பத்தாம் வகுப்புத் தேர்வில் மதிப்பெண்களை அள்ளிக் குவித்திருக்கிறார்கள். முதல் மதிப்பெண்ணை விடுங்கள். 450 என்பதே மிகச் சாதாரணமான விஷயமாக மாறியிருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்பாக கூட 460 என்பதுதான் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண்ணாக இருந்தது. இப்பொழுது கிட்டத்தட்ட ஒவ்வொரு மாவட்டத்திலும் 490 ஐ தாண்டியிருக்கிறார்கள். பாடங்கள் எளிதாகிவிட்டன, மதிப்பெண்களை அள்ளி வழங்குகிறார்கள் என்று சிலர் குற்றச்சாட்டாக சொல்கிறார்கள். மாணவர்கள் நன்றாகப் படிக்கிறார்கள் அதனால் மதிப்பெண்களை குவிக்கிறார்கள், சமச்சீர் கல்வியினால் விளைந்த நன்மை இது என்று இன்னொரு பக்கம் பாஸிடிவ்வாகச் சொல்கிறார்கள்.
ஆனால் இதையெல்லாம் பேசுகிறவர்கள் நானூற்றைம்பது மதிப்பெண்களைத் தாண்டிய மாணவர்களை மட்டும்தான் பார்க்கிறார்கள். இந்தத் தேர்வில் முந்நூறு மதிப்பெண் பெற்றவர்கள் என்ன செய்வார்கள்? தோல்வியைடந்த பத்து சதவீத(கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர்) மாணவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? எவ்வளவுதான் தேர்வுமுறைகளும் மதிப்பெண் பெறும் வழிமுறைகளும் எளிமையடைந்திருந்தாலும் ஏன் லட்சக்கணக்கானவர்கள் தோல்வியடைந்திருக்கிறார்கள்? மதிப்பெண்கள் அதிகரித்திருக்கின்றன. அதேசமயம் அனைவருக்குமான கல்வியின் தரம் குறைந்திருக்கிறது என்பதுதான் உண்மை.
கிராமப்புற மாண்வர்கள் நன்மையடைய வேண்டும் என்று சொல்லிச் சொல்லியே நமது கல்வி முறையில் வடிகட்டும் முறை என்பதையே சுத்தமாக ஒழித்துவிட்டார்கள். முன்பெல்லாம் ஐந்தாம் வகுப்புத் தேர்வில் நிறைய பேர்களைத் தோல்வியடையச் செய்வார்கள். அடிப்படைக் கல்வியைக் கூட தெரிந்து கொள்ளாமல் நடுநிலைப்பள்ளிக்கு அந்த மாணவன் செல்லக் கூடாது என்பதுதான் நோக்கம். இதில் ஒரு பிரச்சினை இருந்தது. கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் ஐந்தாம் வகுப்பில் தோல்வியடைந்தால் சட்டிபானை கழுவ போட்டுவிடுவார்கள். மாணவனாக இருந்தால் இன்னொரு முறை படிப்பதற்கு சலுகை கிடைக்கும். அதே போல எட்டாம் வகுப்புத் தேர்வில் (ESLC) வடிகட்டினார்கள். எட்டாம் வகுப்பில் தோல்வியடையும் மாணவர்கள் அவர்களாகவே பள்ளியைவிட்டு நின்றுவிடுவது வழக்கம். ஆனால் இப்பொழுது ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவன் பத்தாம் வகுப்பு வரைக்கும் Free flow ஆக ஓடிவிடலாம். இலவச புத்தகம், இலவச பஸ் பாஸ், இலவச உணவு என்று சகலமும் கிடைத்துவிடுகிறது. ஆனால் மாணவர்களின் அறிவு வளர்ச்சியை எப்படி கணக்கிடுகிறார்கள்? அவனுக்கு அடிப்படையான கணித, அறிவியல் அறிவு இருக்கிறதா என்பதைக் கூட இவர்கள் கணிப்பதில்லை என்பதுதான் நிதர்சனம். நம்பிக்கையில்லை என்றால் ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரிடம் பேசிப்பார்க்கலாம். ‘அந்தப் பையன் வீக்குன்னு தெரியும். ஆனா ஃபெயில் பண்ணக் கூடாதுன்னு அரசாங்கம் சொல்கிறது...அப்படியே பத்தாம் வகுப்பு வந்துவிட்டான்’ என்பார். இப்படியே எந்த அறிவும் இல்லாமல் அவனை தேர்ச்சியடையச் செய்து என்ன செய்யப் போகிறோம்? ஒரு பக்கம் லட்சக்கணக்கானவர்கள் நானூறு மதிப்பெண்களைத் தாண்டிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ஒரு லட்சம் பேர் தோல்வியடைந்திருக்கிறார்கள்.
கிராமப்புற மாணவர்களுக்கு உதவி செய்கிறேன் பேர்வழி என்ற பெயரில் இந்த அரசாங்கங்கள் அவர்களைச் சிதைத்துக் கொண்டிருக்கின்றன. மாறாக, தனியார் பள்ளிகள் இதைத் தங்களுக்குச் சாதகமான அம்சமாக பயன்படுத்திக் கொள்கின்றன. தங்களிடம் படிக்கும் மாணவர்கள் ஆங்கிலம், கணிதம், அறிவியல் தவிர விளையாட்டு, கராத்தே போன்றவற்றில் எல்லாம் சிறப்பானவர்களாக இருக்கிறார்கள் என்று விளம்பரம் செய்கிறார்கள். படிக்க முடியாத மாணவர்களை ஒதுக்கிவிட்டு நல்லவர்களுக்கு மட்டும் பயிற்சி கொடுத்து தங்களது ரிசல்ட்களைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் வசதி இருக்கும் எந்த கிராமத்துப் பெற்றோரும் தங்களது பிள்ளைகள் தனியார் பள்ளியில்தான் படிக்க வேண்டும் என விரும்புகின்றனர். இதுதான் கண்ட பலன்.
மாணவர்களை பத்தாம் வகுப்பு வரைக்கும் தொடர்ச்சியாக பள்ளிக்கூடம் வர வைப்பது நல்ல விஷயம்தான். எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் யாருமே இல்லை என்ற நிலையை அடைந்துவிடலாம். ஆனால் பத்தாம் வகுப்பிலும் பன்னிரெண்டாம் வகுப்பிலும் இதே சூழலை நீட்டிப்பதுதான் சிக்கலே. பத்தாம் வகுப்பில் நானூறைத் தாண்டிவிட்டால் பயாலஜி, கம்யூட்டர் சயின்ஸில்தான் சேருகிறார்கள். அது பிரச்சினை இல்லை. ஆனால் பயாலஜி, கம்யூட்டர் சயின்ஸில் சேருபவர்களில் தொண்ணூறு சதவீதம் பேர் பொறியியல் படிப்பில்தான் விழுகிறார்கள். இதுதான் பிரச்சினை.
பதினோராம் வகுப்பில் சேரும் போது பயாலஜி, கம்யூட்டர் சயின்ஸ் தவிர பிற க்ரூப்புகளிலும் படிக்கலாம் என்ற மனநிலையை பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு உருவாக்கும் முக்கியமான பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கிறது. பிற துறைகளில் வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டியதும் அரசாங்கத்தின் கடமைதான். ஆனால் அதற்கு கிள்ளிப் போடக் கூட அரசாங்கத்தில் ஆட்கள் இல்லை என்பதுதான் அவலம். பத்தாம் வகுப்பில் லட்சக்கணக்கில் நானூறைத் தாண்டினால் கண்களை மூடிக் கொண்டு குட்டையில் குதிக்கிறார்கள்.
தமிழகத்தில் இருக்கும் தகுதியில்லாத பொறியியல் கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தினாலே பல பிரச்சினைகளைத் தீர்த்துவிட முடியும். ஆய்வகங்கள் இல்லை, நல்ல நூலகங்கள் இல்லை என்ற நிலைமையைக் கூட பொறுத்துக் கொள்ளலாம். தகுதியான ஆசிரியர்கள் கூட இல்லை என்பதுதான் உண்மை. Differentiation க்கும் Integration க்கும் என்ன வித்தியாசம் என்றும் அதை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைக் கூட தெரியாத ஒருவரை பொறியியல் கல்லூரியில் சந்தித்தேன். கல்லூரியில் அவரை Assistant Professor என்கிறார்கள். எம்.இ முடித்திருக்கிறார். இது போன்ற கல்லூரிகளுக்கு நான்கு வருடம் பணம் கொடுக்க மாணவர்கள் கிடைத்தால் போதும். ப்ளஸ் டூவில் எத்தனை மதிப்பெண்கள் என்பது பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல் சேர்த்துக் கொள்கிறார்கள். பிறகு இவர்கள்தான் பொறியாளர்கள் என்று வெளியில் வருகிறார்கள். யார் வேலை தருவார்கள்? Freshers க்கு யாருமே வேலை தருவதில்லை என்று புலம்பாமல் வேறு என்ன செய்வது?
பெருகிக் கிடக்கும் பொறியியல் கல்லூரிகளையும் பிற சுயநிதிக் கல்லூரிகளையும் ஒழுங்குபடுத்த வேண்டும். பொறியியல் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை ஒரு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். நன்கு படிக்கும் மாணவர்களுக்கு பிற படிப்புகளில் இருக்கும் சாத்தியங்களைப் பற்றி அறிவுறுத்த வேண்டும். புள்ளியியல், கணக்கியல் போன்ற பிற துறைகளில் இருக்கும் வாய்ப்புகளைப் பற்றிய புரிதலை பரவலாக்க வேண்டும். கல்வி என்பது வெறும் அட்டை டூ அட்டை மனனத்திற்கான செயல்பாடு இல்லை என்பதை அறிந்து கொள்ளும் விதத்தில் தேர்வு முறைகளில் மாறுதல்களைக் கொண்டு வர வேண்டும். இவையெல்லாம்தான் Long term vision ஆக இருக்க முடியும். இதையெல்லாம் செய்யாமல் வெறும் தேர்வுமுறைகளை எளிமைப்படுத்துதலும், எல்லோரும் மதிப்பெண் வாங்குவதற்கான வழிகளை உருவாக்குவதும் எந்தவிதத்திலும் பயன்படாது.
காமராஜர் கல்வித் துறையில் செய்த நல்ல மாற்றங்களின் பலனை இருபது வருடங்களுக்குப் பிறகு அறுவடை செய்ய ஆரம்பித்தோம். அதுதான் vision என்பது. அதுவே கிராமப்புற மாணவர்களுக்கு உதவுவதாகச் சொல்லி மற்றவர்களின் வாயை அடைத்துவிட்டு குருட்டாம்போக்கில் ஆல்-பாஸ் என்கிற திட்டம் நம் ஒட்டுமொத்த சமூகத்தின் அறிவை மழுங்கடிக்கச் செய்துவிடும். இதன் பாதகங்களை இன்னும் பதினைந்து வருடங்களுக்குப் பிறகு அறுவடை செய்வோம்.
14 எதிர் சப்தங்கள்:
நல்ல பதிவு. என் எண்ணங்களை அப்படியே பிரதிபலித்துள்ளது.
//Differentiation க்கும் Integration க்கும் என்ன வித்தியாசம் என்றும் அதை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைக் கூட தெரியாத ஒருவரை பொறியியல் கல்லூரியில் சந்தித்தேன். கல்லூரியில் அவரை Assistant Professor என்கிறார்கள். எம்.இ முடித்திருக்கிறார்.//
அடப்பாவிகளா....
//ப்ளஸ் டூவில் எத்தனை மதிப்பெண்கள் என்பது பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல் சேர்த்துக் கொள்கிறார்கள். பிறகு இவர்கள்தான் பொறியாளர்கள் என்று வெளியில் வருகிறார்கள். யார் வேலை தருவார்கள்? Freshers க்கு யாருமே வேலை தருவதில்லை என்று புலம்பாமல் வேறு என்ன செய்வது?//
Tru lines Brother..
நல்ல பதிவு. நிதர்சனமான விசயங்கள்.
// எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் யாருமே இல்லை என்ற நிலையை அடைந்துவிடலாம்.//
http://blog.eurekachild.org/key-root-causes-for-poor-quality-education/
//‘அந்தப் பையன் வீக்குன்னு தெரியும். ஆனா ஃபெயில் பண்ணக் கூடாதுன்னு அரசாங்கம் சொல்கிறது...// கொஞ்சம் தனிக் கவனம் கொடுத்து சில அடிப்படைச் சொல்லிக் கொடுக்கலாமேண்ணே.........., இப்படியே வசனம் பேசிட்டி இருக்கறதுக்கு...,
பத்தாம் வகுப்பு வரை ஆல் பாஸ் ஒரு என்பது ஒரு மிகப் பெரிய குறையாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. நீங்கள் சந்தித்த "ஒன்றும் அறியாத" உதவிப் பேராசிரியர் கூட நீங்கள் பாராட்டும் வடிகட்டும் பரீட்சை முறையில் படித்து வந்தவர்தான். எனக்கு தெரிந்த ஒரு குழந்தையை L K G யில் fail செய்த கொடுமையை நான் பார்த்திருக்கிறேன்.சும்மா நாலு கேள்வி கேட்டு pass /fail என்று கூறுவதை ஒப்புக்கொள்ளகூடாது. ஆஸ்திரேலியாவிலும் 12-ம் வகுப்பு வரை பரீட்சை கிடையாது. ஆனாலும் இங்கு +2 படித்தவரின் அறிவு நம் ஊரில் பட்டப் படிப்பு படித்தவருக்கு கிடையாது. இங்கு படிப்பை அனுபவித்து படிக்கிறார்கள். நம்ம ஊரில் பள்ளிப் படிப்பு தேவலை. கல்லூரி படிப்பில் தரம் மிகக் குறைவு. லஞ்சம் கொடுத்து பேராசிரியர் வேலைக்கு சேருபவர்கள் தரம் கேட்கவே வேண்டாம். P S வீரப்பா கூறுவதைப் போல் லஞ்சம் தலை விரித்தாடும் இந்த நாடும் நாட்டு மக்களும்.....
/*கல்வி என்பது வெறும் அட்டை டூ அட்டை மனனத்திற்கான செயல்பாடு இல்லை என்பதை அறிந்து கொள்ளும் விதத்தில் தேர்வு முறைகளில் மாறுதல்களைக் கொண்டு வர வேண்டும்.*/
இதற்கான மறுதல் தான் ஆல் பாஸ் தேர்வு முறை. இதில் நிறைய எக்ஸ்ட்ரா கறிகுலர் ஆக்டிவிடியும் அடங்கும். இப்பொழுது இருக்கும் கல்வி முறை நாம் படித்த்தததை விட நல்ல கல்வி முறை தான். ஆனால் அதை செயல் படுத்தும் ஆசிரியர்களுக்கு அந்த அளவுக்கு அறிவு/ ஆர்வம் இல்லை.
இனி புது கல்வி முறை கொண்டு வந்தாலும் அப்பொழுதும் இதேபோல் தான் இருக்கும் until teacher மைன்ட் செட் change ஆகும் வரை.
my daughter scored 491 in 10th exam , in +1 she wants to study commerce and she will in the same school where she studied from LKG
நல்ல பதிவு. mani sir..
நாச்சியப்பன்,
/ஆஸ்திரேலியாவிலும் 12-ம் வகுப்பு வரை பரீட்சை கிடையாது. ஆனாலும் இங்கு +2 படித்தவரின் அறிவு நம் ஊரில் பட்டப் படிப்பு படித்தவருக்கு கிடையாது. இங்கு படிப்பை அனுபவித்து படிக்கிறார்கள்.//
ஆஸ்திரேலியாவில் மட்டுமில்லை, வளர்ச்சியடைந்த எந்த நாட்டிலும் "O" லெவல்(நம்ம ஊரு 10 ஆப்பு_) வரைக்கும் எக்சாமோ, பாஸ் ஃபெயிலோ கிடையாது, சும்மா எவால்யுஷன் தான் செய்றாங்க.
இப்போ நம்ம ஊருலவே சிபிஎஸி ல 10 வரைக்கும் தேர்வு இல்லை, பொது தேர்வு எழுத விருப்படும் மாணவர்கள் மட்டும் பதிவு செய்துக்கலாம், இல்லைனா 10 வரைக்கும் படிச்சேன்னு அந்த ஸ்கூல் நடத்துற தேர்வு மட்டும் எழுதிக்கலாம்னு சிஸ்டம் கொண்டு வந்து 3 வருஷம் ஆச்சு, அதெல்லாம் எங்க "தினம் பதிவு" எழுதுறவங்களுக்கு தெரியப்போவுது அவ்வ்.
10 வரைக்கும் ஆல் பாஸ் போட்டால் எல்லாம் கல்வி தரம் குடி முழுகிடாது ,அப்படி மூழ்கணும் என்றால் உலக நாடுகள் பலவற்றிலும் மூழ்கி இருக்கும்.
இன்னும் சொல்லப்போனால் ஓ லெவல் வரைக்கும் தேர்வே இல்லாத சர்வதேச பள்ளிகள் என சொல்லிக்கொண்டு நம்ம ஊருலவும் இப்ப நிறை தொறக்கிறாங்க ஆனால் ஃபீஸ் தான் "நினைச்சு பார்க்க முடியல அவ்வ்.
#//நம்ம ஊரில் பள்ளிப் படிப்பு தேவலை. கல்லூரி படிப்பில் தரம் மிகக் குறைவு.//
இதான் உண்மை , அதுவும் இப்போ நிகர் நிலை பல்கலைகள் வந்தப்பிறகு , பொறியியலில் பெயில் ஆக்க கூடாதுனு அவங்களே தீர்மானம் போட்டு செயல்ப்படுறாங்க , அங்கே பேப்பர் திருத்தப்போறவங்கள கேட்டுப்பாருங்க ,சொல்வாங்க.
10 அரியர்ஸ் வச்சிருக்கவன் எல்லாம் ஒரே சிட்டிங்கில் காசு கொடுத்து அரியர்ஸ் கிளியர் செய்துட்டு பொறியாளர் என சொல்லிக்கொண்டு ,நிகர் நிலையில் உருவாகிறாங்க அவ்வ்.
ஆசிரியர்களின் முயற்சிகளை அறிய இந்த பதிவை படிக்கலாமே
http://karanthaijayakumar.blogspot.com/2014/05/blog-post_6.html
-பாபு
'நல்ல சமயத்தில் நல்ல கட்டுரை. இதற்குப் பதிலெழுதினால், அதன் சாராம்சத்தைவிட, யார் எழுதினார்கள் என்றே பலரும் பார்க்கிறார்கள்.
நம்ம ஊரில் கல்வித் தரம் மிகவும் குறைவு. பரவாயில்லை என்று சொல்லும் ஐ.ஐ.டி அல்லது நல்ல கல்லூரியிலிருந்து வரும் மாணவர்கள் வெளி வேலைக்குச் சென்றுவிடுகிறார்கள். பெரும்பாலும், பெரிய வேலைக்குப் போகமுடியாதவர்கள் வாத்தியார் வேலைக்கு வந்துவிடுகிறார்கள். வாத்தியார் வேலைக்கு மூளையைவிட, மாணவர்களுக்கு படிக்கும் ஆர்வத்தைத் தூண்டினாலே போதும். பெரும்பாலும் வாத்தியார்கள், மனனம் செய்து பாஸ் பண்ணி அதை மாணவர்களுக்கு எழுதிப்போடும் நிலையிலேயே உள்ளனர். கல்லூரிகளில்கூட நோட்ஸ் கொடுத்து அதை மனப்பாடம் பண்ணி எழுதவைக்கின்றனர்.
க்ரீமி லேயர் (புரிந்து படிக்கின்றவர், ஸ்மார்ட் மாணவர்கள்) வேலையில் சேர்ந்துவிடுகின்றனர்.
பஹ்ரைனில் நான் பி.இ. (கம்ப்யூட்டர்) படித்த (நாகர்கோவில் பொறியியல் கல்லூரி) மாணவன் பலசரக்குக் கடையில் (கோல்ட் ஸ்டோர் அல்லது சூப்பர் மார்கட்) வேலைசெய்வதைப் பார்த்துள்ளேன். திருச்சியில், பி.இ, எம்.பி.ஏ படித்த, இப்போது எம்.இ படித்துக்கொண்டிருக்கும் மாணவன் 5000 ரூக்கு ஹோட்டல் பணியில் இருப்பதைப் பார்த்தேன்.
காலம் கெட்டுப்போச்சு.....
Kapil Sibal has introduced no examination policy till xth std in order to eliminate the pressure for students . Why should we blame the system ? Like Inflation marks also vary , when i studied bench mark was 400 and now its 450 . My daughter dint had exams in her first standard , when she went to second standard school said we will have exams this year due to pressure from nay parents "Without exams students wont study at all " . Till last year they enjoyed the studies and have known lot of things. Due to exams in second std. teachers attitude changed and students too . This is why we shouldnt have examinations in the lower level .
First of all we should educate the children and not teach them .
Instead of blaming the system , let us start educating our children . Let us answer their questions instead of closing their mouth .
Post a Comment