ஏழு பள்ளிகளுக்கும் இந்த மாத தொடக்கத்திற்குள்ளேயே புத்தகங்களை அனுப்பி வைத்து விடுவதாகத்தான் திட்டமிருந்தது. ஆனால் இந்த மாத இறுதி வரைக்கும் இழுத்துவிடும் போலிருக்கிறது. ஒவ்வொரு பள்ளிக்கும் தலா பத்தாயிரம் ரூபாய்க்கான புத்தகப் பட்டியல் தயாராகி இருந்தது. ஆனால் ஒவ்வொரு பதிப்பகமாக அணுகி புத்தகங்களைச் வாங்குவது லேசுப்பட்ட காரியமாகத் தெரியவில்லை. டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன்தான் இந்தக் காரியத்தில் உதவிக் கொண்டிருக்கிறார். இந்நேரம் மொத்தமாக எழுபதாயிரம் ரூபாய்க்கு புத்தகங்கள் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் நாற்பத்தைந்தாயிரம் ரூபாய்க்குத்தான் கிடைத்திருக்கின்றன. தயாரித்து வைத்திருந்த பட்டியலில் இருந்த நிறைய புத்தகங்கள் கிடைக்கவில்லை என்றார். இந்தத் துறையில் பழம் தின்ற பெருசு அவர். அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.
வேறு வழி?
இன்னொரு பட்டியல் தயாரிக்க வேண்டும். அதை மின்னஞ்சலில் அனுப்பி வைத்தால் அந்தப் புத்தகங்களை வேடியப்பன் தேடிப் பார்ப்பார். இரண்டாவது பட்டியலில் இருக்கும் புத்தகங்களும் முழுமையாகக் கிடைக்கும் என்று சொல்ல முடியாது அல்லவா? என்னதான் தொழில்நுட்பம் நமக்கு உதவினாலும் இது போன்ற சூழல்களில் முழுமையாக உதவுவதில்லை. நேரடியாக சென்னை சென்று மீதமிருக்கும் இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கும் புத்தகங்களை வாங்கிவிடலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். இதனால் ஏற்கனவே தயாரித்திருந்த பட்டியலில் கிட்டத்தட்ட முப்பது முதல் நாற்பது சதவீதம் வரைக்கும் மாறுதல் இருக்கக் கூடும். இதனை பள்ளி நிர்வாகத்தினர் தவறாக புரிந்து கொள்ளமாட்டார்கள் என நம்புவோம்.
சென்னை செல்வதற்கு வீட்டில் அனுமதி வாங்கிவிட்டேன்- பிரச்சினை அல்லது முகச்சுளிப்பு எதுவும் இல்லாமல்.
சென்னையில் இருக்கும் நண்பர்கள் யாராவது புத்தகத் தேர்வில் உதவ முடியும் என்று நினைத்தால் நாளை (ஜூன் எட்டாம் தேதி) ஒரு எட்டு டிஸ்கவரி புக் பேலஸூக்கு வந்துவிடுங்கள். புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துவிடலாம். எப்படியும் நாளை முழுவதும் அங்குதான் இருப்பேன். இந்த வேலையை முடித்துவிட்டுத்தான் பேருந்து ஏறுவதாகத் திட்டம். நாளை மாலை அல்லது நாளை மறுநாளில் தேர்வு செய்யப்பட்ட புத்தகங்களின் முழுமையான பட்டியலை நிசப்தத்தில் பதிவு செய்துவிடலாம்.
நன்றி.
0 எதிர் சப்தங்கள்:
Post a Comment