Jun 13, 2014

வேறு என்ன செய்துவிட முடியும்?

ஜெர்மனியில் ஆராய்ச்சி மாணவராக இருக்கும் திரு.மணிகண்டனுக்குத் தேவையான உதவி கிட்டத்தட்ட கிடைத்துவிட்டது. அவர் ஏற்கனவே பெற்று வந்த உதவித் தொகை நின்று போனதால் வேறொரு வகையில் உதவித் தொகை பெறுவதற்கான முஸ்தீபுகளில் இருந்தார். அது வந்து சேர்வதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் போலிருக்கிறது. இடைப்பட்ட காலத்தை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் அவருக்கு முன்பாக இருந்த மிகப் பெரிய பிரச்சினையாக இருந்தது.

உடன் தங்கியிருக்கும் சில நண்பர்கள் உணவுக்கான தேவையைப் பார்த்துக் கொண்டாலும் ஜெர்மனியில் தங்குவதற்கான செலவு, ஒவ்வொரு மாதத்திற்கும் காப்பீட்டு பிரிமீயம் மற்றும் மின்கட்டணம் மட்டுமே மாதம் அறுபதாயிரம் ரூபாயைத் தாண்டிவிடுகிறதாம். இதற்கான தொகைதான் சவாலாக இருந்திருக்கிறது. உண்மையைச் சொன்னால் மணிகண்டன் முதலில் பேசும் சந்தேகமாகத்தான் இருந்தது. ஒரு ரூபாய் கூட எனது பர்ஸிலிருந்து எடுத்துக் கொடுக்கவில்லை என்றாலும் தவறான ஆளாக இருந்துவிடக் கூடாது என்ற சந்தேகம்தான்.

அவர் தற்போது ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் நிறுவனத்தின் இணையதளம், அவர் முன்பாக படித்த IISC ஆகியவற்றின் தளங்களில் அவரது விவரங்களைச் சரிபார்த்துவிட்டுத்தான் அந்த வேண்டுகோளை முன் வைத்தேன். பிறகு தனது ஆராய்ச்சிக் கட்டுரைகள், காப்புரிமை பெறுவதற்காக பதிவு செய்யப்பட்டிருக்கும் தனது ஆராய்ச்சி முடிவுகள் என அனைத்தையும் அனுப்பி வைத்திருந்தார். இதைச் சந்தேகம் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை- எனக்குத் தெரிந்து உதவி செய்பவர்கள் ஒவ்வொருவருமே மிகக் கஷ்டப்பட்டு மேலே வந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். உதவுபவர்கள் யாருக்குமே எந்த தனிப்பட்ட எதிர்பார்ப்புமே இல்லை.

சிங்கப்பூரைச் சேர்ந்த மொய்தீன் ஒரு மாதச் செலவை- கிட்டத்தட்ட அறுபத்தைந்தாயிரம் ரூபாயை- அனுப்பி வைத்திருக்கிறார். மணிகண்டன் நன்றி தெரிவித்து அனுப்பிய கடிதத்துக்கு ‘உதவுவதற்கு வாய்ப்பளித்த கடவுளுக்கு நன்றி. நீங்கள் படித்து முடித்துவிட்டு வேறொரு தகுதியான மாணவருக்கு உதவுங்கள். அதுவே போதும்’ என்று பதில் எழுதுகிறார். ஒரு வினாடி கலங்கி விட்டேன்.

அமெரிக்காவில் இருந்து அழகேசன் என்றொரு நல்ல மனிதர் ஒரு மாதச் செலவை அனுப்பி வைத்திருக்கிறார். அறுபத்தைந்தாயிரம் ரூபாய்தான். அவருக்கு நன்றி தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பினால் ஒற்றை வரியில் பதில் அனுப்புகிறார்  ‘Just passting the torch’ என்று. அறுபத்தைந்தாயிரம் ரூபாயை கொடுத்துவிட்டேன் என்ற துளி மிதப்பு கூட இல்லை. இவர்களை எல்லாம் கடவுள் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?

பணம் கொடுத்துவிட்டார்கள் என்பதற்காகச் சொல்லவில்லை- அந்த மனம் இருக்கிறது பாருங்கள்- கடவுள் குடியிருக்கும் கோயில் அது.

கணவர் இல்லை, உறவினர் ஒருவரின் திருமணச் செலவுகள் இருக்கின்றன, குழந்தைகளுக்கான படிப்புச் செலவுகள் இருக்கின்றன, ஒற்றைச் சம்பாத்தியம், சிரமம்தான் - ஆனாலும் ஒவ்வொரு மாதமும் நூறு யூரோவாவது அனுப்புகிறேன் என்று அம்மையார் கேட்டிருந்தார்.  ‘இதுவரை எனக்கு வேலை இல்லை. இப்போதைக்கு இருநூறு டாலர் அனுப்பி வைக்கிறேன். வேலை கிடைத்தவுடன் இன்னமும் அனுப்புகிறேன்’ என்றொருவர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ‘இப்போதைக்கு ஐந்தாயிரம் ரூபாய் தருகிறேன். அவ்வளவுதான் சாத்தியம்’ என்று கேட்டிருந்தார்கள். இதைப் போன்றே வேறு சிலரும் சொல்லியிருந்தார்கள்.

இவர்கள் அத்தனை பேருக்கும் ‘உங்களின் அன்பு மனமே போதும். தேவைப்படும் போது வாங்கிக் கொள்கிறேன்’ என்று பதில் அனுப்பி வைத்தேன். உதவுகிற மனம் இருக்கிற அத்தனை பேருக்கும் ஏதாவது சிரமங்கள் இருக்கின்றன. அத்தனையையும் தாண்டி உதவுகிறார்கள். அதனால்தான் இவர்கள் எல்லோரும் கடவுள்கள்.

ஐரோப்பாவில் படிக்கும் மாணவர் சதீஷ். அவர் மாணவர்தான். சம்பாத்தியம் எதுவும் இல்லை. அவரும் ஒரு மாதச் செலவுக்கான தொகையை மணிகண்டனுக்கு அனுப்பி வைத்துவிட்டார். ‘ஒருவருஷம் கழிச்சு திருப்பி கொடுங்கண்ணா’ என்று கேட்டிருக்கிறார்.

அழகேசன், சதீஷ் மற்றும் மொய்தீன் ஆகியோர்கள் மட்டுமே மணிகண்டனின் மூன்று மாதச் செலவை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். இவர்களைத் தவிர வெங்கடரமணி நூற்றைம்பது யூரோவும், பெயர் குறிப்பிட விரும்பாத இன்னொரு மனிதர் முந்நூறு யூரோவும் அனுப்பி வைத்திருக்கிறார்கள். இது இரண்டும் பதினைந்து நாட்களுக்கான செலவை சமாளித்துவிடும். தவிர, எங்கள் ஊர்க்காரர் ஒருவர்- இப்பொழுது அமெரிக்காவில் வசிக்கிறார் ஒரு முந்நூறு யூரோ தருவதாகவும், திரு.ரங்கநாதன் அடுத்த மாதச் சம்பளம் வந்தவுடன் ஒரு மாதச் செலவை அனுப்பி வைப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள். அனுப்பி வைத்துவிடுவார்கள்.

இவை அனைத்தையும் சேர்த்தால் ஐந்து மாதங்களுக்கான உதவி கிடைத்துவிட்டது போலத்தான். கிட்டத்தட்ட மூன்று லட்சம் இந்திய ரூபாய். ‘அடுத்து என்ன செய்யப் போகிறேன் என்று தெரியாமல் தூக்கமில்லாமல் குழம்பிக் கொண்டிருந்தேன். இப்பொழுது நம்பிக்கை வந்துவிட்டது’ என்றார் மணிகண்டன். இந்த நம்பிக்கையை விதைப்பது மட்டும்தான் நம்மால் முடிந்த காரியம். இனி அவர் ஜெயித்துவிடுவார்.

அள்ளிக் கொடுக்கிறார்கள்.

கடவுளே, இந்த நம்பிக்கையை மட்டும் கடைசிவரைக்கும் காப்பாற்றிக் கொள்ளும்படியாகவே எனது செயல்கள் அமையட்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். வேறு என்ன எழுதுவது என்று தெரியவில்லை. வழக்கமாக எழுத்தில் எமோஷனலைக் காட்டிவிடக் கூடாது என்றுதான் முயற்சிப்பேன். இன்று அது துளி கூட சாத்தியமில்லாமல் போய்விட்டது. உண்மையிலேயே நெகிழ்ச்சியாக இருக்கிறது. உடைந்துவிடக் கூடிய நெகிழ்ச்சி இது. இன்று காலையில் அரை நேரம் விடுப்பு சொல்லிவிட்டு இந்தத் தகவல்களைத் தொகுத்து எழுதிக் கொண்டிருக்கிறேன். இவ்வளவு அற்புதமான மனம் படைத்த மனிதர்கள் வாழும் உலகில்தான் நாமும் வாழ்கிறோம் என்பதைச் சுட்டிக்காட்டுவதைவிடவும் என்னால் வேறு என்ன செய்துவிட முடியும்? 

24 எதிர் சப்தங்கள்:

வரதராஜலு .பூ said...

well done mani sir. very happy

vidhun sahayaraj said...

Udhaviya ullangalukku vaalthukkal..

Moorthi Erode said...

அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள்

Unknown said...

Dear Manikandan, this is very good initiative, Long live for 100 years !!
Regards
Sasikumar
Dubai,

Unknown said...

நல்ல வேலை செய்யறீங்க. வாழ்த்துக்கள் selva.k.ramana

ராஜி said...

உதவிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி

Unknown said...

வாழ்த்துக்கள்,,,,,,,,,,,

Unknown said...

Well done sir.. Keep it up sir..

Unknown said...

நீங்களும் ஒரு கடவுளே

சேக்காளி said...

நிறைய கசப்புகளை கடந்து வர "இவ்வளவு அற்புதமான மனம் படைத்த மனிதர்கள் வாழும் உலகில்தான் நாமும் வாழ்கிறோம்" என்ற வாக்கியம் உதவியாக இருக்கும். இதனை வாசித்த அந்த தருணம் சந்தோசமாக இருந்தது.

அம்பாளடியாள் said...

எல்லோரது நம்பிக்கையும் வெற்றியடையவும் உதவி புரிந்து வரும்
அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும்
தெரிவித்துக் கொள்கின்றேன் .பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரா .

Sudhakar said...

நெகிழ்ச்சியான தருணம் தான். தாங்கள் முடித்த செயலை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.

radhakrishnan said...

தொட்டது துலங்கும் கைராசி உங்களது, தொய்விலாது தொடரட்டும் உங்கள் தெய்வீகப் பணி. வாழ்த்துக்கள் ,மணி

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துக்கள் நண்பரே

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

மணிகண்டன் என்ற பெயரைக் கண்டதும் சற்றுகுழம்பி விட்டேன். குறிப்பிட்ட பதிவை படித்ததும் தெளிந்தேன்.
உதவிக்கான வழிவகை செய்ததற்கு பாராட்டுக்கள்

Suresh said...

தொட்டது துலங்கும் கைராசி உங்களது, தொய்விலாது தொடரட்டும் உங்கள் தெய்வீகப் பணி. வாழ்த்துக்கள் ,மணி sir...

Unknown said...

Hi mani sir ,this is really a great job...longlive ...

Babu said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் . .God Bless You

தருமி said...

அற்புதமான மனம் படைத்த மனிதர்களுக்கும், அவர்கள் மனதைத் திறந்த உங்கள் எழுத்துக்கும் என் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

நிச்சயமாய் நீங்களும் உங்களிடம் உதவி கேட்டவர்களும் பாக்கியவான்கள் .ஏனென்றால் இத்தனை நல்ல உள்ளங்களுக்கு ஒரு வாய்ப்பையும் மன நிறைவையும் ஏற்படுத்திவிட்டீர்கள் .வாழ்க வளமுடன் .ஆனால் உங்கள் பதிவில் ”‘உதவுவதற்கு வாய்ப்பளித்த கடவுளுக்கு நன்றி. நீங்கள் படித்து முடித்துவிட்டு வேறொரு தகுதியான மாணவருக்கு உதவுங்கள். அதுவே போதும்’ என்று பதில் எழுதுகிறார். ஒரு வினாடி கலங்கி விட்டேன்” இதை படித்தவுடன் ....முடியலை சார் . இன்னும் வாழ வேண்உம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது .நன்றி .

sivakumarcoimbatore said...

அந்த மனம் இருக்கிறது பாருங்கள்- கடவுள் குடியிருக்கும் கோயில் அது.

Unknown said...

சிறந்த தொண்டு . உங்கள் பணி தொடரட்டும், தாங்கள் முடித்த செயலை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. மனமார்ந்த வாழ்த்துக்கள்

Unknown said...

Congrates mani anna

Unknown said...

உதவுகிற மனம் இருக்கிற அத்தனை பேருக்கும் ஏதாவது சிரமங்கள் இருக்கின்றன. அத்தனையையும் தாண்டி உதவுகிறார்கள். அதனால்தான் இவர்கள் எல்லோரும் கடவுள்கள்.- மிக பொருத்தமான வார்த்தைகள். வாழ்த்துக்கள் ,மணி.