May 19, 2014

அது ஒன்றும் அவ்வளவு கஷ்டம் இல்லை

சேர மன்னன் இரும்பொறைக்கும் சோழன் செங்கணானுக்கும் போர் வந்துவிட்டது. இது பழைய கதைதான்- இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய கதை. சங்ககாலச் சேரர்களில் இந்த இரும்பொறைதான் கடைசி அரசனாம். சேரனும் சோழனும் மோதிக் கொண்ட இந்தப் பெரும்போரில் இரும்பொறை தோற்றுவிட்டான். சோழனின் ஆட்கள் உற்சாகமடைந்துவிட்டார்கள். தோற்றுப் போனவனை சங்கிலி போட்டு இழுத்து வந்து சிறையில் அடைத்துவிட்டார்கள். 

உடலில் ஒரு காயம் கூட ஆகாமல் இப்படி சிறையில் அடைத்துவிட்டார்களே என்று சேரனுக்கு மனம்கொள்ளா வருத்தம். விழுப்புண் இருந்தால்தானே மன்னனுக்கு மரியாதை? இனி இவர்களிடம் கைதியாக இருப்பதைவிட செத்துப் போய்விடலாம் என்று பட்டினி கிடக்கத் துவங்கியிருக்கிறான். எத்தனை நாட்கள்தான் கிடக்க முடியும்? சோறும் இல்லை; தண்ணீரும் இல்லை. சில நாட்கள் கடந்த பிறகு சேரனுக்கு கடும் தாகம். பொறுத்துப் பொறுத்துப் பார்த்திருக்கிறான். முடியவில்லை. நா வறண்டு, உதடுகள் வெடித்துப் போய்விட்டன. கடைசியில் அவனையும் அறியாமல்‘தண்ணீர்’ என்று கேட்டுவிட்டான். காவலாளிகள் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தண்ணீரைக் கொண்டு வருவதற்குள் ‘இவர்களிடம் போய் கேட்டுவிட்டேனே’ என்று உரைத்துவிட்டது. கொண்டு வந்த தண்ணீரைக் குடிக்கவில்லை. அதோடு நிற்காமல் கடைசியாக ஒரு பாடலையும் எழுதி வைத்துப் போய்விட்டான். 

‘குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும் ஆள் அன்று என்று வாளில் தப்பார்’- புறநானூற்றுப் பாடல் இது. குழந்தை பிறந்து செத்துப் போனாலோ அல்லது பிறக்கும் போதே செத்துப் பிறந்தாலோ கூட கத்தியால் அறுத்துப் புதைக்கும் பரம்பரை நாங்கள். அப்படியான பரம்பரையில் பிறந்துவிட்டு ஒரு புண் கூட உடலில் இல்லாமல் சிறைபட்டிருக்கும் இந்த உடலைக் காப்பாற்றவா தண்ணீர் குடிக்க வேண்டும்? முடியாது, சாகிறேன் என்று எழுதி வைத்துவிட்டு மேலே போய்விட்டான். ரோஷக்காரப் பயல்.

எங்கள் ஊரில் கே.எம்.ஆர் என்றொரு பெரியவர் இருந்தார். கே.எம்.ராமசாமிக் கவுண்டர் என்பதன் சுருக்கப்பட்ட வடிவம். வெகுநாட்கள் தலைமையாசிரியராக இருந்தார். ஏதோ ஒரு கட்டத்தில் அரசியலுக்குள் மூக்கை நுழைத்துவிட்டார். எம்.எல்.ஏவாக இருந்திருக்கிறார், எம்.எல்.சியாகவும் இருந்திருக்கிறார். ஊருக்குள் மிகுந்த மரியாதையோடு இருந்திருந்தவர் ஒரு தேர்தலில் தோற்றுப் போய்விட்டார். தோல்வியைத் தாங்க முடியாமல் தனது தோட்டத்து பங்களாவில் வெகுநாட்கள் தனித்துக் கிடந்தாராம். யாரெல்லாமோ சென்று அவரைச் சமாதானப்படுத்தி அழைத்து வந்ததாகச் சொல்வார்கள். அப்படியிருந்து அவரை அவ்வளவு சீக்கிரம் சமாதானப்படுத்த முடியவில்லை என்பார்கள். குமுறி குமுறி அழுது கொண்டிருந்தாராம். இப்பொழுதும் அந்தப் பக்கம் சென்றால் கே.எம்.ஆர் ஞாபகத்துக்கு வந்துவிடுவார். அந்த மனிதன் தனது தோல்வியைச் சகித்துக் கொள்ள முடியாமல் குறுகிக் கிடந்த போது அவரது அத்தனை புலம்பல்களுக்கு அந்தச் சுவர்கள் காது கொடுத்து ஆறுதல் சொல்லியிருக்கும் அல்லவா? இப்பொழுதும் அந்தக் கட்டடம் இருக்கிறது. ஆனால் பாழடைந்து கிடக்கிறது. 

இரும்பொறையிலிருந்து கே.எம்.ஆர் வரைக்கும் தோற்றுப் போனால் ஒரே பிரச்சினைதான். மானப்பிரச்சினை. இப்பொழுதுதான் நிலைமை தலைகீழாகிவிட்டது. மானப்பிரச்சினை எல்லாம் இல்லை. வெறும் பணம் மற்றும் அதிகாரப் பிரச்சினைதான். ‘அய்யோ கோடிக்கணக்கில் செலவு செய்து வீணா போய்ட்டேனே’ என்று ஒரு பக்கம் அழுதால் ‘ஒருவேளை கட்சியை நம்மிடமிருந்து பறித்துக் கொள்வார்களோ’ என்று இன்னொரு பக்கம் அழுகிறார்கள். 

வென்றவன்தான் நாடகம் நடத்துகிறான் என்றால் தோற்றவர்களும் ஆளாளுக்கு நாடகம் நடத்துகிறார்கள். பீஹார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்கிறார். பிறகு அவரது வீட்டிலேயே எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார்கள். கூடியவர்கள் சமோசாவை விழுங்கிவிட்டு அவரையே தங்களது தலைவராகத் தேர்ந்தெடுக்கிறார்கள். நிதிஷ் அப்படியென்றால் காங்கிரஸ் ஒரு படி மேலே போய்விட்டது. ஒட்டுமொத்த காரியக்கமிட்டியும் ராஜினாமா செய்யப் போகிறதாம். இப்படியே டெல்லி, பீஹார் என்று இழுத்துக் கொண்டு வந்து தமிழ்நாட்டில் நிற்கலாம்தான். எதற்கு வம்பு? ‘எலெக்‌ஷன் முடிந்தாலும் அரசியல் பேசுவதை நிறுத்தமாட்டான் போலிருக்கிறது’ என்று யாருடைய சாபத்திலாவது விழ வேண்டும். இரும்பொறையில் ஆரம்பித்து பழைய ஈயம் பித்தளைக்கு பேரீச்சம்பழத்தில் கொண்டு வந்து நிறுத்துவது டூ மச்சாகத்தான் தெரிகிறது. 

ஜம்ப் அடித்துவிடலாம்.

கவிதையின் கால்தடங்கள்  என்றொரு புத்தகத்தை வாங்கி வந்தேன். ஐம்பது கவிஞர்களின் நானூறு கவிதைகளை செல்வராஜ் ஜெகதீசன் தொகுத்திருக்கிறார். இந்தக் கவிஞர்களில் பெரும்பாலானோரின் கவிதைத் தொகுப்புகளும் கைவசம் இருக்கின்றன. அப்படியிருந்தும் இந்தப் புத்தகத்தை வாங்க வேறு காரணம் இருக்கிறது. அட்டையில் என் படத்தையும் போட்டிருக்கிறார்கள். வீட்டில் இருப்பவர்களிடம் ‘கெத்து’ காட்டலாம் அல்லவா? இந்த மாதிரி அவ்வப்போது எதையாவது செய்ய வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் வீட்டில் யாரும் என்னை நம்புவதே இல்லை.

அகநாழிகை பதிப்பகம் மற்றும் செல்வராஜை நிச்சயம் பாராட்ட வேண்டும். நவீன கவிதைகள் என்பதன் குறுக்குவெட்டுத் தோற்றத்தை- தர்பூசணியை குறுக்காக வெட்டி அதன் உட்புறத்தைப் பார்ப்பது போல- கவிதைகளை புரிந்து கொள்ள இந்தத் தொகுப்பு நிச்சயம் உதவக் கூடும். 

உண்மையில் கவிதை ஒன்றும் பெரிய புரியாத வஸ்து இல்லை. வாசிக்க ஆரம்பிக்கும் தொடக்க காலத்தில் வேண்டுமானால் முதல் நான்கைந்து கவிதைகளை புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கலாம். ஆனால் அதன் பிறகு நல்ல கவிதைகள் புரியவில்லை என்று சொல்வதற்கு வாய்ப்பே இல்லை. 

கவிதை எளிதுதான். ஆனால் நம்மவர்கள்தான் கிண்டலடிக்கிறேன் பேர்வழி என்று ‘கவிதை என்றாலே கடிதான்’ என்ற பிம்பத்தை உருவாக்கிவிட்டார்கள். அதனாலோ என்னவோ பெரும்பாலானவர்கள் கவிதையின் பக்கமே வருவதில்லை. மூக்கைப் பிடித்தபடி ஒதுங்கிக் கொள்கிறார்கள். 

ஓரிருமுறை வாசித்தால் கவிதை புரிந்துவிடும். பெரிய சிரமம் எதுவும் இல்லை. நம்பிக்கை இல்லாதவர்கள் ப்ரவுசரை மூடாமல் பின்வரும் இந்த ஒரு கவிதையை மட்டும் வாசிக்கலாம். புரியவில்லை என்றால் ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள்- அட்ரஸ் அனுப்பி வைக்கிறேன். வந்து ஒரு காதை அறுத்துவிட்டு போய்விடுங்கள். புரியாமல் போய்விடாது என்பதில் எனக்கு அவ்வளவு நம்பிக்கை.

தற்கொலைக்கு தயாராகுபவன்

தற்கொலைக்கு தயாராகுபவன்
பித்து நிலையில் 
என்னென்னவோ செய்கிறான்

அவன் கையில் 
குடும்பப் படமொன்று கிடைக்கிறது
அதிலிருந்து தன்னுருவைப்
பிரித்தெடுக்கும் முயற்சியில்
கத்தரிக்கத் துவங்குகிறான்

எவ்வளவு நுட்பமாகச் செயல்பட்டும்
கைகோர்த்திருக்கிற
தங்கையின் சுண்டு விரல் நுனி
கூடவே வருவேனென்கிறது

-இசை

9 எதிர் சப்தங்கள்:

Srinivasan said...

"பழைய ஈயம் பித்தளைக்கு பேரீச்சம்பழத்தில் கொண்டு வந்து நிறுத்துவது ..."

Really Toooooo Much....
"யானை குழிக்குள் விழுந்தால் எறும்பு கூட உதைக்குமாம்“.

வவ்வால் said...

//உண்மையில் கவிதை ஒன்றும் பெரிய புரியாத வஸ்து இல்லை. வாசிக்க ஆரம்பிக்கும் தொடக்க காலத்தில் வேண்டுமானால் முதல் நான்கைந்து கவிதைகளை புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கலாம். ஆனால் அதன் பிறகு நல்ல கவிதைகள் புரியவில்லை என்று சொல்வதற்கு வாய்ப்பே இல்லை//

உண்மையில் கவிதை எழுதுவது ஒன்றும் முடியாத வஸ்துவல்ல ,எழுத ஆரம்பிக்கும் தொடக்க காலத்தில் வேண்டுமானால் முதல் நான்கைந்து கவிதைகளுக்கு வரிகளை மடக்கி போடுவதில் சிரமம் இருக்கலாம், ஆனால் அதன் பிறகு வரிகளை மடக்கி கவிதையாக்க முடியவில்லை என சொல்வதற்கு வாய்ப்பேயில்லை.

உதாரணத்திற்கு எப்படி ஒரு பத்தியை பிரிச்சு ,ஒன்னு கீழ ஒன்னாக மடக்கி போட்டு கவிதையாக்குவது என்பதற்கு கீழுள்ள பத்தியை படிக்கவும்,

தற்கொலைக்கு தயாராகுபவன் பித்து நிலையில் என்னென்னவோ செய்கிறான்.அவன் கையில் குடும்பப் படமொன்று கிடைக்கிறது.

அதிலிருந்து தன்னுருவைப் பிரித்தெடுக்கும் முயற்சியில் கத்தரிக்கத் துவங்குகிறான்.எவ்வளவு நுட்பமாகச் செயல்பட்டும் கை கோர்த்திருக்கிற தங்கையின் சுண்டு விரல் நுனி கூடவே வருவேனென்கிறது.

இப்ப இதை இப்படி பிரிச்சு,மடக்கி ஒன்னு கீழ ஒன்னா எழுதினா கவித .கவித ...

தற்கொலைக்கு தயாராகுபவன்
பித்து நிலையில்
என்னென்னவோ செய்கிறான்

அவன் கையில்
குடும்பப் படமொன்று கிடைக்கிறது
அதிலிருந்து தன்னுருவைப்
பிரித்தெடுக்கும் முயற்சியில்
கத்தரிக்கத் துவங்குகிறான்

எவ்வளவு நுட்பமாகச் செயல்பட்டும்
கைகோர்த்திருக்கிற
தங்கையின் சுண்டு விரல் நுனி
கூடவே வருவேனென்கிறது...!

ஹிஹி கவிதைனு ஒன்னு எழுதினா தலைப்பு என ஒன்னு வைக்கோணும்ல , முதல் வரியையோ ,கடைசி வரியையோ எடுத்து தலைப்பா போடுங்க எப்படியும் பொறுந்திடும், அப்படியும் யாராச்சும் அப்பா டக்கராட்டம் கேள்வி கேட்டால் அதெல்லாம் "குறியீடு , கவிதையின் படிம நிலை உள் உணர்வின் வெளிப்பாட்டின் அகநிலை கூறுகளின் வெளிப்பாட்டின் புறப்பாடு" என அடிச்சு விட்டிங்கன்னா ,ஆறு மாசத்துக்கு உங்க பக்கமே தலை வச்சு நடக்க மட்டார் அவ்வ்.

#கடைசி வரியினை முடிக்கும் போது மூனு புள்ளி ஒரு ஆச்சர்ய குறி போட்டால் "அட்சர சுத்தமான" கவிதைனு மக்கள் நம்பும் வாய்ப்பு அதிகம் :-))

# அப்படியும் முடியவில்லை என்றால் ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள்- அட்ரஸ் அனுப்பி வைக்கிறேன். வந்து ஒரு நாப்பது பக்க நோட்டில் எழுதிக்கொடுத்து விட்டு போய்விடுங்கள். நான் பல விதமாக மடக்கி எழுதி பல கவிதைகளை உருவாக்கி தருகிறேன், முடியாமல் போய்விடாது என்பதில் எனக்கு அவ்வளவு நம்பிக்கை.

Raja said...

இந்த மாதிரி கவிதையெல்லாம் எனக்கு நூறு வருஷம் ஆனாலும் புரியாது


//இறவாத் தன்மையும் இரங்கா நெஞ்சழிவும்
உருக்கும் நைவும் படரும் இன்னலும்
வருந்தா பையுளும் அயரா மருகலும்
நசியும் உயவும் நயவா அலமரலும்
புழுங்கும் இடரும் குழையும் இடும்பையும்
கொடுங்கண் நீரும் குமையும் வதனமும்
ஓலமும் புலம்பலும் பூசலும் பொருமலும்
பொங்கும் பாயும் பொரியும் குமுறும்
போற்றிடும் குலைவை ஏற்றிடும் அலைவை
குவியும் துன்பத்தில் வதியும் துக்கத்தில்
மேம்படும் கையறவும் பொருந்திய இசையாய்
உள்ளீடும் மோனத்தில் பொதிந்த சாக்காடும்
அகத்தில் நிகழ்ந்த கூத்தென ஒலித்து
தன்னழிவித்து முன்னிலையில் படர//

http://mubeensadhika.blogspot.in/2014/03/blog-post_31.html

Vaa.Manikandan said...

எனக்கும் புரியவில்லை. இது கவிதையா என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இந்தக் கவிதை புரியாததற்கெல்லாம் காதைக் கொடுக்க முடியாது.

Yarlpavanan said...

சிறந்த பதிவு
பாராட்டுகள்

Aba said...

ஏதோ புரிகிறது. (அவன் அவ்வளவு சீக்கிரம் உலகத்திலிருந்து தன்னை மட்டும் விடுவித்துக்கொள்ள முடியாது. சாகும்போது பாசத்துக்குரியவர்களை partial ஆக கொன்றுவிட்டே சாகிறான்) கரெக்டா? எங்கே பொற்கிழி?

ஆனா சார், கவிதையை படிக்கற பொறுமை எனக்கு குறைவுன்னு நினைக்கறேன். சிறுகதை படிக்கும்போது சில கவித்துவமான இடங்களை, பொட்டில் அடித்ததுபோல ரெண்டே வார்த்தையில் பெரிய விஷயத்தை புரியவைக்கும் இடங்களை ரசிக்கிறேன். திரும்பவும் படித்துப் பார்க்கிறேன். சிலவற்றை நினைவும் வைத்திருக்கிறேன். ஆனால், இந்த கவிதை மட்டும் செட்டாக மாட்டேங்கறது... :(

”தளிர் சுரேஷ்” said...

புறநானூற்று பாடலை பதினொன்றாம் வகுப்பில் படித்து இருக்கிறேன்! அருமையான பாடல்! தற்கால கவிதைகள் பற்றிய வரிகள் சிறப்பு! நன்றி!

சேக்காளி said...

sekkaali@gmail.com

நெல்லைத் தமிழன் said...

'அது ஒன்றும் அவ்வளவு கஷ்டமில்லை' என்று சொல்வது 'தோல்வியைத் தாங்கிக்கொள்வதையா' அல்லது 'கவிதையைப் புரிந்துகொள்வதையா? ரெண்டு portioனும் நன்றாக இருக்கிறது. ஆனால் ஒட்டவில்லை.

இந்தத் தேர்தல் ரிஸல்டின் நாடகங்களை எழுதியிருந்தால் சுவாரசியமாக இருக்கும் ஆனால் அது உங்கள் ஏரியா இல்லை. Mild satire உடன் நிறுத்தியது நல்லது.