Jun 28, 2014

அறம் பாடியே ஆக வேண்டுமா?

இன்று ஊருக்குச் செல்ல வேண்டிய வேலையிருக்கிறது. இப்பொழுதெல்லாம் ஊருக்குச் செல்வதென்றால் சங்கடமாக இருக்கிறது. எங்கேயும் மழை இல்லை. நிலத்தடி நீரும் தாறுமாறாக இறங்கிவிட்டது. கர்நாடாகாவில் ஜூலை பத்தாம் தேதி வரைக்கும் பார்த்துவிட்டு அப்படியும் தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை என்றால் போர்க்கால நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்று அறிவித்திருக்கிறார்கள். என்ன செய்வார்கள்? வறட்சி நிவாரண நிதி வேண்டும் என்று மத்திய அரசிடம் தட்டு ஏந்துவார்கள். ‘எங்களுக்கே தண்ணீர் இல்லை’ என்று காவிரியின் குறுக்கே சம்மணமிட்டு அமர்வார்கள். மத்திய அரசிடமிருந்து வருகிற பணத்தில் மந்திரியிலிருந்து மணியகாரன் வரை பதவிக்குத் தகுந்தாற்போல நோட்டுகளை உருகிக் கொண்டு மிச்சமீதி சில்லரையை விவசாயி தட்டில் எறிவார்கள். மழையும் இல்லை பணமும் இல்லை. வடகர்நாடகாவிலும், வடகிழக்கு கர்நாடகாவிலும் விவசாயிதான் கருகிக் கொண்டிருப்பான்.

வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் பருவமழை இந்த வருடம் மும்பையிலும் ஏமாற்றிவிட்டது. மத்திய அரசும் மாநில அரசுகளும் சேர்ந்து வறட்சிக்கு எதிரான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறதாம். இவர்கள் வகுத்துவிட்டாலும்....

முதல் முப்பது நாட்களில் மோடிக்கு முட்டை மதிப்பெண்தான் கொடுக்க வேண்டும். கவர்னர் பதவியின் கழுத்தை வெட்டலாமா? ராஜ்யசபாவை கூண்டோடு கலைக்கலாமா என்பதையெல்லாம் யோசிக்காமல் கண்டபடிக்கு விலையை ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். விலை ஏற்றுவது தவறு இல்லை- ஆனால் அதன் பாதிப்பு யாருக்கு இருக்கும்? ஆறாவது சம்பளக் கமிஷன், ஏழாவது சம்பளக் கமிஷன் என்று அரசு அதிகாரிகள் பாக்கெட்களை நிரப்பிக் கொண்டுதான் இருப்பார்கள். கார்போரேட் நிறுவனங்களில் வேலை செய்பவர்களும், தொழிலதிபர்களும் தப்பித்துக் கொள்வார்கள். மாட்டிக் கொள்பவர்களெல்லாம் விவசாயிகளும், சம்பள உயர்வே இல்லாத தனியார் நிறுவன ஊழியர்களும், தினக்கூலிகளும் இன்னபிற அன்றாடங்காய்ச்சிகளும்தான். என்னதான் கசப்பு மருந்து என்றாலும் மக்களுக்கும் தாங்கும் சக்தி ஓரளவுக்குத்தான். இல்லையா? போகிற போக்கைப் பார்த்தால் இந்த மனுஷனுக்கு ஆதரவாக பேசினோமே என்று வாயில் சாணத்தை அப்பிவிடுவாரோ என்று யோசனை துளிர்க்க ஆரம்பித்திருக்கிறது. என்ன இருந்தாலும் நம்பிக்கைதானே வாழ்க்கை. 

ஏற்கனவே விவசாயிகளின் நிலைமை படு மோசமாகிக் கொண்டிருக்கிறது. இதில் மழை வேறு மண்ணை அள்ளி போட்டுவிட்டு போகிறது. இந்த தண்ணீர் பிரச்சினை இந்தியாவில் மட்டுமில்லை- வேறு பல நாடுகளிலும் இருக்கிறது. ஆனால் அங்கெல்லாம் மாற்று வழியிலான விவசாயத்தை முயற்சிக்கிறார்கள். நாம் சொட்டு நீர் பாசனத்தையே கூட முழுமையாக அமல்படுத்தவில்லை. மற்ற முறைகளையெல்லாம் எங்கே அமல்படுத்தப் போகிறோம்?

இயற்கையும் குழி பறித்து, அரசாங்கமும் சாவடிக்கிறது- இப்படியே போனால் வேளாண்மை என்ன ஆகும் என்று யூகிக்க முடியவில்லை. விவசாய நிலத்தின் பரப்பு குறுகிக் கொண்டே வருகிறது. எந்த விவசாயும் தன் மகன் விவசாயம் செய்யட்டும் என்று சொல்வதில்லை. மிச்சமிருக்கும் விவசாய நிலங்களிலும் ஆயிரம் சிக்கல்கள். விலை ஏறாமல் என்ன செய்யும்?.  அவரைக்காய் கிலோ எண்பது ரூபாய் என்பது இப்போதைக்குத்தான் ஆச்சரியமான செய்தி. இன்னும் சில வருடங்களில் பல காய்கள் நமக்கு கிடைக்கப்போவதில்லை. எத்தனை ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத காய்கறிகள் என்று மிகப்பெரிய பட்டியலை நம் அடுத்த தலைமுறையிடம் சொல்வோம். நடக்கத்தான் போகிறது.

அமெரிக்காக்காரன் நிலத்துக்கு அடியில் மிகப்பெரிய சமுத்திரத்தை கண்டுபிடித்திருக்கிறானாம். பூமிக்கு மேலாக இருக்கும் நீரைக்காட்டிலும் மூன்றுமடங்கு தண்ணீர் இருக்கிறதாம். ஆனால் என்ன பிரச்சினை என்றால் கிட்டத்தட்ட ஏழுநூறு கிலோமீட்டருக்கு பூமிக்கு அடியில் தோண்ட வேண்டும். பூமியின் மையப்புள்ளியைத் தொடுவது மாதிரிதான். நூறு வருடங்களோ அல்லது இருநூறு வருடங்களோ-அதைக் கூட நம் ஆட்கள் தொட்டுவிடுவார்கள். ஆனால் இந்தப்பக்கம் இருந்து பூமியைக் குத்துகிறோம் என்று வையுங்கள். அந்தப்பக்கமாக இருந்து இன்னொருவன் குத்தினால் இரண்டு ஓட்டைகளும் சந்தித்துக் கொள்ளாதா என்று இந்தச் செய்தியைப் படித்ததிலிருந்து குழம்பிக் கொண்டிருக்கிறேன். என் சிற்றறிவுக்கு அப்படித்தான் யோசிக்கத் தோன்றுகிறது.

தமிழக அரசின் மழை நீர் சேகரிப்புத்திட்டம், பசுமைப் போர்வைத் திட்டமெல்லாம் நீண்டகால நோக்கிலான திட்டங்கள்தான். ஆனால் அதை எப்படி செயல்படுத்துகிறோம் என்பதில்தானே இருக்கிறது? மழைநீர் சேகரிப்புத்திட்டத்திற்கு பணத்தைக் கொடுத்தால் இரண்டு அல்லது மூன்று அடி குழியைத் தோண்டி கல்லையும் மண்ணையும் போட்டு மூடிவிடுகிறார்கள். முதலமைச்சரின் பிறந்தநாளுக்காக லட்சக்கணக்கான செடிகளை நட்டார்கள். அவையெல்லாம் தப்பித்திருந்தால் அருமையாக இருந்திருக்கும். எத்தனை சதவீதம் தப்பியிருக்கும் என நினைக்கிறீர்கள்? மிகச் சொற்பம். அரசாங்கம் திட்டம் கொண்டுவருவதைவிடவும் முழுமையாகச் செயல்படுத்துவதுதான் அவசியம். முழுமையாக இல்லாவிட்டாலும் அறுபது சதவீதமாவது செயல்படுத்தினால் பரவாயில்லை.

சரி இருக்கட்டும். 

நாஞ்சில்நாடன் சிற்றிலக்கியங்களுக்கு என்றே ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். சிற்றிலக்கியங்களில் தொண்ணூற்றாறு வகை இருக்கிறதாம். எப்பவோ ஒன்பதாம் வகுப்பு இலக்கணத்தில் படித்தது. ஆனால் அப்பொழுதெல்லாம் படிக்கவே மொக்கையாக இருந்தது. நாஞ்சில்நாடனின் புத்தகம் ஆர்வத்தை உருவாக்கியிருந்தது. தொண்ணூற்றாறு வகைகளைத் தெரிந்து கொள்ளாவிட்டாலும் குறைந்தபட்சம் பத்து வகைகளையாவது தெரிந்து கொள்ள வேண்டும். அப்படித் தேடியதில் நந்திக்கலம்பகத்தின் ஒரு பிரதியைப் பிடித்துவிட்டேன். பழைய புத்தகக் கடையில் கிடைத்தது. தொண்ணூற்றாறில் வகைகளில் கலம்பகமும் ஒன்று. கலம்பகங்களில் நந்திக்கலம்பகம் உட்பட ஒன்றோ இரண்டோதான் இருக்கிறதாம். மற்ற கலம்பகங்கள் எதுவும் கிடைக்கவில்லை.  ஓவராக மொக்கை போடாமல் இன்னும் ஒரேயொரு பத்தியில் முடித்துவிடுகிறேன்.

நந்தி வர்மன் என்ற பல்லவ மன்னனுக்கு அறம்பாட எழுதப்பட்ட பாடல்கள்தான் இந்த நந்தி கலம்பகம். ஆயிரத்து இருநூறு வருடங்களுக்கும் முந்தின பாடல்கள் இவை. அறம்பாடுதல் என்றால் ஆளை முடித்துவிடுவது. இது நந்திவர்மனின் தம்பியால் பாடப்பட்டது, சொந்தக்காரன் ஒருவனால் பாடப்பட்டது என்று ஏகப்பட்ட கதைகள் இருக்கின்றன. ஆனால் மொத்தத்தில் அவன் கதையை முடிப்பதற்காக பாடப்பட்டது என்பது மட்டும் உறுதி. அந்தாதி டைப். ஒரு பாடலின் கடைசிச் சொல்லில் இருந்து அடுத்த பாடலின் முதல் சொல் தொடங்கும். அந்தம்(கடைசி) டூ ஆதி(முதல்)- அந்தாதி.

‘யோவ் மன்னா இது அறம்பாட பாடப்பட்ட பாடல்கள்..நீ காது கொடுக்காதே’ என்று சுற்றியிருந்தவர்கள் நந்திவர்மனிடம் சொன்னார்களாம். கேட்காத மன்னன் சுடுகாட்டில் அடுக்கி வைக்கபட்ட விறகுகளின் மீது அமர்ந்து- பாடலை பாடிக் கொண்டிருந்தவன் இந்த போஸில் நீ அமர்ந்தால்தான் பாடுவேன் என்று சொல்லியிருக்கிறான்- புலவனின் ஆசையை கெடுப்பானேன் என்று அதே போஸில் அமர்ந்து மிஸ்டர்.நந்தியார் பாடலைக் கேட்டிருக்கிறார். ஒவ்வொரு பாடலின் போதும் ஒரு விறகாக எரிந்து கடைசி பாடலின் போது கடைசி விறகும் தீப்பற்றி மன்னன் மொத்தமாக முடிந்து போனான். நந்திக் கலம்பகமும் அதோடு முடிந்தது. இந்தக் கதைகளில் எது உண்மை எது பொய் என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் ஒன்று - இந்த பாடல்களை எழுதியவரின் எந்த விவரமும் இப்பொழுது இல்லை.

எதற்குச் சொல்கிறேன் தெரிகிறதா? ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருப்பவர்களை எதிர்த்து அறம்பாடினால் இதுதான் கதி. இப்பொழுது மூன்று நான்கு பத்திகள் முன்னாடி போய் வாசியுங்கள். இவர்களை எல்லாம் எதிர்த்து அறம் பாடினால்தான் விடுவீர்களா? ஆங்...

3 எதிர் சப்தங்கள்:

Unknown said...

கட்டுரை துவக்கத்தில் நடுக்கம் எதிர் காலத்தில் பல காய்கறிகள் கிடைக்காமல் போய்விடுமோ என நினைத்து,இறுதியில் கொஞ்சம் இலக்கியம் மனம் சற்றே ஆசுவாசப்பட்டது!

எனது அகப்புற காட்சிகள் எழுத்து said...

Nice sir ....

இரா திலீபன் said...

அன்புள்ள மணி சார்...., மோடி அரசு அமையும் முன் அது பற்றி ரெண்டு மூணு தனி பதிவு போட்டு ஆசுவாசப்பட்ட நீங்க இப்ப ஒரே மாசத்துல அவிய்ங்க வேலைய காட்டுனதும் ஒரே பதிவுல அதும் 80 பர்சண்ட் வேற பேச்சு 20 பர்சண்ட் அரசியல்னு சுருக்கிட்டீங்க....! நீங்க ஆதரிச்சு எழுதும் போது நான் அதை எதிர்த்து கமெண்ட் போடுகையில் கோச்சுக்கிட்டீங்க... அப்புறம் நான் எழுதுறதயே விட்டேன். இப்பவும் இவிங்க ஆட்சி மந்திரிகள்ல ஒரு ஆளு பாலியல் புகார்ல சிக்கி அப்புறம் இந்தியாவுக்கே மனித வள அமைச்சர் ஒரு படிக்காத பிராடு தற்குரினு தெரிஞ்சு இவ்வளவு ஏன் எலக்சன் பேச்சுல வளைச்சு வளைச்சு உளறுன மோடி பிரதமரான பின்னாடியும் பூட்டான் போயி நேபாளம் லடாக்னு உளறி மானம் கெட்டாங்க.... MP யா கூட ஜெயிக்க முடியாத ஒரு ஆள் கிட்ட பாதுகாப்பு துறையையும் நிதி துறையையும் கொடுத்தாங்க.... அந்த ஆளு ஹோண்டா மாருதி மாதிரி பன்னாட்டு நிறுவனங்களுக்கு உற்பத்தி வரி குறைப்பு வரிச்சலுகை நீட்டிப்புனு கார்பரேட் சேவகனாக அதிகாரப்பூர்வமாக வேலை செயறான். ரயில் கட்டணம் ஏத்தி கேஸ் விலை ஏத்த போறோம்னு ஆரம்பிச்சு எதிர்ப்பு வந்து நிறுத்திடான்... இதுக்கு இடையில இந்தி திணிப்புனு RSS அஜெண்டாக்கும் வேலை செய்யறாங்க.... இந்த எழவத்தானையா நானும் சொன்னேன். உடனே என்னை திட்டுநீங்க..... உங்களுக்கு ஆதரவா ரெண்டு மூணு கூமுட்டைங்க என்னை திட்டுச்சே அவங்கெல்லாம் இப்ப எங்க காணோம்....?