ஒரு பெரிய யானை. அதுவும் கிழட்டு யானை. வெகு நாட்களாக உள்ளூர் மிருகக்காட்சி சாலையில் இருக்கிறது. அது ஒன்றும் வருமானம் கொழிக்கும் மி.க.சாலை இல்லை. பஞ்சப்பாட்டு பாடத் துவங்கி ‘இனி வேலைக்கு ஆகாது’ என்று முடிவு செய்துவிடுகிறார்கள். காட்சிசாலையில் இருந்த பிற விலங்குகளை எல்லாம் விற்றுவிடுகிறார்கள். இந்த யானை மட்டும் மிச்சம் ஆகிவிடுகிறது. வாங்குவதற்கு ஆள் இல்லை. காலம் போன காலத்தில் யார் வாங்குவார்கள்? கிழட்டு யானையால் பயன் இல்லை என்று சீந்துவார் இல்லை. அதனால் ஊருக்குள் பெரிய விவாதம் நடக்கிறது. நகரசபையில் உறுப்பினர்கள் சண்டையெல்லாம் போடுகிறார்கள். பிறகு நகரமே யானையை தத்தெடுத்துக் கொள்வது என்று முடிவு செய்யப்படுகிறது. யானையை வைத்திருப்பது நகருக்கு பெருமையான விஷயம் என்றெல்லாம் காரணம் சொல்கிறார்கள்.
மிருகக்காட்சி சாலை இருந்த இடத்தில் ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பு வரப்போகிறது. அந்த கட்டடத்தை கட்டப் போகிறவர் யானை தனது கடைசி காலத்தைக் கழிப்பதற்காக இடம் கொடுக்கிறார். அந்த இடத்தில் ஒரு மிகப்பெரிய தடுப்புச்சுவரைக் கட்டுகிறார்கள். அந்த அரணுக்குள் இரும்புச் சங்கிலிகளால் பிணைத்து யானையைக் கட்டி வைத்துவிடுகிறார்கள். இன்னும் நூறு வருடங்களுக்கு யானை தனது கால்களை உரைத்தாலும் அந்தச் சங்கிலி தேயாது. அவ்வளவு தடிமனான சங்கிலி அது.
யானையின் கூடவே பாகனும் தங்கிக் கொள்கிறான். பாகனும் முதியவன் தான். பக்கத்தில் இருக்கும் பள்ளியில் மீதமாகும் மதிய உணவை யானைக்கு கொடுக்கிறார்கள். பள்ளிச்சிறார்கள் யானையை அடிக்கடி வந்து பார்க்கிறார்கள். அதைத்தவிர யானைக்கு பெரிய வேலை எதுவும் இல்லை.
நாட்கள் நகர்கின்றன.
யாருமே எதிர்பாராத வகையில் திடீரென்று யானை காணாமல் போய்விடுகிறது. யானை மட்டுமில்லாமல் பாகனையும் காணவில்லை. யானை காணாமல் போனது பற்றிய குழப்பம் உருவாகிறது. அது சங்கிலியை அறுத்துக் கொண்டு போயிருக்க வாய்ப்பில்லை. சங்கிலி அப்படியேதான் இருக்கிறது. பாகன் சங்கிலியை கழட்டிவிட்டிருக்கக் கூடும் என்று யாரோ சொல்கிறார்கள். அதற்கும் வாய்ப்பு இல்லை- ஏனென்றால் அந்த சங்கிலியின் பூட்டுக்கு இரண்டு சாவிகள். இரண்டில் ஒன்று கூட பாகனிடம் இல்லை. பூட்டும் உடைபடவில்லை. பிறகு எப்படி இது நிகழ்ந்தது? ஊரில் ஒரே குழப்பம். இந்தச் செய்தியை ஊடகங்களும் பிரதானப்படுத்துகின்றன. ‘தனது குழந்தையை வெளியில் விளையாட விடுவதற்குக் கூட பயமாக இருக்கிறது’ என்று ஒரு பெண்மணி புலம்புகிறாள். etc.etc.
இது ஹாருகி முரகாமியின் ‘யானை காணமலாகிறது’ என்ற கதையின் ஒரு பகுதி. கிட்டத்தட்ட நாற்பது பக்கக் கதை இது. மனசாட்சியே இல்லாமல் மூன்றரை பத்தியில் சொல்லிவிட்டேன். ஆனால் இதோடு கதை முடியவில்லை.
அந்த யானை எப்படி காணாமல் போகிறது?
இந்தக் கதையைச் சொல்லிக் கொண்டிருப்பவன் ஒரு சிறு குன்றின் மீது அமர்ந்து முந்தின நாள் இரவு யானையை பார்த்திருக்கிறான். அப்பொழுதுதான் அந்த ஆச்சரியம் நடந்திருக்கிறது. யானை சுருங்கிக் கொண்டே வந்திருக்கிறது. சங்கிலியில் இருந்து தனது கால்களை விடுவித்துக் கொள்ளும் அளவிற்கு யானை சுருங்கி பிறகு காற்றில் கரைந்திருக்கும் என்கிறான். இதை அவனோடு அமர்ந்து சரக்கடித்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணிடம் சொல்கிறான். அவளும் நம்பிக் கொள்கிறாள். நிறைய கேள்விகளைக் கேட்கிறாள். அவனுக்கும் மப்பு. அவளுக்கும் மப்பு. அவன் என்ன சொன்னாலும் நம்புவாள். கதையை வாசிக்கும் நமக்குத்தான் குழப்பம். யானை சுருங்கிக் கொண்டே வந்து காற்றோடு கரைவது சாத்தியமா?
நாற்பது நாட்களுக்கு முன்பாகச் சொல்லியிருந்தால் நம்புவது கடினம்தான். ஆனால் இப்பொழுது யாருக்காவது இந்தக் கதையில் சந்தேகமிருந்தால் MH370 என்று கூகிளிடம் கேட்டுப்பார்க்கலாம். எந்தவிதச் சந்தேகமும் இல்லாமல் இந்த யானைக் கதையை நம்பிக் கொள்வோம்.
என்ன ஆயிற்று அந்த விமானத்துக்கு?
யாராவது கடத்திச் சென்றார்களா? எங்கேயாவது ஒளித்து வைத்திருக்கிறார்களா? நடுவானில் வெடித்துச் சிதறியதா? கடலுக்குள் விழுந்ததா? ஒரு பதிலும் இல்லை. தேடுகிறார்கள் தேடுகிறார்கள்- தேடிக் கொண்டேயிருக்கிறார்கள். கப்பல்கள், விமானங்கள், ரோபோக்கள் என எல்லாவற்றையும் பயன்படுத்தி தேடிக் கொண்டிருக்கின்றார்கள். ‘இந்த இடத்திலிருந்து சிக்னல் வருகிறது’ என்கிறார்கள். ‘அந்த இடத்தில் ஏதோ எண்ணெய் படலம் பரவுகிறது’ என்கிறார்கள். ‘கடலின் மீது என்னவோ மிதக்கிறது’ என்கிறார்கள். ஒரு துப்பும் இல்லை. ஊடகங்கள் இந்தச் செய்தியை மெதுவாக மறந்து கொண்டிருக்கின்றன.
இந்தத் தேடல் மிகப்பெரிய செலவு பிடிக்கும் காரியமாக மாறிக் கொண்டிருக்கிறது என்று சமீபத்தில் ஆஸ்திரேலியாவும், மலேசியாவும் புலம்பியிருக்கின்றன. இன்னும் சில தினங்களில் இந்தத் தேடலை கைவிட்டுவிடக் கூடும். அதன் பிறகு? விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பங்கள் மட்டும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். எவ்வளவு நாட்களுக்கு? ஆறு மாதங்கள்? ஒரு வருடம்? அவ்வளவுதான்.
அதே போலத்தான் - சுபாஷ் சந்திரபோஸ் என்ன ஆனார்? நமது நேதாஜிதான். விமான விபத்தில் இறந்துவிட்டார் என்றார்கள். கொன்றுவிட்டார்கள் என்றார்கள். சிறையில் இருந்துதான் இறந்தார் என்றார்கள். இந்திய அரசியல் தலைவர்களே நேதாஜி வெளியில் வராமல் பார்த்துக் கொண்டார்கள் என்றார்கள். இப்படி ஆளாளுக்கு ஒரு தியரி எழுதி வைத்திருக்கிறார்கள்.
பதில் கண்டுபிடிக்கவே முடியாத இப்படியான ரகசியங்கள் நம்மைச் சுற்றி நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. யாராவது வெகுசிலருக்கு மட்டும்தான் அந்த ரகசியங்களின் பின்னாலிருக்கும் உண்மை தெரியும். மலேசிய விமானம் குறித்து அந்த விமானத்திலிருந்த இருநூற்று சொச்சம் பேருக்கு மட்டும்தான் தெரிந்திருக்கும். அதுவும் கூட அத்தனை பேருக்கும் முழுமையாகத் தெரிந்திருக்கும் என்று சொல்ல முடியாது.
நேதாஜியின் மரணம் பற்றி அவருக்கு மட்டும்தான் தெரிந்திருக்கும் அல்லது வெகுசிலருக்குத் தெரிந்திருக்கலாம். அதே போலத்தான் யானை பற்றியும். அந்தப் பாகனுக்குத் தெரிந்திருக்கலாம் அல்லது அவனோடு சேர்த்து இன்னும் சிலருக்கு.
இந்தப் புதிர்களின் விடைகள் எப்பொழுதும் பொதுவெளிக்கு வரப் போவதில்லை. தீர்க்க முடிந்த புதிர்கள் என்றால் வெகு சுவாரசியமாக தீர்ப்போம். அதுவே விடை கிடைக்கவில்லையென்றால் கொஞ்ச நேரம் மண்டை காய்வோம். பிறகு சலித்தபடியே தூக்கிப் போட்டுவிட்டு அடுத்த காரியத்திற்கு நகர்ந்துவிடுவோம். அவ்வளவுதான். அது சூடோக்கூவாக இருந்தாலும் சரி; குறுக்கெழுத்துப் போட்டியாக இருந்தாலும் சரி.
மலேசிய விமானமும் அப்படித்தான். நேதாஜியின் மரணமும் அப்படித்தான். முரகாமியின் இந்தக் கதையில் வரும் யானையும் அப்படித்தான்.
இத்தகைய கதைகளை வாசித்து மண்டைக்குள் ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பெரிய ஆராய்ச்சியெல்லாம் செய்ய வேண்டியதில்லை. பிறகொரு காலத்தில் ஒரு நிகழ்ச்சியை பார்க்கும் போதும், கேள்விப்படும் போதும் இந்தக் கதை நமக்குள் விழித்துக் கொள்ளும். அப்படி விழிக்கும் தருணம்தான் வாசிப்பின் பேரின்பம்.
ஆங்கிலத்தில் வாசிக்கும் பழக்கம் இருப்பவர்கள் ‘Elephant Vanishes' என்று தேடி இந்தக் கதையை எடுத்துக் கொள்ளலாம். தமிழில் புத்தகம் வேண்டுமென்றால் திரு. சிபிச் செல்வனிடம்(08925554467) வாங்கிக் கொள்ளலாம். அவர்தான் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட முரகாமியின் கதைகளை புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறார். நான்கு கதைகள்தான். ஆனால் நூற்று நாற்பது பக்கங்கள். ஒவ்வொரு கதையும் முப்பது, நாற்பது பக்கங்கள். ஆனால் தைரியமாக வாங்கி வாசிக்கலாம்.
இந்தக் கதையைச் சொல்ல ஒரு காரணம் இருக்க வேண்டுமல்லவா? இருக்கிறது.
புத்தகக் கண்காட்சியின் போதே இந்தக் கதையை வாசித்து வைத்திருந்தேன். வாசித்த உடனே ஞாபகம் வந்ததுதான் சுபாஷ் சந்திரபோஸின் இறப்பு. பிறகு மலேசிய விமானம் காணாமலாகி இருபத்தைந்து நாட்கள் ஆனவுடன் இன்னொரு முறை வாசிக்கத் தோன்றியது. வாசித்தேன்.
இந்தக் கதையை ஓசூரில் நாடகமாக்குகிறார்கள் என்று நண்பர் திருவேங்கடம் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அதுவும் பள்ளி மாணவர்கள். இப்படியொரு சிக்கலான கதையை எப்படி நாடகமாக்குவார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது. பிரளயன் தான் நாடகமாக்குவதாகத் தெரிந்தது. அவரால் முடியும். வித்தகர். பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்.
நேற்று மாலை ஓசூர் செல்வதற்காகக் கிளம்பி திருவேங்கடத்தை அழைத்து ‘எங்க இருக்கீங்க?’ என்றேன்.
‘சிட்டிக்குள்ள இருக்கேன்’என்றார்.
‘யானை காணமலாகிறது நாடகம் பார்க்கப் போறேன். வர்றீங்களா?’
‘அது நேத்தே முடிஞ்சுடுச்சே’ என்றார். கடுப்பாகிவிட்டது. அவர் சரியாகத்தான் எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தார். நான் தான் ஸ்ருதியை பார்க்கிற நினைப்பில் முரகாமியை கோட்டைவிட்டு விட்டேன். சனிக்கிழமை மதியம் யாராவது ஸ்ருதிஹாசன் முக்கியமா? முரகாமி முக்கியமா என்று கேட்டிருந்தால்- ஸ்ருதிக்கு வாக்களித்திருப்பேன். இப்பொழுது யோசித்தால் முரகாமியின் நாடகத்தை பார்த்திருக்கலாமே என்று தோன்றுகிறது.
11 எதிர் சப்தங்கள்:
எல்லாத்தையும் பத்தி எழுதுறீங்களே, விமானத்தை விட்டுட்டீங்களேன்னு யோசிச்சிட்டிருந்தேன். எழுதிட்டீங்க.. இது சிலபேர், "தேடுதல் என்ற பெயர்ல சீனாவைக் கண்காணிக்க அமெரிக்கா செய்த சதிதான் இது", "இது ஏலியன்களின் கைங்கர்யம்", "அந்த இருநூறு பேரும் கூண்டோட கைலாசம் மாதிரி ப்ளேனோட பரலோகம் போயிட்டாங்க" ன்னு வகை வகையா கதை கட்டிட்டிருக்காங்க.......
//இந்தப் புதிர்களின் விடைகள் எப்பொழுதும் பொதுவெளிக்கு வரப் போவதில்லை. தீர்க்க முடிந்த புதிர்கள் என்றால் வெகு சுவாரசியமாக தீர்ப்போம். அதுவே விடை கிடைக்கவில்லையென்றால் கொஞ்ச நேரம் மண்டை காய்வோம். பிறகு சலித்தபடியே தூக்கிப் போட்டுவிட்டு அடுத்த காரியத்திற்கு நகர்ந்துவிடுவோம். அவ்வளவுதான். அது சூடோக்கூவாக இருந்தாலும் சரி; குறுக்கெழுத்துப் போட்டியாக இருந்தாலும் சரி. //
நூறு வீதம் சரி...
அய்யயோ வட போச்சே
ஹஹஹா.. ஸ்ருதியா முரகாமியா? நல்ல கேள்வி..
யானைக் கதையில் ஆரம்பித்து மலேசிய விமானத்தில் புகுந்து நேதாஜியை கோர்த்த விதம் அருமை.. வாழ்க்கையே ஒரு விடையில்லா விடுகதை தானே ! :)
மறைதல் என்றுமே நம்மை நிரந்தரமாக பாதித்ததில்லை.இந்த பின்னூட்டத்தின் கடைசி எழுத்தை தட்டுவதற்கு முன்னால் கூட நாம் வந்த சுவடு தெரியாமல், போவது எங்கே என்றும் அறியாமல் மறைந்துவிடலாம் என்ற நிதர்சனம் தெரிந்துள்ளதால்.!
Have you not read about the conspiracy involving an American plane that hijacked this aircraft to about 45 K feet causing instant death to all the passengers.
The story also involves a motive about the drones and other things. Kindly read it.
மறதி என்பது தேசிய வியாதி ஆயிற்றே, அதும் இந்த மாறி மர்மமான செய்திகளை இன்னும் கொஞ்ச நாள் நினைவு வைத்து கொள்வார்கள், அப்புறம் மறந்து தொலைத்து விட வேண்டியது தானே
நல்ல புத்தகம் ஒன்றை பல செய்திகளுடன் இணைத்து அறிமுகம் செய்தமை சிறப்பு! நன்றி!
நாமெல்லாருமே யானைகள்தான் ! கண்டுகளுக்கு முன்னே சிறுத்துக் கொண்டிருப்பதால். காணாமல் போய்க் கொண்டிருப்பது தெரிவதில்லை!
விமானம் காணாமல் போனது இன்னும் எனக்கு ஆச்சர்யம் தான். விஞ்ஞானம் முன்னேறிய இக்காலத்தில் இவ்வாறு விமானத்திற்கு என்ன ஆனது என கண்டு பிடிக்க முடியவில்லை என்பது..........என்ன சொல்வது.
// //விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பங்கள் மட்டும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். எவ்வளவு நாட்களுக்கு? ஆறு மாதங்கள்? ஒரு வருடம்? அவ்வளவுதான். // //
NO.The memories and sadness will never decrease and vanish.It will travel with the loser till their death.They may seem to lead a normal life, but in their heart of hearts they will be crying bitterly.
karthik amma
The Bullet Vanishes -- இந்த திரைப்படத்தையும் பார்க்கலாம்,
Post a Comment