‘யாருக்குத்தான் பிரச்சினை இல்ல?’ இதுதான் செமினாருக்கு தலைப்பு. பத்துப் பேர் கலந்து கொண்டோம். மேலாண்மைப் புலி ஒருவர் வகுப்பு எடுத்தார். இது போன்ற வகுப்புகளுக்கு வாய்ப்பு வந்தால் தவற விடாமல் சென்றுவிடுகிறேன். எப்படியும் வெகு சில நல்ல விஷயங்களையாவது மண்டைக்குள் ஏற்றிவிடுவார்கள். ஆனால் ஒன்று - நமக்குத்தான் எல்லாம் தெரியுமே என்கிற மனநிலையில் சென்றால் மரண வேதனையாகத்தான் இருக்கும். ‘இதெல்லாம் நமக்குத் தெரியாதா?’ என்று கடுப்பாக இருக்கும். அதனால் மண்டையைக் காலி செய்துவிட்டுச் செல்வதுதான் உசிதம். புலியும் இப்படித்தான் அந்த வகுப்பை ஆரம்பித்தார். ‘இந்த நான்கு மணி நேரங்களுக்கு மட்டும் என்னை அப்பாடக்கர் என்று நம்பிக் கொள்ளுங்கள்’ என்றார்.
இந்த நம்பிக்கையை உருவாக்குவதுதான் பெரிய விஷயமே. திடீரென்று ‘என்னைப் பெரியவனாக நம்பிக் கொள்’ என்றால் நாய் கூட நம்பாது. கடிக்கத்தான் வரும். நிரூபிக்க வேண்டுமல்லவா? கேட்பவன் நம்ப வேண்டுமானால் ஏதேனும் ஒரு credibility இருக்க வேண்டும். கிடைக்கும் சந்தர்ப்பங்களில் நமது ஆளுமையை வெளிப்படுத்த வேண்டும். அவருக்கு மொத்தமே நான்கு மணி நேரங்கள்தான். வகுப்புத் தொடங்குவதற்கு முன்பாக தன்னை பெரியவன் என்று நினைக்க வைத்துவிட வேண்டும். அதைச் செய்வதற்கு அவரிடம் ஒரு கதை இருந்தது. சொந்தக் கதை. அம்மா, அப்பா என்று யாரும் இல்லாத மனிதர் அவர். நினைவு தெரிந்த காலத்திலிருந்தே அநாதைவிடுதியில்தான் இருந்திருக்கிறார். மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் அநாதைவிடுதி அது. படிப்பு நன்றாக வந்திருக்கிறது. விடுதியிலேயே படிக்க வைத்திருக்கிறார்கள். அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் மேலாண்மைப் படிப்பை முடித்துவிட்டு சில நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு இப்பொழுது இங்கு வந்து பயிற்சி வகுப்புகள் நடத்துகிறார். தனது படிப்பு மொத்தமும் ஸ்காலர்ஷிப்தான். ஐந்து நிமிடங்களுக்குள் தனது கதையைச் சொல்லி முடித்தார்.
‘நான் செய்தது பெரிய சாதனை இல்லை. கொஞ்சம் முயன்றால் இதையெல்லாம் யார் வேண்டுமானாலும் சாதித்துவிடலாம். ஆனால் எனக்கு மிகப் பெரிய பலவீனம் இருக்கிறது. என்னால் மீளவே முடியாத பலவீனம் அது. அந்தப் பிரச்சினையை இந்த வகுப்பு முடியும் போது சொல்கிறேன்’ என்றவர் ‘இப்பொழுதும் இந்த தலைப்பில் வகுப்பு எடுப்பதற்கு எனக்குத் தகுதியில்லை என்று யாராவது நினைத்தால் சொல்லுங்கள்’ என்ற போது யாரும் கையை உயர்த்தவில்லை.
கதையைக் கேட்டவுடன் அவரை நம்பத் துவங்கினோம். ‘அதனால்தான் கேட்கிறேன். யாருக்கு பிரச்சினையில்லை?’ - தலைப்பை பிடித்துவிட்டார். அவர் கேட்பது சரிதான். எல்லோருக்கும்தான் பிரச்சினைகள் இருக்கின்றன. சாதாரண மனிதனிலிருந்து தேசத்தின் தலைவன் வரைக்கும் அத்தனை பேருக்கும் இருக்கிறது. தலைக்குத் தகுந்த பாரம். ஆனால் இந்த பாரத்துக்கும் மேலாக வாழ்க்கை இருக்கிறது. அதுதான் சூட்சமம்.
அடுத்த நான்கு மணி நேரமும் போனதே தெரியவில்லை. மொத்த சாராம்சமும் ஒன்றுதான் - பாஸிட்டிவிட்டி. எதையுமே பாஸிட்டிவாக பார்ப்பது.
வரிசையில் சென்று கொண்டிருக்கும் எறும்பை கலைத்துவிட்டால் அடுத்த சில நிமிடங்களில் தனது வரிசையை அமைத்துவிடுகிறது. ஒரு நாய்க்குட்டியை கல்லால் அடித்துத் துரத்திவிட்டு பிறகு விசிலடித்தால் வாலை அசைத்துக் கொண்டே வருகிறது. மற்ற எந்த உயிரினமுமே அப்படித்தான். எவ்வளவு பெரிய சவால்கள் வந்தாலும் சாதாரணமாக தாண்டிக் குதித்துவிடுகின்றன. ஆனால் மனிதன் தான் அத்தனையையும் தனக்குள் புதைத்து வைத்துக் கொள்கிறான். எல்லாவற்றிலும் நெகட்டிவிட்டி.
திரும்பத் திரும்ப புலம்பும் மனிதர்களைப் பார்க்கிறோம். எதையெடுத்தாலும் அதில் இருக்கும் எதிர்மறையான விஷயங்களையே பேசுகிறார்கள். எழுத்திலேயே அடுத்தவனைக் கதறடிக்கிறார்கள். அழுகை, துக்கம் உள்ளிட்ட நெகட்டிவிட்டி சமாச்சாரங்களைத் தாண்டி வராதவர்களால் சூழப்பட்டிருக்கிறோம். நல்ல விஷயங்களைவிடவும் கெட்ட விஷயங்களையே நினைத்து குமுறிக் கொண்டிருப்பவர்கள் சுற்றிச் சுற்றி இருக்கிறார்கள்.
எதிர்மறையானவற்றைப் பற்றி பேசுவதையும் விவாதிப்பதையும் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அவநம்பிக்கைகளை விதைப்பவர்களைவிடவும் நம்பிக்கைகளை தூண்டுபவர்கள்தான் அவசியம். உலகின் இருளைக் காட்டுபவர்களைவிடவும் வெளிச்சத்தின் கீற்றுகளைக் காட்டுபவர்கள்தான் தேவை. அவர் பேசிக் கொண்டிருக்கும் போது எத்தனையோ இலக்கியவாதிகளின் முகங்கள் வந்து போயின. எத்தனையோ பத்திரிக்கையாளர்களின் பெயர்கள் நினைவுக்கு வந்து போயின. எத்தனையோ புலம்பல்வாதிகளின் கதறல்கள் ஞாபகத்திற்கு வந்தன.
எதிர்மறையானவற்றைப் பற்றி பேசுவதையும் விவாதிப்பதையும் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அவநம்பிக்கைகளை விதைப்பவர்களைவிடவும் நம்பிக்கைகளை தூண்டுபவர்கள்தான் அவசியம். உலகின் இருளைக் காட்டுபவர்களைவிடவும் வெளிச்சத்தின் கீற்றுகளைக் காட்டுபவர்கள்தான் தேவை. அவர் பேசிக் கொண்டிருக்கும் போது எத்தனையோ இலக்கியவாதிகளின் முகங்கள் வந்து போயின. எத்தனையோ பத்திரிக்கையாளர்களின் பெயர்கள் நினைவுக்கு வந்து போயின. எத்தனையோ புலம்பல்வாதிகளின் கதறல்கள் ஞாபகத்திற்கு வந்தன.
உயிர் போவதைத் தவிர வேறு பிற அத்தனையுமே சமாளித்துவிடக் கூடிய சவால்கள்தான் - இதை அவர் சொல்லிக் கொண்டிருந்த போது எனக்கு கெட்ட நேரம் வந்திருந்தது. ராஜீவ்காந்தி அழைத்தார். நண்பர். மதுரைக்காரர். வடகிழக்கு மாநிலத்தின் எல்லை முகாமில் இருப்பவர். அவருடன் பேசி வெகுநாட்கள் ஆகியிருந்தது. ‘எக்ஸ்க்யூஸ்மீ’ சொல்லிவிட்டு வெளியில் வந்தேன்.
‘என்ன ராஜீவ்? ரொம்ப நாளா சத்தத்தையே காணோம்?’
அவர் முன்பு காஷ்மீரில் இருந்திருக்கிறார். அதைப் பற்றி எப்பவோ அவர் சொல்லிக் கொண்டிருந்த போது ‘பக்கத்து நாட்டிலிருந்து துப்பாக்கிக் குண்டுகள் வரும் போது விஜயகாந்த் மாதிரி பொங்குவீங்களா?’ என்று கேட்டிருக்கிறேன். ‘பொண்டாட்டி புள்ளங்க அத்தனை பேர் முகமும் ஞாபகத்துக்கு வந்துட்டு போகும். அவங்களை போய் பார்க்கணும்ன்னா கண்ணை மூடிட்டு சுட்டுடா கைப்புள்ள’ என்று நினைத்துக் கொண்டே சுட்டதாகச் சொல்லியிருக்கிறார். ஜாலியான மனிதர்.
நேற்று வழக்கமான உற்சாகம் அத்தனையும் வற்றியிருந்தது. ‘அப்பா இறந்துட்டாரு சார்’.
ராஜீவ் இப்பொழுது அஸ்ஸாமில் இருக்கிறார். அவரது தம்பி குஜராத்தில் இருக்கிறார். அவரும் ராணுவ வீரர்தான். அப்பாவும் அம்மாவும் மதுரையில். அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக். இறந்துவிட்டார். காலையில் தகவல் வந்திருக்கிறது. கிளம்பிவிட்டார். ராஜீவ் பயங்கரமான குழப்பத்தில் இருந்தார். ராணுவ நண்பர்கள் குவஹாத்தி விமான நிலையத்திற்கு அழைத்து வந்திருக்கிறார்கள். குவஹாத்தியிலிருந்து பெங்களூருக்கோ, சென்னைக்கோ விமானம் பிடிக்க வேண்டும் என்றார். துக்கத்தில் இருப்பவர்களை எதிர்கொள்வதற்கு தைரியம் வேண்டும். எனக்கு அவ்வளவு தைரியம் இல்லை. சில ஆறுதல் வார்த்தைகளை பேசிவிட்டு வந்து வகுப்பில் அமர்ந்தேன். அதன் பிறகு கவனம் சிதறிக் கொண்டேயிருந்தது.
மதியம் மூன்று மணிக்கு மீண்டும் ராஜீவை அழைத்தேன். அவருக்கு அதுவரையிலும் விமானம் கிடைத்திருக்கவில்லை. ஆறு மணிக்குத்தான் சென்னைக்கு விமானம். அதுவரையில் விமான நிலையத்திலேயே அமர்ந்திருக்க வேண்டும். தந்தையின் இழப்பை விடவும் இதுதான் கொடுமை. தனிமையில் இருக்கும் போது அவருக்கு தனது தந்தை குறித்தான அத்தனை நினைவுகளும் வந்து சென்றிருக்கும். அருகிலும் யாரும் இல்லை. ‘அநாதை மாதிரி உட்கார்ந்துட்டிருக்கேன்’ என்ற போது உடைந்து போனார். அவர் உடையக் கூடிய மனிதர் இல்லை.
செமினாரில் புலி பேசியதெல்லாம் ஞாபகத்துக்கு வந்து கொண்டிருந்தன. பிற எந்தப் பிரச்சினையை சமாளித்தாலும் மரணத்தை சமாளிப்பது மிகப்பெரிய விஷயம். இல்லையா? மரணம் மட்டும்தான் irreversible. இப்பொழுதெல்லாம் எத்தனையோ மரணங்கள் சர்வசாதாரணம் ஆகிவிட்டன. ரயில் விபத்தில் நூறு பேர் செத்துட்டாங்களாம் என்றால் ‘ப்ச்’ என்பதோடு அந்த துக்கம் முடிந்தது. ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பதைக் கேட்டால் ‘பாவம்’ என்பதோடு நமது இரக்கம் தீர்ந்துவிடுகிறது. உத்தரப்பிரதேசத்தில் இரண்டு பெண்களை மானபங்கம் செய்து மரத்தில் தொங்கவிட்டார்களாம் என்றால் ‘அவங்க செத்தா உங்களுக்கு என்ன? நீங்க பாதுகாப்பாத்தானே இருக்கீங்க’ என்று அகிலேஷ் யாதவ் கேட்கிறார். மலேசிய விமானம் என்ன ஆனது என்று இன்னமும் அமெரிக்காவுக்கும் மலேசியாவுக்கும் தெரியாது என்று நம்புகிறீர்களா?
மாலையில் செமினார் எடுத்த புலி கேண்டீனில் தனியாகச் சிக்கினார். ‘மரணத்தில் மட்டும் பாஸிட்டிவிட்டி வேலைக்கு ஆகாதுல்ல’ என்றேன். மரணத்தில்தான் பாஸிட்டிவிட்டி மிக அவசியம் என்றார். ராஜீவ் பற்றிச் சொன்னேன். மீண்டும் அவரிடம் பேசுங்கள் என்றார். என்ன பேசுவது? ‘உங்கள் அப்பாவின் மரணம் உங்களைவிடவும் உங்கள் அம்மாவுக்குத்தான் பேரிழப்பு. நீங்களே உடைந்திருந்தால் அவரை யார் தேற்றுவது என்று கேளுங்கள்’ என்றார். அதுதான் பாஸிட்டிவிட்டி. எவ்வளவு பெரிய துக்கத்தையும் விட நாம் ஒரு இன்ச் மேலே சென்றுவிட வேண்டும்.
அவர் சொல்லிவிட்டார். என்னால் தெளிவாகப் பேச முடியுமா என்று தெரியவில்லை. ராஜீவை அழைத்தேன். வேறு ஏதோ பேசிவிட்டு ஒரு இடைவெளி கொடுத்தேன். அவர் எனக்கு பெரிய வேலை வைக்கவில்லை. ‘அம்மாவை தேத்தணும் சார். அவர் முகத்தை எப்படி பார்ப்பேன் என்று தெரியல. என்னை விடவும் அவங்களுக்குத்தான் துக்கம் அதிகம்’ என்றார். பாஸிட்டிவிட்டி பற்றி புரிந்து கொள்ள நான்கு மணி நேர செமினாரும் ஒரு மேலாண்மைப் புலியின் அறிவுரையும் எனக்கு தேவைப்பட்டிருக்கிறது. ராஜீவுக்கு அது நெஞ்சுக்குள்ளேயே இருந்திருக்கிறது. எனக்கு சற்று தெளிவாக இருந்தது.
ராஜீவிடம் பேசியது பற்றி புலியிடம் சொன்னேன். சிரித்தார். ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை- ‘உங்கள் பலவீனத்தை கடைசிவரைக்கும் சொல்லவே இல்லை’ என்றேன். அந்தப் புலி ‘அதுதான் என் பலவீனம்’ என்று சொல்லிவிட்டு போய்விட்டது. அது என்ன பலவீனம் என்று உங்களுக்கு புரிந்ததா?
11 எதிர் சப்தங்கள்:
சிந்திக்க வைக்கும் பதிவு
நல்ல்ல்லா ........ எழுதுறீங்க’ய்யா!
வளர வாழ்த்துகள்.
பலவீனத்தை வெளிப்படையா சொல்ல பயப்புடுறது பலவீனமோ???
//‘அதுதான் என் பலவீனம்’ //
Positive thinking ?
ராஜீவ்க்கு என் வருத்தங்கள்..
நீங்கள் உங்களுக்குள் உண்மையாகவும் பாஸ்டிவ் உணர்வோடும் இருப்பதால் தான் இப்படி எழுத முடிகிறது.. உண்மையில் நிசப்தம் GOOD READS தான்
good one sir.. very encouraging...
அருமையான பகிர்வு! நன்றி!
மிகவும் அவசியமான பதிவு. இயலுமெனில் இந்த பதிவையும் வாசித்துப் பார்க்கவும். http://permalg.blogspot.in/2013/09/be-positive.html
mani sir...,சிந்திக்க வைக்கும் பதிவு....அருமையான பகிர்வு! நன்றி!
//என்னைப் பெரியவனாக நம்பிக் கொள்’ என்றால் நாய் கூட நம்பாது. கடிக்கத்தான் வரும். நிரூபிக்க வேண்டுமல்லவா//
நிரூபியுங்கள். நாங்கள் என்ன வேண்டாமென்றா சொல்கிறோம்.வீடியோ எடுத்தால் இன்னும் நல்லது.மொபைல் கேமராவில் என்றாலும் பரவாயில்லை. நாய் கடிப்பதை இதுவரை கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர பார்த்ததேயில்லை.
உங்கள் பதிவுகள் உள்ளபடியே மிகவும் தரமாக உள்ளன. நல்ல எழுத்து நடையும், தரமான உள்ளீடுகளுமாய் .... நன்று..
Post a Comment