Apr 20, 2014

ரேஸ் குர்ரம்

திருமணத்திற்கு முன்பு ‘என்னடா இது...தனியாவே சுத்திட்டு இருக்கோமே’ என்று அவ்வப்போது எட்டிப்பார்க்கும் ஃபீலிங் திருமணத்திற்கு பிறகு அப்படியே தலைகீழாகிவிடுகிறது ‘ஒருநாள் கூட தனியாவே இருக்க முடியறதில்லையே’ என்று யோசிக்கத் தொடங்கிவிடுகிறது, மனம். வெயிட்டீஸ். அப்படி நான் நினைப்பதாகச் சொல்லி என்னை ரணகளமாக்கிக் கொள்ள தயாராக இல்லை. ஒரு நண்பர்தான் அப்படி சொன்னார் என்று எழுதினால் நீங்கள் நம்பிக் கொள்ள வேண்டும்.

நேற்று வீட்டில் யாரும் இல்லை. வருத்தம் என்றால் வருத்தம் அப்படியொரு வருத்தம் எனக்கு. முகத்தை தலையணையில் புதைத்துக் கொண்டு அழுதேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பிரிவுத் துயரம். சரி, இந்த சோகத்தை எப்படி போக்கிக் கொள்வது? பெங்களூரில் வழியா இல்லை? படத்துக்குச் சென்றுவிட்டேன். நிறைய படங்களைப் பார்ப்பதென்றால் பிரச்சினையே இல்லை. எந்தப்படத்திற்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆடிக்கொரு தடவை போனால் எந்தப் படத்திற்கு போவது என்று குழப்பமாகிவிடுகிறது. டார்ச்சரான படங்களுக்கு சென்று மண்டை இடியோடு வீடு திரும்ப முடியாது.

தமிழ்ப்படங்களைவிடவும் எனக்கு தெலுங்குப்படங்கள் இஷ்டம். காட்சிக்கு காட்சி மசாலா தடவி வைத்திருப்பார்கள். சண்டையென்றால் அப்படியொரு சண்டை. வில்லனை தூக்கி வீசும் போது பூமியே அதிரும். கூடவே சேர்த்து நம் ஸீட்டும் அதிரும். பாடல்கள் என்றால் கேட்கவே தேவையில்லை. ஸ்ரீதேவி காலத்திலிருந்தே அப்படித்தான். அதை எதற்கு விலாவாரியாகச் சொல்லி வேண்டும்? எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தானே.

அப்படியொரு சிக்கன் மசாலா தடவிய படத்திற்குத்தான் டிக்கெட் எடுத்திருந்தேன். ரேஸ் குர்ரம். சிரஞ்சீவி வகையறாவின் படங்கள் என்றாலே ஓவர் ஹீரோயிஸமாகத்தான் இருக்கும். அது அவரது தம்பி பவன்கல்யாணாக இருந்தாலும் சரி, அவரது மருமகன் அல்லு அர்ஜுனாக இருந்தாலும் சரி. ஹைதராபாத்தில் இருந்த காலத்திலிருந்தே இந்த க்ரூப்பைக் கண்டால் அலர்ஜிதான். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் இருக்கிறார் என்பதால் என்னதான் அலர்ஜியானாலும் சொரிந்து கொள்ளலாம் என்று முடிவு செய்து கொண்டேன். இருநூற்றைம்பது ரூபாய்க்கு குறைவாக டிக்கெட் இல்லை என்று புலம்பலாம்தான். ஆனால் ‘இந்தக் கஞ்சப்பயலுக்கு இதே வேலையாகப் போய்விட்டது’ என்று யாராவது நினைத்துக் கொள்ளக் கூடும். டிக்கெட் விலையை விடுங்கள். பாப்கார்ன்னும் பெப்ஸியும் சேர்த்த ‘கோம்போ’முந்நூற்று நாற்பது ரூபாய். அதையும் கூட தொலையட்டும் என்று விட்டுவிடலாம். தண்ணீர் பாட்டில்? எம்.ஆர்.பி இருபது ரூபாய்தான். அந்தத் தண்ணீர் பாட்டிலை நாற்பது ரூபாய்க்கு விற்கிறார்கள். நூறு மடங்கு இலாபம். 

இதையெல்லாம் ஏன் யாருமே கேட்பதில்லை? 

இரண்டு மாதங்களுக்கு முன்பாக சேலம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது திபுதிபுவென்று வந்த அதிகாரிகள் ஒரு கடைக்காரரிடம் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். யாரோ புகார் அளித்திருந்தார்களாம். கூல்டிரிங்க்ஸ் பாட்டிலுக்கு மூன்று ரூபாய் அதிகம் வைத்து விற்கிறார்கள் என்பதுதான் பிராது. அதற்குத்தான் அதிகாரிகள் படையெடுத்திருந்தார்கள். அவர் மட்டுமா விற்கிறார்? ஒவ்வொரு கடையிலுமே அப்படித்தான் விற்கிறார்கள். பேருந்து நிலையத்தில் மூன்று ரூபாய் கூடுதல் விலை வைத்து விற்றால் பிடிப்பார்கள். அதுவும் கூட பிடிப்பார்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது. வந்து விசாரிப்பார்கள். ஏற்கனவே மாமூல் சரியாகச் சென்றிருந்தால் அந்த நன்றி விசுவாசத்தோடு திரும்பச் சென்றுவிடுவார்கள். அதுதான் வழமை.

நாங்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது ஒரு நாள் இரவு வெகுநேரம் ஆகிவிட்டது. அப்பா வீடு திரும்பவில்லை. அந்தக்காலத்தில் ஃபோன் வசதியெல்லாம் இல்லை. என்ன ஆனது என்று தெரியாமல் அம்மா சற்று பயந்திருந்தார். எங்களுக்கும் பயம்தான். மூவரும் வீட்டிற்கு வெளியிலேயே அமர்ந்திருந்தோம். இரவு பத்து மணிக்கு மேல் அப்பா வந்தார்- அதுவும் நிறைய ரொட்டிப்பாக்கெட்டுகளுடன். எங்கள் வீதியில் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பாக்கெட் தரலாம். அத்தனை ரொட்டி பாக்கெட்டுகள்.

எங்கள் பகுதியில் ஒரு ரொட்டி தயாரிக்கும் நிறுவனம் இருந்தது. வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, மின்சாரத்துறை என்று சம்பந்தப்பட்ட அத்தனை துறைகளையும் சரியாக கவனித்துவிடுவார்கள் என்பதால் யாரும் பெரிதாக கண்டு கொள்வதில்லை. அப்படியிருந்தும் யாரோ மின்வாரியத்திற்கு புகார் அனுப்பியிருக்கிறார்கள். அந்த நிறுவனத்தினர் கொக்கி போட்டு மின்சாரம் எடுக்கிறார்கள் என்பதுதான் புகார். புகார் வந்துவிட்டால் கண்ணைத் துடைத்துதானே ஆக வேண்டும்? சோதனைக்கு கிளம்பியிருக்கிறார்கள். அப்படி கிளம்பிய படையில் அப்பாவையும் வண்டிக்குள் திணித்துக் கொண்டார்கள். ஆனால் கிளம்புவதற்கு முன்பாகவே ‘சோதனைக்கு வருகிறோம்..ரெடி ஆகிக்குங்க’ என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்த ரெடி ஆகிக்குங்க என்பதற்கான அர்த்தம் நம் அனைவருக்குமே தெரிந்ததுதான். 

அங்கு கொக்கியும் இல்லை- வெங்காயமும் இல்லை. எப்படி இருக்கும்? ஆனால் சோதனைக்குச் சென்றவர்களுக்கு நல்ல கவனிப்பு. டீ, காராபூந்தி, சாப்பாடு என்று எல்லாவற்றையும் ஏற்பாடு செய்துவிட்டு ஆளாளுக்கு நிறைய ரொட்டி பாக்கெட்டுகளைக் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள். அல்வாவின் வேறொரு வடிவம். மேலதிகாரிகளுக்கு தனியான கவனிப்பு நடந்ததாக அப்பா சொல்லியது ஞாபகம் இருக்கிறது. 

நம் ஊரில் சோதனை என்றால் இதுதான். பணம் கொடுக்காதவனாக இருந்தால் சிக்கல் வரக் கூடும். ஆனால் தீபாவளி, பொங்கல் என்று ஒவ்வொரு பண்டிகைக்கும் சரியாக மொய் எழுதுபவர்களுக்கு எந்தச் சோதனை பற்றியும் கவலையில்லை. சேலத்தில் பேருந்து நிலையம் என்பதால்தான் அந்த அளவுக்குக் கூட சோதனை நடத்தினார்கள். அதுவே அரசுப்பேருந்துகள் நிற்கும் மோட்டலில் குளிர்பானம், தண்ணீர்க்குடுவை என்று எதுவாக இருந்தாலும் நான்கு ரூபாய் சேர்த்து விற்பார்கள். ஆனால் அதை எந்த அதிகாரிகளும் கண்டுகொள்ள மாட்டார்கள்.  ‘மினிஸ்டர் பினாமியோட மோட்டல்’ என்பார்கள். ஆனால் மோட்டலில் நாமாவது ஒரு கேள்வி கேட்கலாம். இந்த சினிமா தியேட்டரில் யாரைக் கேட்பது? ‘மேனேஜ்மெண்டில் கேட்டுக்குங்க’ என்பார்கள்.

‘ஏன்ய்யா இருபது ரூபாய் சேர்த்து விக்குறீங்க?’ என்று அம்பானிக்குத்தான் கடிதம் எழுத வேண்டும். 

இந்த முந்நூற்று நாற்பது ரூபாய் பாப்கார்னை வாங்க அவ்வளவு பெரிய க்யூ. எங்கள் ஏரியாவில் கட்டட வேலை செய்யும் ஒரு ஆணின் சம்பளம் முந்நூற்றைம்பது ரூபாய். மேஸ்திரியாக இருந்தால் கொஞ்சம் அதிகம்- ஐந்நூறு ரூபாய். ஆக, ஒரு ஆணின் முழுச் சம்பளத்தையும் பத்து நிமிட பாப்கார்னில் சர்வசாதாரணமாக எச்சிலில் ஊற வைத்துவிடுகிறோம். 

கண்காணிப்பும், கட்டுப்படுத்துதலும் இல்லாத கார்பொரேட் உலகம் நம்மை ஆக்கிரமிக்கத் தொடங்கும் போது என்ன நடக்கும் என்பதன் மினியேச்சரைஸ்டு உதாரணம்தான் சினிமா மால்கள். இன்னும் போகப் போக இன்னமும் பார்க்கத்தான் போகிறோம். அரசியல்வாதிகளுக்கும், அதிகார வர்க்கத்திற்கும் இந்த பெரு முதலாளிகள் துல்லியமாக பட்டுவாடா செய்துவிடுகிறார்கள். காந்தியைக் கையில் வாங்கிக் கொண்ட பிறகு கேள்வியை வாயில் கேட்பதற்கு எவனுக்கு யோக்கிதை இருக்கிறது?

MRP என்பதன் பொருளே அதுதான் அதிகபட்ச விலை என்பதுதானே? ஊறுகாய் பாட்டிலிருந்து லேப்டாப் வரை ஒவ்வொரு பொருளிலும் அதிகபட்ச சில்லரை விற்பனை விலை (MRP) ஒட்டப்பட்டிருக்க வேண்டும் என்ற விதி எனக்குத் தெரிந்து இந்தியாவில் மட்டும்தான் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. விதி இருந்தால் மட்டும் போதுமா? அண்ணாச்சி மளிகைக்கடையிலும், ரோட்டோர பெடிக்கடைகளிலும்தான் செயல்படுத்துகிறார்கள். பேருந்து நிலையங்களிலும், மோட்டலிலும் நாற்பது சதவீதம் அதிகம் வைத்து விற்றால், மால்களில் அவர்கள் விரும்பும் அளவிற்கு விலை வைத்துக் கொள்கிறார்கள்.

தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் என்று எல்லாவற்றையும் அவிழ்த்துவிட்டாகிவிட்டது. இனி திரும்ப பழைய நிலைமைக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை. Rich get richer; Poor get poorer என்று அன்றே சொன்னார் சிவாஜி’ த பாஸ். அவ்வளவுதான். இதுதான் நடக்கும். இப்படித்தான் தொடரும். ஒன்றும் செய்வதற்கில்லை என்றாலும் துளியாவது மனசாட்சியோடு பெருமுதலாளிகள் இருக்கலாம். ம்ஹூம். நகை நட்டோடு உள்ளே வந்தவர்களையெல்லாம் வெறும் ஜட்டியோடு வெளியே அனுப்புவது அநியாயம் சார்.

பாருங்கள். ரேஸ் குர்ரம் பார்த்துவிட்டு படத்தைப் பற்றி எழுதாமல் எதை எதையோ எழுதிக் கொண்டிருக்கிறேன். இது பாவச் செயல். 

படத்தில் அல்லு அர்ஜூன் தூள். ஸ்ருதி ஹாசன் தூள் டக்கர். சினிமாவைப்பற்றி எனக்கு அவ்வளவுதான் சொல்லத் தெரியும்.

10 எதிர் சப்தங்கள்:

பெத்தராயுடு said...

எதுக்கு மணி அங்கெல்லாம் போறீங்க?

BTMல ஸ்ரீரேணுகாபிரசன்னா இருக்கு.
பொம்மனஹள்ளியில் ஸ்ரீகிருஷ்ணா தியேட்டர் இருக்கு.
HSRல திருமலா இருக்கு.
நம்மூரு தேட்டருக மாதிரியே இருக்கும்.

டிக்கட் 100 ரூபாய்க்கும் கீழேதான். ஆன்லைன் புக்கிங் உண்டு. ticketnew.com, ticket4u.in
அதனால கியூவுல நிக்க வேண்டாம்.

300 கொடுத்து மொக்க கடி வாங்கறதுக்கு இது எவ்வளவோ பரவால்ல.
முக்கியமா பாப்கார்ன் வாங்கவேண்டாம், தண்ணி பாட்டில் கொண்டு போனாலும் பிரச்சினையில்ல.

ராஜி said...

இன்னாது ஒரு டிக்கட் விலை 350 ரூபாயா!? விளங்கிடும்

Unknown said...

Hi manikandan, I m a great fan of ur casual flow of writing, day to day issues of common man.. it is we , the self proclaimed educated youths, who encourages all these hifi malls and theatres and ready to spend without hesitation. It's we the self proclaimed revolutioists wearing Che in t shirt and Karl Marx book in hand who quietly pay Rs 25 for 15 Rs water bottle in motel and try to calm down a villager if he raises voice against those looters. Even if persons like Raj Thackeray tries to bring down tolls against capitalist looters, we simply gives them religious face by joining pseudo secularists. We can't cry to our grandparents to bring these changes. It s we need to avoid and ignore if u feel it's over priced or not worth, so that they will come down one day..

aavee said...

பாஸ்.. கோவையில் சில தியேட்டர்களில் டிக்கட்டோடு சேர்த்து பாப்கார்னும் வாங்க வேண்டும் (புதிய ரிலீஸ் படங்களுக்கு) என்று எழுதப்படாத விதி ஒன்று இருக்கிறது.. நான் பாப்கார்ன் வேண்டாம் என ஒற்றைக் காலில் நிற்க அவரோ அசால்டாக வேண்டாம்னா அடுத்த ஆளுக்கு வழி விடுங்க என்று சொல்லிவிட்டு அடுத்த ஆளிடம் இதே விஷயத்தை சொல்ல (பாப்கார்ன்) அவரும் மறுப்பேதும் சொல்லாமல் நாலு டிக்கட்டுக்கும், பாப்கார்னுக்கும் காசு கொடுத்துவிட்டு கப்சிப் என்று போகிறார். அதற்கடுத்து வந்தவரும் அதே போல்.. அவன் செய்யுற தப்ப ஒருத்தன் கூட டிக்கட் மட்டும் கொடு என்று சொல்லாமல் வாங்கிச் சென்றதால் எதிர்த்துக் கேட்ட நான் ஒருவன் மட்டும் அங்கே முட்டாளாய் வேறு தியேட்டர் நோக்கி நகர வேண்டியதாய்ப் போயிற்று.. இப்ப சொல்லுங்க, விக்கறது அவன் குற்றம்னா வாங்குறது நம்ம குற்றம் இல்லையா.. யாரும் வாங்காம விடுங்க அவன் MRP ரேட்டுக்கே விற்பான்..

bullsstreet said...

ஐநுரறு அறுநுரறு சீட்டுங்க இருக்கற தியேட்டர்ல வெறும் அம்பது பேர் மட்டும் படம் பார்க்க வந்தா காலியா இருக்கற சீட்டுக்கும் சேர்த்து இப்படித்தானே பணம் வசூல் பண்ண வேண்டியிருக்கு.பேசாம படத்தை ஆன்லைன்லயே பார்க்கறது பெட்டர்.பிஸ்ஸாவோ சிக்கனோ டோர்டெலிவரிக்கு ஆர்டர் பண்ணிட்டு எல்சிடி ப்ரோஜக்டரை லாப்டாப்ல கனெக்ட் பண்ணி ஏசியை போட்டுட்டு ஹாய்யா படம் பார்க்கலாம்.
http://bullsstreetdotcom.blogspot.in

DHAKSHNA said...

அருமை. இப்படியே எல்லாரும் எதிர்த்து கேட்டால்தான் கொஞ்சமாவது மாறும். இப்படிபட்டவர்களுக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். இங்கே முட்டாள் நீங்கள் இல்லை. அந்த கேள்வி கேட்காத அந்த மாக்கள் தான்.

தக்குடு said...

'பள்ளிக்கூடத்துக்கு போனாதானே வாத்தியார் அடிப்பார்'னு எங்க தாத்தா சொல்லுவார். பொழுதுபோகாம கொசமுட்டிண்டு அங்க போய் வரிசைல நிக்கர்தால தானே அவனால கொள்ளை அடிக்க முடியர்து! இந்த மாதிரி இடங்களுக்கு போகாட்டி கெளரவ குறைச்சலா இருக்குமே தவிர நிச்சயமா செத்து போயிட மாட்டோம்! :)

Aba said...

//இதையெல்லாம் ஏன் யாருமே கேட்பதில்லை? //

"கேட்டால் கிடைக்கு"மே? நீங்க கேக்கலையா? :))

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

ஒரு நாள் பிரிவிற்கே அழுகை என்றால் , நிரந்தர பிரிவிற்கு?

sivakumarcoimbatore said...

sir...அருமை சார் ....மனைவியுடன் 10 வருட வாழ்கை ...6 மாதம் 6 வயது மகனின் பிரிவு. சம்பாதித்து எல்லாம் கொடுத்துவிட்டேன் .. மனைவி யுடம் . இப்பொழது உங்களின் எழுதிகுளுடன் வாழந்து கொண்டு இருக்கறேன் ...