அரசியல் அரங்கில் படுவேகமாக மாறுதல்கள் நடக்கின்றன. மத்தியில் அமையவிருக்கும் மோடியின் அரசை நிபந்தனையுடன் ஆதரிக்கத் தயார் என்று ஒடிசாவில் நவீன் பட்நாயக்கின் பீஜூ ஜனதா தளமானது அறிவித்திருக்கிறது. ஞானோதயம். ஒன்றரை மாதங்களுக்கு முன்பு வரைக்கும் கூட இந்த நரேந்திர மோடி பிரதமர் பதவிக்குத் தகுதியில்லாதவர் என்று கர்ஜித்துக் கொண்டிருந்த நவீனுக்கு இப்பொழுது புத்தி மாறிவிட்டது. சரி. என்ன நிபந்தனையாக இருக்கும்? வேறு என்ன? நல்ல துறைகளாக எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்பார்கள். அவ்வளவுதான்.
ஒடிசாவில் இப்படியென்றால் அமரிக்க அதிபர் ஒபாமா ‘புதிய அரசுடன் நெருக்கமாக அமெரிக்கா செயல்படும்’ என்று நேற்று அறிவித்திருக்கிறார். அப்படியானால் இதுவரை மோடிக்கு விசா தராமல் இழுத்தடித்ததற்கு என்ன பதிலைச் சொல்லப் போகிறார்கள்? அதற்கும் பதில் கைவசம் வைத்திருந்து சொல்லிவிட்டார்கள். ஒரு நாட்டின் தலைவர் என்ற முறையில் மோடிக்கு A1 விசா கிடைத்துவிடும்.
ஒடிசாவிலும் அமெரிக்காவிலும் மட்டும் இல்லை- தமிழகத்திலும் இந்தக் கூத்து நடக்கிறது. அம்மையார் கோடநாட்டில் இருக்கும் வரை அமைதியாக இருந்த அதிமுக வட்டாரம், அம்மா மலை இறங்கியதும் ‘மோடியும் அம்மாவும் நல்ல நண்பர்கள். அவர்கள் அரசியல் ரீதியாக வேறாக இருப்பினும் மோடி பிரதமரானால் அவரோடு இணக்கமான உறவையே அம்மா விரும்புவார்’ என்று துண்டை விரித்திருக்கிறது. இந்த அறிவிப்பில் இருக்கும் தொனிதான் முக்கியம். இதுவே மோடிக்கு இருபது முப்பது ஸீட்டுக்கள் குறைகின்றன என்ற நிலைமை வந்து அம்மாவிடம் முப்பது ஸீட்டுக்கள் இருக்கும் என்கிற ரீதியில் கருத்துக் கணிப்புகள் வெளியாகியிருந்தால் இந்தக் குரலின் தொனியே மாறியிருக்கக் கூடும். ராஜ்நாத் சிங்கும், நிதின் கட்காரியும், அருண் ஜேட்லியும் தேவைப்பட்டால் மோடியும் கூட போயஸ் கார்டனின் வேதா நிலையத்தில் கவாத்து அடித்திருக்க வேண்டும்.
அப்படியானால் மோடிக்கு மெஜாரிட்டி கிடைத்துவிடுமா?
மெஜாரிட்டி கிடைத்துவிடும் என்று முழுமையாக நம்பமுடியவில்லை என்றாலும் இத்தகைய கணிப்புகளைச் செய்வதில் பிறரைவிடவும் அரசியல்வாதிகள் திறமைசாலிகளாக இருப்பார்கள் என்று நம்பலாம். இந்நேரம் கலைஞரும், ஜெயலலிதாவும், மோடியும் தேர்தல் முடிவுகள் என்னவாக இருக்கும் என்பதை கிட்டத்தட்ட கணித்திருப்பார்கள். இந்தக் கணிப்பின் அடிப்படையிலேயே நவீன் பட்நாயக், ஜெயலலிதா ஆகியோர்களின் குரல்களையும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி, எங்கப்பன்தான் பிரதமர் என்று துள்ளிக் கொண்டிருந்த அகிலேஷ் யாதவ் ஆகியோரின் அமைதியையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒருவேளை மே 16 அன்று இந்தக் கணிப்புகள் உண்மையாகி விடும்பட்சத்தில் இன்னமும் விக்கெட்கள் விழுவதைக் காணலாம். இப்பொழுதே சரத்பவாரின் தேசியவாதக் காங்கிரஸ் எட்டிக் குதிக்கத் தயாராகிக் கொண்டிருக்கும் போலிருக்கிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இன்னும் யாரெல்லாம் கவிழ்வார்கள் என்று சொல்லமுடியாது. இந்த அரசியல்வாதிகளுக்கு எப்பொழுதும் பதவியும் அதிகாரமும் வேண்டும். எவனோ பிரதமராக இருந்துவிட்டுப் போகட்டும் எங்களுக்கு சில துறைகளை ஒதுக்கிவிடுங்கள் என்பதுதான் இவர்களின் அடிப்படையான கோரிக்கையாக இருக்கும். சரத்பவார் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறைத் தேடினால் அவர்கள் பதவியில்லாமல் இருந்த காலத்தை விடவும் பதவியில் இருந்த காலம்தான் அதிகமாக இருக்கும்- மூச்சுவிடாமல் கூட இருந்துவிடுவார்கள் அதிகாரம் இல்லாமல் இருக்க முடியாது.
இன்னும் சிலருக்கு வேறு சில தர்மசங்கடங்கள்- வழக்குகளை முடிக்கவும், புதிய வழக்குகள் விழாமல் தடுக்கவும், ஏற்கனவே சிக்கிக் கொண்டு தள்ளாடும் சிக்கல்களில் இருந்து விடுபடவும், சிபிஐ விசாரணைகளைத் தவிர்க்கவும் என இன்னும் ஏதேதோ காரணங்களுக்காக மத்திய அரசுக்கு நிபந்தனையுடனோ, நிபந்தனை இல்லாமலோ, வெளியில் இருந்தோ, உள்ளுக்குளிருந்தோ, ஆடையோடோ அல்லது அம்மணமாகவோ ஆதரவு தர வேண்டிய சூழல். இனி ‘நானும் அவரும் மூன்றாவது படிக்கும் போதிருந்தே பழக்கம்’ என்கிற ரீதியில் எல்லாம் அறிக்கைகள் வரும். நாம் உணர்ச்சி வசப்படத் தேவையில்லை. தொலைந்து போகட்டும் என்று விட்டுவிடலாம்.
இந்த உலகம் அப்படித்தான். புதியவன் ஒருவன் வென்றுவிடக் கூடாது என்பதற்காக முடிந்தவரையில் தம் கட்டுவார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் அவனைக் கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை என்பதும் இனி அவன்தான் ஜெயிக்கப் போகிறான் என்பதும் தெரிந்துவிட்டால் அப்படியே சரண்டர் ஆகிவிடுவார்கள்.
2001 ஆம் ஆண்டில் எத்தனை பேருக்கு மோடியைத் தெரிந்திருக்கும்? அப்பொழுது மோடி ஒரு மாநிலத்தின் முதல்வராகக் கூட இல்லை. இடையில் பன்னிரெண்டு வருடங்கள்தான். சர சரவென்று ஏறி பிரதமர் நாற்காலிக்கு வெகு அருகில் நின்று கொண்டிருக்கிறார். மோடி என்ற தனிமனிதரின் மீதான வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் இது ஒன்றும் சாதாரணக் காரியம் இல்லை என்று ஏற்றுக் கொள்ள முடியும்.
ராகுல் காந்தி பிறந்த போதே இந்த தேசம் முழுமைக்கும் அவர் அறிமுகமாகிவிட்டார். ஜெயலலிதாவை, அவர் முதன்முறையாக முதல்வர் ஆன 1991 ஆம் ஆண்டிலிருந்தே இந்த நாட்டுக்குத் தெரியும். முலாயம் சிங் யாதவை இருபதாண்டுகளாகவேனும் தெரியும். அத்வானி, சுஷ்மா சுவராஜ் என்று ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் மோடிக்கு அருகில் காத்திருக்கும் நாற்காலிதான் கனவு. ஆனால் அத்தனை பேராலும் அடைய முடியாத நாற்காலி அது. மன்மோகன் சிங்குக்கும், தேவகெளடாவுக்கும் அமைந்தது போன்ற அதிர்ஷ்டம் எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை. சரியான திட்டமிடல், கடுமையான உழைப்பு, வெகு நேர்த்தியான பிரச்சாரம் என்ற ஏகப்பட்ட விஷயங்களை மோடி அண்ட் கோ எப்பொழுதோ தொடங்கிவிட்டது.
மோடிக்காக ஒரு பெரிய டீம் வேலை செய்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே மிகத் தெளிவாகத் திட்டமிட்டிருக்கிறார்கள். மோடி செய்த சாதனைகளைப் பற்றி தென்னாட்டுச் செய்தித்தாள்களில் வரும்படி பார்த்துக் கொண்டார்கள். மோடி நல்ல நிர்வாகி என்று அஸ்ஸாம் பத்திரிக்கைகளில் கட்டுரைகள் வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்கள். ஆந்திராவின் கிராமத்தில் மோடி என்ற பெயரைக் கேள்விப்படும்படியான முஸ்தீபுகளில் ஈடுபட்டார்கள். இது பக்காவான Strategy. சிறந்த திட்டமிடலும் அதைச் செயல்படுத்துவதற்கான வலுவும் திறமையும் இருந்தால் நம்மை யாராலும் தடுக்க முடியாது என்பதுதான் நிதர்சனம்.
மோடி ஏதோ வித்தை செய்து கொண்டிருக்கிறார் என்று சோனியாவும், ராகுலும் விழித்துக் கொண்ட போது தலைக்கு மேலாக ஒரு ஜான் வெள்ளம் போய்க் கொண்டிருந்தது. யு.ஆர்.அனந்தமூர்த்தியும் அமார்த்தியாசென்னும் அவர்களோடு நம் ஊர் ஃபேஸ்புக் புரட்சியாளர்களும் மோடியைத் தடுத்துவிடுவது என்று ஸ்டேட்டஸ்கள் போடத் துவங்குகையில் மோடி ஹெலிக்காப்டரில் பறக்கத் துவங்கியிருந்தார். அந்தப் புழுதியில் இவர்கள் கண்களைத் துடைத்து முடிக்கும் போது தேர்தல் தொடங்கியிருந்தது. மோடி மீது இருக்கும் கறையை வைத்து அவரை வெகு சுலபமாக அமுக்கியிருக்க முடியும். ஆனால் இவர்கள் தயாராகத் துவங்குகையில் மோடியின் பெயர் வள்ளியாம்பாளையத்து நல்லசாமி வரைக்கும் பாப்புலர் ஆகிவிட்டது.
மோடியின் மீதான விமர்சனங்களை வைக்க இவர்களுக்கு எவ்வளவோ காரணங்கள் இருந்தன. ஆனால் இவர்கள் அதையெல்லாம் விட்டுவிட்டு மதத்தைத் தூக்கிக் கொண்டார்கள். Polarization என்பதைத் இந்தத் தேர்தலில் மிகத் தெளிவாக பார்க்க முடிந்தது. அதைத்தான் இசுலாமியர்களை வாக்கு வங்கிகளாக பயன்படுத்திக் கொள்ளும் கட்சிகள் எதிர்பார்த்தன. மோடியைத் தடுக்க முடியவில்லை என்றாலும் சாமானிய இசுலாமியனுக்கு ஒரு நடுக்கத்தை உருவாக்கியதுதான் இவர்கள் கண்ட பலன்.
ஒன்று புரியவில்லை. இவர்கள் கிளப்பிய அளவுக்கு இசுலாமியர்கள் மீதான வன்முறை என்பது சாத்தியமா? சாலையில் செல்லும் இசுலாமியனைக் கூட வெட்டிச் சாய்பார்கள் என்கிற ரீதியில் பேசத் துவங்கியிருந்தார்கள். அது அத்தனை சுலபமான காரியமா என்ன? மத்திய அரசு ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுக்கும் போது தமிழக அரசும், மேற்கு வங்க அரசும், கர்நாடக அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமா என்ன? கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அமைதியாக இருப்பார்கள்? அவ்வளவு ஏன் மக்கள் வேடிக்கை பார்ப்பார்களா? பாகிஸ்தானின் மக்கட்தொகையைக் காட்டிலும் இந்தியாவில் முஸ்லீம்களின் எண்ணிக்கை அதிகம் என்கிறார்கள். இவ்வளவு பெரிய சமுதாயத்தின் சுண்டுவிரலைக் கூட அசைக்க முடியாது என்று உறுதியாக நம்பலாம். மோடி தலைமையிலான அரசு அமைந்தால் மதக்கலவரம் வெடிக்கும் என்பதெல்லாம் வாக்கு அரசியலுக்கான வெட்டி பிரச்சாரமாக மட்டுமே இருக்க வேண்டும் என விரும்புகிறேன். தேர்தல் முடிந்துவிட்டது. இனி அந்தப் பிரச்சாரங்களை மறந்துவிடலாம். நல்லதே நடக்கும் என நம்புவோம்.
மைனாரிட்டிகளின் மீதாக நேரடித் தாக்குதல்களை நடத்தவில்லை என்றாலும் இந்துத்துவ அரசு பெரும்பலத்துடன் அமைந்தால் சில நோண்டு வேலைகளைச் செய்ய சாத்தியமிருக்கிறது. பாடத்திட்டங்களில் காவியைப் புகுத்துவது, கிறித்துவ மிஷனரிகளுக்கான பண வரவு நாட்டிற்குள் வருவதைக் கட்டுப்படுத்துவது, இசுலாமியர்கள் ஈடுபடக் கூடிய சில குறிப்பிட்ட தொழில்களை நசுக்க முயற்சிப்பது போன்ற வேலைகளை கமுக்கமாக செய்ய வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதுவும் கூட ஊடகங்கள் பெருகியிருக்கும் இந்தக் காலத்தில் அவ்வளவு எளிதில்லை என்றே தோன்றுகிறது. மூச்சுவிட்டால் கூட மொத்த ஊடகமும் பற்றிக் கொள்ளும் காலத்தில் சில சமூகங்களை குறி வைத்துச் செய்யும் இது போன்ற எந்தக் காரியமும் பெரும் எதிர்ப்பைச் சம்பாதித்துத் தந்துவிடும்.
என்னதான் எதிர்ப்பாளர்கள் இந்தியாவின் தேர்தல் ஜனநாயக முறை என்பது கேலிக் கூத்தானது என்று பாட்டுப் பாடினாலும் நூற்றியிருபது கோடி மக்கள் பங்குபெறும் இந்த தேர்தல் முறையைவிடச் சிறப்பான முறையைக் கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு சுலபம் இல்லை. வரலாற்றில் முதன்முறையாக அறுபத்தாறு சதவீத மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். கள்ள வாக்குகள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. மிகச் சிறப்பாகத் தேர்தல் முடிந்திருக்கிறது. நல்ல முடிவாக வரும் என்று எதிர்பார்ப்போம். நல்ல அரசு அமையட்டும். நல்ல அரசு அமையும் என்ற நம்பிக்கையில்தானே ஆண்டாண்டுகாலமாக இத்தனை பேரும் காத்துக் கொண்டிருக்கிறோம்? ஒருவேளை அடுத்த அரசும் சொதப்பினால் என்ன செய்வோம்? இன்னும் ஒரு தலைவன் வருவான் என்று இருக்கும் அரசை கரித்துக் கொட்டியபடியே காத்திருக்கத் தொடங்குவோம்.
25 எதிர் சப்தங்கள்:
Well written...
Modi's growth is enormous and he has worked from gross root level so he should be knowing how to handle every politician.
With 35 years in the field lets hope he delivers something better if not good.
Still fingers crossed!
you'd have waited 2 more days to post this.
Excellent article ... Must read..// ஏதேதோ காரணங்களுக்காக மத்திய அரசுக்கு நிபந்தனையுடனோ, நிபந்தனை இல்லாமலோ, வெளியில் இருந்தோ, உள்ளுக்குளிருந்தோ, ஆடையோடோ அல்லது அம்மணமாகவோ ஆதரவு தர வேண்டிய சூழல்.//
நரேந்திர மோடி எழுதிய நூல் ஒன்று 2007 ஆம் ஆண்டு வெளி வந்தது. அதன் பெயர் கர்மயோகம். அவர் எழுதிய நூல் என்பதைவிட அவருடைய உரைகளின் தொகுப்பு என்று தான் கூற வேண்டும். அந்த நூலில் தலித் மக்களைப் பற்றி குறிப்பிடும்போது அவர்கள் மலம் அள்ளுதல் போன்ற பணிகளை செய்வதற்குக் காரணம், அவர்கள் அந்தப் பணிகளை புனிதமாகக் கருதுகின்றார்கள். “ஏxபெரிஎன்செ இன் ச்பிரிடுஅலிட்ய்” ஆன்மீக அனுபவம் எனக் கூறுகின்றார். இதனால்தான் அவர்கள் மலம் அள்ளுதல் முதலான தொழில்களை இத்தனை காலமாக செய்கின்றார்களே அல்லாமல் அவர்கள் தங்களுக்கு வேறு தொழில்கள் கிடைக்கவில்லை என்பதனால் அல்ல என்கின்றார்.
[2]“நான் அவர்கள் (தலித்கள்) இந்தப் பணியை தங்கள் வயிறுகளை நிரப்புவதற்காகத்தான் செய்து கொண்டிருக்கின்றார்கள் என நம்பவில்லை. இதற்காகத்தான் அவர்கள் செய்கின்றார்கள் என்றால் நிச்சயமாக அவர்கள் இந்த அசிங்கமான தொழிலை இத்தனை தலைமுறையாகச் செய்து கொண்டிருக்க மாட்டார்கள். வரலாற்றின் ஒரு காலகட்டத்தில் இந்த மக்களில் யாருக்கோ, இந்தப் பணியைச் செய்வது மொத்த மனித இனத்திற்கும் செய்திட வேண்டிய பணி என்ற ஞானோதயம் ஏற்பட்டிருக்கின்றது. அதனால்தான் கடவுள் அவர்கள் மீது பணித்த இந்த கடமையை அவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் மீது கடவுள் அருள் செய்த இந்தக் கடமையைத்தான் அவர்கள் செய்ய வேண்டும். - நன்றி -சரவணன் இது தான் நரேந்திர மோடி யின் கருத்தியல் இதனை கண்டு நாம் பயபடலமா வேண்டாமா ?
என்னா ஒரு நேர்த்தியான இன்டெலெக்சுவல் பதிவு? திட்டமிடப்பட்ட நாதரித்தனத்தை வெகுவாக இயல்பாக ஏற்றுக் கொள்ளவைக்கும் பாணியில் எழுதிக்கொண்டே எதிர்க்கட்சிகள் சும்மா இருக்குமா இஸ்லாமியர்களை தொட்டால் என்று நீங்க கேட்கும்போது அநியாயத்திற்கு அயோத்தியும்,குஜராத் கலவரங்களும் நினைவுக்கு வருகின்றன.எந்த கட்சி காப்பாற்றியது?
கிருத்துவர்களை உசுரோடு எரிப்பதும் கன்னியாஸ்திரிகளை வன்புணர்ச்சி செய்து எரிப்பதும் நோண்டு வேலையாக உங்களுக்கு தோன்றினால் அதுதான் அந்த திட்டமிடப்பட்ட நாதாரித்தனத்தின் வலிமை என்பதா? போதை என்பதா? செம்மறி ஆட்டுக்கூட்டம் போல மக்களை வழிநடத்தியுள்ள்ளது ஊடகங்கள்.
எந்த அடிப்படையில் நல்லவான் இவனென்று தேர்ந்தெடுக்கப்படுகிறான் ஒருவன்?அடுத்த ஆட்சி அடுத்த ஆட்சி என்று மாறி மாறி இந்த இருவரின் திருட்டுக்களை பார்த்த பின்னும் என்னதான் நம்[பிக்கையோ?
காருக்கு கீழே சிக்கிய நாயிப்போல என்று பேட்டி கொடுத்த அறிஞர் அல்லவா? தலித்கள் குறித்தான மோடியின் பார்வையை கறுத்தான் கூறியுள்ளார்.இவர்தான் பிரதமர் ஆகிறார் என்றால் இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாத்தான் போகணும் ....
ஊடகங்களாவது வாங்குன காசுக்கு கூவினாங்க....ஆனா இங்கிட்டு? என்ன சொல்ல? வேதனையாக உள்ளது.
உங்கள் எழுத்தின் மீது மதிப்பு வைத்து இருந்தேன்...
நியாயமாக பேசுவது போல் பேசி ஒருவருக்கு ஆதரவாக பேசி இருக்கிறீர்கள்.
RSS , பிஜேபி , மோடி தெரியுமா இவர்களை பற்றி முழுவதுமாக???
nivashah, எனக்குத் தெரிந்த அளவில் நியாயமாக பேசியிருக்கிறேன். நான் நினைத்துக் கொண்டிருப்பதுதான் 100% சரி என்ற எண்ணம் எனக்கு இல்லை என்பதால் தவறாக இருக்கும்பட்சத்தில் மாற்றிக் கொள்கிறேன்.
நீங்கள் எழுதியிருப்பது சரியே. உங்கள் கருத்து தெளிவாக உள்ளது.
இந்தியாவில் மோடிக்கு வாக்கு போட்ட 50 கோடி பேரும் பிழை என்று சொல்லுவார்கள் போலுள்ளது...
ஒரு சாதரனமானவன் இப்போ மோடி தான் இந்தியாவை ஆள சரியானவர் என்ற சொல்லவும் முடியாதா?
மோடி பெரிய ரட்சகர் இல்லைதான். அரக்கனாகவே கூட இருக்கட்டும். ஆனால் உங்களில் யார் யோக்கியவானோ அவரே முதல் கல்லை எறியலாம்.
வாருங்கள் யோக்கியர்களே... இங்குள்ள முஸ்லிம்களில் எத்தனை பேர் மூளைச்சலவை செய்யப்பட்டு கோடாலி காம்பாக மாறிவிட்டார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? தமிழகத்தில் அதிராம்பட்டினம் என்ற ஊர் உள்ளது. சென்று பாருங்கள் , பாகிஸ்தானியர்கள் கூட அவர்கள் நாட்டின் மேல் அவ்வளவு பாசமாக இருக்க மாட்டார்கள். மற்ற மதத்தினர்கள் இரண்டாம் தர மக்களைப்போல் தான் இவர்களுக்கு அடங்கித்தான் நடந்து கொள்கிறார்கள். இவர்களையெல்லாம் என்ன செய்வது? எனது கணிப்பு சரியாக இருந்தால் இன்னும் பத்து வருடங்களுக்குள் தமிழகத்தின் அமைதி முஸ்லிம் தீவிரவாதிகளால் நாசமாக்கப்பட்டு விடும். இன்று நியாயம் பேசுபவர்கள் அன்றும் பிழைத்து கிடந்தால் மீண்டும் பேசுவோம். மதசார்பற்ற அணி என்று கூறிக்கொள்வதன் உண்மையான அர்த்தம் இந்து எதிர்ப்பு.(முஸ்லிம் ஆதரவு) என்பதே இன்றைய நடைமுறை. ஏனெனில் இந்துக்கள் மதம் சார்ந்த உணர்வு தூண்டல்களுக்கு ஆட்படுவது இல்லை. மதம் சார்ந்த வெறித்தனம் இல்லை. ஆனால் முஸ்லிம் தீவிரவாதத்தைப் பற்றி யார் பேசினாலும் ஒட்டு மொத்த சமூகமும் கிளர்ந்து எழும், வைக்கப்படும் வெடி வாக்கு வங்கியையும் சேர்த்து தகர்க்கும். (பலியாகும் அப்பாவிகள் உயிர் bonus).கோத்ரா போன்ற சம்பவங்களுக்கு இந்துக்கள் (or) மோடி மட்டும் தான் காரணம் என்று கூறுவது தான் திட்டமிட்ட தீவிரவாதம் . அதற்க்கு தூண்டலாக அமைந்த முக்கிய காரணங்களை யாரும் விவாதிப்பது இல்லை. கண்டிப்பாக இந்த தேசத்தின் பெரும்பான்மை மக்களின் (இந்தியர்களின்)நலம் காக்கப்பட வேண்டும் என்றால் மோடி வர வேண்டும்.
இந்தியர்கள் என்று நான் குறிப்பிடுவது இந்தியாவின் மேல் பற்று கொண்ட அனைத்து மதத்தினரையும் தான். இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்களை இனியும் சிறுபான்மையினர் என்ற பெயரில் சோறு பாலும் முட்டையும் கொடுத்து இனிமேலும் வளர்க்க முடியாது.
- Even though you support the Future PM (!?) for over a period, not you could not assure his goodness to the nation (in your closing statement; but assured the same in your previous post.
- If the mentioned State Parties' Leaders are only for Power, not for Country, how about future PM (?!)?, who framed and executed strategies for the last few years to capture the Chair...
தவறாக இருக்கும்பட்சத்தில் மாற்றிக் கொள்கிறேன்..
"Have you ever interrogated/ verified the points/image you had in your mind & blog on Him, before you start propagate the Man."
"எனக்குத் தெரிந்த அளவில் நியாயமாக பேசியிருக்கிறேன். நான் நினைத்துக் கொண்டிருப்பதுதான் 100% சரி என்ற எண்ணம் எனக்கு இல்லை என்பதால் தவறாக இருக்கும்பட்சத்தில் மாற்றிக் கொள்கிறேன்."
எப்போது? உங்கள் விருப்பம் போல் அவர் நாற்காலி ஏறிய பிறகு?
கால சக்கரம் பின்னோக்கிச் செல்லுமா?
ஆமாம் இதுவரை ஆண்டவர்கள் எல்லாம் நாட்டில் தேனும் , பாலும் ஆறாக ஓட வைத்து விட்டார்கள். மோடி தான் நாட்டை குட்டி சுவராக்கப் போகிறார். காங்கிரஸ் தலைமையில் நடந்த கடந்த பத்து ஆண்டு கால ஆட்சிதான் நாடு கண்ட மிக மோசமான ஆட்சி. குட்டிச்சுவர் அல்ல சுவர் இருந்ததிற்க்கான அடையாளமே இல்லாமல் ஆக்கி விட்டார்கள். பொருளாதாரம், இன ஒற்றுமை, விலைவாசி, பாதுகாப்பு, வெளியுறவு, வேளாண்மை, தொழில் துறை ஆகிய அனைத்திலுமே முடிந்த அளவு சீரழித்து விட்டார்கள். இதை விட மோசமான ஒரு ஆட்சியை மோடியே நினைத்தாலும் தர முடியாது....
ஹைதராபாத்துல ஆரம்பிச்சுட்டாங்களாம்
http://www.satrumun.net/2014/05/10-2-3.html.
அப்புறம் மோடி காங்கிரஸ் க்குதான் கடமைப் பட்டிருக்க வேண்டும். அவர்களின் தயவில்லாமலிருந்தால் ?
இந்துக்கள் மதம் சார்ந்த துண்டுதல்களுக்கு ஆட்படுவதில்லை.உண்மைதான்.அதை மாற்றியதுதான் இந்த மோடி அண்ட் கோ வின் வெற்றி என்கிறேன்.நாம அனைவரும் ஒன்னாத்தான் பழகிட்டு இருக்கோம்.அனைத்து மதங்களிலும் தீவிரவாதிகள் இருக்கத்தான் செய்தார்கள்.அவர்களை யாரும் ஆதரிக்கவும் இல்லை.ஆனால் ஆதரிக்க நியாயப்படுத்த ஓட்டு வேட்டையாட அரசியல் அதிகாரம் பெற என சாதாரண இந்து மனதில் இந்து என்று கூட்டிக்கொள்ள ஒட்டு மொத்த ஓட்டுக்களை குத்தகைக்கு எடுக்க இவர்களால் தூண்டப்பட்ட்டதுதான் இந்த மத பிளவுகள்.இந்துக்களுக்கு குரல் கொடுக்க வேண்டுமெனில் இவர்கள் நியாயமாக இலங்கைக்கு எதிராக குரல் தந்திருக்கலாம்.ஏன் இல்லை? இந்துக்கள் பல கட்சிகளாக பிரிந்துதான் பாகுபாடின்றி வாக்களித்தனர்.அதை உடைத்து ஒட்டு மொத்தமா வாக்குகள் அள்ளத்தான் இவ்வளவும்.இஸ்லாமிய ஓட்டுக்கள் யாருக்கு வேணும்?ஒட்டு மொத்த இந்துக்களையும் ஒருமிக்க ஒரு எதரி வேண்டாமா என்ன? அதுக்குதான் இருக்கனுன்களே மாத்து மதக்காரனுங்க...எந்த ஊர்ல இந்தியால கிருத்துவன் குன்டு வைத்தான்? ஒரிச்சால ரெண்டு குழந்தைகளோட எரிச்சி கொன்னதுதான் உங்க மதம்னா அதுல இடி விழுந்தா என்ன?
அப்படியே இந்துவானாலும் கூட உள்ள இன்னொரு இந்துக்கே மரியாத தராத இந்த இந்துக்கள்தான் சகிப்புத்தன்மை உடையவர்கள்னு சொல்றீங்களா? மத அடிப்படையில் தனி மனிதன் கொண்டு செல்லும் அதிகாரம் சிறப்பாக அமையும் என நம்புகிறீர்கள்?
Good article..
மோதி முக்கியமாக எம்மதமும் சம்மதம் என்பதைக் கடைப்பிடிக்கவேண்டும். எம்மதத்துக்கும் அடிபணியமாட்டார் என்கிற நம்பிக்கை எல்லோருக்குமே இருக்கிறது.
கோபாலன்
mani sir....Excellent article ... Must read..
கோத்ரா ரயில் எரிப்புக்கு முன் இந்தியாவில் நடந்த எல்லா மதக்கலவரங்களையும் மறந்துவிட வேண்டும்........தேசப்பிரிவினையின் போது பாகிஸ்தானிலும் , வங்கதேசத்திலும் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான ஹிந்துக்களை மறந்திடனும்.....[ இந்தியாவில் இருந்த இஸ்லாமியர்களை காப்பாற்ற காந்தி இருந்தார்..... ] இந்திரா காந்தி படுகொலையை அடுத்து காங்கிரசாரால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான சீக்கியர்களை மறந்திடனும்..... உலகம் முழுவதும் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நடத்தப்படும் குண்டுவெடிப்புகளை மறந்து விட வேண்டும்....
ஆங்...அப்புறம் .......கடந்த பனிரெண்டு வருடமாக குஜராத்தில் எந்த மதக்கலவரமும் நடந்ததில்லை என்பதை [ சுதந்திர காலம் தொட்டு 2002 வரை அங்கு அனேகமாக வருடம் தோறும் மதக்கலவரம் நடபெற்று வந்தது ] ஞாபகமாக மறந்துவிட வேண்டும்......
ஆனா மோடி வந்த ரத்த ஆறு ஓடும்னு பூச்சாண்டி மட்டும் காட்டிக்கிட்டே இருக்கனும்.....
இதுதான்யா ஒரிஜினல் மதச்சார்பின்மை.......!
திரு.சதீஷ் செல்லத்துரை, நீங்கள் சொல்ல வருவது எனக்கு நிஜம்மாகவே புரியவில்லை. நான் புரிந்து கொண்டவரையில், இந்துத்வா தீவிரவாதம்தான் இந்தியாவின் சாபக்கேடு, அதனை உருவாக்கியவர் மோடி, ஆகவே அவர் பிரதமர் ஆனால் இந்தியாவில் ரத்த ஆறு ஓடும் என்று கூறவருகிறீர்கள் சரியா?...
அப்படியானால் இப்போது இந்தியாவின் உண்மை நிலவரம் என்ன?
நம் வாழ்க்கை தரம் எப்படி இருக்கிறது?
விலைவாசி நிலவரம் என்ன?
நீங்கள் சொன்ன மதச்சார்பின்மை இருக்கிறதா?
இஸ்லாமிய எல்லை தாண்டிய தீவிரவாதம் சுத்தமாக ஒடுக்கப்பட்டு விட்டதா?
முதலில் இந்த அரசு கடந்த பத்து ஆண்டுகளாக உயிரோடு இருந்ததா?
வெளியுறவு எப்படி இருக்கிறது?
என்னென்ன பொருளாதார சீர்திருத்தங்கள் நடந்தது? அவற்றின் ஒரு நல்ல விளைவு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.
அண்டை நாடுகளுடன் உறவு மேம்பாடு எந்த நிலையில் இருக்கிறது?
மற்ற அரசியல், ராஜதந்திர நடவடிக்கைகள் அவற்றின் விளைவுகள். - இவை ஒவ்வொன்றுக்கும் நீங்களே மதிப்பெண் கொடுத்து பாருங்கள்.
நான் உங்களுடன் debate செய்வதற்காக வரவில்லை. ஒரு இந்தியனாக தேசத்தின் ஒட்டு மொத்த நன்மைக்கான நிகழ்தகவு பற்றியே பேச விரும்புகிறேன். மோடி அல்ல வேறு யாராக இருந்தாலும் சரி நான் எதிர்பார்க்கும் ஒரு குறைந்த பட்ச தேச அபிமானம் இருந்தால் அவரை நான் ஆதரிப்பேன். தற்போது மோடி மேல் ஒரு சிறிய நம்பிக்கை, ஆனால் காங்கிரஸ் மீது சுத்தமாக இல்லை. தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா இருவருமே தகுதியற்றவர்கள்தான். மன முதிர்ச்சி அற்றவர்கள்தான். அவர்கள் நம்மை மாறி மாறி ஆண்டு கொண்டிருப்பது நமது தரத்தை தான் காட்டுகிறது. (ஜெயலலிதா சட்ட மன்ற தேர்தலிலும், தொடர்ந்து இப்போது 37 சீட்டுகள் வென்றதும் தமிழனின் வரலாற்று பிழைகள். பலனை நாம் கட்டாயம் அனுபவிப்போம்).
கொள்ளைக்கார கும்பல் போய் கொலைகார கும்பல் .. அவ்ளோதான்..
மிக அருமைதான பதிவு. உங்கள் பின்னூட்ட கருத்துகளில் திரு சிவ.சரவணகுமார் கருத்துகள் உண்மையாக உள்ளது. இந்த கருத்து பதிவு செய்யும் சமயம், 335 பேர் கொண்ட ஆளும் கட்சியாக மோடி மாற்றி உள்ளார். அவரின் பரோடா, மற்றும் அஹமதாபாத் பேச்சுகளில் நாட்டின் முன்னேற்றம் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற கொண்ட உறுதி தெரிகிறது. பயப்பட வேண்டியதே இல்லை என்பது தெரிகிறது. எனது எண்ணம் என்ன எனில், இந்த பயமுறுத்தல் என்பது ஒரு திட்டமிட்ட முயற்சி.
I wholly agree with Mr.Siva Saravanakumar. Now the election results have come wherein NDA are having 340 seats. Mr.Modi in his Baroda and Ahmedabad speeches, underlined Development only and it seems we can have a peaceful, devemental future for atleast next five years.
நிச்சயம் மாற்றிக் கொள்வீர்கள் வெகு விரைவில்..
நன்றி...
Post a Comment