வேமாண்டம்பாளையம் பள்ளிக்குத் தேவையான பணத்திற்கான உத்தரவாதம் கிடைத்துவிட்டது. ஐம்பதாயிரம் ரூபாய் இருந்தால் போதும். தொண்ணூறாயிரம் வரைக்கும் நண்பர்கள் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். இன்னமும் இவர்களிடமிருந்து பணத்தை பெற்றுக் கொள்ளவில்லை. பள்ளியில் சரியான வங்கிக் கணக்கு இல்லை. தலைமையாசிரியரிடம் உங்களுக்குத் தேவையான பணம் வசூலித்துத் தர இயலும் என்று சொன்ன போதே வங்கிக் கணக்குக்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி தெரிவித்திருந்தேன். ஆனால் அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை போலிருக்கிறது. நேற்று அழைத்து பணம் கிடைத்துவிட்டது என்று சொன்ன பிறகுதான் நம்பிக்கை வந்திருக்கிறது. ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இது போன்ற பணப்பரிமாற்றச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காகவாவது மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும் போலிருக்கிறது. எனக்குத் தெரிந்த பட்டயக் கணக்கரிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். இன்று அல்லது நாளை பதில் சொல்வதாகச் சொல்லியிருக்கிறார்.
பள்ளியின் தலைமையாசிரியர் நேற்று மீண்டும் பேசினார். கணினி ஆசிரியரை இன்றிலிருந்து பணிக்கு வரச் சொல்லிவிட்டாராம். அந்த ஆசிரியருக்கு சென்ற ஆண்டில் மூன்றாயிரத்துச் சொச்சம்தான் சம்பளமாக கொடுத்து வந்திருக்கிறார்கள். அதுவும் நிதிப்பற்றாக்குறையினால் கடைசி நான்கைந்து மாதங்கள் சம்பள பாக்கி. பணம் உதவி செய்தவர்களின் கோரிக்கையின்படி இந்த ஆண்டு மாதம் ஐந்தாயிரம் ரூபாயாக கொடுத்துவிடும்படி கோரியிருக்கிறேன். தலைமையாசிரியரும் சரி என்று சொல்லிவிட்டார். M.Sc.,M.Phil க்கு ஐந்தாயிரம் என்பதே குறைவான சம்பளம்தான். ஆனால் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மூன்றாயிரத்து ஐந்நூறுதான் கொடுக்கிறார்கள்.
பள்ளிக்கான ஆசிரியரை ஏற்பாடு செய்தது போலவும் ஆயிற்று. கணினி படித்த பெண்மணி ஒருவருக்கு வேலை வாய்ப்பை வழங்கியது போலவும் ஆயிற்று. பணம் வழங்குபவர்களில் வழக்கம் போலவே பெரும்பாலானோர் தங்களைப் பற்றிய தகவலை வெளியில் சொல்ல வேண்டாம் என்று கோரியிருக்கிறார்கள். அதனால் வசிப்பிடத்தைச் சொல்லாமல் வெறும் பெயரை மட்டும் சொன்னால் தவறில்லை என்று நினைக்கிறேன்.
மோகன் -ரூ.5000
விஷ்ணு - ரூ.10000
குமார் -ரூ.10000
சங்கர்- ரூ.15000
சத்தியமூர்த்தி-ரூ.10000
ராகவன் -ரூ.10000
ராஜேஷ்- ரூ.25000
ஈஸ்வரன் - ரூ. 5000
ஒரு குக்கிராமத்தில் அரசுப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கணினி அறிவை வழங்குவதற்கான உங்கள் உதவி மிகப்பெரியது. மறக்க முடியாதது. உங்களுக்கு இருக்கிறதோ இல்லையோ- எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எல்லாவிதமான ஆசிகளையும் வழங்கச் சொல்லி அந்தக் கடவுளை மனப்பூர்வமாக வேண்டிக் கொள்கிறேன்.
திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமையில் வங்கிக் கணக்கு எண்ணுடன் உங்களைத் தொடர்பு கொள்கிறேன்.
[இப்பொழுதே எதிர்பார்த்த தொகை சேர்ந்துவிட்டதால் சில நண்பர்களிடம் பணம் வேண்டாம் என்று சொல்லும்படியாகிவிட்டது. தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம். இந்தப் பணத்தை ஒதுக்கி வையுங்கள். வேறொரு நல்ல காரியத்துக்கு நிச்சயம் பயன்படுத்திக் கொள்வோம்]
***
திரு.வா.மணிகண்டன் அவர்களுக்கு,
வணக்கம்.
தாங்கள் கூறியபடி இன்று பவானி ஊராட்சி கோட்டையில் உள்ள திரு.பார்த்திபன் அவர்களின் இல்லம் சென்றோம். என்னுடன் எங்கள் வட்டாரத்தைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் (எமது நண்பர்) ஒருவரும் வந்திருந்தார். திரு.பார்த்திபன் அவர்களின் தந்தையும்.தாத்தாவும் கனிவுடன் வரவேற்று எங்களோடு உரையாடினர். பிறகு 3 கணினிகளை அவற்றிற்குரிய பொருட்களுடன் வழங்கினர். அதனை நாங்கள் பெற்றுக்கொண்டு நன்றி கூறி விடை பெற்றோம்.
எமது பள்ளிக்கு 2 கணினி போதுமானதாக இருப்பதாலும். எமது நண்பர் தமது பள்ளிக்கும்(ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, செம்மாண்டம்பாளையம்) ஒரு கணினி பெற்றுத் தருமாறு வேண்டுகோள் விடுத்ததாலும் ஒரு கணினியை அவர் பள்ளிக்கு வழங்கிட தங்களின் அனுமதி பெற உங்களுக்கு 3 முறை போன் செய்தேன். ஆனால் உங்களை தொடர்பு கொள்ள இயலவில்லை.
“யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக” என்ற எண்ணத்தின் அடிப்படையிலும், அவ்வூர் குழந்தைகளும் பயன் பெறட்டும் என்ற நோக்கத்திலும், தாங்கள் அனுமதிப்பீர்கள் என்ற நம்பிக்கையிலும் ஒரு கணினியை அவருடைய பள்ளியில் வைத்துவிட்டு வந்தோம். தங்களின் அனுமதியை பெறாமல் வழங்கியதற்க்காக வருந்துகிறேன். அப்பள்ளி தலைமை ஆசிரியர் நாளை உங்களை தொடர்பு கொண்டு நன்றி தெரிவிப்பார். மின்னஞ்சல் அனுப்புவார்.
எமது வேண்டுகோளை ஏற்று எமக்காக இணையதளத்தில் பதிவிட்டு முயற்சி மேற்கொண்ட தங்களுக்கும் கணினிகளை சிரமம் பாராமல் சென்னையிலிருந்து கொண்டுவந்து வழங்கிய திரு.பார்த்திபன் அவர்கள் குடும்பத்தார்க்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்களின் சமுக பணி தொடர வாழ்த்துக்கள்
கற்போர்,கற்பிப்போர்
ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, சேடர்பாளையம்,
திருப்பூர் மாவட்டம்.
அன்புள்ள தலைமையாசிரியருக்கு,
வணக்கம்.
இதில் எந்த அனுமதியும் தேவையில்லை. சேடர்பாளையத்தின் குழந்தைகளும் ஒன்றுதான், செம்மாண்டம்பாளையத்தின் குழந்தைகளும் ஒன்றுதான். யார் பயனடைந்தாலும் மகிழ்ச்சி. பள்ளிகளைப் பற்றியும் குழந்தைகளைப் பற்றியும் என்னைவிடவும் உங்களுத்தான் தெரியும் என்பதால் நீங்கள் எடுத்த முடிவு மிகச் சரியானதாகவே இருக்கும்.
உங்களின் நன்றிகள் திரு. பார்த்திபனுக்கு உரியது. பாராட்டுகளும் புகழுரையும் இறைவனுக்கு உரியது. இத்தகைய பணியை தொய்வில்லாமல் தொடரச் செய்வதற்கான ஆன்ம பலத்தை நீட்டிக்கவும், மற்றவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை சிதைத்துக் கொள்ளும் எந்த செயலிலும் இறங்காத சலனமற்ற மனதை காக்கும்படியும் என்னை வாழ்த்துங்கள். அதைத்தான் எதிர்பார்க்கிறேன்.
நன்றி.
11 எதிர் சப்தங்கள்:
திரு.மணிகண்டன்,
உங்களுக்கு கிடைத்திருப்பது பெரும்பேறு. உங்கள் மேல் பெரும் நம்பிக்கை கொண்ட மனிதர்களை நீங்கள் பெற்று இருக்கிறீர்கள், இது யாருக்கும் எளிதாய் கிடைக்ககூடியது அல்ல. ஒரே ஒரு வலைப்பூ இடுகை பல குழந்தைகளின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைக்கமுடியும் என்ற நிலையை அடைந்தது கண்டிப்பாக உங்கள் தனிப்பட்ட சாதனைதான். நீங்களே வேண்டிக்கொள்வதுபோல், இது தொடர தேவையான ஆன்ம பலத்தை இறைவன் உங்களுக்கு அருளட்டும்.
தங்கள் பணி மேலும் சிறக்க எனது வாழ்த்துகள்
Dear Manikandan,
I read your blog regarding old computers required for
Govt. schools.
We are a research institution, we plan to donate our
old computers/furnitures to Govt. schools.
If the school incharge like head master writes to our head of the center
whose address is given below, we would donate. I/we can help them with
the format of the letter also. But being a govt.
institution, we may take some time.
If I am informed when the school writes the letter, I can follow it up.
my email id is: creraja@isibang.ac.in
Address of head of the center:
Prof. NSN Sastry,
Head of the center
Indian Statistical Institute
R V College Post
8th Mile Mysore Road
Bangalore 560059
email: headisibc@isibang.ac.in
Regards,
CRE Raja.
உங்கள் சமுக பணி சாதனை தொடர வாழ்த்துங்கள்.
தங்களின் அறத்தொண்டுகள் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்! தங்களோடு இணைந்து உதவிய உள்ளங்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்!
Congratulations and keep the good job going.
இத்தகைய பணியை தொய்வில்லாமல் தொடரச் செய்வதற்கான ஆன்ம பலத்தை நீட்டிக்கவும், மற்றவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை சிதைத்துக் கொள்ளும் எந்த செயலிலும் இறங்காத சலனமற்ற மனதை காக்கும்படியும் என்னை வாழ்த்துங்கள். Bless you
தங்களின் பணியினைப் பாராட்டுவதற்க வார்த்தைகள் இல்லை நண்பரே
தொடரட்டும் தங்களின் சீரிய சேவை
Ditto ('இறைவன் உங்களுக்கு அருளட்டும்' - பகுதி தவிர).
சுப இராமநாதன்
நற்பணிகளே என்றும் பெயர் சொல்லும். ஒருவருக்கு உதவியை பெற உதவுவது மிக சிறந்த சேவை வாழ்த்துக்கள்
தங்களின் பணி பாராட்டிற்கு உரியது
வாழ்த்துக்கள்
Post a Comment