Jun 16, 2014

சல்மானுக்கு என்ன ஆச்சு?

வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு கறிக்கடை இருக்கிறது. ஒன்றில்லை- நிறைய கடைகள் இருக்கின்றன. ஆனால் ஏனோ இந்தக் கடையை பிடித்திருக்கிறது. கர்நாடக பாய் ஒருவர் நடத்துகிறார். என்னைவிடவும் வயது குறைவாகத்தான் இருக்கும். நன்றாகத் தமிழ் பேசுவார். அதனாலேயே பிடித்திருக்கிறது என நினைக்கிறேன் - மொழிப்பாசம் என்று நெஞ்சுருக்கி வேலையெல்லாம் இல்லை. தமிழில் பேசுவதால் ஒரு இயல்புத்தன்மை வந்துவிடுகிறது. ‘எலும்பு இல்லாம வாங்கிட்டு வாங்க’ ‘இந்த வாரம் நெஞ்சுக்கறியா பார்த்து வெட்டச் சொல்லுங்க’ ‘தொடைக்கறியா போடச் சொல்லுங்க..’ என்பதையெல்லாம் மொழி தெரியாத கறிக்கடைக்காரனுக்கு புரிய வைப்பதற்குள் கண்ணாமுழி திருகிவிடும். அதனால்தான் இந்தக் கடை. 

இந்தக் கடைக்குச் செல்ல இன்னொரு காரணமும் இருக்கிறது. சல்மான்கான். நடிகர் இல்லை. ஒரு பொடியன். நான்காவது படிக்கிறான். இந்தக் கடையில் அவனுக்கு பார்ட் டைம் வேலை. பள்ளி முடித்துவிட்டு கடைக்கு வந்துவிடுகிறான். ஞாயிறன்று அறுபது ரூபாய் கூலி. மற்ற நாட்களில் நாற்பது ரூபாய். அது போக அவ்வப்போது விற்காத கோழிக்கறியை வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிடலாம். சல்மான்கானுக்கு ஹிந்தி, உருதுதான் தெரியும். கன்னடம் கூட முழுமையாகப் புரியாது. ஆனால் ஆங்கிலம் பேசுவான். பெங்களூர்வாசிகளுக்கு எந்த மொழி வருகிறதோ இல்லையோ- ஆங்கிலம் அதகளம்தான். பத்து வயது குழந்தைகள் என்றால் அவர்களிடம் பேசலாம். அதற்கு மேல் என்றால் பம்மிவிடுவேன். அதுவும் பத்தாவது பையன் பெண்கள் என்றால் தலையைக் குத்திக் கொண்டே நகர்ந்துவிடுவேன். அவர்களது ஆங்கிலம் அப்படி.

சல்மான்கான் ஆரம்பத்தில் பேசத் தயங்கினான். என் முக ராசி அப்படி. பழகியவர்களே கூட என்னிடம் பேச விரும்பமாட்டார்கள். தயங்குவார்கள். இரண்டு மூன்று முறை பேசிய பிறகு சல்மான் சகஜமாகிவிட்டான். 

சல்மானின் அப்பா ஆட்டோ டிரைவர். அவனுக்கு தங்கை ஒருத்தி இருக்கிறாள். மெஹபூப் நகர்தான் சொந்த ஊர். அப்பா ஆட்டோ ஓட்டுவதால் இங்கேயே வந்துவிட்டார்கள். கறிக்கடையில் இருந்து சற்று தூரத்தில் ஒரு லைன் வீடு இருக்கிறது. முஸ்லீம்கள் வசிக்கிறார்கள். அங்கு ஒரு வீட்டில்தான் சல்மான் குடும்பமும் தங்கியிருக்கிறார்கள். வாடகை வீடுதான். வாடகையை இவன் சம்பளம் சமாளித்துவிடும் என்று நினைக்கிறேன். அந்த அளவுக்கான சிறிய வீடு அது. 

ஞாயிற்றுக்கிழமைகளில் படு பிஸியாக இருப்பான். ‘சல்மான்’ என்று அழைத்தால் ‘சலாம் அலைக்கும் சாப்’ என்று சிரித்துக் கொண்டே நகர்ந்துவிடுவான். அவனை நிறுத்த வைத்து பேசவும் முடியாது. உரிமையாளர் கடுப்பாகிவிட வாய்ப்பு இருக்கிறது. கடைக்கு அவ்வப்போது ஒருவர் வந்து கோழிகளை அறுத்துவிட்டுப்போவார். ஹலால் செய்பவர். அவர் வரும் போதெல்லாம் கோழிகளை பிடித்துக் கொண்டு வந்து சல்மான் அவரிடம் தருவான். அறுக்கப்பட்ட கோழிகளையும் ஆடுகளையும் இன்னொருவர் சுத்தம் செய்து கொடுக்க அவற்றை கடையின் முன்புறத்தில் கொண்டு வந்து போடுவான். சுத்தம் செய்பவருக்கு அருகில் தண்ணீர் பிடித்து வைப்பான். இப்படி துறுதுறுவென்று நிற்காமல் ஓடிக் கொண்டிருப்பான். இவனுக்கு ‘காலே வலிக்காதா?’ என்று நினைத்துக் கொள்வேன். எல்லாவற்றையும் விட முக்கியம் நம்மைப் பார்க்கும் போதெல்லாம் அவன் சிரித்துக் கொண்டேயிருப்பான். பார்க்காத போதெல்லாம் அலறும் ஹிந்திப்பாடல்களுக்கு ஏற்றபடி வாயசைத்தபடியே நடந்து கொண்டிருப்பான்.

ஞாயிறு தவிர மற்ற நாட்களில் கறிக்கடைப் பக்கம் போனால் அவனுக்கு வேலை பெரிதாக இருக்காது. கடையை சுத்தம் செய்வது, ஊதுபத்தி பற்ற வைப்பது என்று இருப்பான்.  ‘சல்மான்’- இதை சற்று வித்தியாசமாக உச்சரிப்பேன். சிரிப்பான். 

‘படிக்கலையா?’ என்று ஒரு முறை கேட்டிருக்கிறேன். 

‘கொஞ்ச நாட்களுக்கு பள்ளிக்குச் செல்வேன்’ என்றவன் நிறுத்தி சத்தமில்லாமல் ‘இதே ஏரியாவில் இன்னொரு கடை ஆரம்பிக்கப் போகிறேன்’ என்று கண்ணடித்தான். பத்து வயது கூட ஆகாதவன் படிப்பை நிறுத்திவிடுவேன் என்று சொல்வது சங்கடம்தான். ஆனால் அவன் தொழில் கற்றுக் கொள்ளத்தான் இங்கு வந்து கொண்டிருக்கிறான் என்பது சந்தோஷமாகத்தான் இருந்தது. 

‘முதலாளிகிட்ட சொல்லட்டுமா?’ 

‘சொல்லிக்குங்க...ஊர்ல வேற கடையே இல்லையா?’ என்று சிரித்தான். அவனது ஆசை முதலாளிக்கும் தெரியுமாம். நான்கைந்து வருடங்களுக்குப் பிறகு கடை வைத்துத் தருவதாகச் சொல்லியிருக்கிறாராம். இதையும் சல்மானேதான் சொன்னான்.

ஒரு முறை வெளிநாட்டுச் சாக்லேட் கிடைத்தது. ஒன்றோ இரண்டோதான். அவனிடம் கொடுத்த போது தங்கச்சிக்கு ஒன்றை பத்திரப்படுத்திக் கொண்டான். அவள் ஒன்றாம் வகுப்புக்குச் செல்கிறாள். அம்மா பார்த்துக் கொள்கிறாள் என்றான். 

சல்மான்கானை கடந்த இரண்டு மூன்று வாரங்களாகக் காணவில்லை. முதல் வாரம் பெரிதாகத் தெரியவில்லை. இரண்டாவது வாரம் என்னவோ பிரச்சினை என்று தெரிந்தது. ஆனால் ஓனரிடம் கேட்கவில்லை. நேற்று கேட்டுவிட்டேன். 

‘அதுவா...அவனோட அப்பா மடிவாலா மார்க்கெட்டுக்கு வெஜிடபுள்ஸ் ஆட்டோ ஓட்டுறார் சார்...அப்படி இப்படி கனெக்‌ஷன் ஆகி ஒரு பொண்ணைக் கூட்டிட்டு தனிக்குடித்தனம் போய்ட்டான்’ கறியை வெட்டிக் கொண்டே பேசினான். 

‘தொடைக்கறியா வெட்டுங்க’ என்று சொல்லிவிட்டு ‘சல்மான்கானுக்கு என்ன ஆச்சு?’என்றேன்.

‘அவங்க அம்மா அந்தாளாண்ட பேசிப்பார்த்துருக்கு...அந்த ஆள் சரியா பதில் சொல்லல...நாலஞ்சு நாளா செல்ஃபோன் சுவிட்ச் ஆஃப் ஆகிக் கிடந்துச்சாம்....மனசு பொறுக்காம தூக்கு மாட்டிடுச்சு சார்’

திக்கென்றிருந்தது. சல்மான்கானே குழந்தை. அவனுடைய தங்கை அவனை விடக் குழந்தை. நினைத்துப் பார்க்கவே துக்கமாக இருந்தது.

‘எவ்வளவு கிலோ?’ - அவனது கேள்வி உறைக்கவில்லை.

‘சல்மான் இப்போ எங்கே இருக்கான்?’

‘நாங்க எல்லாம்தான் அவங்க சொந்தக்காரங்களை வரச் சொன்னோம். அந்தப் பொம்பளையோட அம்மா சல்மானோட தங்கச்சியைக் கூட்டிட்டு ஹசன் போயிடுச்சு’

‘எதுக்கு ஹசன் போனாங்க?’ என்றேன்.

கறியை வெட்டுவதை நிறுத்திவிட்டு பதில் சொன்னான். ‘சல்மானோட அம்மா ஹசன் தான். அவனோட அப்பாதான் மெஹபூப் நகர்’. ஹசன் கர்நாடாகவில்தான் இருக்கிறது. தேவகெளடாவின் தொகுதி.

‘அப்படின்னா சல்மான் எங்கே இருக்கான்?’ எனது கேள்விகள் அங்கேயே தான் சுற்றிக் கொண்டிருந்தன. ‘அவனோட சித்தப்பா வீட்ல மெஹபூப் நகருக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க’

‘ஒரு கிலோ போடுங்க’- பணத்தைக் கொடுத்துவிட்டு லைன் வீடு இருக்கும் வழியில் நடந்தேன். 

சல்மானையும் தங்கையையும் பிரித்துவிட்டார்கள். அந்தக் குடும்பத்தின் கூடு கலைக்கப்பட்டுவிட்டது. சல்மான் இனிமேல் படிப்பானா என்று தெரியவில்லை. மெஹபூப் நகரின் பஞ்சர் கடையிலோ அல்லது வேறொரு கறிக்கடையிலோ வேலை செய்யக் கூடும். அவனது கறிக்கடை கனவு இனி எப்படி வேண்டுமானாலும் திசை மாறலாம். இனி எந்தக் காலத்தில் தனது தங்கையைப் பார்ப்பான்? அப்படியே பார்த்தாலும் தங்கைக்காக சாக்லேட்டை பிரித்து வைத்த பாசம் அப்படியே இருக்குமா? என்னென்னவோ யோசனைகள் ஓடின. லைன் வீடுகளைத் தாண்டிய போது சல்மானின் வீடு அடையாளம் தெரியவில்லை. யாரிடமும் விசாரிக்கவில்லை. அங்கு நிறையக் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு முகமுமே சல்மானின் சாயலில்தான் இருந்தன. ஆனால் ஒன்று கூட சல்மானாக இல்லை. 

17 எதிர் சப்தங்கள்:

சிவபார்கவி said...

சார்... மனதை தொடுவதுபோல் எப்படி சார் இப்படி நிஜத்தை எழுத்தில் வடிக்கீறிர்கள்... Hats Off!

Unknown said...

Mahanadhi padam parthathu pol irukkirathu

- Viswanathan

Unknown said...

Oru mathiri manasu kashtama irukku...

Ramachandranwrites said...

ஆண்டவா, இது உண்மையாக இருக்கக் கூடாது, அப்படி உண்மை என்றால் அந்தக் குழந்தைகளைக் காப்பாற்று

கரந்தை ஜெயக்குமார் said...

மனம் கனக்கிறது நண்பரே

சேக்காளி said...

//அப்படியே பார்த்தாலும் தங்கைக்காக சாக்லேட்டை பிரித்து வைத்த பாசம் அப்படியே இருக்குமா?//
இந்த அப்பன்களுக்கு அது தெரியாமல் போவது எங்ஙனம்?

Anonymous said...

சல்மானின் மனம் எப்படி தாங்கும் இந்த பிரிவினை......

கார்த்திக் சரவணன் said...

இந்தப் பதிவின் முடிவில் லேபிள் என்ற வார்த்தையே காணவில்லை. தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. தயவு செய்து லேபிளில் புனைவு என்று எழுதி அப்டேட் செய்யவும். மனம் கனக்கிறது.....

Samy said...

I can't, man.

muni said...

I think I am addicted to your writings sir... Really touching ... Don't worry one day salman will become what he want be..

Seeni said...

வேதனை சகோ..

தருமி said...

//Ramachandran
ஆண்டவா, இது உண்மையாக இருக்கக் கூடாது, அப்படி உண்மை என்றால் அந்தக் குழந்தைகளைக் காப்பாற்று//

ஹூம் ...ம் .. அவருக்கு எத்தனையோ வேறு வேலையிருக்கு ............

ராஜி said...

சல்மான் எங்கிருந்தாலும் நல்ல மனிதனாய் வளரனும். இதுவே நம் வேண்டுதலாய் இருக்கட்டும் சகோ! கூட்டுப் பிரார்த்தனைக்கு சக்தி உண்டு

Unknown said...

Sir.. Ithe manasukkulle odikitte irukku... Manasukku romba kastama irukku... Nallathe nadakkkumentru nabuvom... Antha payyana pakkuramathiri irukku... Athu unga ezhuththukku credit sir..

RG said...

Sir.. Usually I don't want to read such articles...it takes time to come out..N number of WHY? haunt me.

sivakumarcoimbatore said...

என் மகனின் ...நினைவுகள்...எங்கிருந்தாலும் நல்ல மனிதனாய் வளரனும்.

Unknown said...

என்ன சொல்ல? வார்த்தை வரவில்லை. இதயம் வலிக்கிறது.