Jul 8, 2014

இப்போ திருப்தியா?

நேற்று சின்னான் மகளுக்கு பி.ஈ கவுன்சிலிங் முடிந்துவிட்டது. சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்திருக்கிறார். பெரிய செலவு இருக்காது என்று நினைக்கிறேன். செலவு ஒருபக்கம் இருக்கட்டும். கல்லூரிதான் மகிழ்ச்சியளிக்கிறது. அண்ணா பல்கலைக்கழகம் என்பது எத்தனையோ மாணவர்களுக்கு கனவு. அங்கு சேர்ந்திருக்கிறார். மாலையில் சின்னான் அழைத்து தகவலைச் சொன்னார். மிகுந்த உற்சாகமாக இருந்தார். உதவி புரிந்த அத்தனை நண்பர்களுக்கும், வாழ்த்திய அத்தனை பேருக்கும் மனமார்ந்த நன்றி. 

ஜெர்மனியில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் திரு.மணிகண்டனுக்கு இன்று ஒரு மாதத்திற்கான தொகையை குவைத்திலிருந்து ரங்கநாதன் அனுப்பி வைத்திருந்தார். மூன்றிலிருந்து நான்கு மாதங்களுக்கான உதவித்தொகை கிடைத்தால் போதும் என்றுதான் சொல்லியிருந்தார். ரங்கநாதனின் உதவியையும் சேர்த்து கிட்டத்தட்ட ஐந்தரை மாதங்களுக்கான பணம் கிடைத்துவிட்டது. மூன்றரை லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகை இது. தனது கல்லூரி வழியாக உதவித்தொகையை பெறுவதற்கான முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கிறார். கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது. இடைப்பட்ட நான்கைந்து மாதங்களை தாண்டத் உதவிய அத்தனை பேருக்கும் நன்றி. நன்றி தவிர வேறு ஏதேனும் வார்த்தை இருக்கிறதா என்று தெரியவில்லை.

ஏழு பள்ளிகளுக்கும் தலா பத்தாயிரம் ரூபாய்க்கான புத்தகங்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் முடிந்துவிட்டன. இந்தவாரத்தில் புத்தகங்கள் பள்ளிகளைச் சேர்ந்துவிடும்.  பணம் வழங்கிய மற்றும் புத்தகப்பட்டியல் தயாரிக்க உதவிய அத்தனை நண்பர்களுக்கும் நன்றி.

பள்ளிகள்:
1. தாய்த்தமிழ் பள்ளி, கோபி
2. தாய்த்தமிழ் பள்ளி, திருப்பூர்
3. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, துலுக்கமுத்தூர்- திருப்பூர் மாவட்டம்
4. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சவுளூர்- கிருஷ்ணகிரி மாவட்டம் 
5. பாவேந்தர் தமிழ்வழிப்பள்ளி, குன்றத்தூர்
6. சென்னை நடுநிலைப்பள்ளி, 12, கபிலர் தெரு, மடுமா நகர், பெரம்பூர்
7. அன்னை உண்டு உறைவிடப் பள்ளி, விழுப்புரம்

திருப்பூர் ஒன்றியத்தில் இருக்கும் ஒரு கிராமத்தின் அரசுப்பள்ளிக்கு கணினி வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். இரண்டு கணினிகள் இருந்தால் போதும் என்றார்கள். சென்னையில் இருக்கும் திரு.பார்த்திபன் கணிணிகளை மறு சுழற்சி செய்யும் நிறுவனத்தை நடத்திவருகிறார். பவானிக்காரர். தனது நிறுவனத்திலிருந்து மூன்று கணினிகளை பவானி கொண்டு வந்து சேர்த்துவிட்டார். பள்ளியிலிருந்து சென்று கணினிகளை எடுத்துக் கொள்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். அந்த வேலையும் முடிந்துவிட்டது.

இதையெல்லாம் பட்டியலிடுவது நோக்கம் இல்லை.

சாதாரணமாக ஆரம்பித்த காரியம் இது. ஆறேழு மாதங்களில் இவ்வளவு உதவ முடிந்திருக்கிறது. அதுவும் கற்பனை கூட செய்ய முடியாத தொகையில். ஒன்றிரண்டு நாட்களில் எதிர்பார்க்கும் பணம் கிடைத்துவிடுகிறது. இதில் சுவாரசியமான விஷயம் என்றால் உதவி பெறுபவர்கள் அல்லது உதவுபவர்களில் தொண்ணூற்றொன்பது சதவீதம் பேரை எனக்கு யாரென்றே தெரியாது. உதவி பெறுபவர்கள் உதவுபவர்களின் முகத்தைப் பார்ப்பதில்லை. உதவுபவர்களும் பார்ப்பதில்லை. வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் நிகழும் அன்பின் பரிமாறுதல்கள் இவை. 

எவ்வளவு திருப்தியளிக்கக்கூடிய காரியம் இது? 

அவ்வப்போது தனிமையில் யோசித்துப் பார்த்தால் நெகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த உலகம் சுயநலவாதிகளால் நிறைந்தது, சூழ்ச்சி செய்பவர்கள்தான் திரும்பிய பக்கமெல்லாம் இருக்கிறார்கள், எங்கெங்கு காணினும் நன்றி கெட்டவர்கள் என்பதெல்லாம் வெற்றுப் புலம்பல்களாகத் தெரிகின்றன. கெட்டவர்கள் இருக்கக் கூடும். ஆனால் அதைவிட நல்லவர்கள் நிறைந்திருக்கிறார்கள். நிஜமாகவே அப்படித்தான் உணர்கிறேன். எதற்காக முகம் தெரியாதவர்களுக்கு உதவ வேண்டும்? லட்சக்கணக்கில் கொடுக்கிறார்கள்- அதுவும் தங்களின் அடையாளங்களை மறைத்துக் கொண்டு.

‘இணையத்தில் எழுதி எதைச் சாதிக்கப் போகிறோம்?’ என்று யாரும் கேட்டுவிட முடியாது என நினைக்கிறேன். வேறு எந்த ஊடகத்தைவிடவும் இங்கு எவ்வளவோ செய்ய முடியும். இடையில் நின்று துளி தூண்டிவிட்டால் போதும். அவ்வளவுதான். இங்கே நாம் செய்து கொண்டிருப்பது அந்தப் Potentialலில் ஒரு சதவீதம் கூட இல்லை என்பதுதான் நிதர்சனம்.

இனி? 

இன்னொரு திட்டம் இருக்கிறது.

ஈரோடு மாவட்டம் நம்பியூருக்கு அருகில் வேமாண்டம்பாளையம் என்ற ஊர் இருக்கிறது. வீமன் ஆண்ட பாளையமோ, வேந்தன் மாண்ட பாளையமோ, வேம்பு ஆண்ட பாளையமோ மருவி வேமாண்டம்பாளையம் ஆகி இருக்கும் போலிருக்கிறது. அவ்வூரில் ஒரு உயர்நிலைப்பள்ளி இருக்கிறது. தலைமையாசிரியரிடம் பேசினேன். அந்தப் பள்ளிக்கு கணினி ஆசிரியர் இல்லை. கணினி ஆசிரியர் இல்லாமலேயே ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ கம்யூட்டர் சயின்ஸ் பாடத்திட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம் எப்பொழுது ஆசிரியரை நியமிக்கும் என்று தெரியவில்லை. நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார். இப்போதைக்கு மாதம் ஐந்தாயிரம் ரூபாய் இருந்தால் ஒரு கணினி ஆசிரியரைப் பிடித்துவிடலாமாம். ஏற்கனவே ஒரு மாதம் முடிந்துவிட்டது. இன்னமும் பத்து மாதங்கள்தான். ஐம்பதாயிரம் ரூபாய் இருந்தால் சமாளித்துவிடுவார்கள். அமெரிக்காவில் இருக்கும் திரு.விஷ்ணு ஒரு பத்தாயிரம் ரூபாய் கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார். இன்னமும் நாற்பதாயிரம் ரூபாய் இருந்தால் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் கணக்குக்கு மாற்றிவிடலாம். எம்.எஸ்.ஸி., எம்.ஃபில் முடித்துவிட்டு ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு பணியாற்ற தயாராக இருக்கிறார்கள். பெங்களூரில் புரோட்ட மாஸ்டருக்கு இருபதாயிரம் தருகிறார்கள். அது இருக்கட்டும். கணினி படித்துவிட்டு வேலை தேடும் அவர்களுக்கும் உதவியது போல இருக்கும். ஒரு பள்ளிக்கு தோள் கொடுத்தது போல இருக்கும். 

உதவ முடிந்த நண்பர்கள் மின்னஞ்சலில் ஒரு தகவல் அனுப்புங்கள். ஐம்பதாயிரம் ரூபாய் உறுதியான பிறகு தலைமையாசிரியரிடம் பேசி பள்ளியின் வங்கிக் கணக்கு விவரங்களை அனுப்பி வைக்கிறேன். இப்போதைக்கு அவர்களுக்கு எந்த உறுதியும் அளிக்கவில்லை. 

vaamanikandan@gmai.com

8 எதிர் சப்தங்கள்:

Jegadeesh said...

உதவியவர்களுக்கு நன்றி !!

Yarlpavanan said...

தங்கள் சிறந்த பணியைப் பாராட்டுகிறேன்.

nimmathiillathavan said...

People like u is uncommon in this fox society. May god be your side in yr future endeavours.

Vaa.Manikandan said...

எல்லா புகழும் இறைவனுக்கே.

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களின் பணி பாராட்டிற்கு உரியது
வாழ்த்துக்கள்

சுந்தரம் சின்னுசாமி said...

பாராட்டுக்கள்

Unknown said...

தங்களின் இந்த சிறந்த பணிக்கு எனது பாராட்டும் வாழ்த்துக்களும்.

எம்.ஞானசேகரன் said...

தங்களின் பணிக்கு இதயங்கனிந்த வாழ்த்துக்கள்.