Apr 18, 2014

வெள்ளிக்கிழமை ராமசாமிஸ்

நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். என்னனென்னவோ பேசிக் கொண்டிருந்தவர் திடீரென்று வேறொரு நண்பரைப் பற்றி சொல்லிவிட்டு ‘அவர் பெரிய கம்யூனிஸ்ட்டுங்க’ என்றார். அவர் குறிப்பிட்ட நண்பரை எனக்கும் தெரியும். அவர் கம்யூனிஸ்ட் எல்லாம் இல்லை. ஆனால் அப்படித்தான் வெளியே சொல்லிக் கொள்வார். இவரும் அதையே சொன்னதால் எனக்கொரு ஜெர்க். இப்படியெல்லாம் ஜெர்க் கொடுப்பதற்கென்றே சிலர் பிறப்பெடுத்திருப்பார்கள். அதற்காக அவர்களை விட்டு விலகிவிடவும் கூடாது. இத்தகைய ஜெர்க்கர்கள்தான் நம் வாழ்க்கையை சுவாரஸியம் குறையாமல் வைத்துக் கொள்கிறார்கள். 

‘ஏங்க நீங்க வேற....அவர் இங்கதாங்க இருக்காரு...ஐ.டி கம்பெனிலதான வேலை செய்யறாரு’ என்றேன். ஆனால் அதற்கெல்லாம் மசியமாட்டார் போலிருந்தது. 

‘அதனால என்னங்க? எங்க வேலை செஞ்சா என்ன? அவர் கம்யூனிஸ்ட்தான்’ என்றார். 

கொத்திவிட்ட சுவரில் சிமெண்ட் கலவையை வீசினால் ‘சத்த்த்த்’ என்று அப்பும் பாருங்கள். அவ்வளவு உறுதியாக நம்புகிறார். இப்படியெல்லாம் யாராவது உறுதியாக நம்பினால் ஜகா வாங்கிவிடுவதுதான் எனது வழக்கம். இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம்- என்னதான் சண்டை போட்டாலும் அவர்களை மாற்ற முடியாது. இரண்டாவது காரணம், கோபம் உச்சிக்கேறி நம் காதை கடித்தாலும் கடித்து வைத்துவிடுவார்கள். கொள்கையைவிடவும் காது முக்கியம் என்கிற கட்சியைச் சார்ந்தவன் என்பதால் ஒதுங்கிக் கொள்வேன். 

ஆனால் மண்டைக்கு மேலாக இருக்கும் நான்கு முடிகளுக்குள் வியர்வை அரும்பியது போல குறுகுறுப்பு. இதெல்லாம் எப்படி சாத்தியம்? எங்கு வேண்டுமானாலும் வேலை செய்து கொள்ளலாம். ஆனால் தன்னை இடதுசாரி என்று சமூகத்திற்கு வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில் என்ற கணக்காக அல்லவா இருக்கிறது? தங்களை இடதுசாரிகள் என்கிறார்கள். பொதுவுடைமை ரத்தத்தில் ஊறி நரம்புகளில் மார்க்ஸியம் முறுக்கேறிக் கிடக்கிறது என்கிறார்கள். ஆனால் வேலை செய்வது மட்டும் பெருமுதலாளிகளிடம். சரி விடுங்கள். தி கிரேட் கம்யூனிஸ்ட்களான கலாநிதி மாறனிடமும், பச்சமுத்துவிடமும் ஒன்றாம் தேதியானால் சம்பளம் வாங்குபவர்களை கம்யூனிஸ்ட்கள் என்றுதானே சொல்ல முடியும்? மார்க்ஸிய கொள்கைகளை அச்சுபிசகாமல் கடைபிடிக்கும் தேசிய, மாநில கார்பொரேட் ஊடகங்களிலும் காலம் தள்ளுபவர்களை மார்க்ஸியவாதிகள் என்றுதானே ஏற்றுக் கொள்ள வேண்டும். கந்துவட்டிக்காரனிடம் வேலைக்கு இருப்பவர்கள், சினிமாவுக்கு அடல்ட்ஸ் ஒன்லி பாடல் எழுதுபவர்கள், தொப்புளை வர்ணித்து வசனம் எழுதுபவர்கள், டாட்டாவிடமும், பில்கேட்ஸிடமும் மாதக் கூலிக்கு வேலையில் இருப்பவர்களுக்கெல்லாம் சாலைக்கு வரும்போது ஒரு முகமூடி தேவைப்படுகிறது. அதனால் பொதுவுடமையாளன் என்ற முகமூடியை அணிந்து கொள்கிறார்கள். நமக்கெதுக்கு வம்பு?

வலது பக்கமும் சாரி இல்லாமல் இடது பக்கமும் சாரி இல்லாமல் உரிக்கப்பட்ட நடிகைகளை பக்கம் பக்கமாக தொங்கவிடும் பத்திரிக்கைக்காரர்கள் தங்களை இடதுசாரி சித்தாந்தவாதிகள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். பத்து பதினைந்து பேர்களை வேலைக்கு வைத்துக் கொண்டு கார்பொரேட் மாடல்களில் பிஸினஸ் நடத்துபவர்கள்தான் இங்கு சமத்துவச் சிந்தனையாளர்கள். கிசுகிசு எழுதி நடிகர் நடிகைகளின் அந்தரங்கத்தை பொதுவெளிக்கு கொண்டு வருபவர்கள்தான் பொதுவுடைமைச் சிற்பிகள். இதையெல்லாம் சொன்னால் அடிக்க வருவார்கள்.

ஒன்பது டூ ஐந்து பிழைப்பு வேறு. மனதில் ஓடும் சிந்தனை வேறு- அவை இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது  என்று யாராவது சொல்லக் கூடும். சரிதான். நாய்ப்பிழைப்பாக இருந்தாலும் சிந்தனை அடிப்படையில் நான் இடதுசாரி என்று யாரேனும் வாதாடக் கூடும். இருக்கட்டும். ஆனால் இந்த வாதத்தை எப்படி ஏற்றுக் கொள்வது என்றுதான் புரியவில்லை. பெருமுதலாளிகள் காலால் இடும் வேலையை தலையால் செய்து முடிக்கும் என்னைப் போன்றவர்கள் தங்களை ‘இடதுசாரி’ என்று சொல்லிக் கொண்டால் கட்டுப்படுத்த முடியாமல் சிரித்துத் தொலைத்துவிடுகிறேன். எனக்கு வாயிலும் சனி. நாக்கிலும் சனி.

எங்கள் ஊரில் சி.எஸ்.சுப்பிரமணியன் என்ற பெரியவர் இருந்தார். அந்தக்காலத்திலேயே அவரை அவரது தந்தையார் லண்டன் அனுப்பி வைத்தார். பையன் ஐ.சி.எஸ் தேர்வு எழுதட்டும் என்பது அவரது விருப்பம். அப்பொழுதெல்லாம் விமானம் இல்லை அல்லவா? கப்பல்தான். மாதக்கணக்கில் பயணம். அங்கே சென்றவர் தாய்நாட்டின் சுதந்திரம், கம்யூனிஸம் என்று திசை மாறிவிட்டார். படிப்பு அதோடு அவுட். இந்தியாவிற்கு திரும்பி வந்தும் சும்மா இருக்கவில்லை. வெள்ளைக்காரனோடு இல்லாத லடாய்களைச் செய்து பிறகு சிறையில் அடைப்பட்டு அதன் பிறகு தீவிரவாதியாக வெகுகாலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர். பிழைக்கத் தெரியாத மனுஷன் என்று ஊரில் சொன்னார்கள்.

இந்தியா சுதந்திரம் அடையும் வரைக்கும் போராளி வாழ்க்கைதான். சுதந்திரத்திற்கு பிறகும் கம்யூனிஸ்ட் வாழ்க்கைதான். 

அந்தக்காலத்திலேயே கலப்புத் திருமணம் செய்து கொண்டவர். அவர் தனது கதைகளைச் சொல்லச் சொல்ல அழுகை வந்துவிடும். கொள்கை, லட்சியம், குப்பைமேடு என்று வெறும் வாயில் அபிஷேகம் செய்பவர்களை பார்த்து பார்த்து சலித்த நம் கண்கள் இத்தகைய கொள்கை நிறைந்த மனிதர்களைப் பார்க்கும் போது பனித்துவிடும். அவரது வீடு கோபிச்செட்டிபாளையத்தின் மையப்பகுதியில் இருந்தது. நல்ல விலை பெறும் என்பது முக்கியமான தகவல். சி.எஸ்.எஸ் கிட்டத்தட்ட நூறு வயது வரை இருந்தார். கடைசி நான்கைந்து ஆண்டுகள் அவர் சோற்றுக்கு லாட்டரி அடித்தது எனக்குத் தெரியும். கையில் காசு இல்லாமல் இல்லை. கடை வரைக்கும் நடந்து போகத் தெம்பிருக்கவில்லை. அவருக்கு வாரிசும் யாரும் இல்லை. பார்த்துக் கொள்ளவும் எவரும் இல்லை. சனி, ஞாயிறுகளில் ஊருக்குச் சென்றால் இட்லி வாங்கித் தருவேன். அவ்வளவுதான் என்னால் முடிந்த காரியம். அதற்கும் கூட காசு கொடுத்துவிடுவார். கடைசிவரைக்கும் சுயமாக வாழ்பவன் தான் கம்யூனிஸ்ட் என்று இட்லிக்கான பணத்தைக் கொடுப்பதற்கு காரணம் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் அப்படி சொல்லிக் கொண்டிருந்ததாலோ என்னவோ அவரை கடைசி காலத்தில் கட்சியும் கண்டுகொள்ளவில்லை. கம்யூனிஸ்ட்களும் கண்டுகொள்ளவில்லை.

அவர் இறந்து போன பிறகு அவரது வீட்டைக் கட்சி எடுத்துக் கொண்டது. கட்சி எடுத்துக் கொண்டதா அல்லது கட்சியின் பெயரில் ஏதாவது கம்யூனிஸ்ட் எடுத்துக் கொண்டாரா என்று தெரியவில்லை. ஆனால் அவ்வளவு அற்பமாக அவரது வாழ்க்கை முடிந்திருக்க வேண்டியதில்லை என்று நினைத்துக் கொள்வேன்.

தனது இளமையைத் தொலைத்தும், சுக துக்கங்களை இழந்தும், குடும்பத்தினரிடம் பகைமையைச் சம்பாதித்தும் கொள்கையை விடாமல் இருந்த அவரைப் போன்ற இடதுசாரி கொள்கையாளர்களைப் பார்த்துவிட்டு போலிகளைப் பார்ப்பதற்கு கூச்சமாக இருக்கிறது. நடப்பதற்குக் கூட வழியில்லாத காலத்திலும் அவர் சுயமாக நின்றார். ஆனால் உடல் முழுக்கத் தெம்பும், கை நிறைய பணமும் இருந்தாலும் பிழைப்புக்காகவும், ஆதாயத்திற்காகவும் அடுத்தவர்களின் காலடியில் கிடப்பவர்கள் எல்லாம் தங்களை இடதுசாரி சிந்தனையாளர்கள் என்று பறைசாற்றிக் கொள்வதைத்தான் ஜீரணிக்க முடிவதில்லை. கொள்கைக்கும், வாழ்முறைக்கும் துளியாவது தொடர்பு இருக்க வேண்டாமா? 

இப்படி எழுதுவதை அறச்சீற்றம் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. அலர்ஜி. இது அரசியல் ரீதியான எதிர்ப்பும் இல்லை. சீஸனுக்கு சீஸன் தங்களின் இருப்பை வெளிக்காட்டிக் கொள்வதற்காக போலியாக பொங்கும் இவர்களைப் பார்த்து ஒரு சிணுங்கல். அவ்வளவுதான்.

முதலாளிகளிடம் கையேந்தி நிற்பவர்களும், முதலாளிகளாக கோலோச்சுபவர்களும் வீட்டை விட்டு வெளியே வரும் போது போராளி வேடம் போட்டுக் கொள்வது அசிங்கம் இல்லையா? முகத்தை இறுக்கமாக வைத்துபடி போஸ் கொடுத்து ஃபோட்டோ எடுத்து வைத்துக் கொண்டால் கொண்டால் இடதுசாரி ஆகிவிடலாமா? இடதுசாரி சிந்தனைகளை தவறு என்று சொல்லவில்லை. பிழைப்புக்காகவும் கூலிக்காகவும் மாரடித்தாலும் எனக்குள் இடதுசாரி சிந்தனைதான் ஓடிக் கொண்டிருக்கிறது என்று யாராவது சொல்லும்போது ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் சந்தோஷம் அடையலாம். பொதுவுடைமை சித்தாந்தத்திற்காக தனது வாழ்நாளில் துளி துரும்பையாவது கிள்ளிப் போடுவேன் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் இருந்தால் அவர்களுக்கு ஒரு சல்யூட். ஆனால் இங்கு அறிவுஜீவி என்று தன்னை காட்டிக் கொள்வதற்கும், முற்போக்குவாதி என்று வெளிப்படுத்திக் கொள்ளவும்தான் முக்கால்வாசிப்பேருக்கு சிவப்பு நிறம் தேவைப்படுகிறது.  

இன்றைய போலி இடதுசாரிகள் கார்ல் மார்க்ஸின் மூலதனத்தை வாசித்திருக்கிறார்களா அல்லது அவர்களுக்கு லெனினிஸம், ஸ்டாலினிஸம், மாவோயிஸம் பற்றிய அடிப்படையான புரிதல்கள் இருக்கிறதா என்பதெல்லாம் பிரச்சினையில்லை. அவையெல்லாம் இரண்டாம்பட்சம்தான். அவற்றையெல்லாம் விட முக்கியமாக, தமது வாழ்க்கை முறையையும், பிழைப்பு வாதத்தையும் தாண்டி இடதுசாரி சிந்தனைகளை தமது மனசாட்சிக்கு பங்கம் வராமல் பேசுவதற்கு எத்தனை பேருக்குத் தகுதியும் அருகதையும் இருக்கிறது என்பதுதான் கேள்வி. இந்தக் கேள்வியைக் கேட்கக் கூட எனக்கு யோக்கிதை இல்லையென்று தெரியும். நான் இடதுசாரியும் இல்லை. இடதுசாரி சிந்தனைகளுக்கு எதிரானவனும் இல்லை. ஆனால் இந்தக் கேள்வியை எதிர்கொள்ளக் கூடத் தகுதியில்லாத போலி இடதுசாரி சிந்தனையாளர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். 

மாதச் சம்பளம் பத்தாயிரம் ரூபாயைத் தாண்டினால் நாம் பணிபுரிவது நிச்சயம் முதலாளித்துவ நிறுவனமாகத்தான் இருக்கும். ஒருவேளை சுயமாக பிஸினஸ் நடத்தி வருட வருமானம் இரண்டு லட்சத்தைத் தாண்டினால் நாம் முதலாளிகளாகத்தான் இருப்போம். நமது சூழல் அப்படி. சமத்துவம், பொதுவுடமை என்ற சித்தாந்தங்கள் இன்றைய போட்டி நிறைந்த வர்த்தக உலகில் சாத்தியம் என்று நான் நம்பவில்லை. முதலாளிகளிடம் வேலையில் இருப்பதையோ அல்லது முதலாளிகளாக இருப்பதையோ தவறு என்றும் சொல்லவில்லை. சுற்றிலும் இருப்பவர்கள் பல்லாயிரக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்க, நீங்கள் ஏன் குடும்பத்தையும், பிள்ளைகளையும் விட்டுவிட்டு முழுநேர பொதுவுடைமைவாதியாக போராடவில்லை என்று கேட்பதும் என் நோக்கம் இல்லை. ஆனால் இடதுசாரி கொள்கைகளுக்கு சம்பந்தமேயில்லாதவர்களும், தாங்கள் பேசுவதற்கும் எழுதுவதற்கும் முற்றிலும் முரணான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் யோக்கிதையற்றவர்களும் சிவப்புக் கொடியை கையில் ஏந்திக் கொண்டு ‘என்னையும் பாரு; என் கொள்கையையும் பாரு’ என்று அம்மணமாகத் திரிவதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கிறது காம்ரேட். 

ப்ளீஸ், கம்யூனிஸத்தை விட்டுவிடுங்கள். 

11 எதிர் சப்தங்கள்:

csmohan said...

//..கொள்கை, லட்சியம், குப்பைமேடு என்று வெறும் வாயில் அபிஷேகம் செய்பவர்களை பார்த்து பார்த்து சலித்த நம் கண்கள்....//

//வலது பக்கமும் சாரி இல்லாமல் இடது பக்கமும் சாரி இல்லாமல் உரிக்கப்பட்ட நடிகைகளை பக்கம் பக்கமாக தொங்கவிடும் பத்திரிக்கைக்காரர்கள் தங்களை இடதுசாரி சித்தாந்தவாதிகள் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.//

.......................................நச்,,,,

வவ்வால் said...

தமிழ் தத்துகுத்தா தான் தெரிஞ்சாலும், நாயா சுத்தி சுத்தி வந்து ,ஆளைப்பிடிச்சு புக்கு போட்டுவிட்டு "படைப்பாளி,எழுத்தாளன்" என சொல்லிக்கொள்வது போல கார்ப்பரேட்களிடம் வேலைப்பார்த்துக்கொண்டு 'கம்யூனிஸ்ட்" என சொல்லிக்கொள்வதும் சமூகத்துல சகஜமப்பு அவ்வ்!

SUDHANDHIRAPARAVAI said...

வேறு ஒரு பதிவில் சில எழுத்தாளர்கள் இடதுசாரி வலது சாரி என்று பேசி வசை மழை பொழிந்து கொண்டிருக்கிறார்கள். அதை மனதில் வைத்து எழுதப்பட்டதோ.

Ganpat said...

The difference between Capitalism and Communism is in the former "Men exploit men" whereas in the latter it is the other way about it!
இந்தியாவில் கோவணம் கூட இல்லாதவன் நக்சலைட்;வேட்டி சட்டை கிடைத்தால் கம்யூனிஸ்ட்;மூன்று வேளை உணவு கிடைத்தால் பா.ஜ.க.ஒரு வீடும் சொந்தமானால் காங்கிரஸ்;வாகனமும் கிடைத்தால் கழகம்;ஆனால் பேசுகையில் அனைவரும் இடதுசாரி.அம்புட்டுதேன்.

RG said...

So.. sharp...feel pain..somewhere I am being hurt.. I just starts to redefine my perspective on myself. Thank you for such a wonderful article. At last change..needs to start from my(our)self..

Unknown said...

தங்கள் பேச்சிலிருக்கும் பார்ப்பனீயத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். உழைக்கும் வர்க்க்த்துக்காகப் போராடுவோம். ஆனால் நாங்கள் உழைக்கமாட்டோம். கார்ப்பரேட்டுகளின் சொம்பு தூக்கியே. முன்னாள் முதல்வரின் மகள் என் தந்தை ஒரு கம்யூனிஸ்ட் என்று கூறியதை அறிவாயா. அம்மா என்பது தமிழ் வார்த்தை. அதுதான் எங்களின் முதல் வார்த்தை. மற்றும் பல.

மன்னிக்கவும். எல்லாம் படித்ததால் வந்த வினை.

கோபாலன்

R Srinath said...

Very honest & Gutsy appraisal !!

Ramamoorthy Srinath

சேக்காளி said...

//அம்மா என்பது தமிழ் வார்த்தை. அதுதான் எங்களின் முதல் வார்த்தை//
இது பார்ப்பனியம் இல்லை.
அம்மா உணவகம், அம்மா குடிநீர் இதெல்லாம் நமது தமிழகத்தை முதலாளித்துவமும், கம்யூனிசமும் கலந்த சோசலிசத்திற்கு நகர்த்துகிறது.
//உழைக்கும் வர்க்க்த்துக்காகப் போராடுவோம்//
ஒரு கை குறையுது வர்றீங்களா

Saro said...

Excellent thought VaMa. When you started saying about C S Subramanaian I got goosebumps. Read a lot about him before also. I missed meeting such a great man despite growing up close to Gobichetipalayam..

நாச்சியப்பன் said...

எல்லாம் சரி. அது என்ன தலைப்பு "வெள்ளிக்கிழமை ராமசாமிஸ்"?

Vaa.Manikandan said...

ஸீஸனுக்கு ஸீஸன் என்பதைக் குறிக்க...