May 19, 2014

என்ன சம்பாத்யம்?

சில வலைப்பதிவர்கள் இருக்கிறார்கள். இந்தியர்கள்தான். ஆனால் ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள். ஹர்ஷ் அகர்வால், சுஷாந்த் ரிஷோட்கர் போன்றவர்கள் உதாரணம். பொடிப்பையன்கள்தான். ஆனால் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் நண்பர் ஒருவர்தான் இந்தப் பெயர்களை எல்லாம் அறிமுகப்படுத்தினார். அப்பொழுது எனக்கு அவ்வளவாக விவரம் போதவில்லை. ஆங்கிலத்தில் எழுதுவதும் தமிழில் எழுதுவதைப் போலவேதான் என்று நம்பிக் கொண்டிருந்தேன். ஒருவேளை தமிழை விடவும் பார்வையாளர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருக்கக் கூடும் என நினைத்துக் கொண்டிருந்தேன். 

அந்த நினைப்பிலேயே நானும் தமிழில் எழுதிக் கொண்டிருப்பதாக அவரிடம் உளறிவிட்டேன். அதுவரை ஒழுங்காகப் பேசிக் கொண்டிருந்தவர் ‘சிக்கிக் கொண்டான்’ என்கிற ரீதியில் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்துவிட்டார். தினமும் எத்தனை பேர் வாசிக்கிறார்கள்? பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். அதையெல்லாம் தொலைந்து போகட்டும் என்று விட்டுவிடலாம். கடைசியாகக் கேட்டார் பாருங்கள்- இதில் எவ்வளவு சம்பாதிக்கிறாய் என்று. உச்சியிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் சில்லிட்டுப் போனது. இதில் எங்கே சம்பாதிப்பது? 

தமிழில்தான் வழியில்லை. ஆனால் ஆங்கிலத்தில் எழுதுபவர்கள் சம்பாதிக்கிறார்கள். 

ஆங்கில வலைப்பதிவுகளை வாசிப்பவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் தமிழில் இணையத்தில் எழுதுபவர்களுக்கான வரவேற்பு எந்தவிதத்திலும் பொருட்படுத்தத்தக்கது இல்லை- negligible. இதை புகாராகச் சொல்லவில்லை. இதுதான் நிதர்சனம். ஹர்ஷ் அகர்வால், சுஷாந்த் ரிஷோட்கர் ஆகியோருக்கெல்லாம் இருபது அல்லது இருபத்தைந்து வயதுதான் ஆகிறது. ஹர்ஷ் அகர்வாலை கூகிள் ப்ளஸில் லட்சத்து நாற்பதாயிரம் பேர்கள் பின் தொடர்கிறார்கள். ஒவ்வொரு நாளும் அவரது வலைப்பதிவை பார்ப்பவர்களின் எண்ணிக்கை மில்லியன் கணக்கில் இருக்கிறது. மாய்ந்து மாய்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார். ஆரம்பகாலங்களில் ஒரு நாளைக்கு பதினான்கு மணி நேரங்களை இணையத்தில் எழுதுவதற்காக செலவிட்டிருக்கிறாராம். இப்படி அவர் எழுதுவதற்கு இன்னொரு அர்த்தமும் இருக்கிறது. விளம்பரங்களின் மூலமாகவே லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார். இணையத்தில் எழுதுவதையே தனது முழு நேர வேலையாகவே செய்யவிருப்பதாக ஒரு பழைய நேர்காணலில் சொல்லியிருந்தார். ஆரம்பித்துவிட்டாரா என்று தெரியவில்லை. பார்ட் டைமிலேயே படம் காட்டுகிறார்கள். முழு நேர வேலையாக இறங்கிக் கலக்கினால் என்னவெல்லாம் செய்வார்களோ.

தமிழில் இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. எதிர்காலத்திலும் நடக்குமா என்று தெரியவில்லை. இன்றைய சூழலில் ஒரு நாளைக்கு நான்காயிரம் அல்லது ஐந்தாயிரம் பார்வையாளர்களைக் கூட தாண்ட வாய்ப்பில்லை. அதற்காகத் தமிழில் வாசிப்பதற்கு ஆள் இல்லை என்று அர்த்தம் இல்லை. தேர்தல் சமயத்தில் தினமலர் தளத்தை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை பதினாறு லட்சங்களைத் தாண்டியிருக்கிறது. மற்ற நாட்களில் எட்டு லட்சம் பேர் வரைக்கும் பார்க்கிறார்களாம். எட்டு லட்சம் இல்லையென்றாலும் ஐந்து அல்லது ஆறு லட்சம் பேர் நிச்சயமாக வாசிக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். 

தினமலர் போன்ற செய்தித் தளங்களையும் சினிமா இணையதளங்களையும் வாசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதனை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அப்படியிருந்தாலும் ஆறு லட்சம் எங்கே? வலைப்பதிவுகளை வாசிக்கும் வெறும் ஐந்தாயிரம் பேர் எங்கே? மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இது. தினமலரை வாசிக்கும் ஐந்து லட்சம் பேர்களில் ஐம்பதாயிரம் பேரையாவது இழுக்கும் அளவிற்கு இங்கு எழுதுவதில்லை என்றுதானே அர்த்தம்? ஆமாம். துக்கினியூண்டு கசந்தாலும் அதுதான் உண்மை. ஏதோ ஒருவிதத்தில் நிறையப் பேரை ஈர்க்க முடியவில்லை என்பதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.

முக்கியமான பிரச்சினை வெரைட்டி. ஒருவர் அரசியல் எழுதினால் அவர் அரசியல் மட்டுமே எழுதிக் கொண்டிருக்கிறார். நையாண்டி என்றால் அவர் அதைத் தாண்டுவதில்லை. இணையத்தைப் பொறுத்தவரையில் நாம் எழுதுவதை ஒருவர் தொடர்ந்து வாசிக்க வேண்டுமனால் அதற்காக நாம் நிறைய வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. கட்டுரையின் முதல் மூன்று வரிகள் ஈர்க்கவில்லை என்றால் ப்ரவுசரை மூடிவிட்டு போய்விடுவார். அதன்பிறகு ஒன்றிரண்டு முறைகள் பார்ப்பார். ஒவ்வொரு முறையும் மொக்கையின் வீச்சு அதிகமாக இருந்தால் ‘உன் சங்காத்தமே வேண்டாம்’ என்று கிளம்பிவிடுவார். அவ்வளவுதான். அதன் பிறகு திரும்பிக் கூட பார்க்க மாட்டார்.

ஒரு நாளைக்கு சராசரியாக முப்பது பேர் வாசித்துக் கொண்டிருக்கும் தளத்தின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை ஒரு நாளைக்கு இரண்டாயிரம் பேராக மாற்றுவது வரைக்கும் பெரிய விஷயமாகவே தெரியாது. மிக எளிது. ஆனால் அதற்கு மேல் வாசிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுதான் சவாலே. மேட்டாங்காட்டில் ஏற முடியாத காளையின் நிலைமைதான். திணற வேண்டும்.

இந்த இடத்தில் ஒன்றைத் தெளிவுபடுத்திக் கொள்வது அவசியம். பலருக்கு வாசகர்களின் எண்ணிக்கை என்பது பொருட்டே இல்லை. உள்ளுக்குள் ஆசை இருந்தாலும் வெளியில் அப்படித்தான் சொல்லிக் கொள்வார்கள். நாமும் சரி என்று கேட்டுக் கொள்ள வேண்டும். முப்பது பேர் வாசித்தாலும் சரி; முந்நூறு பேர் வாசித்தாலும் சரி- எனக்கு இதெல்லாம் பிரச்சினையே இல்லை என்பார்கள். அவர்களை விட்டுவிடலாம்.

வலைப்பதிவை தமிழில் Professional ஆக- ஹர்ஷ் அகர்வால் மாதிரி- மாற்றுவதற்கான சாத்தியங்களைப் பற்றி பேசுகிறோம் அல்லவா? அவர்களுக்குதான் வாசகர்களின் எண்ணிக்கை, வெரைட்டி என்பதெல்லாம் முக்கியம். இந்த இரண்டாவது வகையறா ஆட்கள் ஒரு அடிப்படையான அம்சத்தை புரிந்து கொள்ளுதல் அவசியம். வலைப்பதிவுக்கும், பத்திரிக்கைகள் போன்ற Main stream ஊடகங்களுக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கின்றன. பத்திரிக்கைகளில் ஒருவர் அரசியல் கட்டுரைகள் எழுதினால் அதையே அவர் தொடர்ந்து கொண்டிருக்கலாம். பிரச்சினை இல்லை. அதுவே அவருக்கான ப்ராண்ட் ஆகிவிடும். ஆனால் இங்கு அது ஒத்து வராது- ஒத்துவராது என்றால் ஒரே சப்ஜெக்டை வைத்துக் கொண்டு பெரிய தாக்கத்தை உருவாக்குவது சுலபம் இல்லை. ஒரே விஷயத்தை எழுதிக் கொண்டிருந்தால் குறிப்பிட்ட வட்டத்தைத் தாண்டி வாசகர்களின் பரப்பை அதிகரிக்க முடியாது. 

அப்படியென்றால் எல்லா தட்டுகளிலும் வாய் வைத்துவிடலாமா? இலக்கியவாதிகள், எழுத்தாளர்களிடம் பேசினால் ‘எல்லா விஷயத்தையும் தொட வேண்டிய அவசியம் இல்லை. ஏதாவது ஒன்றில் மட்டும் ஆழமாக எழுது’ என்பார்கள். அவர்கள் சொல்வதும் சரிதான். ஆனால் இதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். நம் எதிர்காலத்திட்டம் என்ன? Main stream எழுத்தாளராக விரும்புகிறோமா அல்லது இணையத்திலேயே தொடர விரும்புகிறோமா? ஒரே ஒரு ஏரியாவில் ஆழ உழலாமா? அல்லது பரவலாக உழலாமா என்பதையெல்லாம் முடிவு செய்து கொள்ள வேண்டும். 

என்னதான் தமிழ் வலைப்பதிவுகளில் ஆட்டம் கட்டினாலும் ஆங்கில வலைப்பதிவர்களைப் போல சம்பாதிக்கலாம், லட்சக்கணக்கான வாசகர்களை அடையலாம் என்பதெல்லாம் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் சாத்தியமே இல்லை. ஆனால் அதற்கான முயற்சிகளை செய்து பார்க்கலாம். அவ்வளவுதான்.

தனிப்பட்ட முறையில் கேட்டால்- வலைப்பதிவு என்பது ஒரு பயிற்சிக்களம். எல்லாத் துறைகளிலும் கை வைத்துப் பார்த்துவிடலாம். நமக்கு சுத்தமாகவே ஒத்து வராது என்றால் மட்டும் அந்தத் துறையை ஒதுக்கி வைக்கலாம். மற்றபடி சும்மாவே ஆட வேண்டியதுதான். ஆடிக் கொண்டிருந்தால் அவ்வப்போது யாராவது சலங்கையை கட்டிவிடுவார்கள். சலங்கை இல்லாமலேயே ஆடுவோம். சலங்கையையும் கட்டிவிட்டால் கேட்கவா வேண்டும்? ததிம் தக்..தக்..தக்..ததிம் தக்...

15 எதிர் சப்தங்கள்:

Unknown said...

சமீப காலமாய் என் தளமான ஜோக்காளியில் விளம்பரங்களை அனுமதித்துள்ளேன் ,வரும்படியை பார்த்தால் புல்லரிக்கிறது ...தினசரி பதிவுகள் போட்டு ,தமிழ் மணத்தில் வாராவாரம் முதல் இடத்தில் வந்தாலும் ....ஒரு டாலர் சம்பாதிக்க அறுபது நாளாகும் போலிருக்கிறது !
கூகுளே ஆங்கில பதிவுகளுக்கு தருவதைப் போல் விளம்பரங்களை தமிழ் பதிவுக்கும் தந்தால் விமோசனம் வரலாம் !

ஜீவ கரிகாலன் said...

EYE OPENER பதிவு என்று ப்ளாகர்களைத் தூண்டிவிடும் உங்கள் பதிவு

கார்த்திக் சரவணன் said...

தமிழ் வலைப்பதிவுகளை தினமலரோடு ஒப்பிடுவது என்பது மாபெரும் தவறு. அது ஒரு புகழ்பெற்ற ஊடகம். தவிர அதில் பணியாற்றுபவர்கள் எத்தனை பேர்? அங்கே துறை ரீதியாக எழுதுவதற்கு பலதரப்பட்ட professionals இருக்கிறார்கள். ஆனால் நம்முடைய வலைத்தளத்தை நாம் மட்டுமே கவனித்துக்கொள்ளவேண்டும். ஆல் இன் ஆல் அழகுராஜா!

Vaa.Manikandan said...

இது தினமலரோடு ஒப்பிடுதல் இல்லை ஸ்கூல் பையன். இணையத்தில் தமிழை அதிகம் பேர் வாசிப்பவர்கள் இல்லை என்று சிலர் சொல்வதுண்டு. அப்படியில்லை- இணையத்தில் தமிழில் வாசிப்பவர்களின் எண்ணிக்கை பல லட்சங்களில் இருக்கிறது என்பதற்கான தரவு.

Aruna said...

ஆங்கில ப்ளாகர்களுக்கு இணையாக வளரவேண்டும் என்றால், நம் ஆட்கள் மனப்பான்மையும் வளர் வேண்டும். சென்ற வருடம் இண்டிப்ளாகர் நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்ட நம்மவர்கள் ‘How can we help Tamil Bloggers?' என்ற தலைப்பில் ஒரு குழு விவாதம் நடத்த முயற்சித்த போது, ’நாங்கள் உங்களுக்கு கீழானவர்களா?, உங்கள் உஅதவிவியை எடுத்துகொண்டு வந்த வழியே ஓடுங்கள்’ என்று விரட்டினார்கள் நம்மவர்கள்.புதியவற்றை எல்லாம் விரும்பி ஏற்றுக்கொண்ட சுஜாதாவின் வழியில் செல்வதாக சொல்லிக்கொள்பவர் தான் இந்த கலகத்தூகு தலைமை தாங்கினார் என்பது தான் கொடுமை!

Yarlpavanan said...

சிந்திக்க வைக்கும் சிறந்த பதிவு

”தளிர் சுரேஷ்” said...

உண்மைதான் தமிழ் வலைப்பதிவுகளுக்கு பார்வையாளர்கள் குறைவுதான்! சம்பாத்தியம் தவிர்த்து பார்த்தோமானால் தமிழில் சுவையான எழுத்துக்களுக்கு பஞ்சம் இல்லை என்றுதான் தோன்றுகிறது! நல்லதொரு பகிர்வு! நன்றி!

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

கற்று கொள்ள எழுதுகிறோம் எழுதவே கற்று கொள்கிறோம் நான் அந்த சாதி .எனவே சம்பாதிக்க எழுதுவதுவும் கலைதான் ஆனால் அதில் கற்று கொள்ள என் போன்றவர்களுக்கு தூரம் இன்னும் இருக்கிறது .

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இவர்களைப் பற்றிய பதிவு ஒன்று எழுதி இருந்தேன். ப்ளாக் மூலம் பணம் சம்பாதிப்பவர்களில் பெரும்பாலோர் தொழில் நுட்பப் பதிவர்களே. தொழில் நுட்பம் பற்றி தமிழில் எழுதினாலும் குறைந்தது ஆயிரம் பேராவது பார்த்து விடுகிறார்கள். ஆங்கிலத்தில் எழுதினால் உலகம் முழுவதும் பார்க்க வாய்ப்ப்பு உண்டு.
சென்னைப் பையன் ஸ்ரீனிவாசன் மாதம் 5000 டாலர் சம்பதிக்கிறானாம்
Top Ten Adsense earners

sivakumarcoimbatore said...

mani sir...ஆல் இன் ஆல் அழகுராஜா!..ur r future billionr....all the best sir..

துளசி கோபால் said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

சேக்காளி said...

கலாகுமரன் said...

க்கூம்...ப்ளாக்ள எழுதறீங்களே தம்படி பிரியோசனம் உண்டா ? கேள்வி கேட்டவர் வீட்டம்மா. பதில் ஏதும் சொல்லாமால் "ங் ஙே" என்றே விழித்தேன்.

சேக்காளி said...

''வேறென்ன வேறென்ன வேண்டும்" http://www.nisaptham.com/2013/12/blog-post_30.html
''பட்டியல் தயார்" http://www.nisaptham.com/2014/03/blog-post_8.html
இதெல்லாம் எப்படி சாத்தியப்பட்டது மணி?.

நெல்லைத் தமிழன் said...

தினமலர் போன்ற பத்திரிகைத் தளத்துக்கும் உங்களைப்போன்ற பிளாக்கர்களுக்கும் பொதுவான வேறுபாடு உண்டு. நான் உங்கள், துளசி கோபால், வெங்கட் நாகராஜ், ஜாக்கி சேகர், கடுகு, மின்னல்வரிகள், கேபிள் சங்கர் போன்ற பல பல தளங்களைப் படிக்கிறேன். வாரம் ஒருதடவை வந்து அனைத்துக் கட்டுரைகளையும் படிக்கிறேன். அதனால் Daily Traffic சரியான எண்ணிக்கையைக் காட்டாது. பெரும்பாலும் வெளி'நாட்டில் உள்ளவர்களும், ஓய்வுபெற்றவர்களும், உங்களைப் போன்ற பிளாக்கர்களையும் கொண்டதே (பெரும்பாலும், அதாவது 70% மேல்) வாசர்கூட்டம். ஒருசார்பு கட்டுரைகளைத் தவிர எல்லாவற்றையும் எல்லாரும் படிப்பார்கள் என்றே தோன்றுகிறது. தொடர்ந்து எழுதுங்கள். உங்களுக்கும் ஆத்ம திருப்தி. எங்களுக்கு மகிழ்சி.