Apr 17, 2014

பணம் கொடுப்பீங்களா?

சுகன்யாவை வெகு காலமாகத் தெரியும். என்னோடுதான் பணிபுரிந்தாள். ஐடி இல்லை. ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் நிர்வாகவியல் பணியில் இருக்கிறாள். இப்பொழுதும் அவ்வப்போது பேசுவதுண்டு. அவர்களது குடும்பத்தில் அம்மா அப்பாவோடு சேர்த்து ஆறு பேர். டைமிங்காகச் சொன்னால்- ஆறு வாக்குகள். பெரிய வசதி இல்லை. எளிமையான குடும்பம். சுகன்யா மட்டும்தான் Source of income. தமிழ் குடும்பம்தான். ஆனால் காலங்காலமாக பெங்களூரிலேயே இருப்பவர்கள். இந்த பெங்களூர்த்தமிழர்களை கண்டுபிடிப்பது மிக எளிது. ‘அப்படியா?’ என்பதற்கு பதில் ‘ஆமாவா?’ என்றால் அவர்கள் இந்த வகையறா என்று முடிவு செய்துவிடலாம். சுகன்யாவும் இந்த வகையறாதான். 

சுகன்யா ஏசப்பரின் தீவிர பக்தை. இப்பொழுது ஏதோ ஒரு காரணத்திற்காக விரதம் இருக்கிறாள். காலையில் இருந்து எதுவும் உண்ணுவதில்லை. மாலையில் சர்ச்சுக்கு சென்றுவிட்டுதான் எதுவாக இருந்தாலும். ஒரு நாள் தாங்கும் இரு நாட்கள் தாங்கும். நாற்பத்தைந்து நாட்கள் என்றால்? வாயெல்லாம் பொங்கிவிட்டது. ஆனாலும் அப்படியே இழுத்துக் கொண்டிருக்கிறாள். சிலுவை இருந்தால் போதும்- கண்ணை மூடிக் கொண்டு நம்பிவிடுவாள். இப்போதைக்கு அவளைப் பற்றி இது போதும்.

நேற்று பேச்சுவாக்கில் ‘ஓட்டுப் போட போறியா?’ என்றாள்.

‘ஆமாம்..அடுத்தவாரம்தான்’ 

‘எவ்வளவு வாங்குன?’- இந்தக் கேள்வியை அவளிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.

எதுவும் வாங்கவில்லை என்று சொன்னால் அவள் நம்புவதற்குத் தயாராக இல்லை. காசு வாங்காமல் அவ்வளவு தூரம் போக வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் அவளது சந்தேகம். சோழியன் குடுமி சும்மா ஆடுமா? அவள் கேட்பதற்கு அர்த்தம் இருக்கிறது. பெங்களூரில் காசு விளையாடியிருக்கிறது. அத்தனை வாக்காளர்களுக்கும் பணம் கொடுக்கவில்லை. ஆனால் சில ஏரியாக்களைக் குறி வைத்து அள்ளி வீசியிருக்கிறார்கள். சுகன்யாவின் குடும்பத்திற்கு மட்டும் கிட்டத்தட்ட முப்பதாயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறார்கள்.

முதலில் நம்பவில்லை. டகால்ட்டி அடிக்கிறாள் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் உண்மைதானாம். காங்கிரஸ் கட்சியினர் ஒரு வாக்குக்கு தலா இரண்டாயிரம் கொடுத்திருக்கிறார்கள். பா.ஜ. தலா இரண்டாயிரம் ரூபாய். தேவகெளடாவின் ஆட்கள் கொஞ்சம் ஏழைகள் அல்லவா? பாதிதான். வாக்குக்கு தலா ஆயிரம் ரூபாய். கணக்குப் போட்டுப்பார்த்தால் இந்தக் குடும்பத்திற்கு மட்டும் முப்பதாயிரம் ரூபாய். 

அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் வீடு வீடாக பிரச்சாரத்திற்கு வரும் போதே கொடுத்துவிட்டு போயிருக்கிறார்கள். 

ஒரு சமயம் சுகன்யாவின் வீட்டிற்கு கார்ப்போரேஷன் தண்ணீர் வரவில்லையாம். அதுவும் வெகுநாட்களுக்கு. குடிப்பதற்கு, குளிப்பதற்கு, சமையலுக்கு என்று எதற்குமே தண்ணீர் இல்லை. அந்தச் சமயத்தில் காசு கொடுத்து தண்ணீர் வாங்குமளவிற்குக் வீட்டில் பெரிய வருமானம் இல்லை. சுகன்யா கொஞ்சம் முரட்டு ஆள். முரட்டு ஆள் என்றால் பார்வைக்கு முரடாகத் தெரியமாட்டாள். ஆனால் பேச்சுவாக்கில் யாரையும் சர்வசாதாரணமாக மிரட்டிவிடுவாள். கேள்விகளிலேயே கொக்கி போட்டுவிடும் கேரக்டர். தண்ணீர் பிரச்சினைக்கு புகார்கள் அளித்திருக்கிறார்கள். இங்கு புகார்களுக்கு பெரிய மதிப்பில்லை. யோசித்தவள், கவுன்சிலருக்கு ஃபோன் செய்திருக்கிறாள். சாதாரண புகார் அழைப்பாகத்தான் இருக்கும் என்று அவர் நினைத்திருக்கிறார். ஆனால் அழைப்பில் ஆந்த்ராக்ஸ் வந்திருக்கிறது.

‘உங்ககிட்ட சொல்லிப்பார்த்துட்டோம். நீங்க கேட்கிறதா இல்லை. எங்களுக்கும் வேற வழியில்லை. பேப்பருக்கு லெட்டர் அனுப்பிட்டு ஆறு பேரும் தற்கொலை செஞ்சுக்கப் போறோம்’ என்று எடுத்தவுடனே சொல்லியிருக்கிறார். கவுன்சிலர் கொஞ்சம் அப்பாவி போலிருக்கிறது. நம்பிவிட்டார். உதடுகள் உலர்ந்து போக குழறியிருக்கிறார். அடுத்த இருபதாவது நிமிடத்தில் படைசூழ சுகன்யாவின் வீட்டுக்கு வந்துவிட்டார். அவரிடம் ஆறு பேரும் அழுதிருக்கிறார்கள். இவர்கள் அழுவதைப்பார்த்து விஷயம் விவகாரம் ஆகிவிடக் கூடும் என்று கவுன்சிலர் பயந்திருக்கிறார். அரசியல்வாதிகள் பெரும்பாலும் பயப்படமாட்டார்கள். எம்.எல்.ஏ, எம்.பிக்கள் கூட கொஞ்சம் பயப்பட வாய்ப்பிருக்கிறது. இந்தக் கவுன்சிலர்கள் இருக்கிறார்களே- ம்ஹூம். அசைக்க முடியாது. ஆனால் சுகன்யா அசைத்துவிட்டாள். அந்தத் தெருவிலேயே உடனடியாக போர்வெல் அமைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகச் சொல்லிவிட்டு ‘ஏதாச்சும் எசகு பிசகா செஞ்சுடாதம்மா’ என்று கெஞ்சிவிட்டுச் சென்றிருக்கிறார். அடுத்த ஒரு வாரத்திலேயே தண்ணீருக்கு ஏற்பாடு செய்துவிட்டார். அவர் காங்கிரஸ் கவுன்சிலர். 

தண்ணீர் கிடைத்தவுடன் உணர்ச்சிவசப்பட்ட சுகன்யாவின் குடும்பம் கவுன்சிலர் வந்தபோது யேசுவின் படத்திற்கு முன்பாக நிறுத்தி ‘காலகாலத்திற்கும் கை சின்னத்திற்குத்தான் வாக்களிப்போம்’ என்று சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார்கள். கவனித்துக் கொள்ளுங்கள்- அவருக்கு வாக்களிப்பதாக சத்தியம் செய்யவில்லை- கை சின்னத்திற்கு. இங்குதான் ட்விஸ்ட்.

சென்ற தேர்தலில் அந்தக் கவுன்சிலர் பா.ஜ.கவுக்கு மாறிவிட்டார்.

இந்த முறை கவுன்சிலர் பா.ஜ.கவுக்கு ஆதரவு கேட்டு வந்திருக்கிறார். சுகன்யாதான் ஏசப்பனை நம்புபவள் ஆயிற்றே. ஏற்கனவே சத்தியம் வேறு செய்தாகிவிட்டது. சின்னத்தை மாற்ற முடியுமா? ஆனால் கவுன்சிலர் ‘இவங்க எப்பவுமே நம்ம ஆளுங்க’ என்று சொல்லிவிட்டு பன்னிரெண்டாயிரத்தை கொடுத்துவிட்டு போயிருக்கிறார். வாங்கிக் கொண்டார்கள். அடுத்ததாக காங்கிரஸ்காரர்கள் வந்திருக்கிறார்கள். சத்தியம் பற்றியெல்லாம் தெரியாத அவர்கள் தங்கள் பங்குக்கு பன்னிரெண்டாயிரம் கொடுத்திருக்கிறார்கள். வாங்கிக் கொண்டார்கள்.

எனக்கு தலை சுற்ற ஆரம்பித்துவிட்டது. தேவகெளடாவின் ஆட்கள் என்ன சொன்னார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ஆறாயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். அதையும் வாங்கிக் கொண்டார்கள். ஆக மொத்தம் முப்பதாயிரம்.

அவர்கள் ஏரியாவில் பல குடும்பங்களில் இப்படித்தான். பா.ஜ.கவோ, காங்கிரஸோ, ஜனதாதளமோ- யாருக்கு வாக்களிப்பது என்று ஏற்கனவே முடிவு செய்து வைத்திருக்கிறார்கள் அல்லது பணத்தைப் பொறுத்தும் முடிவை மாற்றிக் கொள்கிறார்கள். இப்படி இன்னும் சில வருடங்களுக்கும் ஓடும். காங்கிரஸ்காரன் இருபது கோடி செலவு செய்தால் பா.ஜ.கக்காரனும் இருபது கோடி செய்கிறான். ஒருவன் தோற்பான் அல்லவா? அவன் புலம்புவான்- காசை வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டார்கள் என்று. புலம்பட்டும். பணம் வாங்கினாலும் நமக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற அவநம்பிக்கை வேட்பாளர்களுக்கு ஒரு காலத்தில் வரக் கூடும். அதன் பிறகுதான் வாக்குக்காக பணம் கொடுப்பதைப் பற்றி யோசிப்பார்கள். நோட்டுக் கொடுத்தால் வோட்டு விழுந்து விடும் என்ற நம்பிக்கை தவிடுபொடியாவதுதான் ஜனநாயகத்துக்கு நல்லது. பார்க்கலாம்.

அலுவலகத்திற்கு செல்லும் வழியில் பெரிய குண்டாந்தடியை வைத்துக் கொண்டு ‘எலெக்‌ஷன் ட்யூட்டி’ என்ற பெயரில் போகிற வருகிற வண்டிகளை எல்லாம் நிறுத்தி பரிசோதனை செய்வதையும், ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கில் பணத்தை பறிக்கிறார்கள் என்ற செய்திகளையும் பார்த்துவிட்டு இந்த வருடத் தேர்தலில் பணப்புழக்கம் இருக்காது என நினைத்துக் கொண்டிருந்தேன். அதெல்லாம் சும்மா. கைப்பற்றியது பெரும்பாலும் இளிச்சவாயர்களின் பணம். அரசியல்வாதிகளுக்குத் தெரிகிறது- எங்கே டிமிக்கி கொடுக்க வேண்டும், யாருக்கு பணம் கொடுக்க வேண்டும் அதை எப்படிக் கொடுக்க வேண்டும் என்று.

10 எதிர் சப்தங்கள்:

Santhanam said...

பெங்களூரில் கண்ட தேர்தல் வரும் முன்னே வாக்கு வங்கி உருவாக்கும் சில டெக்னிக்குகள் :
* அரசு பள்ளி மாணவர்களுக்கு MP போட்டோ போட்ட ஸ்கூல் பேக் .
* வருமானம் குறைவாக உள்ளவர்கள் வசிக்கும் பகுதிக்கு டேங்கர்-ல் தண்ணீர் சப்ளை (டேங்கர்-ல் ஸ்பான்சர் செய்யும் அரசியல்வாதியின் படம் )

”தளிர் சுரேஷ்” said...

வாக்குக்கு பணம் வாங்குவது குற்றம்தான்! ஆனால் வாக்குறுதியை காப்பாற்றாத தலைவர்கள் ஐந்து வருடம் சம்பாதித்ததை இப்படி கொஞ்சமேனும் செலவு செய்யட்டும்! இல்லாதவர்கள் பிழைத்துப் போகட்டும்!

எம்.ஞானசேகரன் said...

இந்த யேசப்பாக்கார் பெங்களூரில் எனக்கு மேலதிகாரியாக இருந்தார். தமிழர்தான். ஆனால் தமிழில் பேசமாட்டார். ரொம்ப கீழேயிருந்து மேலே வந்திருப்பார் போல. ரொம்ப ரிசர்வ் டைப். ஆனா கடந்த சட்டசபை தேர்தல்ல அவங்க சர்ச் சார்பாகவே அரசியல் கட்சிங்க சார்பா பேசி முடிச்சி தொகை கைமாறி அங்கிருந்தே யாருக்கு ஓட்டுப்போட வேண்டுமென்று உத்தரவுகள் பறந்தது. பெங்களூரில் உள்ள அத்தனை கிறித்துவ தமிழர் குடும்பங்களின் லிஸ்ட்டைக் கொடுத்து அலுவலக நேரத்திலேயே என்னை டைப்படிக்கச்சொன்னபோதுதான் விவரமே எனக்குத் தெரிந்தது. பாப்பா உஷாருதான்.

uorodi said...

எங்க கிராமத்துல ஓட்டுக்கு 100 ரூபாகொடுப்பாங்கன்னு பேசுறத கேட்கவே தலை கிர்ருங்கிது...ஆனா பெங்களூருல விலைவாசி இவ்வளவு கூடுதலா இருக்கும்னு கனவுல கூட நம்பமுடியாதுங்க.....அம்மாடி...பாத்துங்க ஜெயிச்சப்புறம் பெங்களூர மட்டும் தனியா பிரிச்சு பாகிஸ்தானுக்கு வித்துறபோறான்

Unknown said...

தேவையில்லாத வம்புதானே. இப்படிப் பேசும் தாங்கள் ஒரு மதவெறியன் என்றுகூடப் பலரிடமிருந்து பதில்கள் வரும்.

கோபாலன்

saturn730 said...

//நோட்டுக் கொடுத்தால் வோட்டு விழுந்து விடும் என்ற நம்பிக்கை தவிடுபொடியாவதுதான்//

தவிடுபொடியாவது சிரமமே. மாறாக மற்ற கட்சியினரை விட அதிகமாக நோட்டுக் கொடுத்தால் வோட்டு விழுந்து விடும் என்ற நம்பிக்கை வளரும்.

Paramasivam said...

இந்த "ஆமாவா" கூறும் மக்கள் இவ்வாறு தடாலடி ஆட்களாக இருப்பது, எங்களைப் போல் சமீபத்தில் பெங்களுர் வந்தவர்களுக்கு ஒரு சௌகர்யம். Safety.

Natarajan Sundaram said...

I heard, they also give money in the form of gold coins(1gm or 2gm) or even as cell phone recharge in some area!

Unknown said...

இந்த பெங்களூர்த்தமிழர்களை கண்டுபிடிப்பது மிக எளிது. ‘அப்படியா?’ என்பதற்கு பதில் ‘ஆமாவா?’ என்றால் அவர்கள் இந்த வகையறா என்று முடிவு செய்துவிடலாம்



நிதர்சனமான உண்மை. :-)

Life said...

வாங்குபவர்கள் இருக்கும் வரை விற்பவர்களும் இருக்கத்தானே செய்வார்கள் ???