Apr 15, 2014

மாட்டை பார்த்தீர்களா?

தேவகெளடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு புற்கட்டு சுமந்து செல்லும் பெண்தான் சின்னம். இரண்டு மூன்று நாட்களாக எங்கள் பகுதிக்கு பிரச்சாரத்திற்காக வருகிறார்கள். வருகிறார்கள் என்று சொல்ல முடியாது- வருகிறான். ஒரு ஆணுக்கு பெண் வேடமிட்டு அவனை திறந்த ஜீப்பில், மெர்குரி விளக்கின் வெளிச்சத்தில் நிறுத்த வைத்து ஏதோ கன்னடப்பாடலை கதறவிட்டு வேகமாக வண்டியை ஓட்டிச் செல்கிறார்கள். அந்த ஆளுக்கு துளி கூட சிரிப்பு வருவதில்லை. எப்படி வரும்? காலையில் இருந்து இப்படியே காய்ந்து கொண்டிருப்பான் போலிருக்கிறது. அதுவும் வலது கையால் தலைமீது இருக்கும் கட்டை பிடித்துக் கொள்ள வேண்டும். இன்னொரு கையில் வண்டியைப் பிடித்துக் கொள்ள வேண்டும். நினைத்த இடத்தில் எல்லாம் வேகத்தடை போட்டு வைத்திருப்பார்கள். குதிக்கும் போது சில மேக்கப் ஐட்டங்கள் கீழே விழுந்துவிடாமல் வேறு பார்த்துக் கொள்ள வேண்டும்- தலை ‘விக்’கைத்தான் சொல்கிறேன் - வேறு எதுவும் இல்லை. சாலையில் போகிற வருகிறவனெல்லாம் உற்றுப் பார்ப்பான். பார்வையை விலக்கிக் கொள்ள வேண்டும். இப்படி ஏகப்பட்ட சிரமங்கள். ஆயிரமோ அல்லது ஐந்நூறோ கொடுப்பார்கள். அந்தச் சிரமத்திற்கு இரண்டாயிரம் கொடுத்தாலும் கூட குறைவுதான்.

இப்போதைக்கு ஒரு பால்காரரின் கதையையும் சொல்லிவிடுகிறேன். பால்காரருக்கும், புற்கட்டு ஆசாமிக்குமான தொடர்பை கடைசி பத்தியில் பார்த்துக் கொள்ளலாம்.

இந்த ஏரியாவுக்கு வந்த புதிதில் அவரிடம்தான் பால் வாங்கிக் கொண்டிருந்தோம். நான்கைந்து மாடுகள் வைத்திருந்தார். நல்ல மனுஷன்தான். நிறைய நாட்கள் பாலில் தண்ணீரைக் கலக்கிவிடுவார். பொறுத்துக் கொள்வோம். அவ்வப்போது தண்ணீரில் பாலைக் கலக்கிவிடுவார். அதனால் பால்காரரை மாற்றிக் கொண்டோம். அது கட்டுரையின் சப்ஜெக்ட் இல்லை. அவருக்கு ஒரு பையன் உண்டு. வாட்டசாட்டமாக இருப்பான். ஒரு புல்லட் வாங்கிக் கொடுத்திருந்தார். மஞ்சள் சட்டையும், பச்சை பேண்ட்டுமாக ராஜ்குமாரின் உண்மையான வாரிசு என்று அவனைத்தான் அறிவிக்க வேண்டும். எட்டாங்கிளாஸிலேயே ஐந்தாறு வருடம் இருந்திருக்கிறான். ‘இந்த அங்கிள் இருக்கிற க்ளாஸுக்கு வர பயமா இருக்குது’ என்று கன்னடசிட்டுக்கள் சொன்னதால் ‘இனிமேல் பள்ளிக்கு வர வேண்டாம்’ என்று அனுப்பி வைத்துவிட்டார்கள். 

அதன்பிறகு கொஞ்ச நாட்கள் எருமை மாடு மேய்த்திருக்கிறான். இவனது சட்டைக் கலரைப் பார்த்து சில எருமை மாடுகள் பேஜாராகி ஓடிவிட்டதாகக் கூட புராணங்கள் உண்டு. விட்டால் பிழைப்புக்கு உலை வைத்துவிடுவான் என்றுதான் அவனை புல்லட் பாண்டியாக்கி வீட்டிலேயே தங்கவிடாமல் பார்த்துக் கொண்டாராம். சில வருடங்கள் இப்படியே சுற்றிக் கொண்டிருந்தவனின் மண்டைக்குள் தீடிரென்று பல்பு எரிய பத்தாம் வகுப்பு படிக்க விரும்பியிருக்கிறான். எந்த அப்பன்தான் பையன் படிப்பதை வேண்டாம் என்று சொல்லுவான்? பாலில் கொஞ்சம் கூடுதலாக ‘மிக்ஸ்’அடித்து டுட்டோரியலுக்கு பணம் கட்டியிருக்கிறார்கள்.

விடிந்தும் விடியாமலும் பல் துலக்குகிறானோ, குளிக்கிறானோ தெரியாது. ஆனால் மஞ்சளும் பச்சையுமாக ஜிங்கு சாக் என்று ஓடிவிடுவானாம். பையனின் படிப்பு ஆர்வத்தை பார்த்து பால்காரருக்கு புல்லரித்திருக்கிறது. மனைவிதான் ‘நாள் முழுக்க புல்லுக்குள்ளேயே கிடந்தால் அரிக்காம என்ன பண்ணும்’ என்று அடக்கியிருக்கிறார். அது என்ன அரிப்போ? அதை விடுங்கள். நம் கதாநாயகன் ஓடினான் ஓடினான் ஒவ்வொரு நாளும் ஓடினான். சில மாதங்கள் கழித்து தனியாக ஓட போரடிக்கிறது என்று டுட்டோரியலுக்கு வந்த பைங்கிளி ஒன்றையும் கூட்டிக் கொண்டு ஓடிவிட்டான். பால்காரர் ஒக்கலிகர். அந்தப் பெண் வேறு சாதி. விடுவாரா? வந்தால் வகுந்துவிடுவேன் என்று சொல்லிவிட்டார். அதோடு சரி. ஓடியவன் ஓடியவன் தான். திரும்பவேயில்லை. பால்காரர் மனைவிதான் குந்த வைத்து அமர்ந்து அழுதிருக்கிறார். ஆனால் அழும் போதெல்லாம் இடுப்பிலேயே உதைத்திருக்கிறார். ‘இந்த எழவெடுத்தவன் உதையை எவள் வாங்குவது’ என்று அவரும் அழுவதைக் குறைத்துக் கொண்டார்.

இதை எதற்குச் சொல்கிறேன் என்றால்- பையன் போனது பற்றிக் கூட கவலைப்படாத பால்காரர் கடந்து இரண்டு நாட்களாகவே அழுது புலம்பிக் கொண்டிருக்கிறார். காரணம் இருக்கிறது. அவரது மாடுகள் மூன்றைக் காணவில்லை. வழக்கமாக பகலில் மாடுகளை லே-அவுட்டில் மேய விட்டுவிடுவார்கள். காலி இடங்களில் எல்லாம் மேய்ந்து விட்டு மாலை வீடு திரும்பிவிடும். வழக்கமாக மதிய நேரத்தில் பால்காரர் ஒரு முறை மாடுகளை பார்த்துக் கொண்டு போவார். இரண்டு நாட்களுக்கு முன்பாக மதியம் மயக்கம் வருவது போல இருந்திருக்கிறது. அதனால் மதிய ‘ரவுண்ட்-அப்’பைக் கட் செய்துவிட்டார். அவரது நேரம் சரியில்லை. எவனோ ஒரு திருட்டுப்பயல் ஓட்டிக் கொண்டு போய்விட்டான். வழக்கமாக பொழுது சாயும் போது வீடு திரும்பும் மாடுகளைக் காணாமல் கணவனும் மனைவியுமாக அலைந்து திரிந்திருக்கிறார்கள். ஓரிடத்திலும் காணவில்லை. ஒவ்வொரு வீடாகக் கேட்டிருக்கிறார்கள். மோதிரமா? செயினா? வீடுகளில் தேடினால் கிடைப்பதற்கு.

சில சமயங்களில் மாடுகள் இப்படிக் காணாமல் போவதுண்டாம். ஆனால் அடுத்த நாள் காலையில் திரும்பி வந்துவிடும் என்ற நம்பிக்கையில் தூங்கியிருக்கிறார்கள். அடுத்த நாள் காலையில் இவர்களது நம்பிக்கையில் சாணம் விழுந்திருக்கிறது. போன மாடுகள் திரும்பவேயில்லை. ஒரு கறவை மாடு அதன் கன்றுக்குட்டி அதுபோக இன்னொரு சினை மாடு. ஐம்பதாயிரம் ரூபாய்க்கு குறைவில்லாமல் போகும் என்று அழுதார். அழுதார் என்பது வாக்கிய அமைப்பிற்காக இல்லை- உண்மையிலேயே தேம்பித் தேம்பி அழுதார். அறுபது வயதுடைய ஆறடி மனிதர் குலுங்கிக் குலுங்கி அழும் போது எத்தனை இறுக்கமான மனிதனாக இருந்தாலும் கரைந்துவிடுவோம். நான் கரைந்துவிட்டேன். நேற்று முழுவதும் ஒவ்வொரு வீதியாகவும், ஏரிக்கரைகளிலும் மீண்டும் சுற்றியிருக்கிறார். மாடுகள் பற்றிய எந்தத் தகவலும் இல்லை. மாலையில் மது அருந்தியிருக்கிறார். கடும் மன அழுத்தம் உருவாகியிருக்கும் போலிருக்கிறது. depression.

இவருக்கு இருந்த மன அழுத்தத்திற்கு யாரைப்பார்த்தாலும் கோபம் வரத்தான் செய்யும். இந்த நிலையில்தான் தேவகெளடாவின் ஆட்கள் புற்கட்டு, பாட்டுச் சத்தம் என்று வரவும், இவருக்கு இருந்த போதைக்கும் கடுப்புக்கும் ஏழாம் பொருத்தம் ஆகியிருக்கிறது. வண்டிக்கு குறுக்காக விழுந்துவிட்டார். வண்டி டிரைவர் கோபத்தில் கீழே இறங்கி பால்காரர் மீது ஒரு அடியும் வைத்துவிட்டான். நிலைமை ரசாபாசம் ஆகிவிட்டது. புற்கட்டைப் பார்த்தவுடன் தனக்கு மாட்டு நியாபகம் அதிகமாகிவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். கூட்டம் சேர்ந்துவிட்டது. ‘மாடு போனதைக் கூட பொறுத்துக்குவேன். அத்தனை ஆசையா வளர்த்த மாடுகளை அடிமாட்டுக்கு அனுப்பாம இருந்தா போதுமே’ என்று அழுகையினூடாக அவர் சொன்ன போது ஒரு கணம் சிலிர்த்துவிட்டது. சுற்றிலுமிருந்தவர்கள் அவரைச் சமாதானப்படுத்த முயன்றார்கள். வண்டிக்காரரும் தனது தவறை உணர்ந்திருக்க வேண்டும். கன்னடத்தில் ஏதோ சமாதானப்படுத்தினார். பால்காரர் எப்பொழுதும் தலையில் துண்டு கட்டியிருப்பார். எல்லோரும் ஆறுதல் சொல்லவும் அவரது துக்கம் வெடித்துவிட்டது. கதறினார். யாருமே கட்டுப்படுத்த முடியாத கதறல். கைத்தாங்கலாக இருவர் பிடித்து அவரை வீடு நோக்கி அழைத்துச் சென்றார்கள். பார்க்க பரிதாபமாக இருந்தது. கூட்டம் கலைந்த போது புற்கட்டுக்காரனைப் பார்த்தேன். அவன் விக்கை கழற்றி வைத்துவிட்டு ஓரமாக நின்று பீடி உறிஞ்சிக் கொண்டிருந்தான். கோடை மழை இன்னும் சில நிமிடங்களில் பெய்துவிடும் போலிருந்தது. தூரத்தில் பால்காரர் தலையில் அடித்தபடியே சென்று கொண்டிருந்தார்.

10 எதிர் சப்தங்கள்:

Seeni said...

அட...

தொய்வில்லாமல் சென்றது...

எம்.ஞானசேகரன் said...

போன தலைமுறை ஆட்கள் மட்டுமே இப்படி பிராணிகளையும் தம் சொந்தப்பிள்ளைகள் போலவே பாவித்தனர். இனி வரும்காலத்தில்...........

தருமி said...

//இவர்களது நம்பிக்கையில் சாணம் விழுந்திருக்கிறது//

இது மாதிரி எல்லாமே நல்லா இருக்கு கட்டுரையில் ........
மகிழ்ச்சி

Paramasivam said...

பால்காரர் வருத்தம் உண்மையானதே. மகன் ஓடிப்போன போது, சாதாரணமாக எடுத்துக் கொண்டவர், மாடுகளை இழந்த சமயம் கதறி விட்டார் எனில் அவர் தனது மாடுகளை எந்த அளவு நேசித்திருப்பார். சீரான நடையில் எழுதி உள்ளீர்கள்.

Anonymous said...

Super narration boss... like sujatha...


sivaparkavi

”தளிர் சுரேஷ்” said...

பால்காரரின் பாசத்தை எழுத்துக்களில் உணர வைத்துவிட்டீர்கள்! சுவையான பகிர்வு! நன்றி!

சேக்காளி said...

//மாட்டை பார்த்தீர்களா?//
இவரு பாலைக்கறந்து அப்புறம் "தண்ணிய கலக்கலாமா அல்லது தண்ணியில பாலைக்கலக்கலாமா" ன்னு யோசிக்க வேண்டாம் நாமளே நேரடியா தண்ணிய போட்டுருவோம் ன்னு போட்டதுக்கு அப்புறமாத்தான் அதுகளுக்கு (பசு-மாடு-கண்ணு) தெரிஞ்சுருக்கும் இது வேற தண்ணின்னு.
அப்புறம் என்ன? போதையில
"புல்லுகட்டு தேடி வந்த கண்ணுகுட்டி நான்" னு போயிருக்கும்.

Aba said...

//ஓடினான் ஓடினான் ஒவ்வொரு நாளும் ஓடினான். சில மாதங்கள் கழித்து தனியாக ஓட போரடிக்கிறது என்று டுட்டோரியலுக்கு வந்த பைங்கிளி ஒன்றையும் கூட்டிக் கொண்டு ஓடிவிட்டான்.//

//தூரத்தில் பால்காரர் தலையில் அடித்தபடியே சென்று கொண்டிருந்தார்.//

தூறலாய் ஆரம்பித்து படபடவென பெய்து சட்டென நிற்கும் மழை... உங்கள் எழுத்துநடை... அற்புதம்

Shankari said...

nice narration!

Life said...

தன் மக்களை விட மாக்களே மேல் என்பதன் விளைவு
அந்த பால் காரரின் துக்கம் .