Apr 8, 2014

மோதிப் பார்

இன்று அலுவலகத்தில் அவ்வளவாக வேலை இல்லை. புதிய டீமில் சேர்ந்ததிலிருந்தே இப்படித்தான். அநேகமாக அடுத்த வாரத்திலிருந்து வெட்டி முறிக்கச் சொல்லிவிடுவார்கள். இப்போதைக்கு முதல் பாதி மட்டும்தான். வெட்டி. ‘வேலை கொடுங்கய்யா’ என்று இரண்டு மூன்று முறை கேட்டாகிவிட்டது. ‘இருப்பா’ என்கிறார்கள். வேதாளத்துக்கு வேலை இருந்து கொண்டேயிருந்தால் பிரச்சினையில்லை. இல்லையென்றால் பைத்தியம் பிடித்த மாதிரி ஆகிவிடுகிறது. அதனால் வெளிச்சம் இருக்கும் போதே வீட்டிற்கு கிளம்பிவிட்டேன். சீக்கிரம் கிளம்பியதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. இன்று பெங்களூரில் மோடி பேசுகிறார். இந்தச் செய்தி காலையிலேயே தெரியும். தினத்தந்திதான் source of information. கட்டம் கட்டியிருந்தார்கள். 

விசாரித்துப் பார்த்தால் வீட்டிற்கு வெகு அருகிலேயேதான் மைதானம். நடந்தே போய்விடலாம். காலையிலேயே ஒரு எட்டு போய் பார்த்துவிட்டேன். ஒரு லட்சம் பேராவது அமரக் கூடிய மைதானம். ப்ளாஸ்டிக் நாற்காலிகளால் நிரப்பியிருந்தார்கள். மோடியின் இதற்கு முந்தைய பெங்களூர் கூட்டத்திற்கும் சென்றிருக்கிறேன். அது பிரம்மாண்டக் கூட்டம். பல லட்சம் பேரைத் திரட்டியிருந்தார்கள். இன்று அந்தளவுக்கு கூட்டம் சேர்வதற்கு வாய்பில்லை. இருந்தாலும் கூட்டத்தை பார்த்துவிடலாம் என்றுதான் அலுவலகத்திலிருந்து வெள்ளிச்சத்திலேயே பெட்டி கட்டும் வைபவம். 

வீட்டை அடையும் போது மணி ஆறரை ஆகியிருந்தது. ‘அப்பவே பட்டாசு வெடிச்சுட்டாங்களே’ என்றார்கள். அவருக்கு என்ன? ஹெலிகாப்டர் இருக்கிறது. ஆறரை மணி என்றால் ஆறரைக்கு வந்துவிடலாம். வந்துவிட்டார் போலிருக்கிறது. அப்பாவுக்கும் கூட்டம் பார்ப்பதில் இஷ்டம்- மோடியைப் பார்ப்பதில் இஷ்டம் என்று படித்துவிட வேண்டாம். தானும் வருவதாகக் கிளம்பிவிட்டார். அப்பா இல்லையென்றால் நடந்தே போகலாம். அவரை நடக்க வைக்க முடியாது என்பதால் பைக்தான். 

ட்ராபிக் போலீஸ்காரர்கள் வளைத்து வளைத்து அனுப்பினார்கள். நடந்து வந்திருந்தால் பதினைந்து நிமிடங்கள்தான் ஆகியிருக்கும். அவர்கள் அனுப்பிய சந்து பொந்துகளில் எல்லாம் நுழைந்து கூட்டத்தை அடையும் போது நாற்பது நிமிடங்கள் ஆகிவிட்டது. நுரையீரலை அறுத்து எடுத்தால் பாதி வரைக்கும் மண்ணாகத்தான் இருக்கும். அத்தனை புழுதி. மைதானத்தை அடையும் போது மோடி பேசிக் கொண்டிருந்தார். பாதி மைதானம்தான் நிரம்பியிருந்தது. ஐம்பதாயிரம் பேர் இருப்பார்கள். மைதானத்தின் கடைசியில் நிறைய நாற்காலிகள் காலியாகக் கிடந்தன. முந்தைய கூட்டத்தை ஒப்பிடும் போது இது கூட்டமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

பக்கத்திலிருந்த பா.ஜ ஆளிடம் பேச்சுக் கொடுத்தால் ‘அன்னைக்கு நடந்தது மாநில அளவிலான கூட்டம். பல மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்தார்கள். இன்றைக்கு மட்டுமே கர்நாடகத்தில் மூன்று இடங்களில் பேசியிருக்கிறார். இதுவே பெரிய கூட்டம்’ என்றார். ‘தன் குஞ்சு பொன் குஞ்சு’ வகையறா போலிருக்கிறது. இந்தச் சொலவடையில் ‘காக்கைக்கும்’ என்ற வார்த்தையை விட்டுவிட்டால் விகாரமாகிவிடுகிறது. அதனால் ‘காக்கைக்கும்’ என்று சேர்த்து படித்துக் கொள்ளவும்.

மோடி வழக்கம் போலவே கையை அசைத்தார், மேடம் சோனியா ஜிஈஈஈஈஈ என்று இழுத்தார், மாடுலேஷன் மாற்றினார், கூட்டத்தைப் பார்த்து கேள்விகள் கேட்டார், கூட்டத்திலிருந்தவர்கள் கத்தினார்கள். அத்தனையும் ஹிந்தியில். எனக்கும் புரியவில்லை. அப்பாவுக்கும் புரியவில்லை.  ‘போலாமாங்கப்பா’ என்றேன். ‘கூட்டத்தை பார்த்துவிடலாம்’ என்று ஒரு சுற்று சுற்றினார். 

பெங்களூரின் நகர்ப்புறங்களில் பெரிய பிரச்சாரம் நடப்பதில்லை. அவ்வப்போது திறந்தவெளி ஜீப்பில் நின்று கொண்டு வேட்பாளர்கள் கும்பிடு போடுவதோடு சரி. கதவைத் தட்டியெல்லாம் யாரும் வாக்கு கேட்பதில்லை. குடியிருப்புகள் நிறைந்த வீதிகளில் நடக்கும் பிரச்சாரம் கூட அரிதுதான். பெங்களூரின் தெற்குத் தொகுதியில் நிற்கும் காங்கிரஸ் வேட்பாளர் நந்தன் நீல்கேனிக்கு ஆதரவாக எழுத்தாளர்கள் யு.ஆர்.அனந்தமூர்த்தி, கிரிஷ் கர்னாட் எல்லாம் வாக்குச் சேகரிக்கிறார்கள்/ இரண்டு பேருமே ஞான பீட விருது வாங்கியவர்கள். பொதுமக்களிடையே செல்வாக்கு உள்ளவர்கள். அவர்கள் ஜெய்நகரின் வீதிகளில் இறங்கி வீடு வீடாக வாக்குக் கேட்கிறார்கள் என்பதை அதிசயமான செய்தியாக எழுதியிருந்தார்கள். இதில் அனந்தமூர்த்தி ‘மோடி பிரதமரானால் நாட்டைவிட்டே போய்விடுவேன்’ என்று பேசி பா.ஜ.வின் கடுப்பைச் சம்பாதித்து வைத்திருந்தார். அவர் ஏதோ ஒரு பல்கலைக்கழகத்தில் பணியிலிருக்கிறார். இப்பொழுது வீதியில் இறங்கி காங்கிரஸ்காரர்களுக்காக கும்பிடு போட்டதும் பா.ஜகவின் கடுப்பை ஒரு படி கூடுதலாகச் சம்பாதித்துக் கொண்டார்.  

சரி விடுங்கள்.

இந்த முறை பொம்மனஹள்ளியில் மோடியின் கூட்டம் வைத்ததே ஐடி துறையினரைக் குறி வைத்துதான் என்றார்கள். எலெக்ட்ரானிக் சிட்டி இந்த ஏரியாவில்தான் இருக்கிறது. நீல்கேனியை எப்படியாவது தோற்கடித்துவிட வேண்டும் என்று பா.ஜ.க வேட்பாளர் அனந்தகுமார்தான் தனது தொகுதியில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறாராம். செவ்வாய்க்கிழமையன்று ஆறரை மணிக்கு கூட்டம் வைத்தால் எந்த ஐடிக்காரன் பிழைப்பைக் கெடுத்துக் கொண்டு வருவான்? கூட்டத்தைப் பார்த்து அனந்தகுமாருக்கு இந்நேரம் வயிறு கலங்கியிருக்கக் கூடும். ஏழெட்டு லட்சம் வாக்காளர்கள் இருக்கும் இந்தத் தொகுதியில் மோடிக்கே ஐம்பதாயிரம் பேர்தான் என்றால் அனந்தகுமார் கூட்டம் போட்டால் ப.சிதம்பரத்தைவிட பேஜாராகிவிடக் கூடும். 

எப்படியோ போகட்டும்.

அப்பா கூட்டத்தை சுற்றிப்பார்த்துவிட்டு வந்து ‘ஜெயிச்சுடுவாங்களா?’ என்றார்.  ‘மே பதினாறு அன்னைக்கு சொல்லுறேன் இருங்க’ என்றேன். வீட்டுக்கு வந்த பிறகும் கூட முறைத்துக் கொண்டே இருந்தார்.

5 எதிர் சப்தங்கள்:

Muthu said...

நிலகனி தோற்றுவிடுவார் என்கிறமாதிரி ஒரு கருத்தை எங்கேயே படிச்சனே....ஆனா நிலகனி அனந்தகுமாருக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தி இருக்கிறார் என்பது பரவலாக பேசப்படுகிறது....ஐடி மண்டையாச்சே....

”தளிர் சுரேஷ்” said...

யாரு ஜெயிச்சாலும் நம்ம வாழ்க்கையில் மாற்றம் வரப்போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்!

Paramasivam said...

கோரமங்களா பக்கம் நிலகனி தோற்று விடுவார் என்பது தான் பேச்சு.

vijayan said...

செல்வந்தர்களான அனந்த குமாருக்கும் ,நீலகேநிக்கும் வாக்களிப்பதைவிட ஏழைகளின் வாழ்வின் முன்னேற்றத்திற்க்காக பாடுபடும் தமிழ் பெண்மணி ருத் மனோரமாவிற்கு வாக்களிப்பது எல்லா கட்சியையும் சார்ந்த தமிழர்களின் கடமை.

சேக்காளி said...

//தன் குஞ்சு பொன் குஞ்சு’ வகையறா போலிருக்கிறது. இந்தச் சொலவடையில் ‘காக்கைக்கும்’ என்ற வார்த்தையை விட்டுவிட்டால் விகாரமாகிவிடுகிறது//
அடவு கடையில எப்டி ஒரசி பாப்பாங்கன்னு யோசிச்சேன்.மிடியல.