ஒரு எம்.டெக் பையனுக்கு வேலை வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்று ஓரிரண்டு நாட்களாக நண்பர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால் அது ஒன்றும் அவ்வளவு சாதாரண காரியமாகத் தெரியவில்லை. ‘இரண்டு வருட அனுபவம் இருந்தால் முயற்சி செய்யலாம்’ ‘Fresher என்றால் வேண்டாம்’- இதுதான் பெரும்பாலானவர்களிடமிருந்து வரும் பதில். அது என்ன படிப்பாக இருந்தாலும் சரி. குடும்பத்தில் அம்மா, அப்பாவுக்கு வருமானம் இருந்தால் ‘வேலை தேடுகிறேன்’என்று சொல்லிக் கொண்டு கொஞ்ச நாட்களுக்கு காலத்தை ஓட்டலாம். ஆனால் அவனை நம்பித்தான் குடும்பம் இருக்கிறது என்ற நிலைமையில் இருப்பவன் என்ன செய்வான்? அப்படியான பையன்தான் அவன். அரைச் சம்பளமோ, கால் சம்பளமோ- எங்கேயாவது ஒட்ட வைத்துவிட்டால் தப்பித்துக் கொள்வான். அதற்குத்தான் முயன்று கொண்டிருக்கிறேன்.
அதற்கே மென்று தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கிறது.
யாராவது வேலை வேண்டும் என்று கேட்டால் ‘Resume கொடுப்பா விசாரிச்சு சொல்கிறேன்’ என்று சொல்லிக் கொண்டிருந்த வரை வேலை தேடுவதில் இருக்கும் வலி தெரியவில்லை. இதுவரைக்கும் ஊரிலிருந்து யாராவது வேலை தேடித் தரச் சொல்லிக் கேட்டால் அதிகபட்சமாக அதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர்களும் நம்பிக்கையோடு சுயவிவரக் குறிப்பை அனுப்பி வைப்பார்கள். அதை நான்கைந்து பேருக்கும் நானும் அனுப்பி வைப்பேன். அவ்வளவுதான். ஆனால் அது பைசா பிரையோஜனப்படாது. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் லட்சக்கணக்கில் விண்ணப்பங்கள் வந்து குவிகின்றன. எத்தனை பேரை பொறுக்கி எடுக்கிறார்கள்? தனிப்பட்ட முறையில் இறங்கி வேலை செய்தால்தான் விண்ணப்பத்தை துளியாவது நகர்த்த முடியும் போலிருக்கிறது. இந்தச் செயலில் இறங்கும் போதுதான் வேலை தேடுவதன் கொடூரம் தெரிகிறது. வேலை வாங்குவது- அதுவும் ஒரு Fresher க்கு வேலை வாங்குவது அத்தனை சுலபம் இல்லை.
ஒவ்வொரு வருடமும் படித்துவிட்டு வெளியே வரும் லட்சக்கணக்கானவர்கள் என்ன செய்கிறார்கள்? குறு விவசாயியின் மகன், சைக்கிள்கடைக்காரரின் மகள், டீக்கடைக்காரரின் பையன்கள் என்று இவர்கள் எல்லோரும் எங்கே தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்? கொஞ்சம் பேர் கேம்பஸ் இண்டர்வியூவிலும், இன்னும் கொஞ்சம் பேர் வேலை வாய்ப்பு முகாம்களிலும் தப்பித்துவிடுகிறார்கள். கார்பொரேட் நிறுவனங்களில் பணி புரிந்து கொண்டிருக்கும் அத்தை பையன், மாமா மகளை வைத்துக் கொண்டு சொற்பமான மாணவர்கள் வேலை வாங்குகிறார்கள். மிச்சம் மீதியெல்லாம்? சிரமம்தான்.
படித்தவர்களுக்கு வேலை தேடுவதுதான் கஷ்டம் என்று இல்லை. பொதுவாக, வேலைத் தேடல் என்பதே கஷ்டம்தான். நண்பர் ஒருவர் பெங்களூர் வந்திருக்கிறார். பத்தாவதுதான் படித்திருக்கிறார். மிகச் சிறந்த திறமையாளர். இன்னும் சில வருடங்களில் தமிழில் மிக முக்கியமான ஆளாக இருப்பார் என்று தைரியமாக நம்பலாம். அவருக்கு பொல்லாத காலம். சில தனிப்பட்ட காரணங்களுக்காக பெங்களூரில் அஞ்ஞாத வாசம் செய்கிறார். ஆறுமாத காலத்தை ஓட்டுவதற்கு உதவும்படி ஒரு வேலை பிடிக்க முடியுமா என்றார். நிறைய இடங்களில் wanted போஸ்டரைப் பார்த்திருக்கிறேன். அது ஒன்றும் பெரிய காரியம் இல்லை என்றுதான் நினைத்தேன். இரண்டு மூன்று நிறுவனங்களில் விசாரித்தேன். மேனேஜர் பதவியா கேட்கப் போகிறேன்? அலுவலகப் பணியாள் என்கிற அளவில்தான். ஆனால் அதற்கே யாரும் முகம் கொடுத்துப் பேசுவதில்லை. வேலை இல்லை என்று சொல்வதைக் கேட்பதற்குக் கூட சங்கடம் இருக்காது. ஆனால் அதைச் சொல்வதற்குள் மனிதர்கள் காட்டும் முகபாவனையும், மெளனமும், உடல் அசைவுகளும் இருக்கிறதே- அதை எதிர்கொள்வதுதான் உச்சபட்சக் கொடுமை.
யாரோ வேறொருவருக்காக வேலை கேட்டுப் போகும் போதே இதையெல்லாம் எதிர்கொள்ள இத்தனை சங்கடமாக இருக்கிறது. அவரவருக்காக வேலை கேட்டுப் போகும் போது இதையெல்லாம் சகித்துக் கொள்ள எவ்வளவு கஷ்டமாக இருக்கும்? பிச்சை கேட்பவர்களிடம் ஒரு ரூபாய் கொடுப்பதற்குள் நாம் செய்யும் சேஷ்டைகளுக்கு இவை எந்தவிதத்திலும் சளைத்தவை இல்லை.
அப்பாவுக்கு ஹபிபுல்லா என்று ஒரு நண்பர் உண்டு. மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தையார் கோபி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரி. பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே ஹபிபுல்லா நிறைய கஷ்டங்களை அனுபவித்ததாக அப்பா சொல்லியிருக்கிறார். நாங்கள் அவரை அபி சித்தப்பா என்று அழைப்போம். அதில் அவருக்கு சந்தோஷம். ‘எவ்வளவு வயசானாலும் என்னை சித்தப்பா’ என்கிறான் என்று சந்தோஷப்படுவார். அந்தச் சந்தோஷத்தில் நிறைய அர்த்தங்கள் உண்டு. நிறைய அர்த்தங்கள் மட்டும் இல்லை- வெவ்வேறு அர்த்தங்களும் உண்டு. அவரது கஷ்டங்கள் எல்லாம் முப்பத்தைந்து வயது வரைக்கும்தான். அதன்பிறகு அவரும் அவரது தம்பியும் ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவிவிட்டார்கள். இப்பொழுது மிகப் பெரிய தொழிலதிபர்கள். ஆனால் இன்னமும் எந்தவித பந்தாவும் இல்லாமல்தான் பழகுகிறார். அவருக்கு என் மீது நம்பிக்கை அதிகம். என்னிடம் பேசும் போதெல்லாம் ஒன்றைத் திரும்பத் திரும்பச் சொல்வார். ‘நாலு பேருக்கு வேலை கொடுக்கிற நிலைமையில் நாம இருக்கணும்ப்பா. அதுல ஒரு திருப்தி இருக்கு’ என்பார். கல்லூரி முடிக்கும் வரை இதைச் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் சொன்னதைக் கேட்கவில்லை. கல்லூரியை முடித்துவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டேன். அதன் பிறகு ஒன்றிரண்டு வருடங்கள் சொல்லிப் பார்த்தார். பிறகு இவன் தேற மாட்டான் என்று விட்டுவிட்டார். அதோடு சரி. நானும் மறந்துவிட்டேன்.
வெகுநாட்களுக்குப் பிறகு, அவர் சொல்லிக் கொண்டிருந்ததன் அர்த்தத்தை நண்பருக்கு வேலை கேட்டுச் சென்ற இடத்தில் இன்று உணர்ந்தேன். சம்பாதிக்கிறோமோ, இல்லையோ; கோடிகளில் புரள்கிறோமோ இல்லையோ- நம்மிடம் ஒரு தொழில் கைவசம் இருக்க வேண்டும். நான்கு பேருக்கு வேலை கொடுப்பது என்பது நான்கு குடும்பத்திற்கு சாப்பாடு போடுவது என்று அர்த்தம்- நான்கு குடும்பங்களைத் தாங்கிப் பிடிக்கிறோம் என்று ஒரு சந்தோஷம். இந்தப் பெருமை எத்தனை பேருக்கு சாத்தியம்? என்னைப் பொறுத்தவரையில் வேலை கொடுப்பவன் என்பவன் வரம் கொடுப்பவன்.
நம்மிடம் ஒரு வேலை இருக்கும் வரை நமக்கு அதன் மதிப்பே தெரிவதில்லை. கையில் நான்கு டீ-ஷர்ட்களைத் தூக்கிக் கொண்டு விற்பனை செய்ய முயன்று கொண்டிருக்கும் முதியவரின் மீது ஏளனப்பார்வையைச் செலுத்துகிறோம். ‘அக்வாகார்ட் வாங்கிக்குறீங்களா மேடம்?’ என்று கேட்டு வருபவர்களின் முகத்தைக் கூட பார்க்காமல் கதவைச் சாத்திவிடுகிறோம். ‘இந்த டிக்ஷனரியைப் பாருங்க சார்’ என்று வேகும் வெயிலில் டை கட்டிக் கொண்டு வரும் மனிதரிடம் ‘இது வொர்த் இல்லை’ என்று தயவு தாட்சண்யமே இல்லாமல் சொல்லிவிடுகிறோம். இந்த வேலையெல்லாம் நமக்கு மிகச் சாதாரணம். ஆனால் அவர்களுக்கு வாழ்வாதாரம் இல்லையா? அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இரண்டாயிரம் ரூபாயாக இருக்கும். ஆனால் ஐந்நூறு ரூபாய்க்காவது விற்பனை செய்துவிட்டுச் செல்லவார்களா என்று சொல்ல முடியாது. நாள் முழுவதும் அழுத்தத்திலேயே வாழ்கிறவர்கள் அவர்கள். நாள் முழுவதும் சுற்றித் திரிந்துவிட்டு வந்து இறுக்கிக் கட்டப்பட்ட தங்களது ஷூவின் கயிறை அவிழ்க்கும் போது அவர்களது காலுக்கான அழுத்தம் மட்டும்தான் குறைகிறதே தவிர மண்டையில் ஏற்றப்பட்ட அழுத்தம் அப்படியேதான் இருக்கும். கொடுமை.
இருக்கும் வேலை வாய்ப்புகளை விடவும் பொறியாளர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிறது. கல்லூரியை விட்டு வெளியே வருபவர்கள் ஒரு வேலையைக் கண்டுபிடிப்பது என்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. இந்த நிலைமை இப்படியே போய்க் கொண்டிருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் இதில் சிறு உதவியை நம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. காய்ந்து கிடக்கும் இந்த பெரும்பூமியில் ஒரு சிறு செடியை நட்டுவைத்து தண்ணீர் ஊற்றுவதைப் போல இது ஒரு சின்னஞ்சிறு செயல்தான். ஆனால் அதையாவது செய்ய வேண்டும். வருடத்திற்கு பத்து மாணவர்களுக்காவது வேலை வாங்கிக் கொடுத்துவிட வேண்டும். பத்து முடியவில்லை என்றால் குறைந்தபட்சம் ஐந்து பேருக்காவது. அனுபவமிருப்பவன் எப்படியும் வேலை வாங்கிவிடுவான். ஆனால் புதிதாக படிப்பை முடித்து வெளியே வருபவர்களின் நிலைமைதான் கஷ்டம். அவர்களுக்கு உதவலாம். வெறும் Resume forward என்பதோடு நின்றுவிடாமல் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து இந்த ஐந்து பத்துப் பேரையாவது கரை சேர்த்துவிட வேண்டும். எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை. ஆனால் முயன்று பார்க்கலாம். இயன்றவர்கள் கை கொடுங்கள். இதை இந்த வருடத்தில் இருந்தே ஆரம்பித்துவிடலாம். உங்களுக்குத் தெரிந்த நிறுவனங்களில் Fresherக்கு ஏதாவது காலி இடம் இருந்தால் தெரியப்படுத்துங்கள். தகுதியான மாணவர்களை பிடித்துவிடலாம்.
26 எதிர் சப்தங்கள்:
உங்க கருத்து நலலலா இருக்கு ஆணால் fresher தன்னோட தகுதி திறமை என்ன என்பது தெரியாமலே எடுத்தவுடனே சம்பளம் எவ்வளவு எவ்வளவு நேரம் வேலை என கேட்கும் வேலை தேடுவோர் தான் அதிகம் அவர்களை வேலைக்கு சேர்த்துவிட்டு நாம்தான் கஷ்டப்படவேண்டும்,இது என்னுடைய தனிப்பட்ட கருதது
All the best....
But sometimes when we refer they don't like the first salary which would be less.. so be careful and advice them that first job is important but not the salary!
I'll give my supporting hand to your initiative Manikandan.
படிப்பை முடித்த முதல் இரண்டு வருடங்களுக்கு ஏதாவது ஒரு நிறுவனத்தில் (துக்கடா நிறுவனமாக இருந்தாலும் பரவாயில்லை) வேலை செய்யச் சொல்லுங்கள். சம்பளம் பற்றியோ வேலைப் பளு பற்றியோ கவலைப்படாமல் இருக்கட்டும். கூடவே அவரது பெற்றோரும் அவரிடமிருந்து எதுவும் எதிர்பார்க்கக்கூடாது. எஞ்சினீயரிங் நான்கு வருடமல்ல, ஆறு வருடங்கள் என்று நினைத்துக்கொள்ளட்டும். இரண்டு வருட அனுபவம் பெற்றுவிடுவதால் அடுத்து அவர் செல்லும் நிறுவனத்தில் மதிப்பும் இருக்கும், சம்பளமும் அதிகம் கொடுப்பார்கள்.
//இதை இந்த வருடத்தில் இருந்தே ஆரம்பித்துவிடலாம். உங்களுக்குத் தெரிந்த நிறுவனங்களில் Fresherக்கு ஏதாவது காலி இடம் இருந்தால் தெரியப்படுத்துங்கள். தகுதியான மாணவர்களை பிடித்துவிடலாம். //
நீங்க வேலை இருந்தா சொல்லுங்க நான் நூறு திறமையான மாணவர்களை அலேக்கா தூக்கி கொடுக்கிறேன் அவ்வ்!
என்னங்க இது உங்கள மட்டும் தான் இப்படி வேலையப்பத்தி கேட்கிறாப்போலவும் ,மத்தவங்களாம் வேலைய கையில வச்சிட்டு "ஆளுக்காக" காத்திருக்கா போலவும் சொல்லுறிங்க , எதாவது வேலையில இருந்தாலும் அடுத்த வேலைக்கு இப்பவே பார்க்கிறவங்க கிட்டேலாம் சொல்லி வச்சிடுறாங்க, நாலுப்பேர பார்த்தா மூனு பேரு எதாவது ஓப்பனிங்க் இருந்தா சொல்லு,நம்ம ஃபிரண்டுக்கு வேணும் என எப்பவும் விண்ணப்பங்களோடே அலைகிறார்கள்,இதே விண்ணப்ப்பத்த நாமலும் போட்டு வைப்பதுண்டு ,இப்படியே தான் வண்டி ஓடுது!
பதிவோடு முழுமையாக ஒத்துப்போகிறேன். நான் என் கம்பெனியில் இயக்குநர் லெவலில் இருந்தாலும் பெரியதாய் ஒரு ப்ரொஃபைலுக்கு அழுத்தம் கொடுத்துவிடமுடியாது என்பது தான் யதார்த்தம். காண்டாக்ட்ஸ் வழியாக ஃபுல்டைம் வேலை வாங்குவதெல்லாம் மலையேறிவிட்டது. ரெஃபரல் ப்ராசஸ் எல்லாம் இப்போது “நம்மாளு ஒருத்தன் இருக்கான்” என்பதை தாண்டி ரொம்பவும் ஃபார்மலைஸ் ஆகிவிட்டது. கம்பெனியின் careers pageஇல் தான் ரெஃபரல் கொடுக்கமுடிகிறது. அது கிணற்றில் போட்ட கல் தான்..நான் சொல்லும் நிலைமை பெரிய கம்பெனிகளிடம். சிறிய கம்பெனிகள் தெரியாது.
Kindly inform to those who require JOB.
jobmailservice@gmail.com
Providing JOB for educated, uneducated, experienced, fresher, male or female.
Only eligibility is they should be 18+ of age and of Indian national
// கையில் நான்கு டீ-ஷர்ட்களைத் தூக்கிக் கொண்டு விற்பனை செய்ய முயன்று கொண்டிருக்கும் முதியவரின் மீது ஏளனப்பார்வையைச் செலுத்துகிறோம். ‘அக்வாகார்ட் வாங்கிக்குறீங்களா மேடம்?’ என்று கேட்டு வருபவர்களின் முகத்தைக் கூட பார்க்காமல் கதவைச் சாத்திவிடுகிறோம். ‘இந்த டிக்ஷனரியைப் பாருங்க சார்’ என்று வேகும் வெயிலில் டை கட்டிக் கொண்டு வரும் மனிதரிடம் ‘இது வொர்த் இல்லை’ என்று தயவு தாட்சண்யமே இல்லாமல் சொல்லிவிடுகிறோம். //
இந்த 'றோம் றோம் றோம்'ங்குற வார்த்தைகளை படிக்கும்போது எரிச்சலா இருக்கு... நீங்க ஏன் அவற்றை 'றேன் றேன் றேன்' என்று எழுதியிருக்கக்கூடாது... அட்லீஸ்ட், "நம்மில் பலர்", "பெரும்பாலானோர்" போன்ற முற்சேர்க்கையை பயன்படுத்தலாம் இல்லையா ? அதெப்படி எல்லோருமே இப்படித்தான் என்று நீங்களாகவே தீர்மானித்துக் கொள்கிறீர்கள்...
Many ppl are ready to jump into any job , its not like they demand salary and work hours etc. These questions are only raised by freshers who already have started their work or the ones who doesnt require money to support their family . Let us ignore these people . When ever i see any opening for fresher in my co. and other friends co. i used to submit and forward their profile , will keep you in mind . if you have the resume ready , please share it across . I will submit as soon as opening comes
There is a business opportunity in your post.Read again your post,an enterprise is surprisingly hidden in your post.Find it.
//இந்த ஐந்து பத்துப் பேரையாவது கரை சேர்த்துவிட வேண்டும்//
எண்ணம் நல்லது தான். ஆனால் உங்க சித்தப்பா சொன்னது போல் நாலு பேருக்கு வேலை கொடுக்க முயன்றால் என்ன. முன்பே நான் ஒரு பின்னூட்டத்தில் சொன்னது போல் நம்மால் (றோம்,றோம் மன்னித்திகொள்ளவும்) இந்த வட்டத்தினை விட்டு வெளியே வர மனம் இடம் கொடுக்காது. ஆனால் வேலை தேடுபவர்களை வேலை கொடுப்பவர்களாக உருவாக்க முடியும். சோம்பேறிதனம் அதிகமாகிக் கொண்டிருக்கும் இன்றைய நாளில் அவர்களை (வேலை வேண்டுவோர்கள்) உடலுழைப்பு சார்ந்த தொழிலுக்கு மனத்தளவில் தயார் படுத்தினால் சித்தப்பா சொன்னதை செய்து காட்டலாம்.உங்களுக்கு இருக்கும் நல்ல தொடர்புகள் நிச்சயம் வழி காட்டும்.
ஆமா நீங்க பதவி உயர்வுக்கு முயற்சி செஞ்சீங்களே என்ன ஆச்சு?
√
Kindly inform to those who require JOB.
jobmailservice@gmail.com
Providing JOB for educated, uneducated, experienced, fresher, male or female.
Only eligibility is they should be 18+ of age and of Indian national//
jobmailservice@gmail.com -- ரெஸ்யூம் அனுப்பிவிட்டாரா??
I am facing the similar situation for many years now. You know what?. You have more friends working in so many companies that you dont even realize. Actually I did not. I wrote a small website which will simply list your friends name along side the company that he/she works. I couldn't believe that I have friends working in 313 different companies across the world. I used this website to refer one of my cousin's resume and within a week, I could arrange interviews from different companies. Please see if this would help in your efforts
http://apps.smileprem.com/where-do-my-friends-work/
Hi Mani,
There is a walk in interview in my company Paxterra solutions, koramangala for M.Tech graduates on May 17, 2014 Saturday.Please inform to the candidates to walk-in on Saturday @ 9:00 AM IST.
Eligibility: M.Tech 2013/2014 passed out with 65%.
வேலை கொடுக்கும் வர்க்கத்தையெல்லாம் முதலாளி பணக்காரன்னு ஒழிச்சிட்டு, வெட்டி சோஷியலிஸம் பேசிக்கிட்டு, இப்ப நான் நாலு பேருக்கு வேலை வாங்கித் தரப் போறேன்னா அது எப்படி நடக்கும். வெளிநாட்டுக்காரனைத்தான் கேக்கணும். கேக்குறோம்.
-அசகன்.
It is difficult; but people with motivation and perseverance get through this phase successfully. The kids who are in college should focus on learning, understand how the market place is working rather than going after the movie heroes/heroines and follow all the IPL matches. Most folks just score ton of marks but dont know how to explain they can be a value add to an organization. None of these things are mountain tasks, they just need to show interest and learn. When they did their part, others can certainly extend a helping hand. But please do not help people who lack motivation and who did not do their part.
There are lot of start ups hire freshers in various forums...i had a group called thirstit to share only jobs for the past 10 yrs...now am out of IT...but search in various forums will workout rather than job portal..Just my humble tips
வேலை வாங்கிக் கொடுப்பது ,வேலை கொடுப்பது ஒன்றும் பிரமாதம் இல்லீங்க மணி ஆனால் அதன் பின்னான பொறுப்புகள் நாம் அறியாமல் நம்மீது திணிக்கப்படும் .
நான் ஒரு மின்னணு சாதனங்கள் ஒருங்கிணைப்பு சிறு தொழில் நடத்தி வருகிறேன் ,8_வருடங்களுக்கு முன் இருநபர் கூடமாக தொடங்கப்பட்டது அப்பொழுதுதான் ஓஎம்ஆர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஐடி பூங்காக்களுக்காக மண் அள்ளிக் கொண்டிருந்தார்கள் .
வண்ணவேறுபாடு தெரிந்தால் போதும் படிப்பு தேவையில்லை துடிப்பாயிருக்க வேண்டிய அவசியம் எங்கள் பகுதியில் கொட்டிவாக்கம் நேருநகர் தொழிற்பேட்டை மிகப்பிரபலமாது ,ஆட்கள் தேவை பலகை தொங்காத நிறுவனங்களே இருக்காது ஆரம்ப சம்பளம் 2500_ஆயிரம் ரூபாய் மக்கள் வந்துகொண்டும் ,சென்று கொண்டும் இருப்பார் .அந்த பகுதிகளிலேயே மாறிக்கொண்டே இருப்பார்கள்
என்னுடைய கூடமும் 5_வருடங்களில் 15_நபர்கூடமாக மாற்றம் கண்டது அனைவரும் பெண்கள் 9_ஆயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார்கள் திறமைக்கேற்ப .
எனக்கு வேலை தருபவர்கள் பரிசோதனைகளை நேரில் காணவருவார்கள் ,அப்படி வந்தவர்கள் நீங்களே அனைத்து வேலைகளையும் திறம்படச் செய்யும்போது உங்களுக்கு எதுக்கு ஒரு முதலாளி ,நாங்கள் தேவையான பொருட்களை தந்து விடுகிறோம் நீங்களே ஏன் தனியாக இதை செய்யக் கூடாதென அவர்களை வெளியே அழைத்துச் சென்று விட்டனர் .
அந்த 15_பேரில் ஒருவர் மட்டுமே மீதம் இருந்தார் ,நானும் அந்த இடத்திலிருந்து மாறி இப்பொழுது தரமணியில் 5_நபர் நிறுவனமாக வளர்ந்து விட்டேன் இந்த இரண்டு வருடங்களில் அவர்கள் 14_பேரும் தொடர்ந்து நடத்த முடியாமல் ஆறு மாதங்களுக்கு முன் இந்த தொழிலில் இருந்து விலகி இப்பொழுது சிடிஎஸ் _ல் தரை துடைக்கும் வேலைக்கு சென்று விட்டார்கள் ,
அவர்களை பிரித்துச்சென்ற நபர்கள் மீண்டும் எனக்கு ஃபோன் செய்து கொண்டிருக்கிறார்கள் ___ஆறு ___மாதமாக
Well said Vino...வா. மா. வாசிக்கிறீங்களா
இதையும் கொஞ்சம் பாருங்கள் http://www.letsintern.com/
இன்றைக்கு பி.இ படித்துமுடித்து
நல்ல பதிவு
மணி, உங்கள் கட்டுரைக்கு எனது விரிவான பதில்... ‘பொது’வான கருத்துதான்... நீங்கள் யாருக்கு வேலை வாங்கித்தர முயல்கிறீர்களோ அவரைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.. http://www.jeyamohan.in/?p=55652
நன்றி சாணக்கியன். அந்தக் கட்டுரையை வாசித்தேன். மிக விரிவாகவும் தெளிவாகவும் எழுதியிருக்கிறீர்கள். மனப்பூர்வமான பாராட்டுகள்.
இன்றைக்கு நேரடி விற்பனைத்துறை மிக அதிகமான வருமானத்தை ஈட்டித்தருகிறது.ஆனால் அதைப்பற்றி மோசமான கருத்துக்கள் சில தவறானவர்களால் பரவியுள்ளது.இதில் பல நல்ல சிறந்த நிறுவனங்களை தேரந்தெடுத்து கடினமாக ஊழைத்தால் மிகக்குறுகிய காலத்தில் பெரிய வருமாணம் ஈட்டமுடியும். எதிர்கலத்தில் பலலட்சம் வேலைவாய்ப்புகளை இந்தத்துறை உருவாக்கும்.பல மேலைநாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் இந்ததுறை முக்கிய பங்குவகிக்கிறது.
Post a Comment