரில் வீடு இருக்கிறது. வாடகை வீடுதான். ஆனால் பல ஆண்டுகளாக அங்கேயே இருக்கிறார். முதலில் புத்தகங்கள் வைக்க முடியாத அளவுக்கு அளவான போர்ஷனாக இருந்திருக்கிறது. பிறகு பக்கத்து வீடு காலி ஆகவும் அந்த வீட்டையும் தானே வைத்துக் கொள்வதாகச் சொல்லியிருக்கிறார். வீட்டுக்காரரும் சம்மதித்து நடுவில் இருக்கும் சுவரை இடித்துக் கொடுத்துவிட்டார். இப்பொழுது ஆயிரக்கணக்கான புத்தகங்களால் நிரம்பியிருக்கிறது அந்த வீடு. ஒவ்வொரு இரும்பு சட்டத்திலும் (Rack) அந்தப் புத்தகங்களின் வகைகளை தெளிவாக எழுதி அடுக்கி வைத்திருப்பார்- எந்தப் புத்தகத்தையும் சிரமம் இல்லாமல் எடுத்துவிடலாம். பாவண்ணன் வீட்டைப் பார்த்துவிட்டு வந்த பிறகுதான் நாமும் புத்தகங்கள் சேகரிக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் வெறும் புத்தகங்களை வாங்கி அடுக்கி என்ன செய்வது? வாசிக்க வேண்டும் அல்லவா? தஞ்சை ப்ரகாஷின் சிறுகதைகள் தொகுப்பு ஒன்றை எடுத்து வைத்து நான்கு நாட்கள் ஆகிறது. காவ்யா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. முப்பதியொரு சிறுகதைகள்தான். நானூறு பக்கங்கள். அதிசுவாரசியமான புத்தகம் இது. அப்படியிருந்தும் நான்கைந்து நாட்கள் ஆகிறது. இந்த நிலையில் புத்தகங்களைச் சேகரித்து என்ன செய்வது? 

தஞ்சை ப்ரகாஷின் புத்தகத்தை கோவை ஞானியின் வீட்டிலிருந்து எடுத்து வந்தேன். ஞானிக்கு எண்பது வயதாகிறது. ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இப்பொழுது கோயமுத்தூர் துடியலூரில் வசிக்கிறார். பல்லாயிரக்கணக்கான புத்தகங்களைச் சேகரித்து வைத்திருக்கிறார். சேகரித்தது மட்டுமில்லை- வாசித்திருக்கிறார். அவரது நூலகத்தில் எந்தப் புத்தகத்தை எடுத்துப் புரட்டினாலும் குறிப்புகள் எழுதி வைத்திருக்கிறார். தனக்கு பிடித்தமான வரிகளை அடிக்கோடிட்டிருக்கிறார். பழைய புத்தகங்களில் அவரது கையால் எழுதப்பட்ட குறிப்புகள் இருக்கின்றன. புதிய புத்தகங்களில் அவருக்கு அந்தப் புத்தகத்தை வாசித்துக் காட்டுபவரின் குறிப்புகள் இருக்கின்றன. இப்பொழுது அவரால் சுயமாக வாசிக்க முடிவதில்லை. இருபதாண்டுகளுக்கு முன்பாகவே ஞானிக்கு முழுமையாக பார்வை மங்கிவிட்டது. ஆனால் அவரது வாசிப்பு துளி கூட குறையவில்லை. ஜெயமோகனின் வெள்ளையானை வரைக்கும் வாசித்திருக்கிறார். அதற்கு பிறகான புத்தகங்களையும் கூட. அவருக்காக மற்றவர்கள் வாசிக்கிறார்கள். காது கொடுத்துக் கேட்கிறார்.

இப்பொழுது தனது சேகரிப்பில் இருக்கும் புத்தகங்களை பள்ளிகளுக்குக் கொடுக்கிறார். கோபிச்செட்டிபாளையத்தில் இருக்கும் தாய்த்தமிழ் பள்ளியையும் அழைத்திருந்தாராம். பள்ளியின் தாளாளர் குமணனும் நானும் சென்றிருந்தோம். தற்பொழுது ஞானியின் உடல்நிலை மோசமடைந்துவிட்டது. இருதயத்தில் ஏதோ பிரச்சினை. நாங்கள் சென்றிருந்த போது இரண்டு மூன்று நாட்களாக தூக்கமே வருவதில்லை என்றும் மிகவும் அவஸ்தையாக இருப்பதாகவும் சொன்னார். அப்பொழுதும் கூட நாங்கள் வந்திருக்கிறோம் என்பதால்தான் மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்திருந்தார்.

பள்ளிக்காக புத்தகங்களை பொறுக்கியெடுத்துக் கொண்டோம். அறுபது எழுபதாண்டுகளுக்கு முந்தைய புத்தகங்களும் பத்திரமாக இருந்தன. எனக்கு சில சங்க இலக்கிய புத்தகங்கள் தேவைப்பட்டன. 'எடுத்துக் கொள்ளட்டுமா' என்றேன். எந்த மறுப்பும் சொல்லவில்லை. ஏழெட்டு புத்தகங்களை எடுத்துக் கொண்டேன். அவற்றோடுதான் தஞ்சை ப்ரகாஷின் சிறுகதைகளும் சேர்ந்து கொண்டது. எழுத்தாளர் ஜெயமோகன் மீது ஞானிக்கு மதிப்பு அதிகம். ஜெமோவின் கிட்டத்தட்ட அத்தனை புத்தகங்களையும் அங்கு பார்த்தேன். நம் காலத்தில் எழுதிக் குவித்தவர் ஜெமோ என்றால் வாசித்துக் குவித்தவர் ஞானி. நம் காலத்தில் கோவை ஞானியின் அளவுக்கு வாசித்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. அவரளவுக்கு திறனாய்வு செய்தவர்கள் இருக்கிறார்களா என்றும் தெரியவில்லை. முப்பத்தியேழு நூல்கள் எழுதியிருக்கிறார். பதினோரு தொகுப்பு நூல்களை வெளியிட்டிருக்கிறார்.

அறைக்குள் நாங்கள் புத்தகங்களை எடுத்துக் கொண்டிருந்த போது தனது வரவேற்பறையில் எந்தவித சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தார். அந்தச் சலனமின்மைக்கு என்ன அர்த்தம் எடுத்துக் கொள்வது என்றே புரியவில்லை. ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு எடுத்துக் கொண்ட புத்தகங்களின் பட்டியலைச் சொன்னோம். ஒவ்வொரு புத்தகம் பற்றியும் அவருக்குத் தெரிந்திருந்தது. ‘அந்தப் புத்தகம் 1962 ஆம் ஆண்டு பிரசுரமானது. அது எனக்குத் தேவைப்படுமே’ என்று துல்லியமாகச் சொல்லும் அளவுக்கு தெரிந்து வைத்திருந்த மனிதரிடம் புத்தகங்களை அபகரித்து வருவது போலவே தோன்றியது. பள்ளிக்கு புத்தகங்களை இலவசமாக கொடுத்துவிட்டார் என்றார்கள். ஒரு சொற்பத் தொகையை நான் கொடுத்தேன். மாதக் கடைசி என்பதால் கையில் காசு இல்லாமல் சென்றிருந்தேன். அதுவும் இல்லாமல் நான் புத்தகங்களை எடுத்துக் கொள்வேன் என்றோ அல்லது புத்தகத்திற்கான பணத்தை அவர் வாங்கிக் கொள்வார் என்றோ எதிர்பார்க்கவில்லை. ஆனால் கொடுத்த போது வாங்கிக் கொண்டார். ‘எனக்கு மருத்துவச் செலவு இருக்கிறது. பணத்தேவையும் அதிகமாக இருக்கிறது’ என்று சொன்ன போதும் அதே சலனமின்மையோடு அமர்ந்திருந்தார். அவர் அதைச் சொன்ன போது சங்கடமாக இருந்தது. பெரிய தொகையாக கொடுத்திருக்க வேண்டும். அது புத்தகங்களுக்கான விலை இல்லை- எண்பது ஆண்டு காலமாக சமரசமில்லாமல் தமிழின் இயக்கமாகச் செயல்பட்ட ஒரு கம்பீரமான மனிதனுக்குச் செய்த மரியாதையாக இருந்திருக்கும்.

புத்தகங்கள் என்பவை வெறும் காகிதங்கள் இல்லை. இன்னொருவனின் அனுபவம். இன்னொருவனின் வாழ்க்கை. இன்னொருவனின் உலகம். இன்னும் என்னனென்னவோ. புத்தகங்களை எல்லோராலும் வாசித்துவிட முடிவதில்லை. எந்நேரமும் வாசிப்பும் அதன் நினைவுமாக இருப்பது ஒரு வகையிலான தவம். தியானம். வாசிப்பவன் நிறைய யோசிக்கிறான். நிறையப் பேசுகிறான். நிறைய விவாதிக்கிறான். அவன் வாழும் வரைக்கும் ஒரு பல்கலைக்கழகம். ஆனால் காலங்காலமாக வாசித்துக் கொண்டேயிருப்பவனுக்கு வாழ்க்கையின் இறுதி நாட்களில் அந்தப் புத்தகங்கள் எதைக் கொடுக்கின்றன என்று கேட்டால் என்னிடம் சரியான பதில் இல்லை. வேறு யாரிடமாவது பதில் இருக்குமா என்றும் தெரியவில்லை.

தனது காலம் முழுவதும் புத்தகங்களோடும் எழுத்துக்களோடும் வாழ்ந்த ஒரு மனிதன் தனது அத்தனை சேகரிப்பையும் மற்றவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். காலங்காலமாக சேகரித்த புத்தகங்கள் அவை. குழந்தையைக் கொஞ்சுவது போல ஒவ்வொரு பக்கமாக வாசித்து முடித்த நூல்கள் அவை. புத்தகங்களை எடுத்துக் கொண்டு வந்த போது வருத்தமாக இருந்தது. வீடு திரும்பும் போது வெகு நேரம் நானும் குமணண்ணனும் பேசிக் கொள்ளவே இல்லை. அந்த பேச்சின்மைக்கு நிறைய அர்த்தங்கள் உண்டு.

16 எதிர் சப்தங்கள்:

Unknown said...

கனத்துவிட்டது மனம் ...

எம்.ஞானசேகரன் said...

அற்புதமான மனிதர் கோவை ஞானி! தமிழின் நல்ல எழுத்தாளர்களின் கதியே இப்படித்தான் இருக்கிறது.

அகநாழிகை said...

என்னிடமிருக்கிற புத்தகங்களை என்ன செய்வது என்ற கவலையை ஏற்படுத்திட்டீங்க மணி. என் அந்திமக் கவலைகளில் இதுவும் ஒன்று. இதுபோல புத்தகங்களை எறும்பு போல தேடிச் சேகரித்து வாசித்து பொக்கிஷமாய் வைத்திருக்கிற நிறைய பேரை எனக்குத் தெரியும். :(

ராஜி said...

என் புத்தகங்களை அடுத்தவர்களுக்கு கொடுக்கும் நிலை வராது சகோ! ஏன்னா, என் பெரிய மகள் என்னைப் போலவே வாசிப்பு பைத்தியமா இருக்கா. சமயத்தில் சில புத்தகங்களை எனக்கு தெரியாமயே ஹாஸ்டலுக்கு கொண்டு போய்டுறா!

Unknown said...

நானும் நிறைய வாசிப்பேன் என்று சொன்னால் ..வாசிக்காமலே இருக்கலாம் என்று சொல்வீர்கள் என நினைக்கிறேன் (என் ஜோக்காளி தள பதிவுகளை படித்து வருவீர்கள் என நம்புகிறேன் )
த ம 1

”தளிர் சுரேஷ்” said...

புத்தகங்கள் சேகரிப்பு ஒரு கலை! என்னுடைய பதினைந்தாவது வயதில் ஆரம்பித்து ஒரு பத்து வருடங்கள் புத்தகங்கள் சேர்த்து வைக்க இடமில்லாமல் கரையான் அரித்து, இரவல் கொடுத்து திரும்பாது போய் மனம் வெறுத்து பல புத்தகங்களை விலைக்கு போட்டுவிட்டேன்! இன்று சில நூறு புத்தகங்கள் மட்டுமே என்னிடம்! பலசமயம் தொலைத்த புத்தகங்களை தேடுகின்றது மனம்! ஆனால் முன்பு போல வாசிக்க முடியும் என்று தோன்றவில்லை! அருமையான பதிவு! நன்றி!

கரந்தை ஜெயக்குமார் said...

சேமித்து வைத்தப் புத்தகங்களைப் பிரிவது பெற்ற பிள்ளைகளைப் பிரிவதைவிட கொடுமையானது நண்பரே

kalil said...

''காலங்காலமாக வாசித்துக் கொண்டேயிருப்பவனுக்கு வாழ்க்கையின் இறுதி நாட்களில் அந்தப் புத்தகங்கள் எதைக் கொடுக்கின்றன என்று கேட்டால் என்னிடம் சரியான பதில் இல்லை. வேறு யாரிடமாவது பதில் இருக்குமா என்றும் தெரியவில்லை.''
yaridamum badil irukkadu

ஆர். அபிலாஷ் said...

நல்ல பதிவு. தமிழில் நிறைய மின்நூல்கள் வந்து பழைய நூல்களும் டிஜிட்டலாக்கப்பட்டால் சேகரித்து பாதுகாக்கிற சிரமம் இருக்காது. யார் கேட்டாலும் பென் டிரைவில் காப்பி பண்ண சொல்லி விடலாம். டாரண்ட்ஸில் போட்டு விட்டால் நமக்கு பின் புத்தகங்கள் எங்காவது வாழ்ந்து கொண்டிருக்கும்.

Packirisamy N said...

புத்தகம் இருப்பது படிப்பதற்காகத்தான். சில புத்தகங்களை மீண்டும் மீண்டும் படிக்கலாம். படிக்க முடியும். அப்படி இல்லாத புத்தகங்களை யாரிடமும் கொடுக்கமாட்டேன் என்று சேர்த்துவைப்பது ஒன்றுக்கும் உதவாத செயல். படிக்க விருப்பப்பட்டவர்களுக்கு புத்தங்களை கொடுத்துவிடுவதே நல்லது.

Muthuram Srinivasan said...

வாசிப்பனுபவம் வெறும் வாசிப்பனுபவமாக மட்டும் இருந்து விடுதலால் ஒரு பயனும் இல்லை.வாசிப்பதன் நோக்கம் என்னவென்பதை நாம் தெளிவாகிகொண்டுவிட்டால் குழப்பம் கிடையாது.வாழ்நாள் முழுவதும் ஒருவன் தொடர்ந்து புத்தகங்களை வாங்கி வாசித்துக்கொண்டே இருப்பதால் மட்டும் என்ன நடந்துவிடப்போகிறது? தொடர்ந்த வாசிப்பானது நமக்குள் ஒரு பக்குவத்தை ஏற்படுத்துவதாக அமையவேண்டும். அந்த பக்குவமே நம்மை அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதற்கு சரியான வழிகாட்டுதலைத் தரும். கழிவிரக்கம் நம்மை அண்டாது. ஒரு வாசகன் வாசிப்பதனால் கிடைக்கும் இன்பம் அவனால் மட்டுமே உணரக்கூடியது. அதனை அவனை யொத்தொரிடம் மட்டுமே பகிர்ந்துகொள்ள முடியும். அதனால் அவன் பெற்றுக்கொள்பவை அவன் வாசிக்கும் புத்தகங்களை பொறுத்தே அமைகின்றது. அவன் தேர்ந்தெடுக்கும் புத்தகங்கள் அவனுடைய ரசனை, மன அமைப்பை சார்ந்தே அமைகின்றது. ஆகவே நான் பொருள் சேர்ப்பதை பிரதானமாக எண்ணினால், அதற்கு வழி சொல்லும் புத்தகங்களையே நாடுவேன்.அதுவே இலக்கியங்களை புசிக்க எண்ணினால் அவற்றை தேடி படிப்பேன். அவற்றை படித்த உடனே என் நோக்கம் நிறைவேறிவிடுகிறதே. பின்பு ஏன் புலம்ப வேண்டும்?

Unknown said...

Can you publish Mr. Paavannan's ulsoor address?

Uma said...

குழந்தையைக் கொஞ்சுவது போல ஒவ்வொரு பக்கமாக வாசித்து முடித்த நூல்கள் அவை. புத்தகங்களை எடுத்துக் கொண்டு வந்த போது வருத்தமாக இருந்தது. வீடு திரும்பும் போது வெகு நேரம் நானும் குமணண்ணனும் பேசிக் கொள்ளவே இல்லை. அந்த பேச்சின்மைக்கு நிறைய அர்த்தங்கள.- experienced the same feeling


Muthuram Srinivasan said...

Then what about the creator's rights? How he will survive?

radhakrishnan said...

அன்பின் மணி. அருமையான பதிவு
நம் நூலகத்தின் புத்தகங்களை வுரும்பும்போது எடுத்துப்படிக்கையில் கிடைக்கும் இன்பமே தனிநம் வாரிசுகளுக்கும்
படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திவிட்டால் தலைமுறைகளுக்கும் புத்தகங்களை க் கடத்திவிடலாமே. ஆனால் அவர்களுக்குஉள்ள வேலைப்பளுவில் கிடைக்கும் கொஞ்சநேரத்தில் டி.வி கேளிக்கைகளைத்தான் மனம் விரும்புகின்றதுநம்காலம் வரை அவை நம்மோடுதான் இருக்கவேண்டும்

Kamala said...

ஆசையோடு சேகரித்த புத்தகங்களை பிறருக்குக் கொடுக்கும் போது ஏற்படும் துயரம் பெரிது.பெற்றவர்கள் சேர்த்து வைக்கும் புத்தகங்களைப் பாதுகாக்க பிள்ளைகள் முன் வருவதில்லை. நான் கூட புத்தக அலமாரியுடன் புத்தகங்களைக் கொடுத்து விட்டேன். இன்று அந்தப் புத்தகங்கள் இருக்கும் பள்ளிக்குப் போன போது கண்களில் கண்ணீர்.