May 24, 2014

கொடுமை என்ன தெரியுமா?

தங்களுடைய ‘அடி விழுந்ததா?’ படிக்க நேர்ந்தது. பொறியியல் படிப்பு மட்டும் அல்ல அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இருக்கும் பல பாடப்பிரிவுகளும் எந்த வேலைவாய்ப்புக்கும் உதவாததாகவே உள்ளன. தனியார் கல்லூரிகளில் இருப்பது  போல பயோடெக்னாலஜி, மைக்ரோபயோலாஜி, ஜெனிடிக் இன்ஜினியரிங் போன்ற பல பிரிவுகள் அரசு கல்லூரிகளில் இல்லை. 

இன்னும் வேதனை என்னவென்றால் நான் இளங்கலை தாவரவியல் படித்தபோது (15 வருடங்கள் முன்பு) என்னென்ன தலைப்புகளும் புத்தகங்களும் பரிந்துரைக்கப்பட்டனவோ அவையே தான் இன்னும் சிலபஸில் உள்ளன. தாவரவியல், விலங்கியல் என்று ஆராய்ச்சி முனைவர் பட்டங்களை பெற்றாலும் நீங்கள் பயோடெக்னாலஜி, மைக்ரோபயோலாஜி, ஜெனெடிக் இன்ஜினியரிங் பிரிவுகளில் விரிவுரையாளர்களாக  அவ்வளவு எளிதில் தனியார் கல்லூரிகளில் பணி செய்ய இயலாது. அரசு கல்லூரிகளிலும் வேலை கிடைக்காது. இவர்களுக்கு பார்மா கம்பெனி போன்ற இடங்களிலும் வேலை இல்லை. ஏனென்றால் எந்தவிதமான டெக்னிகல் அறிவையும் இந்தப் பாடப் பிரிவுகள் போதிப்பது இல்லை. Because even the practicals are most outdated. 

இந்த நிலையில் இயற்பியல் வேதியல் பிரிவுகளுக்கு நல்ல வேலை இல்லை. அவை இன்ஜினியரிங் கல்லூரிகளால் ஓரளவுக்கு பிழைத்து விட்டன. இப்படிப்பட்ட உதவாத தலைப்புகளையும், பட்டபிரிவுகளையும் இன்னும் பல மாணவர்கள் படித்தபடி தான் இருக்கிறார்கள். அவர்களில் பலர் கிராமப் புறங்களை சார்ந்தவர்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் இதைப் படி, அதைப் படி என்று எடுத்துசொல்லும் வழிகாட்டிகள் இல்லாதவர்கள். ஒரே வழிதான் அவர்களுக்கு. இளங்கலையோ இல்லை முதுகலையோ முக்கி முனகி படித்தவுடன் ஒரு பி.எட் பட்டத்தையும் முடித்துவிட்டு தனியார் பள்ளிகளில் சொற்ப சம்பளத்துக்கு காலம் முழுக்க உழைக்கலாம். இதிலும் ஒரு காமெடி என்னவென்றால் அரசு பள்ளியிலும் கல்லூரியிலும் தமிழ்வழியில் படித்துவிட்டு அவனுக்கு ஆங்கிலம் வேறு வராது. இதில் எங்கே போய் ஆங்கிலத்தில் அனர்த்தும் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் வேலை செய்ய முடியும்.

அரசு கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இருக்கும் பேராசியர்களும் விரிவுரையாளர்களும் பெரும்பாலும் அல்லது முழுவதுமாக மாணவர்களுடன் தமிழில்தான் உரையாடுகிறார்கள். நான் தமிழுக்கு எதிரானவள் இல்லை. ஆனால் வேலைக்கான மொழி மிகவும் முக்கியமானது. நானும் எனது பள்ளிப்படிப்பை அரசுப்பள்ளிகளிதான் முடித்தேன். அதுவும் தமிழ் வழியில். இந்த மொழி எனக்கு பணியிடத்தில் உதவாது என பிறகுதான் உணர்ந்தேன். நீங்கள் கலை மற்றும் அறிவியல் படிப்புகளைப் பற்றியும் நிறைய எழுத வேண்டும்.  

நான் முனைவர் பட்டம் வாங்கிவிட்டு வெளிநாட்டில் ஆராய்ச்சியாளராக பணிபுரிந்தேன். மீண்டும் இந்த நாட்டிற்கு திரும்பி வந்த போதுதான் சிரமங்கள் ஆரம்பமாகின. ஒரு மரியாதையான சம்பளத்திற்கு அங்கும் இங்கும் அலைய வேண்டியதாக இருந்தது. தேவையான அளவுக்கு அபத்தங்களையும் டார்ச்சர்களையும் நேர்முகத் தேர்வுகளில் இருந்த தேர்வாளர்களிடமிருந்து வாங்கிக் கட்டிக் கொண்டேன். சமீபத்தில் சென்னையில் பழம் பெருமை வாய்ந்த ஒரு கிறித்துவர்களின் கல்லூரியில் தாவரவியல் துறைக்கான தேர்வில் கலந்து கொண்டேன். ஒரு பேராசிரியருக்கான தேர்வு எப்படி இருந்தது தெரியுமா? முதல் சுற்றுத் தேர்வில் எழுத்துத் தேர்வை நடத்தினார்கள். அந்தத் தேர்வு ஐந்து இரு மதிப்பெண்கள் கேள்விகளையும், இரண்டு ஐந்து மதிப்பெண்கள் வினாக்களையும் உள்ளடக்கியிருந்தது. மொத்த மதிப்பெண்கள் 20. அதற்கடுத்தது நேர்முகத் தேர்வு. ஒரேயொரு காலியிடத்திற்கு கிட்டத்தட்ட 50 பேர் மிக சீரியஸாக எழுத்துத் தேர்வை எழுதினோம் (தேர்வின் தொடக்கத்தில் பாதிரியார் Prayer நடத்தினார்). அந்த மொத்தத் தேர்வின் அற்புதம் என்பது நேர்முகத் தேர்வுக்கு முன்பாக அவர்கள் செய்த அறிவிப்புதான்- ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் என்பதால் (அதே மதம். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்) மற்றவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டியதில்லை என்றார்கள். இந்தத் தேர்வை நடத்துவதற்காக எங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் ரூ.500 வசூலித்தார்கள்.

திரையின் அடுத்த பக்கம்...அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இருக்கும் காலி இடத்திற்கான தேர்வுக்குச் சென்றால் கிட்டத்தட்ட பதினைந்திலிருந்து இருபது லட்சம் வரை லஞ்சமாகக் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதுவும் கடும் போட்டியின் காரணமாக வலுவான சிபாரிசுகளோடு செல்ல வேண்டியிருக்கிறது. யாரைப் போன்றவர்களின் சிபாரிசு என்றால்......(பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை)

நட்புடன்,
லலிதா 
                                          ***

அன்புள்ள லலிதா,

உடனடியான நீண்ட கடிதத்துக்கு நன்றி. 

நீங்கள் சொல்வது மிக மிக முக்கியமான விஷயம். கலை மற்றும் அறிவியல் பாடங்களைப் பற்றி இன்னொரு கோணத்தைக் காட்டுகிறது. இதுதான் ground reality. மட்டமான கல்லூரிகளில் படிக்கும் பொறியியல் கல்வியின் அவலத்துக்கு எந்தவிதத்திலும் சளைக்காமல்தான் பெரும்பாலான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் படிப்புகளும் பல்லிளிக்கின்றன என்று புரிந்து கொள்ளலாம். 

கலை அறிவியல் படிப்புகளை படிக்கலாம்தான்; கல்லூரிகளிலும் பேராசிரியர்களுக்கான தேவை இருக்கிறதுதான். ஆனால் நம்பியூரிலும் புளியம்பட்டியிலும் இருந்து வரும் ஒரு மாணவனால் அந்த வேலையை அவ்வளவு எளிதில் வாங்கி விட முடியுமா? இப்பொழுதெல்லாம் ஒரு வேலையை வாங்குவதற்கு லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது. பெருந்தலைகளின் சிபாரிசுகளுக்காக காத்துக் கிடக்க வேண்டியிருக்கிறது. வானம் பார்த்த பூமியில் காய்ந்து கிடக்கும் விவசாயியின் மகனுக்கோ, புரோட்டக்கடை மாஸ்டரின் மகளுக்கோ இதெல்லாம் சாத்தியமே இல்லை. பிறகு எப்படி வேலை வாங்குவீர்கள் என்று கேட்காமல் கேட்டிருக்கிறீர்கள்.

இதைத் தவிர உங்கள் கடிதத்தில் இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது- பி.ஹெச்டி முடித்திருக்கிறீர்கள். படிப்புக்காக குறைந்தபட்சம் பத்தாண்டுகளாவது தேவைப்பட்டிருக்கும். இல்லையா? இளங்கலைக்கு மூன்றாண்டுகள், முதுகலைக்கு இரண்டு, எம்.பில்லுக்கு குறைந்தபட்சம் இரண்டாண்டுகள், முனைவர் பட்டத்திற்கு கிட்டத்தட்ட மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகள். குறைந்தபட்சம் பத்தாண்டுகள் படித்துவிட்டு பெயருக்கு முன்னால் டாக்டரையும் சேர்த்துக் கொண்டு ஒரு வேலைக்காக ஐந்நூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு ஐம்பது பேர்களுடன் போட்டியிட்டு கடைசியில் ‘ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது’ என்பதைத் தெரிந்து கொண்டு வெளியேறுகிறீர்கள். இங்கு படிப்பு அவ்வளவு கேவலப்படுத்தப்படுகிறது; அவ்வளவு உதாசீனப்படுத்தப்படுகிறது. கொடுமை.

என்னதான் பொறியியல் கல்வியை திட்டினாலும் பத்தாண்டுகளைத் தொலைக்க வேண்டியதில்லை. நான்காண்டுகளில் முடித்துவிடலாம். படிப்பை முடித்துவிட்டு ஐடியிலும் கார்பொரேட் நிறுவனங்களிலும் வேலை கிடைக்காவிட்டாலும் வள்ளியண்ணன் போல ஏதாவதொரு சிறு வேலையில் ஒட்டிக் கொள்ளலாம். காலம் ஓடும். அதுவே கலை அறிவியல் கல்லூரிகளில் அடிப்படையான ஆங்கில அறிவு கூட இல்லாமல் பொருளாதாரமும், வரலாறும் படித்துவிட்டு வேலை கிடைக்கவில்லையென்றால் ஒரு கிராமத்து மாணவன் என்ன செய்வான்? ட்யூஷன் எடுத்துக் கூட பிழைக்க முடியாது என்பதுதான் உண்மை.

என்ன செய்வது?

அதற்காக கலை அறிவியல் கல்வியை முற்றாக நிராகரிக்க வேண்டியதில்லை. மிகத் தெளிவான திட்டமிடலுடன் செயல்பட்டால் நிறைய சாத்தியங்களை உருவாக்கிக் கொள்ளலாம் என்று நம்புகிறேன்.

உங்களைப் போலவே பி.ஹெச்.டி முடித்துவிட்டு  நண்பன் ஒருவன் வெளிநாட்டில் இருக்கிறான். கிராமத்து மாணவன்தான். பெரிய வசதி இல்லை. பொறியியல் படிப்பிற்கான வாய்ப்புகள் இருந்தும் இயற்பியலில் சேர்ந்தான். படிப்படியாக அதிலேயே முனைவர் பட்டம் அதன் பிறகு இத்தாலியில் Post Doctoral Fellowship முடித்துவிட்டு இப்பொழுது ஜப்பானில் இருக்கிறான். கூடப் படித்தவர்கள் எல்லோரும் பொறியியலில் குதித்தார்கள். அவனது நோக்கம் தெளிவாக இருந்தது- ஆராய்ச்சிதான். 

இன்னொரு தோழன் இருக்கிறான். கணித வெறியன். பள்ளியிலிருந்தே கணிதத்தில் புலி. கணிதத்தில் புலியாக இருந்தால் பொறியியல்தான் சேர வேண்டும் என்பது இங்கு எழுதப்படாத விதி. ஆனால் அவன் தெளிவாக இருந்தான். நுழைவுத் தேர்வு, கட் ஆஃப் பற்றியெல்லாம் துளியும் அலட்டிக் கொள்ளவில்லை. பி.எஸ்.ஸி கணிதத்தில் சேர்ந்தான். பிறகு எம்.எஸ்.ஸி, எம்.பில் அதன் பிறகு பி.ஹெச்டியும் முடித்துவிட்டு அரசுக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறான்.

இவர்கள் இரண்டு பேருமே என்னோடு பள்ளியில் படித்தவர்கள். இரண்டு பேருமே கிராமத்து மாணவர்கள். தமிழ் வழியில் படித்தவர்கள். எதுவும் மோசமாகிவிடவில்லை. அறிவியல் பாடங்களை படித்துவிட்டு மிக நல்லபடியாக செட்டில் ஆகியிருக்கிறார்கள். இவர்களை exceptional cases என்று ஒதுக்கிவிட முடியாது. பள்ளியில் படிக்கும் போதே தங்களின் பாதையை முடிவு செய்து வைத்திருந்தார்கள். யார் எந்தத் திசையில் போனாலும் அதைப் பற்றிய கவலையில்லாமல் தங்கள் பாதையில் சென்றவர்கள். இப்பொழுதும் யாரிடமாவது படிப்பைப் பற்றி பேச வேண்டியிருந்தால் இவர்களைத்தான் கை காட்டுகிறேன். 

இவர்கள் மட்டும் இல்லை. உறவுக்காரப் பையன் ஒருவன் இருக்கிறான். ஏழாவது அல்லது எட்டாவது படிக்கும் போதே ஆட்சிப்பணிக்கான தேர்வுகளை எழுதுவதுதான் லட்சியம் என்று விதைத்துக் கொண்டவன். பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் டெல்லி ஸ்ரீராம் கல்லூரியில் பொருளாதாரம் முடித்தான். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினான். முதல் முயற்சியிலேயே வேலை வாங்கிவிட்டான் - ஐ.ஏ.எஸ் இல்லை ஆனால் அரசுப்பணி. இன்னமும் காலம் இருக்கிறது. இந்த வருடம் ஐ.ஏ.எஸ் ஆகிவிடுவேன் என்கிறான். அத்தனை நம்பிக்கை.

இக்பால்சிங் தலிவால் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கோபியில் துணை கலெக்டராக இருந்தார். அவரும் ஆர்ட்ஸ் காலேஜ் மாணவர்தான். கல்லூரிப்படிப்பை முடித்த முதல் வருடத்திலேயே ஐ.ஏ.எஸ் முடித்தவர். அதுவும் டாப் ரேங்க்கில்.

எல்லோரும் படிக்கிறார்கள் என்பதாலேயே நாமும் பொறியியலும், மருத்துவமும்தான் படிக்க வேண்டும் என்பதில்லை. அதையெல்லாம் தாண்டி எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன. முயன்று பார்க்கலாம். ஆனால் ஒன்று மட்டும் முக்கியம்- ஒவ்வொரு மாணவனுக்கும் குறிக்கோள் மிக அவசியம். கல்லூரிப்பருவம் என்பது நெருப்பு கனலும் பருவம்.  சரியான குறிக்கோள் மட்டும் இருந்தால் யாராக இருந்தாலும் கில்லி அடிக்கலாம் என்று மனப்பூர்வமாக நம்புகிறேன். அதனடிப்படையில்தான் முந்தைய கட்டுரையை எழுதியிருந்தேன்.

நன்றி.

5 எதிர் சப்தங்கள்:

Selvakumar said...

Mani, It s good that you have highlighted the demerits of Engineering and Arts/science enough. But there are several minimum guarantee courses which are not usually considered much. You may highlight them too. One such course is b.com. It s very hard to find somebody with good b.com degree jobless. Accounts, Office management, Auditing and similar opportunities in every industry is open for them. This is not depending on any one technology or business and there is no fear of complete slow down or recession.

எம்.ஞானசேகரன் said...

இந்த கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் வணிகப்பாடங்களும் அடக்கம்தானே! மேல்நிலைப் பள்ளிகளில் குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு கட்டாயமாக ஒதுக்கப்படும் பிரிவு காமர்ஸ்தான். அதன் பிறகு பி.காம், எம்.காம் என போகலாம். வங்கித்துறைகளில், ஆடிட்டிங் துறைகளில் இந்தப் படிப்புக்கு நிறைய வேலைவாய்ப்புகள் இருப்பதைக் குறிப்பிட்டிருக்கலாமே மணிகண்டன்!

”தளிர் சுரேஷ்” said...

சரியான குறிக்கோள் இருந்தால் யார் வேண்டுமானாலும் கில்லி அடிக்கலாம்! மிகச்சரியாக சொன்னீர்கள்! நன்றி!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இடை நிலை ஆசிரியராக இருந்த என்னுடைய நண்பர் அண்ணாதுரை என்பவர் தொலை தூரக் கல்வியில் பி.ஏ, எம்.ஏபொருளாதாரம் பயின்று பின் தீவிரமாக ஆட்சிப் பணி தேர்வு எழுதினர். முதல் முறை வெற்றி கிடைக்க வில்லை என்றபோதும் விடுமுறை எடுத்து க் கொண்டு தொடர்ந்து முயற்சி செய்ய Indian Information Service இல்தேர்வுபெற்று இன்று பொதிகை தொலைக் காட்சியில் இயக்குனராக உள்ளார்.அவர் +2 வில் கூட அதிக மதிப்பெண் பெற்றவர்அல்ல. அவரது குறிக்கோளை அடைவதற்கான முயற்சியும்உழைப்பும் அவருக்கு வெற்றி தேடித்தந்தது.

கலைப்படிப்பு படிப்பவர்கள்தொடக்கத்தில்இருந்தேமுயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி கிட்டும் என்றேநானும் நம்புகிறேன்.

Paramasivam said...

லலிதா மேடம் அவர்கள் கடிதம் எந்த அளவுக்கு நடப்பு நிலையை விளக்கியதோ அந்த அளவுக்கு தங்கள் பதில் நேர்மறை எண்ணகளுடன் (உதாரணங்கள் உண்மையானவை என எண்ணுகிறேன்) சிறப்பாக உள்ளது. இக்கால மாணவர்களுக்கு இது போன்ற வழி காட்டுதல்கள் மிகவும் அவசியம். இப்போது +2 மதிப்பெண் கொடுக்கும் போதே வேலை வாய்ப்பு அலுவலக பதிவுக்கு உதவுவது போல் ஒரு விளக்க ஆராய்ச்சியும் வல்லுனர்கள் மூலம் ஏற்பாடு செய்யலாம். நல்ல ஒரு கேள்வி பதிலை ரசித்தேன்.