சில நாட்கள் வரையிலும் வயிற்றுப்புண் அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தது.
வயிற்றுக்குள் யாரோ பானை ஒன்றை வைத்து சாராயம் காய்ச்சுவது போலவே இருக்கும். கியாஸ் அடுப்பாக இருந்தால் கூட சமாளித்துக் கொள்ளலாம். மூன்று கற்களைக் கூட்டி வைத்து விறகு அடுப்பை எரிப்பார்கள். தண்ணீரைக் குடித்தாலும் பலன் இல்லை; தயிரைக் குடித்தாலும் பலன் இல்லை. ஆறேழு நாட்களுக்கு சாவடித்துவிட்டு அதுவாகக் காணாமல் போய்விடும்.
வயிற்றுவலி தனியாக வராது. அவ்வப்போது வாயிலும் பொங்கல் வைத்துவிடும். அது வயிற்றுவலியைக் காட்டிலும் அக்கப்போர். வாயைத் திறந்தாலும் வலிக்கும். திறந்த வாயை மூடினாலும் வலிக்கும். அதைவிடக் கொடுமை ஒன்று இருக்கிறது- ராத்திரியில் தெரியாத்தனமாகக் புண்ணைக் கடித்துவிட்டால் அவ்வளவுதான். குப்புறப்படுத்தாலும் விடாது; வாயில் தண்ணீரை ஊற்றிக் கொண்டு மல்லாக்கப் படுத்தாலும் விடாது. நரகம். ஒரு கத்தி கிடைத்தால் வாயை மட்டும் தனியாக அறுத்து எறிந்துவிட வேண்டும் என்று தோன்றும்.
இந்தத் தொந்தரவு பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போதுதான் ஆரம்பித்தது. பொதுத் தேர்வுகள் முடிந்த பிறகு நுழைவுத் தேர்வுக்கு தயார் செய்வதற்காக என்னை ஒரு விடுதியில் அமுக்கியிருந்தார்கள். முதன்முதலான விடுதி வாழ்க்கை அது. அப்பொழுது அந்தியூரில் ஐடியல் பள்ளி பாப்புலராகியிருந்தது. அங்கு படித்தால் டாக்டராகிவிடலாம் என்று யாரோ கிளப்பிவிட்டதை நம்பி அம்மாவும் அப்பாவும் இழுத்துச் சென்று திணித்துவிட்டார்கள். அங்கு என்னைப் போன்ற இளம் ஆடுகளை வெள்ளாட்டுப்பட்டியில் அடைத்து வைத்திருந்தார்கள். கிட்டத்தட்ட ஆயிரம் பேர்களாவது நுழைவுத்தேர்வு பயிற்சிக்காகச் சேர்ந்திருந்தோம். ஒரு பெரிய ஹாலில் மைக் செட் கட்டித்தான் வகுப்பு நடத்துவார்கள்.
இந்த மாதிரி சமயங்களில் நம்முடன் இருப்பவன் அசால்ட்டாக இருந்தால் நமக்கு பயம் வராது. அவனோடு சேர்ந்து எப்படியும் படித்துவிடலாம் என்று தைரியம் இருக்கும். ஆனால் அவன் மூன்று மணிக்கு எழுவதும் இரவும் பன்னிரெண்டு மணிக்குத் தூங்குவதுமாக இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக வயிறு எரியத் தொடங்கும். அல்லவா? அதுவும் என்னுடன் இருந்த சுரேஷ் மூன்று மணிக்கு எழுந்து சத்தமில்லாமல் வேறு இடத்துக்கு ஓடிவிடுவான். அதுவும் எப்படி? தலையணையை பெட்ஷீட்டுக்கு கீழாக வைத்து அதை போர்த்திவிட்டு போய்விடுவான். எப்பவாவது தூக்கம் கலைந்து எழுந்தால் ‘அப்பாடா அவனும் படிக்காம தூங்கிட்டு இருக்கான்’ என்று நிம்மதியாக இருக்கும். ஆறு மணிக்கு வந்து ஒன்றுமே தெரியாதவன் போல படுத்துக் கொள்வான்.
இவனது இந்த தில்லாலங்கடி வேலை ஆரம்பத்தில் எனக்குத் தெரியவே இல்லை. தேர்வுகள் வைத்தால் அவன் முப்பதுக்கு இருபத்தெட்டு வாங்குவான். எனக்கு முப்பதைத் தொடுவதற்கு இருபத்தெட்டு மதிப்பெண்கள் தேவைப்படும். கருமம் பிடித்தவர்கள்- மதிப்பெண் குறைந்தால் கை நீட்டிவிடுவார்கள். பன்னிரெண்டாம் வகுப்பு வரைக்கும் பெண்கள் இல்லாத பாலைவனத்திலேயே உழாத்திவிட்டு இப்பொழுது சிட்டுகளோடு சேர்ந்து படிக்கலாம் என்றால் அந்தச் சிட்டுகளின் முன்பாக சுரேஷ் ஹீரோவாகிக் கொண்டிருப்பான். நான் வாத்தியார்களுக்கு போண்டாவாகிக் கொண்டிருப்பேன்.
‘எப்படிடா மார்க் வாங்குற’ என்றால் ‘இதெல்லாம் அப்பவே படிச்சதுடா..’என்று கதை விட்டுவிடுவான். கேப்மாரி.
அவன் தலையணையை மூடிவிட்டு போகிறான் என்பதை ஏழெட்டு நாட்களுக்குப் பிறகுதான் கண்டுபிடித்தேன். பொதுத் தேர்வுக்கும் நுழைவுத் தேர்வுக்கும் இடையில் இருபது நாட்களோ என்னவோதான் இருந்தன. ஆனால் இப்படியே அந்தத் தலையணையைப் பார்த்துப் பார்த்து ஏழெட்டு நாட்களைக் கோட்டைவிட்டுவிட்டேன். அதன்பிறகுதான் டென்ஷன் ஏறியது. ‘என்னையும் எழுப்புடா’ என்று சொன்னால் பயங்கரமாகத் தலையை ஆட்டுவான். ஆனால் ஒரு நாள் கூட எழுப்பியது இல்லை.
மதிய நேரத்தில் விடுதியின் புளித்த மோரை குடித்தால் கலக்கலாகத் தூக்கம் வரும். மதியம் தூங்கிவிட்டு இரவில் படித்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொள்வேன். இரவிலும் தூக்கம் வந்துவிடும். இரவில் நேரத்திலேயே தூங்கிவிட்டு அதிகாலையில் எழுந்து படித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து கொள்வேன். ஆனால் ஒரு நாளும் சூரியன் முதுகில் சூடேற்றுவதற்கு முன்னால் எழுந்ததேயில்லை. நாட்கள் ஓட ஓட நான் தேய்ந்து கொண்டிருந்தேன். சுரேஷ் இன்னபிறரும் ஜொலித்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் கடுப்புதான் வயிற்றுப் புண் வருவதற்கான முதல் டென்ஷன்.
அப்புறம் எப்படியோ படித்து, தேர்வில் காப்பியடித்து - அது வேறொரு ட்ராக்.
கல்லூரியில் படிக்கும் போதும் ஒவ்வொரு செமஸ்டர் தேர்வு சமயத்திலும் வயிறு வலிக்க ஆரம்பிக்கும். அதற்கும் இதே காரணம்தான். படிப்பதற்காக கொடுக்கப்படும் ‘ஸ்டடி லீவ்’மொத்தமும் வீணாகப் போய்விட தேர்வு நாட்களும் மதியம், இரவு, அதிகாலை என்று கரைந்துவிட பிரச்சினை தொடங்கிவிடும். இப்படி நேரத்தை வீணாக்குவது பெரும்பாலான மாணவர்களுக்கும் நடக்கும்தான் என்றாலும் எனக்கு உள்ளுக்குள் கொதிக்க ஆரம்பித்திவிடும்.
அவ்வப்போது மருத்துவர்களிடம் சென்றால் விட்டமின் பி குறைபாட்டினால் வந்திருக்கிறது என்று சில வைட்டமின் மாத்திரைகளைத் தருவார்கள். மாத்திரைகளை எடுத்துக் கொள்ளத் துவங்கிய ஏழெட்டு நாட்களில் நாட்களில் புண் ஆறிவிடும். ஆனால் ஒன்று- மாத்திரைகளைத் விழுங்காவிட்டாலும் கூட ஏழெட்டு நாட்களில் புண் ஆறிவிடும் என்பது வெகுநாட்களுக்குப் பிறகுதான் தெரிந்தது.
இப்படியே பத்து பதினைந்து வருடங்களாக இழுத்துக் கொண்டிருக்க சமீபத்தில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை கடன்காரனைப் போல இந்த வயிற்றுவலி எட்டிப் பார்த்ததால் அம்மாவுக்கு பயம் வந்துவிட்டது. ஏதோ பெரிய விவகாரம் என்று நினைத்துவிட்டார். நல்ல மருத்துவரைப் பார்க்கச் சொல்லி அனர்த்தத் தொடங்கியிருந்தார். பெங்களூரிலேயே ஒரு மருத்துவரைப் பார்த்தேன்.
காலையில் எழுந்தவுடன் தண்ணீர் கூட குடிக்காமல் வந்துவிடச் சொல்லியிருந்தார். எண்டோஸ்கோப்பி செய்து பார்க்க வேண்டுமாம். அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்று தப்புக் கணக்குப் போட்டுவிட்டேன். அந்தக் கட்டிலில் படுக்க வைத்து வாய்க்குள் ஒரு திரவத்தை ஊற்றி உள்ளே டியூப் உள்ளே இறங்க இறங்கத் தான் தெரிந்தது- ஏதோ மலைப்பாம்பு ஒன்று வயிற்றுக்குள் வழி தேடுவது போலவே இருந்தது. குமட்டியபடியே ‘ஓய்...ஓய்’ என்றால் அருகில் இருந்த கம்பவுண்டர் ‘ஏய்...ஏய்’ என்று காலைப் பிடித்துக் கொண்டார். ‘வெளியில் வாடா உனக்கு இருக்கு’என்று சொல்ல வேண்டும் போலிருந்தது. ஆனால் அந்தக் குழாய் தடுத்துவிட்டது.
எல்லாம் முடித்துவிட்டு ‘Stress தான் காரணம்; தூக்கத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம்’ என்று சொல்லிவிட்டார். இருக்கும் புண்களை ஆறச் செய்வதற்கு சில மாத்திரைகளையும் கொடுத்தார்.
இப்போதைக்கு மாற்று மருத்துவத்தை முயன்று பார்க்கலாம்- தேவைப்பட்டால் கொஞ்ச நாட்கள் கழித்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம் என்றிருந்தேன். பெரும்பாலான நோய்களுக்கு மிக எளிமையான மருத்துவம் நம்மிடம் இருக்கிறது என்று நம்புகிறேன்.
எங்கள் அமத்தா நாட்டு வைத்தியம் பார்ப்பார். அனைத்து நோய்களுக்கும் பார்க்கத் தெரியாது. ஆனால் சில குறிப்பிட்ட நோய்களுக்கு வைத்தியம் செய்வார். ஆனால் ஒரு மூலிகையின் பெயரைக் கூட சொல்லித் தந்தது இல்லை. வைத்தியத்திற்கு யாராவது வந்தால் அவர்களை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு தனியாகச் சென்று தேவையான மூலிகைகளை புடவைக்குள் மறைத்தபடிதான் எடுத்துவருவார். அதை அம்மியில் வைத்துக் கொட்டி மருந்தாக எடுத்து வரும் போதுதான் நம் கண்களுக்கே தெரியும். மூலிகையின் பெயரைச் சொன்னாலும் கண்ணில் காட்டினாலும் வைத்தியம் பலிக்காது என்று யாரோ சொல்லி வைத்ததை அப்படியே நம்புகிறார். அவரது அப்பாவும் ஏதேதோ நாட்டு வைத்தியங்கள் செய்வாராம். அவரிடமிருந்து கற்றுக் கொண்ட மிகச் சில வைத்தியங்களை இவர் செய்து வந்தார். இப்பொழுது இவருக்குத் தெரிந்த ஓரிரண்டு வைத்தியங்களும் இவரோடு காணாமல் போய்விடும்.
இந்த வாய்ப்புண்ணும் வயிற்றுப் புண்ணும் எந்தக் காலத்திலும் என்னைவிட்டுப் போகாது என்று நினைத்திருந்தேன். ஆனால் மிக எளிமையான வைத்தியம் ஒன்று இருக்கிறது. நண்பர்தான் சொல்லித் தந்தார். ஒவ்வொரு நாளும் நள்ளிரவு தாண்டிய பிறகு இரண்டு அல்லது மூன்று மணிக்கு அலாரம் வைத்து எழுந்துவிட வேண்டும். ஒரு கை பொட்டுக்கடலையை நன்றாக மென்று விழுங்கிவிட்டு தண்ணீரைக் குடித்துவிட வேண்டும். அவ்வளவுதான். பதினைந்து அல்லது இருபது நாட்கள் விழுங்கினால் போதும் என்றார். அவருக்கும் அவரது அப்பாவுக்கும் இது பலன் அளித்ததாகச் சொன்னார். ஆனால் நான் பதினைந்து நாட்களோடு நிறுத்திக் கொள்ளவில்லை. தொடர்ந்து விழுங்கிக் கொண்டிருக்கிறேன். அது எப்படி சரியாகும்? அவர் சொன்ன காரணம் மருத்துவரீதியாக சரியானதா என்று தெரியவில்லை- ஆனால் லாஜிக்கலாக சரியாக இருந்தது. பொட்டுக்கடலைப் பொடி ஓங்கி சுவரில் அடித்தால் கூட அப்பிக் கொள்ளும். அதே போலத்தான் புண்ணின் மீது படலமாக அப்பிக் கொள்கிறது. அதன் மீது தண்ணீரைக் குடித்தால் படலம் மேலும் கெட்டியாகிவிடுகிறது. இந்தப் படலம் அதிகாலையில் சுரக்கும் அமிலங்கள் புண்ணை பாதிக்காதவாறு தடுத்து ஆறச் செய்கிறது என்றார்.
இதைச் சொன்னால் ஆங்கில மருத்துவர்கள் சண்டைக்கு வரக் கூடும். ஆனால் எனக்கு பலன் அளித்திருக்கிறது. இது போன்ற எளிமையான மருத்துவங்களை முயன்று பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை. இணையத்தில் கூட பல நோய்களுக்கு பாட்டி வைத்தியங்கள் கிடைக்கின்றன. நோயை முழுமையாகக் கண்டறியாமல் இவையெல்லாம் எந்த அளவுக்கு உதவக் கூடும் என்று தெரியவில்லை. ரிஸ்க்கும் அதிகம். ஆனால் உடலில் இருக்கும் நோய் நமக்கு பெரிய பாதிப்பை உருவாக்காது என்று தெரிந்துவிட்டால் ஒரு கை பார்த்துவிடலாம். இது போன்ற மாற்று வைத்தியங்கள் ஆயிரக்கணக்கில் இருந்திருக்கக் கூடும். பெரும்பாலானவற்றை இழந்துவிட்டோம். இன்னும் கூட நூற்றுக்கணக்கான கை வைத்தியங்கள் இருக்கக் கூடும். அவையெல்லாம் இன்னும் எவ்வளவு காலத்திற்கு தாக்குப்பிடிக்கும் என்று யாருக்குத் தெரியும்?
10 எதிர் சப்தங்கள்:
எனக்கும் இந்தப் பிரச்சினை இருக்கு, நானும் முயற்சி பண்ணுறன்
Good to know that simple tip helped you. Hope you have recovered fully.
But its better to have a good sleeping pattern. TC
நாட்டுவைத்தியத்தில் சிறப்பான மருந்துகள் இருக்கின்றன! ஆவாரம்பூ கஷாயம் கூட அருந்தலாம்!
ஹீலர் பாஸ்கர் மருந்தில்லாமால் மருத்துவம் சொல்கிறார் ;
அவசியம் பாருங்கள் பயன் பெறுங்கள்
http://anatomictherapy.org/tevents.php
https://www.youtube.com/watch?v=RSnGgXFG508
வாய் புண்ணிற்கு மாசிக்காய் இரவில் படுக்கும் முன் பாலில் உரைத்து புண்ணில் போடவும்.
@ Mani : For Mouth and stomach ulcer best thing to do is oil pulling(before brushing your teeth) . Eat Manathakali Keerai
ஹீலர் பாஸ்கரின் ஒலி தகடை முழுமையாய் கேட்டுவிட்டால் நோய் பற்றிய பயம் நீங்கிவிடும். பயமின்றி அனுகும் எந்த முயற்சியும் நல்ல பலனைதரும்.
I also had this mouth ulcer problem during exam period or whenever i have less amount of sleep.. I took THREE vitamin B injection as doctor's suggestion and I dont have this problem for last 10 months
நானும் அதே கேஸ்தான்.முயற்சி செய்கிறேன்.மணத்தக்காளி கீரையை வெறும் வயிற்றில் ஒரு கைப்பிடி பச்சையாக சாப்பிட்டாலும் நல்ல பலன் கிடைக்கும்.
ஒரு நோயையும் அதற்குரிய தீர்வையும் அழகான எழுத்து நடையில் வெளியிட்டிருக்கிறீர்கள். எழுத்தில் உங்களுக்கென்று ஒரு பாணியை உருவாக்கிவிட்டீர்கள். பாராட்டுக்கள்!
Post a Comment