நிரலு என்ற ஒரு அமைப்பு பெங்களூரில் இருக்கிறது. அவ்வப்போது ‘மரவிழா’வை நடத்துகிறார்கள். நிரலு என்றால் நிழல் என்று அர்த்தம். பெயருக்கேற்றபடி மரங்கள், பசுமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் இவர்களின் அஜெண்டா. அவர்கள் இதைச் செய்வதில் அர்த்தம் இருக்கிறது. லட்சக்கணக்கான மரங்கள் நிறைந்திருந்த இந்த ஊரை கிட்டத்தட்ட மொட்டையடித்து மூளி ஆக்கிவிட்டார்கள். வெயில் காந்துகிறது. வருடத்தில் ஆறு மாதங்கள் இந்த ஊரில் மழை பெய்யும் என்பதெல்லாம் வரலாறு ஆகிவிட்டது. வருடத்தில் ஆறு மழை பெய்வதே கூட பெரிய விஷயம் ஆகிவிடும் போலிருக்கிறது. புழுதிகளாலும் புகையாலும் அழுக்குப்படிந்து அசிங்கமாகிக் கிடக்கிறது இந்த கார்டன் சிட்டி.
இந்தச் சூழலில்தான் இருநூறு பேர்கள் உறுப்பினராக இருக்கும் நிரலு இது போன்ற செயல்களைச் செய்து வருகிறது. நான்கைந்து வாரங்களுக்கு முன்பாக கப்பன் பூங்காவில் மரவிழாவை நடத்தினார்கள். காலை பத்து மணிக்கே சென்றுவிட்டேன். பெரும்பாலும் இளைஞர்களாக நிறைந்திருந்தார்கள். குழந்தைகளுக்கான நிகழ்வுகள்தான் அதிகமாக இருந்தன. சிறுவர்களை அமரச் செய்து ஒருவர் கதை சொல்லிக் கொண்டிருந்தார். இன்னொருபக்கம் கார்ட்டூன் படங்கள். வேறொரு பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள். உண்மையில் எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. ஒரு தாத்தா அமர்ந்திருந்தார். அவர் பக்கத்தில் போய் அமர்ந்து கொண்டேன்.
அவர் உடுப்பி பக்கம் ஏதோ ஒரு ஊரைச் சேர்ந்தவர். அறுபது வயதுக்கு மேலாக இருக்கும். பெங்களூருக்கு ஏதோ ஒரு காரியமாக வந்திருந்தவர் இந்த நிகழ்ச்சியைக் கேள்விப்பட்டு வந்துவிட்டார். இடையிடையே பேச்சுக் கொடுத்து நண்பர்கள் ஆகிவிட்டோம். கொஞ்ச நாட்கள் அரசாங்க வேலையில் இருந்தாராம். பிறகு வேலையை விட்டுவிட்டார். இப்பொழுது ஊர் ஊராகச் சென்று மரம் வைப்பதுதான் அவரது வேலை. எத்தனை மரங்கள் நட்டிருப்பீர்கள்? என்று கேட்டால் அவரிடம் துல்லியமான பதில் இல்லை. பல்லாயிரக்கணக்கில் இருக்கும் என்றார். எந்த நிறுவனத்திலும் தன்னை இணைத்துக் கொள்ளாமல் தனிமனிதனாக எந்த அங்கீகாரத்தையும் எதிர்பாராமல்தான் இதைச் செய்து கொண்டிருக்கிறார்.
திருமணம் செய்து கொள்ளவில்லை. ‘குடும்பம் குழந்தை இல்லை; போகும் போது இவங்க எல்லாம் எனக்காக அழுவாங்கல்ல? அதுவும் யாருக்குமே தெரியாமல்’ என்று கேட்டுவிட்டு சிரித்தார். அதன் பிறகு நிகழ்ச்சி தொடங்கிவிட்டது. பேசவில்லை. பிறகு கிளம்பும் போது ‘எதுக்காக இங்க வந்தீங்க?’ என்றார். எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் ஒரு ஏரி இருக்கிறது. அந்த ஏரியில் லாரி கழுவி, மோலி மோலியாக துணி துவைத்து என நாறடிக்கிறார்கள். ஒரு ஏரி இருந்தால் அந்தச் சுற்றுவட்டாரத்திற்கே நிலத்தடி நீருக்கு பிரச்சினை இல்லை என்பார்கள். இந்த ஏரியைப் பொறுத்த வரையில் அது சாத்தியமே இல்லை. ஏரியின் அடிப்பாகம் முழுவதும் எண்ணெய் பிசுக்கு ஏறி இறுகிய மண். ஒரு சொட்டுத் தண்ணீரை நிலத்திற்கு கொடுக்காத கஞ்சப்பயலாக இந்த ஏரியை மாற்றிவிட்டது- மாற்றிவிட்டார்கள்.
எங்கள் லே-அவுட்டில் ஒரு சங்கம் வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு வீடும் கோவில் கட்ட பணம் கொடுக்க வேண்டும் என்று பேசுவார்கள்; எந்தத் தெருவில் விளக்கு எரியவில்லை என்று கணக்கு எடுப்பார்கள். அந்தத் தெருவில் சங்கத்து ஆள் யாராவது இருந்தால் சோடியம் விளக்கு அமைத்துத் தருவார்கள். மற்றவர்கள் என்றால் ட்யூப்லைட்தான். ஏரி பற்றியெல்லாம் பேசினால் ஒரு மார்க்கமாக பார்ப்பார்கள். இந்தச் சங்கம் எனக்கு ஒத்துவராது என்று கூட்டங்களுக்கு தம்பியை அனுப்பி வைத்துவிடுவேன். அவனும் கர்மசிரத்தையாக அவர்களுக்கு ஒத்து ஊதிவிடுவான்.
இந்த ஏரிக்கு ஏதாவது செய்ய முடியுமா என்பதற்காகத் தான் நிரலு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். சொன்னதையெல்லாம் பெரியவர் கேட்டுக் கொண்டார். இந்த மாதிரி ஏரிகள் இருந்தால் மூங்கில் விதைகளை விதைத்துவிடுவதுதான் முதல் நல்ல காரியம் என்றார். மூங்கில் விதைகளை ஈரமண்ணுக்குள் புதைத்து அதை இறுகவைத்து தருவார்களாம். அதை மழை காலத்தில் நிலத்தில் போட்டுவிட்டால் போதும். மழை, மண்ணைக் கரைத்துவிட மூங்கில் விதை உயிர்பிடித்துக் கொள்ளும். ஒரே மாதத்தில் ஐந்து அடி வரைக்கும் வளரும் என்பதால் ஏரி மாதிரியான இடங்களில் வளர்ப்பதற்கு தோதான மரம் மூங்கில்தான் என்றார். அவர் அனுபவத்திற்கு சரியாகத்தான் இருக்கும். ஆனால் நிரலுக்காரர்களிடம் மூங்கில் விதை இல்லை. பெரியவர் எனது முகவரியைக் குறித்துக் கொண்டார்.
“உங்க ஃபோன் நெம்பர் கொடுங்க” என்றேன்.
“அதெல்லாம் வெச்சுக்கிறது இல்லை தம்பி. கால் போன போக்கில் போகிறேன். நானும் அடுத்தவங்களுக்குத் தொந்தரவு இல்லை. எனக்கும் யாரும் தொந்தரவு இல்லை” என்றார்.
இன்று காலையில் அலுவலகத்தில் வேலை இருந்தது. ஞாயிறுதான் என்றாலும் வரச் சொல்லியிருந்தார்கள். கிளம்பிக் கொண்டிருந்த போது பெரியவர் வீட்டைத் தேடி வந்துவிட்டார். துளி கூட எதிர்பார்க்கவில்லை. ஆச்சரியமாக இருந்தது. கசங்கிய சட்டை, பேண்ட் அணிந்திருந்த அவர் கையில் இரண்டு பைகள் வைத்திருந்தார். எனது மகனுக்காக ரொட்டி பாக்கெட் வாங்கி வந்திருப்பதாக சிரித்துக் கொண்டே சொன்னார். அவரை உள்ளே வரச் சொல்லி பேசிக் கொண்டிருந்த போது இரண்டு பைகள் நிறைய மூங்கில் விதைகள். அதில் ஒரு பையை இங்கு கொடுத்துவிட்டுச் செல்வதற்காக வந்திருக்கிறார்.
இந்தப் பருவத்தில் மழை இல்லை அல்லவா? அதனால் இப்பொழுது விதைப்பது சரி இல்லையாம். ஐந்தாறு விதைகளை மட்டும் விதைத்துவிட்டு அப்பாவிடம் இடத்தை காட்டிவிடுவதாகச் சொன்னார். தினமும் இரண்டு வேளை நீர் ஊற்றினால் போதும். அநேகமாக முளைத்துவிடும். இந்த ஐந்து சாம்பிள் விதைகளும் முளைத்துவிட்டால் அத்தனை விதைகளையும் இதே முறையில் விதைத்துவிடலாம் இல்லையெனில் மழைக்காலம் வரைக்கும் காத்திருக்க வேண்டும் என்றார். அலுவலகத்திற்கு நேரம் ஆகிக் கொண்டிருந்தது. மதியத்திற்குள் வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டு கிளம்பினேன்.
அலுவலகம் செல்லும் வரைக்கும் அவருடைய நினைப்பாகவே இருந்தது. இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள். பத்து நிமிடம் பேசியவனை நம்பி கை நிறைய மூங்கில் விதைகளைச் சேகரித்துக் கொண்டு வீடு தேடி வருகிறார். மதியத்திற்கு மேலாக அப்பாவை அலைபேசியில் அழைத்தேன். அப்பாவும் அவரும் ஏரிக்கரையில் ஐந்தாறு விதைகளை விதைத்திருக்கிறார்கள். வேலையை முடித்தவுடன் கிளம்பிவிட்டாராம். மதியம் சாப்பிட்டுவிட்டு செல்லலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இன்னொரு பையை வேறொரிடத்தில் சேர்க்க வேண்டுமாம். என்னைப் போலவே வேறு யாராவது அவரிடத்தில் பேசியிருக்கக் கூடும். அரை மணிநேரத்தில் கிளம்பிவிட்டாராம். ஒரு காபி தவிர வேறு எதுவும் பெற்றுக் கொள்ளவில்லை.
‘பணம்?’ என்று அப்பா தயங்கியபடி கேட்டிருக்கிறார். சிரித்துக் கொண்டே கையில் ஒரு துண்டுச்சீட்டை தந்துவிட்டு போனதாகச் சொன்னார். தெளிவான ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். ஒரே வரிதான். “பூமியை வதைக்கிறோம்; அவள் கதறிக்கொண்டிருக்கிறாள்”.
அவரை இனிமேல் சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. அவராக விருப்பப்பட்டு வந்தால் உண்டு. இல்லையென்றால் அவரது மரங்கள்தான் அவரை ஞாபகப்படுத்திக் கொண்டேயிருக்கும்- இன்னும் இரண்டு மூன்று தலைமுறைகளுக்காவது.
9 எதிர் சப்தங்கள்:
பங்களூர் மரங்கள் நிறைந்த, வெயில் காண முடியாத, நகரம் என்றே எண்ணி இருந்தேன். ம்....ம்.....அம் மனிதர் கோடியில் ஒருவர். அவருக்கு ஒரு சல்யூட்.
இயற்கையின் அழிவுகளை பார்த்தலோ ,கேட்டாலோ மனதை பிசைகிறது. அந்த பெரியவருக்கு கோடானு கோடி நன்றிகள்.
என்ன ஆச்சு திரும்ப பின்னுட்ட பெட்டிய திறந்துடிங்க?
really it is a good social service.Everybody must participate...http://bullsstreetdotcom.blogspot.in
ஆச்சரியமாக இருக்கிறது, இந்தக்காலத்தில் இப்படியும் மனிதர்களா?
கண்கள் பணித்தது பணம் பணம் என்று பணத்தில் பின்னால் ஓடும் சராசரி மனிதர்கள் இடையே ஒரு மா மனிதர்
அன்பின் மணி!,
நீங்கள் பேகுர் ஏரியைத்தான் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். கடந்த பத்து வருடங்களாக மனிதர்களால் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் ஏரி..கொஞ்ச நாட்களுக்கு முன் பரிசல் பயணம் எல்லாம் இருந்தது..போன வாரம் நானும் என் மகளும் ஒரு மாலை பொழுதில் ஏரிக்கரைக்கு சென்றோம்..ஏரியின் இன்றைய நிலையை பார்த்து மனம் நொந்து திரும்பினோம்
Super sir.. Comments poda anumathi thanthuteengalae.
வெறும் பார்வையாளனாக இல்லாமல் செயல் வீரர்களாகத் திகழும் இவர் போன்ற தன்னலமற்ற மனிதர்கள் சிலரால் தான் உலகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது. நல்லதொரு கட்டுரைக்குப் பாராட்டுக்கள்!
Post a Comment