சில விஷயங்களைக் காதிலேயே போட்டுக் கொள்ளக் கூடாது. யாராவது நம்மிடம் வந்து ‘அவன் அப்படியாமே இவள் இப்படியாமே’ என்றாலும் சரி. ‘அவர் உங்களைப் பத்தி அப்படி சொன்னார்’ என்றாலும் சரி- காதை மூடிக் கொள்ள வேண்டும். சிலர் ஒரு படி மேலே போய் ‘அந்த ஆளைப் பத்தி என்ன நினைக்கறீங்க?’ என்பார்கள். போட்டு வாங்குகிறார்களாம். எதையாவது சொல்லி வாயை மூடியிருக்க மாட்டோம் ஆனால் சம்பந்தப்பட்டவருக்கு தகவல் சென்று சேர்ந்திருக்கும். திரும்பிய பக்கமெல்லாம் இப்படிப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.
தன்னை நல்லவனாகக் காட்டிக் கொள்வதற்காக அடுத்தவர்களை கெட்டவர்களாக மாற்றிவிட தயங்காத உலகம் இது.
எங்கள் லே-அவுட்டில் குடியிருக்கும் நண்பர் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். கன்னடக்காரர்- ஹசன் மாவட்டத்தைச் சேர்ந்தவர். குடும்பம் குட்டியோடு பெங்களூரில் தங்கியிருக்கிறார். ஊரில் அம்மா அப்பா விவசாயம் செய்கிறார்கள். இங்கு அவருக்கும் மேலாளருக்கும் ஏழாம் பொருத்தம். அவ்வப்பொழுது இவரைக் குத்திவிடுவாராம். இவரும் விடுவதில்லை. நேரடியாக நிறுவன இயக்குநரிடம் தொடர்பில் இருந்திருக்கிறார். தொடர்பு என்றால் அவ்வப்போது மேலாளர் குறித்து புகார் அளிக்கும் அளவிற்கான தொடர்பு. அவ்வளவுதான். இதை வைத்து அவரால் உருப்படியாக வேறு எதையும் சாதிக்க முடிந்ததில்லை.
வெளிநாடு செல்ல வாய்ப்பு கொடுங்கள், சம்பள உயர்வு கொடுங்கள், பதவி உயர்வு கொடுங்கள் என்று எதைக் கேட்டாலும் ‘முடியாது’ என்றிருக்கிறார்கள். பூசாரி வரம் கொடுக்காமல் எப்படி கிடைக்கும்?. பொறுத்துப் பார்த்தவர் இனி வேறொரு நிறுவனத்திற்கு மாறிவிடலாம் அல்லது குறைந்தபட்சம் வேறு டீம்க்கு ஜாகையை மாறிவிடலாம் என்று முடிவு செய்து வேலை தேடியிருக்கிறார். கடந்த ஒன்றரை மாதங்களாவே தேடியிருக்கிறார். ஒன்றும் சரியாக வாய்க்கவில்லை. கன்னடக்காரர் பத்து வருடங்கள் அனுபவம் வாய்ந்தவர். அதுதான் பெரிய பிரச்சினை. ஐ.டியில் சில ஏரியாக்களில் அதிக அனுபவம் மிக்கவரை வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்கள். மூன்று வருட அனுபவம் உள்ளவனால் செய்துவிடக் கூடிய ஏரியாவாக இருக்கும். அதற்கு எதற்கு பத்து வருட அனுபவம் உள்ளவன்? அவனுக்கு சம்பளமும் அதிகமாகக் கொடுக்க வேண்டியிருக்கும். பிஞ்சுகளாக பிடித்துப் போட்டு இடங்களை நிரப்பிக் கொள்கிறார்கள். அதனால்தான் இவருக்கு அவ்வளவு எளிதில் வேலை கிடைக்கவில்லை.
இந்தத் தேடலின் போதுதான் இவருக்கு கெட்ட நேரம் வாய்த்திருக்கிறது. இரண்டொரு வாரங்களுக்கு முன்பாக டீம் மீட்டிங் நடந்திருக்கிறது. அந்த அணியில் மொத்தமே ஐந்து பேர்கள்தான். அறைக்கு மேலாளர் வந்து சேர்ந்திருக்கவில்லை. ஆளாளுக்கு எதை எதையோ பேசியிருக்கிறார்கள். அதில் ஒருவன் மேலாளருக்கும் இந்த கன்னடக்காரருக்குமான லடாயைக் கோடு காட்டியிருக்கிறான். கடுப்பாக இருக்கும் சமயத்தில் யாராவது தமக்கு ஆதரவாக இருப்பது போல காட்டினால் இளகிவிடுவோம் அல்லவா? இவரும் இளகிவிட்டார். நான்கு பேருமே முகத்தை பரிதாபமாக வைத்திருந்தார்களாம். இவர் அத்தனையையும் கொட்டிவிட்டார். அணியில் சேர்ந்ததிலிருந்து ஒவ்வொரு பிரச்சினையையும் விலாவாரியாகச் சொல்லியிருக்கிறார். இது போதாதா? இந்த நான்கு பேர்களில் எவனோ ஒருவன் அத்தனை விஷயங்களையும் மேனஜருக்கு கொண்டு போய்விட்டான். அவ்வளவுதான்.
டீம் மீட்டிங் நடத்தி தன்னைப் பற்றி தாறுமாறாக பேசிவிட்டதாக மேலாளர் விவகாரத்தை பெரிதாக்கிவிட்டார். இனி தன்னை யார் மதிப்பார்கள்? என்றும் விவகாரத்தை வேறு திசையில் நகர்த்திவிட்டாராம். மூன்றாம் மனிதனாக இருந்து யோசித்துப் பார்த்தால் மேலாளர் பக்கம்தான் நியாயம் இருப்பதாகத் தெரியும். பிரச்சினையை இந்தக் கன்னடக்காரன் எதற்கு டீமிடம் விவாதித்திருக்கிறார் என்றுதானே தோன்றும்? அதுவும் அலுவலக நேரத்தில்- அலுவலக அறையிலேயே விவாதித்திருக்கிறார். இயக்குநருக்கும் அப்படித்தான் தோன்றியிருக்கிறது. கன்னடக்காரரை அழைத்து விசாரித்திருக்கிறார். ஏற்கனவே கடுப்பில் இருந்த கன்னடக்காரர் தன்னை வைத்து விளையாடுகிறார்கள் என்கிற ரீதியிலான எரிச்சலில் ‘உங்ககிட்ட எத்தனையோ தடவை அந்த மேனஜரைப் பற்றி சொல்லியிருக்கேன், அப்போவெல்லாம் கண்டுக்காம விட்டுட்டு இன்னைக்கு மட்டும் ஏன் கூப்பிட்டு கேட்கறீங்க?’ என்று எகிறியிருக்கிறார். எந்த அதிகாரியுமே நாம் அடங்கிப் போகும் வரைக்கும்தான் ஆதரிப்பார்கள். எகிறினால் கொட்டிவிடுவார்கள். இயக்குநரும் சளைத்தவரில்லை. கொட்டுவதற்கான அத்தனை முஸ்தீபுகளையும் எடுத்துவிட்டார்கள்.
கடந்த வெள்ளிக்கிழமை அழைத்து ‘மொஹாலியில் ஒரு இடம் காலியிருக்கு. அங்க போய் வேலை செய்ய முடியுமா?’ என்று கேட்டிருக்கிறார்கள். சென்னை, ஹைதராபாத் என்றால் கூட யோசிக்கலாம். அதுவும் ஜூன் மாதம் அழைத்துக் கேட்டால்? குழந்தைகளுக்கு பள்ளிச் சேர்க்கையில் ஆரம்பித்து அத்தனையுமே சிரமம்தான். ‘முடியாது’ என்றிருக்கிறார். ‘இங்கு டீமில் ஆளைக் குறைக்க வேண்டியிருக்கிறது’ என்றார்களாம். புரிந்துவிட்டது. இன்று காலையில் அழைத்து ராஜினாமா கடிதம் எழுதித் தரச் சொல்லி இரண்டு மாத சம்பளத்தையும் கையில் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். இன்று மாலை பேசிக் கொண்டிருக்கும் போது விவகாரங்களை விலாவாரியாகச் சொன்னார். ‘எவன் போட்டுக்கொடுத்தான்னு தெரியல’ என்பதுதான் அவரது பேச்சின் சாராம்சம். ‘எவன் போட்டுக் கொடுத்தா என்ன? நீங்க எதுக்கு பேசுனீங்க’ என்றால் அவரிடம் பதில் இல்லை.
எப்படி பதில் இருக்கும்?
அடி வாங்கினால்தான் நமக்கு அனுபவமே வரும். ஆனால் அடி விழும் போது அதை இன்னொரு கை தடுத்துவிட்டால் ‘ஏன் அடி விழுகிறது என்பதை விடவும் எவன் அடிக்கிறான்’ என்றுதான் மனம் பார்க்கிறது.
கன்னடக்காரர் வெள்ளிக்கிழமையன்று அலுவலகத்தில் நடந்த விவகாரங்களைப் பார்த்துவிட்டு சனிக்கிழமை வேறொரு நிறுவனத்திற்கு நேர்காணலுக்குச் சென்றிருக்கிறார். கெட்டநேரத்தைவிடவும் நல்ல நேரம் கெட்டியாக இருந்திருக்கிறது. போன இடத்தில் வேலையை வாங்கிவிட்டார். முப்பது சதவீத சம்பள உயர்வு. அந்தத் தெனாவெட்டில்தான் ‘எவன் போட்டுக் கொடுத்தான்’ என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். தப்பு உங்களிடம் என்று சொல்லிப் புரிய வைக்க முடியவில்லை. ‘இது போனா போகட்டும் இன்னொரு வேலை இருக்கிறதே’ என்ற ரீதியில்தான் பேசிக் கொண்டிருந்தார். அடங்கமாட்டார் போலிருந்தது. ‘மழை வர்ற மாதிரி இருக்கு சார்’ என்று வந்துவிட்டேன்.
அனுபவங்களைக் கற்றுக் கொள்வதற்கு மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அப்படியான விலையைக் கொடுத்தாலும் கற்றுக் கொள்பவர்கள் மிகக் குறைவுதான். அவர் கற்றுக் கொள்ளாவிட்டால் என்ன? அவரது அனுபவத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ளலாம். முடிந்தவரைக்கும் ஷட்-அப். அது போதும்.
13 எதிர் சப்தங்கள்:
ஹா ஹா... எல்லா அலுவலகங்களிலுமே இவர் போன்ற loose talk மனிதர்கள் இருக்கிறார்கள்...
// அடி வாங்கினால்தான் நமக்கு அனுபவமே வரும். ஆனால் அடி விழும் போது அதை இன்னொரு கை தடுத்துவிட்டால் ‘ஏன் அடி விழுகிறது என்பதை விடவும் எவன் அடிக்கிறான்’ என்றுதான் மனம் பார்க்கிறது. //
நல்ல பார்வை மணி. புதிய இடத்திலாவது வாயை அடக்கி இருத்தல் நன்று என்பதை உணர்ந்து நடந்தால் நல்லது.
நல்ல பாலிசி. பிழைத்துக்கொள்வீர்கள்.
நுணலும் தன் வாயால் கெடு(மா)ம்:(
ஆனால்..... பரிதாபப் பார்வை, பேச்சுகளுடன் நம்மிடமிருந்து விஷயம் கறக்கும் மக்கள்ஸ்க்கு நம்முலகில் குறைவே இல்லை!
உண்மையிலேயே தேவையில்லாத பேச்சைக் குறைத்தால், தேவையற்ற சங்கடங்களைத் தவிர்க்கலாம்
நல்ல பாடம்
நன்றி நண்பரே
தம 1
நல்ல பாடம்
பலே
சரியான தீர்வு...
சிவபார்க்கவி
வாயிருந்தும் ஊமையாய் இருந்தால்தான் சில இடங்களில் பிழைக்க முடியும்.
Romba sari.. Nanum eppavum mattikkuven... Ippo only eyes and ears open.. mouth closed... romba reliefa irukku...
//கடுப்பாக இருக்கும் சமயத்தில் யாராவது தமக்கு ஆதரவாக இருப்பது போல காட்டினால் இளகிவிடுவோம் அல்லவா?//
நானும் ரொம்ப இளகியிருக்கிறேன்.
yessss..
Y
Post a Comment