May 24, 2014

அடி விழுந்துச்சா?

வள்ளியண்னன் என்றொரு நண்பர் இருக்கிறார். நேரில் பார்த்தது இல்லை. பள்ளிப் படிப்பெல்லாம் தமிழ் வழிக்கல்வியில். பிறகு பொறியியல் முடித்தவருக்கு வெகுநாட்களுக்கு வேலை இல்லை. அலைந்து திரிந்ததில் கோயமுத்தூரில் ஒரு சிறிய நிறுவனம் கதவைத் திறந்து வைத்திருந்தது. சொற்ப சம்பளத்தில் ஒட்டிக் கொண்டார். அவ்வப்போது பேசிக் கொள்வோம். ‘இங்கிலீஷ் சுத்தமாவே வரமாட்டேங்குதுண்ணே....வேற வேலைக்கு போறது ரொம்பச் சிரமம்’ என்றார். வேறொரு நாளில் ‘சம்பளம் ரொம்ப குறைவு..வீட்டுக்கு கொடுக்க முடியறதில்ல..கஷ்டமா இருக்குண்ணே’ என்றார். 

தன்னம்பிக்கையில்லாமல் பேசுகிறாரோ என்று தோன்றும். அவர் நம்பிக்கையான மனிதர்தான். ஆனால் அவரது நிலைமை அப்படி மாற்றி வைத்திருந்தது.

படித்து முடித்துவிட்டு இரண்டு மூன்று வருடங்கள் இடைவெளி விழுந்துவிட்டால் அதன் பிறகு வேலை பிடிப்பது பெரிய சிரமம் ஆகிவிடுகிறது. வள்ளியண்ணனின் வேலை டெக்னிகலாக கற்றுக் கொள்ளும் அளவிற்கு வாய்ப்புகள் நிறைந்தது இல்லை. வந்தோமோ, போனோமோ என்கிற மாதிரியான வேலை.

ஆங்கிலமும் வருவதில்லை. தொழில்நுட்பத்திலும் கில்லாடி இல்லை. படித்து முடித்து இரண்டு மூன்று வருடங்கள் ஓடிவிட்டன. என்ன செய்வது? சென்ற வருடத்தில் பேச்சுவாக்கில் ‘வங்கித் தேர்வுக்கு ஏதாவது தயார் செய்யலாம்ல?’ என்றேன். இதை வேறொருவரும் சொல்லியிருக்கிறார். வள்ளி அதையே பிடித்துக் கொண்டார். இந்த ஒரு வருட இடைவெளியில் பேசவே இல்லை. மிகச் சமீபத்தில் பேசினார். வங்கித் தேர்வில் வென்றுவிட்டாராம். கடுமையான தயாரிப்புக்குப் பிறகு அரசு வங்கியில் வேலை. படு உற்சாகமாக இருக்கிறார். கிராமம், தமிழ்வழிக்கல்வி, ஆங்கிலத்தின் அழிச்சாட்டியம் என்ற தடுப்பும் அவரைத் தடுத்து நிறுத்தவில்லை. இனி பொருளாதாரம் சார்ந்த எந்தப் பிரச்சினை வந்தாலும் சமாளித்துவிடுவார் - நம்பிக்கையோடு பேசுகிறார்.

இதற்கு அவர் பொறியியல் படித்திருக்கவே வேண்டியதில்லை. ஏதாவது ஒரு இளங்கலை படித்திருந்தால் போதும். எவனோ ஒரு கல்வித்தந்தைக்கு கொண்டு போய் கொட்டியதுதான் மிச்சம். செலவு மட்டும் இல்லாமல் எத்தனை வருடங்கள் வீணாகப் போயின?

இன்று அவர் மீண்டும் அழைத்திருந்தார். தெரிந்த பையன் ஒருவன் எந்நூற்று சொச்சம் மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறான். 144 தான் கட் ஆஃப். என்ன செய்வது என்றார். ‘இஞ்சியனியரிங் வேண்டாம்ன்னு சொல்லிடுங்க’ என்றேன். அதுதான் எடுத்த உடனே மனதுக்குள் தோன்றியது. பொறியியலில் என்னதான் பாடம் படித்தாலும் கடைசியில் ஐடிக்குள்தான் விழுகிறார்கள் அல்லது ஐடிக்குள் வருவதற்கு பகீரத பிரயத்தனம் செய்கிறார்கள்.

வேறு துறைகளில் நிறைய வாய்ப்புகள் இல்லை என்பதுதான் உண்மை. படித்தது மெக்கானிக்கலாக இருந்தாலும், மின்னியலாக இருந்தாலும், சிவிலாக இருந்தாலும் ஐடியில்தான் விழுகிறார்கள். அவர்களைக் குறை சொல்ல முடியாது. இத்தனை பொறியாளர்களுக்கு இங்கு பிற துறைகளில் வேலைகள் இல்லை என்பதுதான் நிதர்சனம்.

ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு யாரைப் பார்த்தாலும் பயோ டெக்னாலஜி என்றார்கள். என்ன ஆனது? வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு இருந்தவர்கள் தப்பித்துக் கொண்டார்கள். இங்கேயே காலம் ஓட்டலாம் என்று நினைத்தவர்களின் கண்ணாமுழிகள் திருகிப் போயின. படிப்பை முடித்துவிட்டு பத்தாயிரம் பன்னிரெண்டாயிரம் சம்பளத்திற்கு திணறினார்கள். கொடுப்பதைக் கொடு என்று பார்மசூட்டிகல் நிறுவனங்களில் சிக்கியவர்கள்தான் அதிகம்.

மைனிங் என்றொரு பாடம் இருக்கிறது, ஜியோ இன்பர்மேடிக்ஸ் என்றொரு சப்ஜெக்ட். இதையெல்லாம் படித்துவிட்டு அரசு வேலை கிடைத்தவர்கள் அல்லது கார்பொரேட் நிறுவனங்களில் வேலை வாங்கியவர்கள் பாக்கியசாலிகள். வேலை கிடைக்காமல் ஒடிசாவிலும், ஆந்திராவிலும் சுரங்கங்களுக்குச் சென்றவர்கள் ஐந்தாயிரத்துக்கும் குறைவான சம்பளம் வாங்கினார்கள். சம்பளத்தைவிடவும் கொடுமை அங்கு நிகழ்த்தப்படும் கொத்தடிமை முறை. பொறியியல் முடித்திருந்தாலும் கொத்தடிமைகள்தான்.

இன்னொரு உதாரணம் சொல்லலாம். ரோபோடிக்ஸ் சொல்லித் தருகிறோம், ஆட்டோமேஷன் சொல்லித் தருகிறோம் என்று மெக்கட்ரானிக்ஸ் பாடத்தைத் தொடங்கினார்கள். இந்தத் துறையில் வேலை வாங்குவது அத்தனை சுலபமா என்ன? எத்தனை ஆட்டோமேஷன் நிறுவனங்கள் இருக்கின்றன? இங்கு எத்தனை ரோபோடிக்ஸ் நிறுவனங்கள் இருக்கின்றன. அவ்வப்போது இப்படி ஏதாவது வித்தியாசமான பெயரில் பாடத்தை ஆரம்பிப்பார்கள். நம் மாணவர்களும் விட்டில் பூச்சி அரிக்கேன் விளக்கில் விழுவது போல விழுவார்கள்.

இந்தப் பாடங்களில் படிப்பவர்களுக்கு எல்லாம் வேலையே கிடைப்பதில்லை என்று சொல்லவில்லை. மாணவர்களின் எண்ணிக்கையைவிடவும் பணியிடங்களின் எண்ணிக்கை மிகச் சொற்பம். இருக்கும் வேலைவாய்ப்புகளைவிடவும் அதிகமான இடங்களை ஏகப்பட்ட கல்லூரிகளில் தொடங்கிவிட்டார்கள். அதுதான் பிரச்சினை. அத்தனை பேரும் அமெரிக்காவில் எம்.எஸ் படிக்க முடியுமா? இங்கேயே ஏதாவது ஒரு வேலையை வாங்கித்தானே ஆக வேண்டும்? கடைசியில் ஐடியில்தான் விழுகிறார்கள். அதுவும் கிடைக்காதவர்களின் நிலைமையை நினைத்துப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.

ஐடியிலும் ஆட்களுக்கான தேவைகள் மிகக் குறைந்து வருகின்றன. ஐடியில் இருக்கும் நாற்பது வயதைத் தாண்டியவரிடம் பேசிப் பாருங்கள். இருக்கும் வேலை அப்படியே ஓடிக் கொண்டிருக்கும் வரையிலும் பிரச்சினையும் இல்லை என்பார். ஆனால் அவரை வேலையை விட்டு அனுப்பினால் அதோடு அவ்வளவுதான். மீண்டும் ஐடியில் வேலை வாங்குவது குதிரைக் கொம்பாகிவிடுகிறது. வேறு ஏதாவதுதான் யோசிக்க வேண்டும். அரைக்கிழவனாகிவிட்ட பிறகு எதை யோசிப்பது? யோசிக்க முடியாது என்றில்லை, எல்லோருக்கும் ப்ராக்டிகலாக சாத்தியம் இல்லை. 

ஐடியில் பதினைந்து அல்லது இருபது வருடங்களுக்கு மேல் அனுபவம் உள்ளவர்களின் தேவை மிக மிகக் குறைந்துவிட்டது. அதுவுமில்லாமல் அவர்கள் கேட்கும் சம்பளத்தைக் கொடுக்க எந்த நிறுவனமும் தயாராக இல்லை. இந்த ‘நாற்பது வயது’ என்கிற cap குறைந்து கொண்டே வரும். இன்னும் சில வருடங்களில் முப்பத்தைந்து வயதானவர் ஒரு நிறுவனத்தை விட்டு வெளியே வந்தால் மற்றொரு வேலை வாங்கத் திணற வேண்டியிருக்கும். 

வயது மட்டும் பிரச்சினை இல்லை. படிப்பும்தான். பொறியியல் படித்தவர்களைவிடவும் பி.எஸ்.ஸி படித்தவர்களை பிடித்து போட்டுக் கொள்கிறார்கள். அவர்களுக்கு குறைவான சம்பளம் கொடுத்தால் போதும். மிக மிக மெதுவாக பதவி உயர்வு கொடுக்கலாம் போதும் அல்லது கொடுக்காமலே இருந்தாலும் கூட பிரச்சினை இல்லை. ஏழெட்டு வருடங்கள் பிழிந்து எடுத்துக் கொண்டு அனுப்பிவிடலாம். பக்கா சுரண்டல்.

கவனித்துப் பார்த்தால் நாற்பது வயது தாண்டியவர்களை வெளியே அனுப்பிவிடுகிறார்கள். பி.எஸ்.ஸி போன்ற பாடங்களை படித்தவர்களை குறைவான சம்பளத்திற்கு உள்ளே எடுத்து கசக்கிக் கொண்டிருக்கிறார்கள். இருபது வருடங்கள்தான் ஐடிக்குள் வாழ்க்கை. அந்த இருபது வருட வாழ்க்கையும் கூட ஐடியில் இருக்கும் அத்தனை பேருக்கும் சாத்தியம் ஆகாமல் போய்விடும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

இன்னும் பத்து வருடங்களுக்குப் பிறகு என்ன நடக்கும் என்று தெரியவில்லை. ‘ஓடும் வரை ஓடட்டும்’ என்ற எண்ணத்திற்கு இந்தத் தலைமுறை ஐடி வந்துவிட்டது. பிறகு எதற்கு இனி படிக்க ஆரம்பிப்பவர்களும் கூட ஐடியைக் குறி வைத்து பொறியியலிலேயே சேர வேண்டும்? நல்ல கட் ஆஃப் வாங்கியவர்கள் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அவர்கள் படிக்கட்டும். அவர்களுக்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும்.  நல்ல கல்லூரியில் படிப்பவர்கள் வேலை வாங்கிவிட முடியும். 

ஆனால் குறைவான கட் ஆஃப் வாங்கித் திணறுபவர்கள்தான் மிகத் தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும். ஏதாவதொரு போனம்போக்கி கல்லூரியில் நான்கு வருடங்களை ஓட்டிவிட்டு வெளியே வந்தால் வள்ளியண்ணன் திணறியதற்கு எந்தவிதத்திலும் குறைவில்லாமல் திணற வேண்டும்.

மனதுக்குள் ஏதாவது ஒரு ஆசை இருந்திருக்கும் அல்லவா? ஆசிரியர் ஆவதோ, வங்கிப் பணிக்குச் செல்வதோ, ஆட்சிப்பணிக்குச் செல்வதோ- இப்படி ஏதாவது ஒரு ஆசை இருந்திருக்கும். அந்த ஆசையை அடைவதற்கான சாத்தியங்களைத் தேடிப்பார்க்கலாம். கல்லூரியில் எந்தப் பாடத்தைப் படித்தால் இத்தகைய தேர்வுகளில் எளிதில் வெற்றியடையலாம் என்பது குறித்து ஆலோசிக்கலாம். பொது நிர்வாகவியல் (public admin) போன்ற பாடங்களைப் படிப்பவர்கள் நம் ஊர்களில் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படிப்பவர்களில் ஏகப்பட்ட பேர் இந்தப் பாடத்தைத்தான் விருப்பப்பாடமாக வைத்திருக்கிறார்கள். கல்லூரியிலேயே இதைப் படித்துவிட்டால் தேர்வு எழுத மிகச் சுலபமாக இருக்கும் அல்லவா?

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தகுதியான பேராசிரியர்களுக்கு மிகப்பெரிய தேவை உருவாகி வருவதாகச் சொல்கிறார்கள். இங்கு எத்தனை பேர் வரலாறும், புள்ளியியலும், பொருளாதாரமும் படிக்கிறார்கள். அப்படியே படித்தாலும் எத்தனை சதவீதம் பேர் இதையெல்லாம் ஆழமாகவும் லட்சியத்துடனும் படிக்கிறார்கள்?

கடந்த இருபது அல்லது முப்பதாண்டுகளில் இயற்பியலிலும், வேதியியலிலும் ஆராய்ச்சிகள் செய்வதற்கான ஏகப்பட்ட சாத்தியங்களை உலகம் உருவாக்கியிருக்கிறது. எத்தனை ஆராய்ச்சியாளர்களை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்? அதையெல்லாம் வெறுக்கத்தக்க பாடங்களாக ஒதுக்கி வைத்திருக்கிறோம் அல்லது பி.எஸ்.ஸி பிசிக்ஸ் முடித்துவிட்டு விப்ரோவில் சேர்கிறார்கள் இல்லையென்றால் எம்.சி.ஏ முடித்துவிட்டு குட்டையில் விழுகிறார்கள்.

சூழலியல், மீன்வளம், வனவியல் போன்ற பாடங்களைத் தகுதியான மாணவர்கள் தேர்ந்தெடுக்கிறார்களா என்று தெரியவில்லை. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். நாம்தான் யோசிப்பதும் இல்லை; ரிஸ்க் எடுக்க தயாராகவும் இல்லை.

எப்பொழுதுமே ஒரு அடி விழும் வரைக்கும் நம் பாதை மாறவே மாறாது. அதுவரைக்கும் செம்மறி ஆட்டு மந்தைகளைப் போல பக்கத்துவீட்டுக்காரன் என்ன செய்கிறானோ அதையே செய்வோம். சொந்தக்காரன் எந்த வழியில் செல்கிறானோ அதே வழியில் செல்வோம். ஒரு அடி விழுந்தால்தான் நமக்கு யோசிக்கவே நேரம் கிடைக்கிறது. அடுத்தது எதைச் செய்வது என்று மண்டை காய்கிறோம். இந்த யோசனை மிக அவசியமானது. நமக்கான திசையை உருவாக்கிவிடும். அந்தத் திசை பெரும்பாலும் சரியானதாகவே இருக்கும். ஒவ்வொரு அடியுமே அனுபவம்தான். பன்னிரெண்டாம் வகுப்பில் கட் ஆஃப் குறைந்துவிட்டது என்பதும் அப்படியான ஒரு வாய்ப்புதான்- அடுத்து என்ன செய்வது என்று யோசிப்பதற்கான வாய்ப்பு. சற்று மண்டை காய்ந்தால் போதும் வாழ்கையில் விரும்பும் இடத்தை மிகச் சரியாக அடைந்துவிடலாம். All the best!

5 எதிர் சப்தங்கள்:

”தளிர் சுரேஷ்” said...

செம்மறி ஆட்டு மந்தைகள்! உண்மைதான்! பல இடங்களில் இது நடக்கிறது! பார்த்து இருக்கிறேன்! சொன்னாலும் எடுத்துக்கொள்வது இல்லை!

palani said...

மணி ,எனக்கு ஒரு சந்தேகம்.தமிழ் நாட்டை மட்டும் தான் இப்படி பொறியியல் வெறி பிடித்து ஆட்டுகிறதா...?
மற்ற மாநிலங்களின் நிலை என்ன ..?

manjoorraja said...

வட மாநிலங்களில் பொறியியல் படிப்பவர்களைவிட வணிகவியல் படிப்பதற்கு அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். தமிழ் நாட்டில் பொறியியலுக்கும் கேரளாவில் மருத்துவத்திற்கும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆந்திராவில் பொறியியல், ஐஏஎஸ்

சுந்தரம் சின்னுசாமி said...

நான் பி.எஸ்.சி. முடித்துவிட்டு 1999 ல் குரூப் 4 தேர்வு எழுதினேன். அதுதான் முதல் தடவை. வெயிட்டிங்க லிஸ்ட்ல தான் வந்தது. ஒன்றரை மார்க் குறைவு. என்னுடன் என் சித்தப்பா மகனும் பரிட்சை எழுதினான். என்னைவிட எட்டு மார்க் குறைவு. எங்கள் இருவருக்கும் போட்டி தேர்வுகளில் நாம் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை வந்தது. அடுத்த தேர்வு எழுதினோம். அறிவிப்பு செய்த இடங்களை விட குறைவாக (பாதி) தேர்ந்தெடுத்ததால் எங்களால் வெற்றி பெற முடியவில்லை. அதற்கு பிறகு ஐந்தாண்டுகள் எந்த அரசுப் பணியிடத்தையும் அம்மா ஆட்சியில் நிரப்பாததால் தேர்வாணையம் எந்த தேர்வும் நடத்தவில்லை. பிறகு வந்த திமுக ஆட்சியில் நான் வனத்துறைக்கு எம்ப்ளாய்மெண்டு மூலம் தேர்வாகி வேலையில் சேர்ந்தேன்.

என் தம்பி தன் முயற்சியை கைவிடவில்லை. தொடர்ந்து முயற்சித்து தன்னுடைய 45 வது வயதில் சென்ற வருடம் குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று வேலையில் சேர்ந்துவிட்டான். குரூப் 4 தேர்வு கீழ்நிலைப் பதவிக்கானது என்றாலும் அந்த வயதில் வெற்றி பெற்றது என்னையே ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.

raju said...

almost in all south, Mah, NCR, and spreading to all states