தெரிந்த பையன் ஒருவன் பி.ஈ இறுதியாண்டில் இருக்கிறான். வருகிற மே மாதத்தோடு படிப்பை முடித்துக் கொண்டு கல்லூரியை விட்டு வெளியில் வந்துவிடுவான். ஆனால் ஒரு அரியர் இருக்கிறது. நீண்டகால வரலாற்றுப் பின்னணியுடைய அரியர் அது. மூன்றாவது செமஸ்டரிலேயே கணிதத்தில் கோட்டைவிட்டிருக்கிறான். நான்கைந்து முறை திரும்பத் திரும்ப எழுதியாகிவிட்டது. எழுதுவதோடு சரி. பாஸ் ஆவதெல்லாம் இல்லை. அந்தப் பாடமும் இவனது கால்களை இறுகப்பற்றிக் கொண்டு விடுவேனா என்று பாசப்போராட்டம் நடத்துகிறது. அரியரைச் சுமப்பது என்பது கழுதை வண்ணானின் துணி மோலியைச் சுமப்பது போல. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு வெயிட் தெரியாது. சுமக்கிறவனுக்குத்தான் சோகம் தெரியும் என்று பிலாஸபி பேசுகிறான்.
அவனிடம் வேறு என்ன பேசுவது?
ஒன்றிரண்டு நிறுவனங்கள் கேம்பஸ் இண்டர்வியூவுக்கு வந்திருக்கின்றன. மோலியோடு நிற்கும் கழுதை வேண்டாம் என்று வாசலோடு திருப்பியனுப்பிவிட்டார்களாம். ‘என்னண்ணா பண்ணுறது? ஊட்டுக்கு போக முடியறதில்ல. விட்டா எங்கப்பன் சுடு ரசத்தை மூஞ்சில அடிச்சுருவாப்லயாட்ட இருக்குது’ என்கிறான். அப்பனுக்கு கோபம் வராதா? ஒவ்வொரு வருடமும் இவன் படிப்புக்காக லட்சக்கணக்கில் செலவழித்திருக்கிறார். ஆழ்துளைக் கிணறு போட வைத்திருந்த பணத்தைக் கொண்டு போய் கல்லூரிக்கு கட்டியிருக்கிறார். இவன் மோலியைச் சுமந்து கொண்டே திரிந்தால் எரிச்சல் வரத்தானே செய்யும்.
‘நானா பாஸ் பண்ண மாட்டேங்குறேன்? அவனுக பெயில் பண்ணிடுறானுக’ என்கிறான். அவனுக என்பது இங்கு வாத்தியார்களைக் குறிக்கும். இதற்கு ஒரு குறுக்கு வழி இருக்கிறது. எனது கிரிமினல் புத்திக்கு அந்த வழிதான் தெரிகிறது. பேப்பர் சேஸிங். பத்து வருடங்களுக்கு முன்பே இதை வெற்றிகரமாகச் செய்தவர்களைப் பார்த்திருக்கிறேன். யாரைப் பிடிக்க வேண்டும் என்று மட்டும் தெரிந்தால் போதும். கேட்கும் பணத்தைக் கொடுத்தால் காரியத்தை முடித்துவிடுவார்கள். விடைத்தாளில் மதிப்பெண்ணை மாற்றுவார்கள் என்று சொல்ல முடியாது. மதிப்பெண்களை கணினியில் உள்ளீடு செய்யும் இடத்திலோ அல்லது மதிப்பெண் சரிபார்க்கும் இடத்திலோ என்று ஏதாவதொரு இடத்தில் செய்துவிடுவார்கள். நமக்குத் தேவை மதிப்பெண்கள். அவர்கள் எங்கே மாற்றினால் என்ன?
சமீபத்தில் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவரது அப்பா அரசுக் கல்லூரியில் பேராசிரியர். பத்து இருபது வருடங்களுக்கு முன்பு அவரது அப்பாவைப் பார்க்க ஒரு அமைச்சரின் மகன் வந்திருக்கிறான். பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வை எழுதிய கையோடு ‘பேப்பரைப் புடிக்க முடியுமா சார்?’ என்பதை விசாரிக்கத்தான் வந்திருக்கிறான். அவ்வளவு நம்பிக்கை- எப்படியும் ஃபெயில் ஆகிவிடுவோம் என்று. பதினைந்து வருடங்களுக்கு முன்பு அமைச்சர்கள் இத்தனை குறுக வேண்டியதில்லை அல்லவா? முதுகு சற்று நிமிர்ந்திருந்தது. ஊருக்குள்ளும் கெத்துக் காட்டிக் கொண்டிருந்தார்கள். அதனால் வெளிப்படையாகவே விசாரித்திருக்கிறான். நண்பரின் அப்பா என்ன செய்தார் என்று தெரியவில்லை. ஆனால் பையன் ப்ளஸ் டூ பாஸாகிவிட்டான். பாஸாகிவிட்டான் என்றால் மரியாதை இல்லை- பாஸாகிவிட்டார். இப்பொழுது பொறியியல் கல்லூரி நடத்துகிறார். கல்லூரிக்கு அவர்தான் தாளாளர். பேப்பர் பிடித்தவன், சிலை திருடியவன், நான்கு கொலை செய்தவன், கற்பழிப்பு கேஸில் மாட்டியவனெல்லாம் ஆளாளுக்கு ஒரு கல்லூரி ஆரம்பித்து- அதுவும் பொறியியல் கல்லூரி ஆரம்பித்து தாளாளர் ஆகிவிடுகிறார்கள். அதனால்தான் இந்தத் தலைமுறை பொறியாளர்கள் சர்.சி.வி.ராமன்களாகவும், தாமஸ் ஆல்வா எடிசன்களாகவும், விஸ்வேஸ்வரய்யாக்களாகவும் பட்டையைக் கிளப்புகிறார்கள். மானங்கெட்ட பிழைப்பு.
முதல்பத்தியில் சொன்ன இறுதியாண்டு மாணவன் அப்படியானதொரு ‘புகழ்மிக்க’ கல்லூரியில்தான் படித்துக் கொண்டிருக்கிறான். கல்லூரிதான் மோசமே தவிர, பையனுக்கு நல்ல புத்தி. குறுக்கு வழியெல்லாம் வேண்டாம், சுயமாகவே படித்துவிடுகிறேன் என்கிறான். எத்தனை வருடங்களில் முடிப்பான் என்று தெரியாது. ஆனால் முடித்துவிடுவானாம். அதற்கு பிறகு வேலை வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதுதான் அவனது கேள்வி. நம்மை கலாய்ப்பது போலத்தான் தெரியும். ஆனால் உண்மையில் சாத்தியம்தான்.
வேலைக்கும் கல்லூரிக்கும் பெரிய சம்பந்தமும் இல்லை. இந்தியாவின் மிகச்சிறந்த பொறியியல் கல்லூரியான ஐ.ஐ.டி மும்பையில் பி.டெக் முடித்துவிட்டு, இந்தியாவின் மிகச் சிறந்த மேலாண்மை கல்லூரியான ஐ.ஐ.எம்மில் எம்.பி.ஏ முடித்த என் வயதையொத்த ஒருவர் எங்கள் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அடுத்த வரியில்தான் அதிர்ச்சி இருக்கிறது. அவர் என்னை விட ஒரு படி கீழே இருக்கிறார். நம்புவதற்கு சிரமம்தான். ஆனால் அதுதான் உண்மை. வெறும் டீம் லீடராக இருப்பதற்கு எதற்காக அவ்வளவு பெரிய கல்வி நிறுவனங்களில் படித்தார் என்று புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஆரம்பத்தில் உடான்ஸ் விடுகிறார் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் IIT, IIM இல் படித்திருக்கிறார். IIT+IIM காம்போ இருந்தால் முப்பத்தைந்து வயதில் நினைத்துப் பார்க்க முடியாத உயரத்தை அடைந்துவிட முடியும். அவரது நேரமோ, திறமையின்மையோ தேங்கிப் போய்விட்டார். அவரும் அதை பெரிதாகக் காட்டிக் கொள்வதில்லை. இருப்பதை வைத்து சந்தோஷப்படும் மனநிலை.
இதற்கு அப்படியே நேர்மாறான ஆட்களும் இருக்கிறார்கள்.
பதினைந்து அல்லது இருபது வருடங்களுக்கு முன்பாக பொறியியல் படித்தவர்கள் அவர்களோடு படித்தவர்களிலேயே மிகக் குறைவான மதிப்பெண்கள் வாங்கிய பத்து பேரைத் தேடிப் பார்த்தால் ஐந்து பேராவது வாயைப் பிளக்கும் அளவுக்கு உச்சியைத் தொட்டிருப்பார்கள்.
ரொம்ப வருடத்திற்கு பிறகு எனது சீனியர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. அப்பொழுது கல்லூரி விடுதியில்தான் தங்கியிருந்தார் என்பதால் நன்றாகவே பழக்கம் உண்டு. எனக்குத் தெரிந்து ஒரே சமயத்தில் அவருக்கு ஒன்பது தாள்கள் பாக்கியிருந்தன. இப்பொழுது விசாரித்தால் ஐரோப்பிய நிறுவனம் ஒன்றின் இந்தியப்பிரிவுக்கு தலைவராக இருக்கிறார். பெங்களூரில்தான் இருக்கிறார். அவரது பதவியைக் கேட்டதும் வாயடைத்துப் போய்விட்டேன். ‘எப்படி ஆனீங்க?’ என்றா கேட்க முடியும். ஆகிவிட்டார்.
எம்.டெக் படித்திருக்கிறார். பிறகு பி.ஹெச்.டி முடித்திருக்கிறார். இப்பொழுது முனைவர்.
படிக்கும் போது கோட்டை விடுகிறார்கள் என்பதற்காக வேலையே கிடைக்காது என்பதில்லை. படிப்பிற்கு பிறகு கொஞ்சம் Patching வேலையைச் செய்ய வேண்டியிருக்கும். அந்த Patching வேலையைத் திறமையாகவும் சின்சியராகவும் செய்ய முடியுமென்றால் போதும். கொடி பறக்க விட வேண்டியதுதான்.
8 எதிர் சப்தங்கள்:
Your article is nice to read.
//இப்பொழுது விசாரித்தால் ஐரோப்பிய நிறுவனம் ஒன்றின் இந்தியப்பிரிவுக்கு தலைவராக இருக்கிறார். பெங்களூரில்தான் இருக்கிறார். அவரது பதவியைக் கேட்டதும் வாயடைத்துப் போய்விட்டேன். ‘எப்படி ஆனீங்க?’ என்றா கேட்க முடியும். ஆகிவிட்டார்// குசும்பு
//இதற்கு அப்படியே நேர்மாறான ஆட்களும் இருக்கிறார்கள்.//
அவர்கள் ஓட்டை ,உடைசல், ஈயம் பூசுறது, சாயம் பூசுறது எல்லாம் தெரிந்தவர்களாக இருப்பார்கள்.
+2 Fail,B.A,M.A attempt...இப்படி என் கூட முதுகலை படித்த நண்பர் இப்ப H.O.D!!!
நிஜங்களை சொல்லுகிறது! கூடவே கொஞ்சம் தன்னம்பிக்கையையும் விதைக்கிறது இந்த பதிவு!
படிக்கும் போது கோட்டை விடுகிறார்கள் என்பதற்காக வேலையே கிடைக்காது என்பதில்லை. படிப்பிற்கு பிறகு கொஞ்சம் Patching வேலையைச் செய்ய வேண்டியிருக்கும். அந்த Patching வேலையைத் திறமையாகவும் சின்சியராகவும் செய்ய முடியுமென்றால் போதும். கொடி பறக்க விட வேண்டியதுதான்.
நல்ல வழிகாட்டல்
inspirational too....
Post a Comment