நேற்று இங்கு மழை. பேய் மழை இல்லையென்றாலும் பிசாசு மழை என்றுதான் சொல்ல வேண்டும். மாலை ஆறு மணிக்கு பெய்யத் தொடங்கி வெகு நேரம் துளிர்த்துக் கொண்டேயிருந்தது. மழை பெய்தால் போதும்- அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு கிளம்பிவிடுவேன். ஸ்ரேயா மாதிரியோ அல்லது த்ரிஷா மாதிரியோ மழைப் பிரியன் என்று அர்த்தம் இல்லை. வண்டி சுத்தமாகிவிடும்.
நேற்றிரவு ஏழே முக்கால் மணிக்கெல்லாம் ஈஜிபுரா சிக்னலைத் தாண்டிவிட்டேன். பெங்களூர்வாசிகளுக்குத் தெரிந்திருக்கக்கூடும்- அந்த சிக்னலின் இடதுபுறத்தில் ஒரு மண் பாதை செல்லும். குண்டும் குழியுமாகத்தான் இருக்கும். ஆனால் சிரமப்பட்டு அதில் கொஞ்ச தூரம் சென்றால் கோரமங்களாவை பிடித்துவிடலாம். நிறைய சிக்னல்களைத் தவிர்த்துவிடலாம். இந்த ஏரியாவில் நெருக்கிக் கட்டப்பட்ட ஏகப்பட்ட குட்டி வீடுகள் உண்டு. பியூட்டி பார்லர்களிலும், மசாஜ் சென்டர்களிலும் பணி புரியும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இங்கேதான் அதிகமாகக் குடியிருக்கிறார்கள். பெங்களூரில் கோரமங்களாதான் மசாஜ் சென்டர்களுக்கு பிரசித்தம்.
நேற்று இந்த மண்சாலையில் சென்று கொண்டிருந்த போதுதான் பார்த்தேன். யாரோ இரண்டு பேர் கத்திக் கொண்டிருந்தார்கள். சண்டை போடுகிறார்கள் என்றுதான் முதலில் தோன்றியது. ஆனால் கீழே கிடந்த ஒரு பெண்மணியை அவர்கள் தூக்கி அமர வைக்க முயன்று கொண்டிருந்தார்கள். அந்த இடத்தில் வண்டியை நிறுத்துவதற்கு தயக்கமாகத்தான் இருந்தது. அது விபத்தோ, சண்டையோ அல்லது கொலையோ- நமக்கு எதற்கு வம்பு என்ற யோசனைதான். அதுவும் இல்லாமல் அங்கே என்ன நடக்கிறது என்றும் தெளிவாகத் தெரியவில்லை. மழை நீர் கண்ணாடியில் பட்டு பார்வையை குழம்பச் செய்திருந்தது.
என்னவாக இருந்தாலும் பார்த்துவிடலாம் என்று முடிவு செய்து அருகே சென்ற போதுதான் தெரிந்தது. அது விபத்துதான். முடிந்து சில நிமிடங்கள் ஆகியிருக்கக் கூடும். ஒரு முஸ்லீம் பெண் கீழே கிடந்தாள். பர்தா அணிந்திருந்தாள். அதைவிடவும் பரிதாபம்- அவள் தூக்கி வந்திருந்த பிஞ்சுக் குழந்தை ஒன்றும் கீழே கிடந்தது. அந்தச் சாலையில் தனது குழந்தையைத் தூக்கிக் கொண்டு நடந்து வந்திருக்கிறாள். மழை வேகமாக விசிறியடிக்கவும் நனையாமல் காப்பாற்றிக் கொள்வதற்காக சற்று பதறியிருப்பாள் போலிருக்கிறது. அதே நேரத்தில் வந்த ஆட்டோக்காரன் முன்னால் இருக்கும் குழியில் ஆட்டோவை விடாமல் தவிர்ப்பதற்காக வண்டியை வளைத்திருக்கிறான். ஏற்கனவே தடுமாறிக் கொண்டிருந்த இவள் மீது ஆட்டோ மோத திருகி கீழே விழுந்திருக்கிறாள். திருகி விழும் போது அவளது பின் மண்டை அருகில் இருந்த மின்கம்பத்தின் விளிம்பில் பட்டிருக்கிறது. ஆட்டோக்காரன் நிற்காமல் சென்றுவிட்டான். அவனை நோக்கித்தான் அந்த இரண்டு பேரும் கத்தியிருக்கிறார்கள். நான் அருகில் செல்லும் போது சேற்றுக்குள் தூக்கி வீசப்பட்டிருந்த குழந்தை கதறிக் கொண்டிருந்தது. இருவரில் ஒருவர் ஓடிச் சென்று குழந்தையைத் தூக்கிக் கொண்டார். முதல் சில நிமிடங்கள் மயக்கம் இல்லாமல்தான் இருந்தாள். ஆனால் தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்றே அவளுக்கு புரியவில்லை. வலி, இருள், மழை, சேறு, கீழே விழுந்துவிட்ட குழந்தை, சுற்றிலும் நிற்கும் முகம் தெரியாத ஆடவர்கள்- இந்தச் சூழல் அவளை பதறச் செய்திருந்தது.
அந்தப் பகுதியில் இசுலாமியர்களை பார்த்ததாக ஞாபகம் இல்லை. அந்த ஏரியாவைச் சார்ந்தவளா என்றும் தெரியவில்லை. அலைபேசி ஏதாவது இருக்கிறதா என்று ஒருவர் கேட்டுக் கொண்டிருந்தபோதே அவளது கண்கள் சொருகத் தொடங்கியிருந்தன. அவளுக்குத் தெரிந்தவர்களின் எண்கள் ஏதாவது தெரிந்தால் தகவல் சொல்லிவிடலாம். ஆனால் அவள் கிட்டத்தட்ட மயங்கியிருந்தாள். குழந்தையை வைத்திருந்தவர் அவளைவிடவும் அதிகமாக பதறியபடி இருந்தார். அந்தக் குழந்தையின் கதறல் அப்படி. கண்களை மூடிக் கொண்டு வீறிட்டது. எனக்கும் பயமாகத்தான் இருந்தது. ஆனால் என்ன செய்வது என்று தெரியவில்லை. ‘எப்படி அழுகையை நிறுத்துவது?’ என்று கேட்டபடியே ‘லுலுலாயி’ என்று ஏதேதோ சமாதானங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். அந்தக் குழந்தை கேட்பதாக இல்லை. இன்னொருவர் அந்தப் பெண்ணின் தலையைத் தொட்டுப் பார்த்தார். பின் மண்டையில் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. முதலில் அது ஈரமா அல்லது ரத்தமா என்று அவருக்குத்தெரியவில்லை. கைகளை சோடியம் விளக்கின் கீழாக வைத்துப் பார்த்தார். ரத்தம் பிசுபிசுத்துக் கொண்டிருந்தது. உடனடியாக ஆம்புலன்ஸுக்கு சொல்லிவிட்டோம்.
ஆம்புலன்ஸ் வர எவ்வளவு நேரம் ஆகும் என்று தெரியவில்லை. அப்படியே வந்தாலும் இந்தக் குழந்தையை என்ன செய்வது என்றும் தெரியவில்லை. குழம்பிக் கொண்டிருந்த போதே ஒரு வடகிழக்கு தம்பதியினர் வந்து சேர்ந்தனர். காதலர்களா அல்லது கணவன் மனைவியா என்று தெரியவில்லை. வந்தவுடன் குழந்தையை வாங்கி மார்போடு அணைத்துக் கொண்டாள். இன்னமும் ஆம்புலன்ஸ் வந்து சேரவில்லை. ஆனால் குழந்தையின் அழுகை சற்று மட்டுப்பட்டிருந்தது. அவன் தனது பாட்டிலில் இருந்த நீரை கீழே கிடக்கும் பெண்ணுக்கு கொடுக்க முயன்று கொண்டிருந்தான். அவளுக்கு துளி ஞாபகம் இருந்தது. ‘ஏதாவது செல்போன் இருக்கான்னு பாருங்க’ என்று யாரோ ஒருவர் ஹிந்தியில் சொன்னது அவளுக்கு அரைகுறையாக காதில் விழுந்திருக்கக் கூடும். இல்லையென்று கைகாட்டினாள்.
என்ன நினைத்தாளோ- அந்த வடகிழக்குப் பெண் திடீரென்று குழந்தையை என்னிடம் நீட்டிவிட்டாள். வாங்கிக் கொள்ளவும் தயக்கமாக இருந்தது முடியாது என்றும் சொல்ல முடியவில்லை. குழப்பமான மனநிலையில் கையை நீட்டுவதற்குள்ளாகவே என் கைகளின் மீது வைத்துவிட்டாள். குழந்தை ஈரமும் வெதுவெதுப்பாகவும் இருந்தது. ஒன்றரை வயது இருக்கக் கூடும். என்னிடம் வந்த பிறகு மீண்டும் அழத் துவங்கியது. விழுந்து கிடக்கும் பெண்ணின் மார்பு, இடுப்பு ஆகிய இடங்களில் தேடிப்பார்த்தாள். நகைக்கடையில் கொடுக்கும் ஒரு பர்ஸூம் அதில் சொற்பப் பணமும்தான் இருந்தது. இத்தனை நடந்து கொண்டிருக்கும் போது நாங்கள் நான்கைந்து பேர்கள்தான் அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தோம். அவள் அடிபட்டுக் கிடப்பதைவிடவும் இந்தக் குழந்தையை என்ன செய்வது என்பதும் யாருக்குத் தகவல் தெரிவிப்பது என்பதும் டென்ஷனைக் கூட்டியபடியே இருந்தது. இந்த இடத்தை விட்டு நகர்ந்துவிடலாமா என்று கூட யோசனை ஓடியது. அடிபட்டுக் கிடக்கும் பெண்ணின் வயதை உடைய எனது அத்தனை சொந்தக்காரப் பெண்களும் ஒரு வினாடி ஞாபகத்துக்கு வந்து போனார்கள். இருபது நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நல்ல மனிதர். நிலைமையை புரிந்து கொண்டார். யாராவது ஒருவர் இந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு கூட வர வேண்டும் என விரும்பினார். ஒரு வினாடி கூட யோசிக்காமல் ‘நான் வருகிறேன்’ என்று அந்த வடகிழக்குப் பெண் சொன்னாள். அந்த ஆணும் பெண்ணும் குழந்தையை எடுத்துக் கொண்டு ஆம்புலன்ஸில் ஏறிக் கொண்டார்கள். மற்றவர்கள் விலகிக் கொண்டார்கள். அவள் என்ன தைரியத்தில் கூட வருவதாகச் சொன்னாள் என்று புரியவில்லை. ஒருவேளை அந்தப் பெண் செத்துப் போய்விட்டால் குழந்தையை என்ன செய்வாள்? அந்தப் பெண்ணுக்கு ஞாபகமே வரவில்லை என்றால் என்ன செய்வாள்? யாரென்றே கண்டுபிடிக்க முடியாவிட்டால் என்ன செய்வாள்? காவல்துறையின் கேள்விகளை எப்படிச் சமாளிப்பாள்? இந்தக் கேள்விகள் எனக்குள்தான் ஓடிக் கொண்டிருந்தன. அவள் இதைப்பற்றியெல்லாம் துளியும் கவலைப்படவில்லை. அவளுக்குத் தெரிந்ததெல்லாம் ஒரு பெண் அடிப்பட்டுக் கிடக்கிறாள். குழந்தை தனியாக அழுது கொண்டிருக்கிறது. அவ்வளவுதான்.
கீழே விழுந்து கிடக்கும் பெண்ணுக்காக இல்லையென்றாலும் அந்த தம்பதியினருக்காக கூடவே இருப்பதுதான் நல்லது எனத் தோன்றியது. பைக்கை எடுத்துக் கொண்டு ஆம்புலன்ஸைப் பின் தொடர்ந்தேன். மருத்துவமனையில் விசாரித்தார்கள். விபத்து பற்றிய விவரங்களைச் சொன்னவுடன் நம்பிக்கொண்டார்கள். சினிமாவில் கேட்பது போலவெல்லாம் தோண்டித் துருவவில்லை. அவர்களே காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தார்கள். அடுத்த அரை மணி நேரத்தில் ஒரு கான்ஸ்டபிள் வந்து சேர்ந்தார். சில தாள்களில் விவரங்களைக் குறித்துக் கொண்டார். கன்னடத்தில்தான் எழுதினார். மணி ஒன்பதைத் தாண்டியிருந்தது. ஸ்கேன் செய்து பார்த்திருப்பார்கள் போலிருக்கிறது. உள்ளே அடி எதுவும் இல்லை. ஆனால் காயம் பெரிது என்பதால் தையல் போட்டிருப்பதாகச் சொன்னார்கள். வேறு பெரிய பிரச்சினை இல்லை என்றார்கள்.
கடும் அழுகைக்குப் பிறகு குழந்தை தூங்கியிருந்தது. வடகிழக்குப் பெண் அந்தக் குழந்தைக்கு வாகாக சாய்ந்து அமர்ந்திருந்தாள்.
‘இவளது குடும்பத்தை எப்படிக் கண்டுபிடிக்கிறது சார்?’ என்று கான்ஸ்டபிள்டம் கேட்டேன். தமிழில் தான். அவரும் தமிழிலேயே பதில் சொன்னார். ‘அவளுக்கு ஞாபகம் வந்தவுடன்தான் முடியும்’ என்றார். அந்த வடகிழக்கு ஆள் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தார். ஆங்கிலத்தில் அவரிடம் சொன்னேன். மனைவியிடம் என்னவோ முணுமுணுத்தார். பதிலுக்கு அவளும் என்னவோ சொன்னாள். ‘அதுவரைக்கும் நாங்க இங்க இருக்கிறோம்’ என்றார். கான்ஸ்டபிளுக்கு அவர்கள் மீது சந்தேகம் வந்திருக்கக் கூடும். சில கேள்விகளைக் கேட்டார். அவன் ஹிந்தியில் பதில் சொல்லிக் கொண்டிருந்தான். கடைசியில் அவருடைய டிரைவிங் லைசன்ஸ், வேலை செய்யும் பியூட்டி பார்லரின் விசிட்டிங் கார்ட், ஃபோன் நெம்பர் ஆகியவற்றைக் கொடுத்தான். ட்ரைவிங் லைசென்ஸில் இருக்கும் படத்தை ட்யூப்லைட் வெளிச்சத்தில் உற்றுப்பார்த்துவிட்டு கான்ஸ்டபிள் அதையெல்லாம் எடுத்துக் கொண்டார். பிறகு தருவதாகச் சொன்னார்.
கான்ஸ்டபிள் நகர்ந்தவுடன் என்னிடம் ‘நீங்க கிளம்புங்க...நாங்க ரெண்டு பேரும்தான் இருக்கோம்ல’ என்றார்கள். சிரித்துக் கொண்டேன்.
‘சாப்பிட்டீங்களா?’ என்றதற்கு இல்லை என்றார்கள். லேப்டாப் பையை அங்கேயே வைத்துவிட்டு வெளியில் இருந்த ஃபாஸ்ட் புட் கடையில் இரண்டு ப்ரைடு ரைஸ் வாங்கி வந்தேன்.அந்தப் பெண் ‘தேங்க்ஸ்’ என்றாள். உண்மையில் அவளது காலைத் தொட்டு வணங்க வேண்டும் போலிருந்தது. ‘உங்களுக்குத் தேங்க்ஸ்...காலையில் வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு வெளியே வந்தேன். அவர்கள் மெலிதாகச் சிரித்தார்கள். குழந்தை இன்னமும் விழித்திருக்கவில்லை.
மழை சுத்தமாக நின்றிருந்தது.
30 எதிர் சப்தங்கள்:
அந்த தம்பதியை நினைக்கும் போது உடல் முழுவதும் ஒருவித மெய்சிலிர்ப்பு ஏற்படுகிறது. இப்படிப்பட்ட மக்கள் இருப்பதால் தான் மழை பெய்கிறது என்று சொல்ல விருப்பமில்லை, ஆனாலும் மனிதநேயமிக்க மக்கள் எங்கும் பரவியிருக்கிறார்கள் எனும் போது மகிழ்சிசியாக இருக்கிறது
நல்லவங்களுக்கு பெய்த மழை அல்ல, நல்லவர்களை அறிய பெய்த மழை
மணிகண்டன்...உண்மையில் உங்களின் செயல் பாராட்டுக்குரியது.நீஙகள் மனிதர்.வேறு எதுவும் சொல்ல சொற்கள் இல்லை.
மணிகண்டன் உங்களின் செயல் பாராட்டுக்குரியது.
யாராவது ஒருவர் இந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு கூட வர வேண்டும் என விரும்பினார். ஒரு வினாடி கூட யோசிக்காமல் ‘நான் வருகிறேன்’ என்று அந்த வடகிழக்குப் பெண் சொன்னாள். அந்த ஆணும் பெண்ணும் குழந்தையை எடுத்துக் கொண்டு ஆம்புலன்ஸில் ஏறிக் கொண்டார்கள். மற்றவர்கள் விலகிக் கொண்டார்கள். அவள் என்ன தைரியத்தில் கூட வருவதாகச் சொன்னாள் என்று புரியவில்லை. ஒருவேளை அந்தப் பெண் செத்துப் போய்விட்டால் குழந்தையை என்ன செய்வாள்? அந்தப் பெண்ணுக்கு ஞாபகமே வரவில்லை என்றால் என்ன செய்வாள்? யாரென்றே கண்டுபிடிக்க முடியாவிட்டால் என்ன செய்வாள்? காவல்துறையின் கேள்விகளை எப்படிச் சமாளிப்பாள்? இந்தக் கேள்விகள் எனக்குள்தான் ஓடிக் கொண்டிருந்தன. அவள் யோசித்திருக்க இதைப்பற்றியெல்லாம் துளியும் கவலைப்படவில்லை. அவளுக்குத் தெரிந்ததெல்லாம் ஒரு பெண் அடிப்பட்டுக் கிடக்கிறாள். குழந்தை தனியாக அழுது கொண்டிருக்கிறது. அவ்வளவுதான். # உண்மையாகவே பெருமைக்குரிய தம்பதியினர்தான்
உங்களுக்கும் நன்றி மணிகண்டன்
அத்தனை பாராட்டுகளுக்கும் பெருமைகளுக்கும் உரியவர்கள் அவர்கள் இரண்டு பேரும்தான். ஒன்றரை மணி நேரம் அவர்களோடு இருந்ததைத்தவிர நான் வேறு எதையும் செய்யவில்லை. நன்றி.
அடுத்த நாள் சென்றீரா? என்ன ஆயிற்று?
நீங்கள் பெருந்தன்மையோடு எதையும் செய்யவில்லை எனச் சொல்லலாம். ஆனால் //அவள் யோசித்திருக்க இதைப்பற்றியெல்லாம் துளியும் கவலைப்படவில்லை// என நீங்கள் எல்லாவற்றையும் யோசித்து விட்டு பின்னரும் போயிருக்கிறீர்களே அங்கே தான் வென்றிருக்கிறீர்கள். அடுத்தவர்களையே எதிர்பார்த்து, அடுத்தவர்களையே கை காட்டி கொண்டு இருப்பவர்களுக்கு மத்தியில் உங்கள் செயல் பாராட்டுக்குரியதே.
நல்ல மனிதர்கள்
என்னவொரு மனித நேயம் அந்தத் தம்பதியர்களுக்கு. நீங்கள் கொடுத்த ஃப்ரைடு ரைஸை வாங்கிக்கொண்டனர் என்று சொல்லும்போது அவர்கள் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. மனிதர்களிடம் தெய்வத் தன்மையைப் பார்க்கும் பாக்கியம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது (நீங்கள் மருத்துவமனைக்குக் கூடவே சென்றதால்)
மனிதநேயமிக்க மக்கள் எங்கும் பரவியிருக்கிறார்கள் எனும் போது மகிழ்சிசியாக இருக்கிறது
Wow!
மழையின் நிலை
குழந்தையின் நிலை
வாழ்க்கை நிலை
வெளிப்படுத்திய நிலை
எல்லாம் அழகு
எல்லோரும் உங்களின் உதவிய செயலுக்கு பாராட்டு தெரிவித்தனர். அது ஒரு புறம் இருக்கயில், எனக்கு உங்களின் நேர்மையை பாராட்ட தோன்றுகிறது. ஒரு சராசரி மனிதனின் பயம் மற்றும் பதற்றத்தை வெளிப்படுத்தியது மிகவும் கவர்ந்தது.
மனிதநேயம் இன்னும் மறைந்து விடவில்லை .. அடுத்து அவர்களிருவரையும் பார்க்கும்போது என்னுடைய வாழ்த்துக்களை சொல்லிடுங்க .. உங்களுக்கும். ..
-Samson
How is child and mother now? Did you meet them in hospital?
நெகிழ வைத்த பதிவு! அந்த வடகிழக்கு மாநில பெண் உண்மையிலேயே கடவுளாகத் தெரிகிறார். மனிதம் இன்னும் மரித்துவிடவில்லை என்று புரிகிறது. உடனிருந்து உதவி செய்த உங்களுக்கும் பாராட்டுக்கள்! அந்த மழையில் சீக்கிரம் வீடு போக குறுக்குவழியில் நுழைந்து இறுதியில் நேரம் தவறி வீடு சென்றிருப்பீர்கள்! பாராட்டுக்கள்!
நல்ல காரியம் செய்துளீர்கள் . மிக்க நன்றி
இன்று மாலை அந்த மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். வடகிழக்கு தம்பதியினர் காலையிலேயே கிளம்பிவிட்டார்களாம். அடிபட்ட பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் இருந்தார்கள். அவர்களிடம் நான் அதிகம் பேசவில்லை. அந்தப் பெண் தேறிவிட்டாள். இரண்டொரு நாட்களில் வீட்டிற்குச் சென்றுவிடுவாள் என்று சொன்னார்கள்.
உன்ங்கள் நேர்மையையும் நேயத்தையும் வியக்கின்றேன்...
Superji !!! Superji !!!
We are really proud of following you here
//இன்று மாலை அந்த மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். வடகிழக்கு தம்பதியினர் காலையிலேயே கிளம்பிவிட்டார்களாம். அடிபட்ட பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் இருந்தார்கள். அவர்களிடம் நான் அதிகம் பேசவில்லை. அந்தப் பெண் தேறிவிட்டாள். இரண்டொரு நாட்களில் வீட்டிற்குச் சென்றுவிடுவாள் என்று சொன்னார்கள்//
அடுத்த நாளும் சென்றுப்பார்த்துள்லீர்களே,மிகவும் பாராட்டுக்குரியது.
நாமலாம் ரெண்டு மூனு தட ஆம்புலன்ஸ் ,அவசரப்போலீஸுக்கு போன் செய்ததுக்கே " பெரிய சமூக சேவை" செய்தாப்போல நெஞ்ச நிமித்திட்டு நடந்திருக்கேன் ,ரொம்ப அல்பமா அவ்வ்!
Really great
நல்லதைச் செய்தீர்கள். நல்லா இருங்க, மணிகண்டன்.
அதே Wow!
அந்த தம்பதிக்கும் உங்களுக்கும் வந்தனங்கள்.
ஆனால், ஆண்களை (வடகிழக்கு கணவர் உட்பட) அவர் இவர் என மரியாதையாக விளக்கும் தாங்கள், பாதிக்கபட்ட பெண்ணையும் வடகிழக்கு மனைவி பற்றி எழுதும் போது மட்டும் ஏன் அவள் இவள் என எழுதியுள்ளீர்கள்... வயது குறைவு என்பதாலா?
mani sir...இப்படிப்பட்ட மக்கள் இருப்பதால் தான் மழை பெய்கிறது , மனிதநேயமிக்க மக்கள் எங்கும் பரவியிருக்கிறார்கள் எனும் போது மகிழ்சிசியாக இருக்கிறது
நிம்மதிப் பெருமூச்சு விட வைத்தீர்கள் !!
Sir was it govt hospital ? Also was it govt ambulance ? Just curious ..
Post a Comment