எங்கள் ஏரியாவில் ஒரு குடிசைப் பகுதி இருக்கிறது. தோராயமாக நூறு குடிசைகள் இருக்கக் கூடும். பெரும்பாலும் தமிழர்கள்தான். வெகு காலமாகவே இங்குதான் இருக்கிறார்களாம்- இருபது ஆண்டுகள் ஆகியிருக்கக் கூடும். ஆண்டுகள் ஓடியிருந்தாலும் வளர்ச்சி என்று எதுவும் இல்லை. பன்றிகள் மேய்ந்து கொண்டிருக்கும், வாசலிலேயே சாக்கடை ஓடிக் கொண்டிருக்கும், குழந்தைகள் அந்தச் சாக்கடை நீரிலேயே விளையாடிக் கொண்டிருப்பார்கள். கவுன்சிலர் ஆனாலும் சரி, எம்.எல்.ஏ ஆனாலும் சரி வெறும் வாக்குகளுக்காக மட்டுமே இவர்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
பெங்களூரின் முகங்கள் என்று யாராவது டாக்குமெண்டரி எடுத்தால் இந்த சேரியைக் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். நண்பன் ஒருவன் அமெரிக்காவில் இருக்கிறான். தமிழ் சினிமா விஐபி ஒருவரின் மருமகன். அடுத்த மாதம் இந்தியா வந்தவுடன் ஒரு குறும்படம் எடுக்க வேண்டும் என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தான். ஐடியில்தான் இருக்கிறான் என்றாலும் குறும்படம், நிழற்படம் என்று சுற்றுபவன். அவனது மின்னஞ்சலைப் பார்த்தவுடன் இந்தச் சேரிதான் ஞாபகம் வந்தது. குஜராத்தின் சபர்மதி நதி என்று மோடி ஒரு படத்தைக் காட்டினால் உண்மையான படம் என்று எதிர்கட்சிக்காரர்கள் இன்னொரு படத்தைக் காட்டுகிறார்கள். அதே போலத்தான் பெங்களூர் என்றால் இஸ்கான், எலெக்ட்ரானிக் சிட்டியோடு நின்றுவிடுகிறார்கள். அதைத் தாண்டி இன்னொரு முகம் இருக்கிறது. முரட்டுத்தனமான, கச்சடாவான ஒரு முகம். வறுமையில் உழலும், வாழ்க்கையின் விளிம்பில் உழலுபவர்களின் முகம். இவர்கள்தான் காய்கறி விற்கிறார்கள். குப்பை பொறுக்குகிறார்கள். பழைய இரும்பைச் சேகரிக்கிறார்கள், வீட்டு வேலை செய்கிறார்கள். இப்படியான இருண்ட முகம் ஒவ்வொரு ஊருக்கும் உண்டு. அந்த இருண்ட முகம்தான் சுவாரசியமே. அது இருக்கட்டும்.
Glenn என்ற ப்ரெஞ்ச் நண்பர் இரண்டு வாரப் பயணமாக இந்தியாவுக்கு வந்திருக்கிறார். எங்கள் நிறுவனத்தில்தான் வேலை செய்கிறார். சென்ற வாரம் சனி, ஞாயிறுகளில் மைசூர், பன்னேர்கட்டா விலங்கியல் பூங்கா என்று சுற்றிவிட்டு இந்தவாரம் என்னோடு சேர்ந்து சுற்றுவதாகச் சொல்லியிருந்தார். பெங்களூரின் இன்னொரு முகத்தைப் பார்க்கலாமா என்று கேட்டிருந்தேன். அவருக்கு இரட்டைச் சம்மதம். அந்தக் குடிசைப் பகுதியைச் பவானி என்றொரு பெண்ணிடம் சொல்லி வைத்திருந்தேன். அவள் திகில் அடைந்திருந்தாள். பெரிய விஷயம் இல்லை. அங்கு ஒரு அரை மணி நேரம் இருந்து அந்தக் குழந்தைகளோடு படம் எடுத்துக் கொள்ள விரும்புகிறார் என்று சொல்லியிருந்தேன். அந்தப் பெண் சில வீடுகளில் வேலைகளைச் செய்கிறாள். கணவன் கைவிட்டுவிட்டான். இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு கஷ்ட ஜீவனம் தான். அவளது அப்பா ஆட்டோ ஓட்டுகிறார். பவானி குடும்பத்துக்கு அவர்தான் இரவில் பாதுகாவல். ‘அதுக்கென்னண்ணா ஜமாய்ச்சுடலாம்’ என்று சொல்லியிருந்தாள்.
க்ளென் புத்தகங்கள் வாசிக்கக் கூடிய ஆள். ப்ரெஞ்ச் இலக்கியங்கள் பற்றியெல்லாம் அவ்வப்போது பேசுவார். இதையெல்லாம் சாரு நிவேதிதாவிடம் பேசினால் அர்த்தம் இருக்கிறது. என்னிடம் பேசுகிறாரே என்று நினைத்துக் கொள்வேன். க்ளென்தான் சென்ற வாரத்தில் ஒரு நாள் vernacular இலக்கியம் பற்றி ஆரம்பித்தார். வட்டார இலக்கியம். பேசிக் கொண்டிருந்தவர் திடீரென்று ‘தமிழில் கம்பராமாயணம்தான் வட்டார இலக்கியமா?’ என்றார். அதிர்ச்சியாகத்தானே இருக்கும்? இதுவரைக்கும் கி.ராஜநாராயணனில் ஆரம்பித்து மு.ஹரிகிருஷ்ணன் வரையிலான ஆட்கள் எழுதுவதுதான் வட்டார இலக்கியம் என்று நினைத்திருந்தேன். கம்பர் எதை வட்டார வழக்கில் எழுதினார்?
க்ளென்னுக்கு என்ன தெரியும்? விக்கிப்பீடியாவில் அப்படித்தான் கிளப்பிவிட்டிருக்கிறார்கள். இந்தியாவில் பல்லாண்டுகாலமாக சமஸ்கிருதத்தில்தான் பக்தி இலக்கியங்கள் எழுதப்பட்டு வந்ததாகவும் பன்னிரெண்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழில் பக்தி இலக்கியங்கள் உருவாகியதாகவும், அப்படித்தான் கம்பராமாயணம் எழுதப்பட்டதாகவும் எழுதி வைத்திருக்கிறார்கள். அதை ப்ரெஞ்ச்காரர் நம்பிவிட்டார். விக்கிப்பீடியாவில் இயங்கக் கூடிய நல்ல இதயங்கள் யாராவது இருந்தால் ‘Vernacular Literature' என்ற பக்கத்தில் இதைக் கொஞ்சம் மாற்றிவிடவும். இன்னும் என்னவெல்லாம் எழுதி வைத்திருக்கிறார்களோ.
நேற்று, சொன்ன நேரத்திற்குச் சரியாக க்ளென் வந்துவிட்டார். அரை மணி நேரத்தில் சேரிக்குச் சென்றோம். வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. பவானி வீட்டில் இல்லை. குழந்தைகளை வீட்டுக்குள் விட்டு கதவை வெளியே பூட்டிவிட்டுச் சென்றிருந்தாள். குழந்தைகள்தான் ஜன்னல் வழியாக பதில் சொன்னார்கள். பவானி மருத்துவமனைக்குச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள். ‘என்னாச்சு?’ என்ற போது பதில் சொல்லத் தெரியவில்லை. க்ளென்னுக்கு அது எமாற்றம். எனக்கும்தான். விசாரிப்பதற்காக பக்கத்துவீடுகளுக்குச் சென்றேன். அதற்குள் வீட்டுச்சிறைக்குள் இருந்த குழந்தைகளை நான்கைந்து படங்கள் எடுத்துக் கொண்டார். பக்கத்து வீடுகளிலும் யாருமே இல்லை. கிட்டத்தட்ட சேரிப்பகுதி வெறிச்சோடிக் கிடந்தது. பவானியிடம் செல்போன் இருக்கிறது. இந்தக் காலத்தில் யாரிடம்தான் இல்லை?
பதினைந்து நிமிடங்களில் வந்துவிடுவதாகச் சொன்னாள். அதுவரைக்கும் அந்த ஓரிரண்டு தெருக்களில் நடந்து கொண்டிருந்தோம். க்ளென்னுக்கு அது ஆச்சரியம்தான். பெங்களூரில் இப்படியொரு இடத்தை எதிர்பார்க்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார். சொன்னபடியே பவானி வந்து சேர்ந்தாள். பெரிய விவகாரம்தான். பவானியின் பக்கத்து வீட்டுக்காரன் ஒருவன் தீக்குளித்துக் கொண்டான். அதற்காகத்தான் மொத்த சேரியும் காலியாகக் கிடக்கிறது. மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்கள். பவானி சாதாரணமாகத்தான் சொன்னாள்.
குடும்பச் சண்டையின் காரணமாக்த்தான் தீக்குளித்திருக்கிறான். கணவன் மனைவிக்கு இடையில் முந்தின நாள் இரவில் சண்டை வந்திருக்கிறது. மனைவி அவனை சந்தேகப்படுவாளாம். நேற்றும் அதனால்தான் சண்டை . அவனுக்கு தங்கை முறை ஆகக் கூடிய பெண்ணிடமிருந்து ஃபோன் வந்திருக்கிறது. “அவள் எதுக்கு ஃபோன் பண்ணுறா?” என்று சண்டையை ஆரம்பித்திருக்கிறாள். இது பெரிய பிரச்சினையாக மாறி நள்ளிரவு வரைக்கும் இரண்டு பேரும் கத்தியிருக்கிறார்கள். அதற்கு மேலாக அடித்துக் கொண்டார்களாம். அடிதடி சீரியஸாகிக் கொண்டிருக்க பக்ககத்துவீட்டுக்காரர்கள் தலையிட்டு பிரித்து வைத்திருக்கிறார்கள்.
“அவன் அந்த மாதிரி இல்லண்ணா” என்று பவானி அவனுக்கு சர்டிபிகேட் கொடுத்தாள்.
சந்தேகத்தை மட்டும் நீக்கிவிட்டால் குடும்பத்தில் பல பிரச்சினைகளைத் தீர்த்துவிடலாம்தான். ஆனால் அது ஒன்றும் அத்தனை சுலபமான காரியம் இல்லை. அதீதமான அன்பினால்தான் சந்தேகப்பட ஆரம்பிக்கிறோம். ஆனால் அதே சந்தேகம்தான் துளித்துளியாக பெருகி அன்பைச் சிதைத்து வெறுப்பை பெருக்குகிறது.
சண்டைக்குப் பிறகாக இரவில் தூங்கினானா என்று தெரியவில்லை. சனிக்கிழமை அதிகாலையில் வீட்டில் இருந்த கெரசினைத் தூக்கிக் கொண்டு சென்றவன் ஏரிக்கரையோரமாக தன்னைத்தானே கொளுத்திக் கொண்டான். அந்த நேரத்திலும் ஓரிருவர் பார்த்து சாக்குப்பையைப் மேல போட்டு புரட்டியிருக்கிறார்கள். உயிர் போகவில்லை. ஆனால் அவனுக்கும் தீக்காயம். புரட்டியவர்களுக்கும் காயம் ஆகியிருக்கிறது. புரட்டியவர்களுக்கு பெரிய பாதிப்பில்லையாம். ஆனால் இவன் பிழைப்பது கஷ்டம்தான் என்றாள்.
க்ளென்னுக்கு இதைக் கேட்கக் கேட்க பெரும் அதிர்ச்சி. அந்த இடத்தை விட்டு கிளம்பிவிடலாம் என்று சொல்லத் தொடங்கிவிட்டார். இதையெல்லாம் தன்னால் கிரகித்துக் கொள்ள முடியவில்லை என்றார். பவானியின் சாதாரண பாவனையும் கூட அவரை அதிர்ச்சியடையச் செய்திருக்கக் கூடும். மிக இயல்பாக இருந்தாள். கிளம்புவதாகச் சொல்லிவிட்டு பவானியின் குழந்தைகளுக்கு வாங்கி வந்திருந்த தின்பண்டங்களைக் கொடுத்தார். ‘இருண்ணா அவன் குழந்தைக அந்த வீட்டுல இருக்கு தூக்கிட்டு வர்றேன்’ என்றாள். அந்தக் குழந்தைகளையும் வீட்டுக்குள் பூட்டிவிட்டுத்தான் மருத்துவமனைக்குச் சென்றிருந்தார்கள். ஒரு குழந்தையை எடுத்து வந்தாள். நான்கு வயதுதான் இருக்கும். பக்கத்திலேயே நின்று கொண்டிருந்த அவனது அக்காவுக்கு ஆறு வயது இருக்கக் கூடும். அவர்களுக்கு தனது தந்தையைப் பற்றிய முழு விவரமும் தெரியவில்லை. ஆனாலும் பெரிய குழந்தை அழுது கொண்டிருந்தது. தின்பண்டங்களை அவர்களுக்கும் கொடுத்தார். பெரிய குழந்தை வாங்கிக் கொள்ளவில்லை. சின்னவன் வாங்கிக் கொண்டான். ‘கிளம்பலாம்’ என்றார். ‘அடுத்து?’ என்றேன். தலைவலிப்பதாகவும், நேராக அறைக்குச் செல்கிறேன் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். அவருக்கு மிகப்பெரிய சலனத்தை உருவாக்கிவிட்டதாகத் தோன்றியது. சேரியை விட்டு கிளம்பினோம். கிளம்புவதற்கு முன்பாக அந்தக் குழந்தைகளை நிழற்படம் எடுத்துக் கொள்வார் என்று நினைத்தேன். ம்ஹூம். அவர் எடுத்துக் கொள்ளவில்லை. வெளியில் மேய்ந்து கொண்டிருந்த பன்றிகளைப் பார்த்தபடியே நடந்தார். அதன் பிறகு நாங்கள் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை.
8 எதிர் சப்தங்கள்:
சமூக அக்கரை கொண்ட பகிர்வுக்கு நன்றி
I think he has not seen Slumdog Millionaire... else he would not have got this much shock..
அதீதமான அன்பினால்தான் சந்தேகப்பட ஆரம்பிக்கிறோம். ஆனால் அதே சந்தேகம்தான் துளித்துளியாக பெருகி அன்பைச் சிதைத்து வெறுப்பை பெருக்குகிறது -- very correct...
”சந்தேகத்தை மட்டும் நீக்கிவிட்டால் குடும்பத்தில் பல பிரச்சினைகளைத் தீர்த்துவிடலாம்தான். ஆனால் அது ஒன்றும் அத்தனை சுலபமான காரியம் இல்லை. அதீதமான அன்பினால்தான் சந்தேகப்பட ஆரம்பிக்கிறோம். ஆனால் அதே சந்தேகம்தான் துளித்துளியாக பெருகி அன்பைச் சிதைத்து வெறுப்பை பெருக்குகிறது.”
அற்புதமான பகிர்வின் தெளிவு .
///அதீதமான அன்பினால்தான் சந்தேகப்பட ஆரம்பிக்கிறோம். ஆனால் அதே சந்தேகம்தான் துளித்துளியாக பெருகி அன்பைச் சிதைத்து வெறுப்பை பெருக்குகிறது/// சந்தேகம் எல்லோருக்கும் ஏதோ ஒரு தருணத்தில் வருவதும் சிலருக்கு எப்போதும் சில சந்தேகங்கள் இருப்பது சகஜம் என்றாலும் , தன்னை மாய்த்துக்கொள்வதும் தன துணியை மாய்த்துக் கொல்வதும் ஒரு வகை மன நோய் (delusional jealousy )என்பதை பெரும் பாலோர் உணர்ந்து கொள்வதில்லை நம் தினத்தந்தி கள்ள காதலர் கொலை செய்திகளில் பாதியாவது பாயை பிராண்டும் வகையை சார்ந்தது தான்
எல்லாவற்றுக்கும் முதல் அந்த சேரி மக்களுக்கு சொல்லவேண்டும்...பெரியவர்கள் வெளியில் செல்லும்போது வீட்டில் சிறு பிள்ளைகளை வைத்து பூட்டி விட்டு செல்ல வேண்டாம் என்று.....நெருப்பு பற்றினால்? அல்லது சிறு பிள்ளைகள் விளையாட்டால் அடிகிடிபட்டால்...அல்லது எங்காவது மாட்டினால்...மிகவும் மனவருத்தமான முடிவே கிடைக்கு,..எப்போதும் யாரவது பெரியவர்கள் உடனிருக்குமாறு செய்ய வேண்டும்....
தீக்காயத்தை விட சந்தேகம் பொல்லாததுப் போல!
//பெங்களூரின் இன்னொரு முகத்தைப் பார்க்கலாமா என்று கேட்டிருந்தேன்.
நீங்கள் அந்த ப்ரெஞ்ச் நண்பரை K.R மார்க்கெட்-கு சென்று சுற்றி காட்டி இருக்கலாம் (அதுவும் அதிகாலை 5:30 - 9 மணி வரை) நீங்கள் இதற்கு முன் கண்டிப்பா அங்கு சென்று இருப்பீர்கள் என எண்ணுகிறேன்.
IMO, if people think Bengaluru is all about malls, offices & parks, go to K.R Market/Nagarthpet/Chickpet/Sultanpet. You'll see the other side of Bengaluru.
mani sir...
அற்புதமான பகிர்வின் தெளிவு .
Post a Comment