மின்சார வசதி கூட இல்லாத குடிசை. நிமிர்ந்தபடியே உள்ளே நுழைந்தால் தலை இடித்துவிடும். இத்தகைய குடிசைகள் இன்னமும் இருக்கின்றன. அத்தகைய குடிசைகளில் இருந்து பி.ஹெச்.டி வரைக்கும் வருபவர்களும் இருக்கிறார்கள். மணிகண்டன் அப்படியான ஒரு மனிதர். அவரது வீடுதான் படத்தில் இருப்பது.
(மணிகண்டன் குறித்து தினமணியில் வெளியான செய்தியிலிருந்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன்)
மணிகண்டன் நாமக்கல்காரர். நாமக்கல் இல்லை- பக்கத்தில் ஒரு குக்கிராமம். அம்மா, அப்பா இரண்டு பேருமே விவசாயக் கூலிகள். வயிற்றைக் கட்டி பையனை படிக்க வைத்துவிட்டார்கள். மணிகண்டன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.ஸி முடித்துவிட்டு பிறகு பெங்களூர் IISC யில் இளநிலை ஆராய்ச்சியாளராக இருந்தவர் அங்கு புற்று நோய் குறித்தான ஆராய்ச்சிகளைச் செய்திருக்கிறார். இப்பொழுது ஜெர்மனியில் பி.ஹெச்.டிக்கான ஆராய்ச்சியைச் செய்து கொண்டிருக்கிறார்- உயிர் வேதியியல் (பயோ கெமிஸ்ட்ரி) துறையில்.
ஆராய்ச்சியில் மூன்று வருடங்கள் முடிந்துவிட்டன. இன்னமும் ஒன்றரை அல்லது இரண்டு வருடங்களுக்கு இழுத்துவிடும் போலிருக்கிறது.
பிரச்சினை என்னவென்றால் இதுவரையிலும் வந்து கொண்டிருந்த உதவித் தொகை தடைபட்டுவிட்டது. நட்டாற்றில் சிக்கிக் கொண்டார். ஏதேனும் பிரச்சினையினால் பி.ஹெச்.டியை முடிக்க முடியவில்லையென்றால் இதுவரை வாங்கியிருக்கும் உதவித் தொகையை மொத்தமாகத் திருப்பித் தந்துவிடுவதாகவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறாராம். அதனால் பாதியில் விட்டுவிட்டு வரவும் முடியாது. எப்படியாவது முனைவர் பட்டம் வாங்கியாகிவிட வேண்டும்.
பல்கலைக்கழகத்தில் பேசிப் பார்த்திருக்கிறார். இனி வரும் காலங்களில் ஆராய்ச்சி செய்வதற்குத் தேவையான செலவுத் தொகையைத் தந்துவிடுவதாகவும், ஆனால் தங்குவதற்கான செலவுகளை நீங்களேதான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பல்கலைக்கழகம் சொல்லிவிட்டது. இப்பொழுது மணிகண்டன் திணறிக் கொண்டிருக்கிறார். என்னதான் படிப்பு இருந்தாலும் பணம் இல்லையென்றால் வேலைக்கு ஆகாது இல்லையா? வேறொரிடத்தில் உதவித் தொகையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். அதற்கு இன்னமும் மூன்றிலிருந்து நான்கு மாதங்கள் வரையிலும் தேவைப்படக் கூடுமாம். அதுவரையிலான செலவுக்கு பிறரின் உதவித் தேவைப்படுகிறது.
உணவுக்கான செலவை உடனிருக்கும் நண்பர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். அப்படியே உணவுக்கான செலவை நீக்கிவிட்டாலும் கூட எப்படியும் ஒவ்வொரு மாதமும் எழுநூற்றைம்பது யூரோக்கள் வரைக்கும் தேவைப்படும் போலிருக்கிறது. இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 62,000. முதல் மாதத்திற்கான செலவை சிங்கப்பூரைச் சேர்ந்த திரு. மொய்தீன் ஏற்றுக் கொள்வதாகச் சொல்லிவிட்டார். இவர் ஏற்கனவே திரு.சின்னானின் மகளின் படிப்புக்கான மொத்தச் செலவையும் ஏற்றுக் கொள்வதாகச் சொல்லியிருந்தார். அப்பொழுது தேவையான அளவுக்கு பணம் சேர்ந்துவிட்டதால் ‘வேறு யாருக்கேனும் உதவலாம். வைத்திருங்கள்’ என்று சொல்லியிருந்தேன். இப்பொழுது அவரிடம் பேசியவுடன் உடனடியாக தொகையை இந்த வார இறுதிக்குள் மணிகண்டனுக்கு அனுப்பிவிடுவதாகச் சொல்லியிருக்கிறார். முதல் கடவுள்.
உதவி கேட்பது மாதிரியான நிலைமை வந்துவிட்டதாக சற்று தளர்ந்திருந்த மணிகண்டனிடம் இன்னும் சில கடவுள்களை பிடித்து விடலாம் என்று உறுதியளித்திருந்தேன். நம்பிக்கை இருக்கிறது. இன்னும் சிலர் உதவினால் மணிகண்டனுக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்கும் வரைக்கும் ஒரு பாலமாக இருந்துவிடலாம்.
உதவ இயலும் என நினைத்தால் ஒரு குறிப்பை vaamanikandan@gmail.com க்கு அனுப்புங்கள். மணிகண்டனின் கல்லூரி, வங்கிக்கணக்கு குறித்தான பிற விவரங்களை அனுப்பி வைக்கிறேன்.
நன்றி.
நன்றி.
மணிகண்டனின் மின்னஞ்சல்:
2 எதிர் சப்தங்கள்:
மனத்தை உருக்கும் வேண்டுகோள் தங்களின் இந்த வேண்டுகோள் நிறைவேற
வாழ்த்துக்கள் சகோதரா .
Help for Ph.D student என்ற சப்ஜெக்ட் லைனில் யாரோ அனுப்பியிருந்த மின்னஞ்சல் Spam ல் இருந்தது. விவரங்களைக் கூட பார்க்காமல் தவறுதலாக டெலீட் செய்துவிட்டேன் :( மீண்டும் அனுப்பி வைக்க இயலுமா?
Post a Comment